mk stalin 347தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக அணி ஆட்சியைப் பிடித்திருக்கிறது. தமிழ்நாடு தனது அடையாளத்தை மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறது. இதற்கான தேர்தல் களத்தை திட்டமிட்டு கடும் உழைப்பால் உருவாக்கி வெற்றிக்கு உரமிட்ட பெருமை திமுகத் தலைவர் மு.க.ஸ்டாலினையே சாரும், வரலாறு பாராட்டும், வாழ்த்தும்.

பெரியார் மண், தனக்கான இயல்பான அடையாளங்களான சுயமரியாதையையும், சமூக நீதியையும் அழித்து ஒழிப்பதற்கான ஒரு யுத்தத்தை கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் எதிர்கொண்டது. இந்த போர்க்களத்தில் இந்திய அதிகார மய்யங்களும் அதன் நிறுவனங்களும், அடக்குமுறைகளும் எதிரிகளால் ஆயுதங்களாக களத்தில் இறக்கப்பட்டன.

நிராயுதபாணிகளான நாம் சுயமரியாதை எனும் கேடயத்தையும், பெரியார், அண்ணா, காமராசர், கலைஞர் விட்டுச் சென்ற கொள்கை கவசங்களையும் ஏந்தி நின்று போராடினோம்.

நாடாளுமன்றத் தேர்தல் வழியாக தமிழ்நாட்டில் ‘இராம இராஜ்ஜியம்’ அமைக்க முயன்ற சக்திகளை தமிழ்நாட்டில் கால் ஊன்ற விடாமல், மீண்டும் வடக்கு நோக்கி நாம் அனுப்பி வைத்தோம். அந்தக் களத்திலும் உரிய கூட்டணி வியூகம் அமைத்து வெற்றி வாகை சூடிய பெருமை மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு.

தோற்று ஓடிய சனாதன சக்திகள் சட்டமன்றத் தேர்தல் மூலம் அதிகாரங்களை தங்களது விசுவாசிகள் வழியாக டெல்லி ஆதிக்க வரம்புக்குள் கொண்டு வந்து விடலாம் என்று திட்டமிட்டார்கள். அதற்காக பல சூழ்ச்சிகளை உருவாக்கினார்கள். சூப்பர் ஸ்டார்களை களமிறக்க காய் நகர்த்தினார்கள்.

கூட்டணி கட்சியான அ.இ.அ.தி.மு.க.வின் ஒரு பகுதியையே உடைத்து தங்களுடன் இணைத்துக் கொள்ள திட்டமிட்டார்கள். ஆனால், அத்தனை முயற்சிகளும் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியவில்லை. வேறு வழியின்றி தங்களுக்குப் பணிந்து போய்க் கொண்டிருக்கிற அ.இ.அ.தி.மு.க  கூட்டணிக்குள் அடைக்கலமாகி அதன் வழியாக தமிழ்நாட்டின் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக் கொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்தார்கள். இந்தப் போரிலும் அவர்கள் தோல்வியைச் சந்தித்து இருக்கிறார்கள். திமுக அணி இதில் வெற்றி பெற்று இருக்கிறது.

தேர்தல் பணிகள் தற்போது முடிந்து விட்டன. நாம் மீண்டும் சமுதாய களத்திற்கு திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் அது ஜாதி வெறியை தூண்டிவிட்டு விடுகிறது. தற்போது நடந்து முடிந்துள்ள தேர்தலிலும் இதைத்தான் நாம் பார்த்தோம்.

ஜாதி எதிர்ப்புக் களத்திற்கு எந்த அரசியல் கட்சியும் வரப்போவதில்லை. பெரியார் இயக்கங்கள் உள்ளிட்ட சமுதாய இயக்கங்கள் தான் இந்தப் போராட்டங்களை நடத்துகின்றன, நடத்தவும் முடியும். இந்த நிலையில் இழந்தவைகளை மீட்கவும், பண்பாட்டுத் திணிப்புகளை முறியடிக்கவும், தன்னாட்சி உரிமைக்கு மக்களை தயார் செய்யவும் நாம் களமிறங்குவதோடு திராவிட எதிர்ப்பு என்ற போர்வைக்குள் பதுங்கி நிற்கும் சனாதன சக்திகளையும் நாம் மக்களிடத்தில் அம்பலப்படுத்தியாக வேண்டும்.

நம்மைப் பொருத்தவரை நடந்து முடிந்த தேர்தல் வெறும் ஆட்சி மாற்றம் அல்ல. சனாதன சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுப்பதற்கான போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி.

தமிழர்களிடம் மதவெறி சனாதன எதிர்ப்பபுக்  கருத்துக்களைக் கொண்டு சென்றதில் தேர்தலிலே பங்கெடுக்காத சமுதாய இயக்கங்களுக்கு பெரும் பங்கு உண்டு. ஆனாலும் இந்தத் திராவிட இயக்க உணர்வுகளை அரசியல் சக்திகளாக்கி கடுமையான உழைப்பைத் தந்து கூட்டணிகளை அரவணைத்து அதை வெற்றிக் கனியாகப் பறித்துள்ள பெருமை மு.க.ஸ்டாலினுக்கு உண்டு. முதிர்ந்த பக்குவத்துடன் அவர் முதல்வர் பதவியில்  அமரப் போகிறார்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக அவர் என்ன செய்யப்போகிறார் ?

உரிமைகளை மீட்டெடுக்க அவர் என்ன திட்டங்களை வைத்திருக்கிறார் என்பதை தமிழகமே ஆவலோடு நம்பிக்கையுடன் காத்திருக்கிறது.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் திமுக ஆட்சிக்கு நம்முடைய மகிழ்ச்சிகள், வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

விடுதலை இராசேந்திரன் 
பொதுச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்

Pin It