கான்பூர் காங்கிரஸ் தீர்மானத்தைப்பற்றி தேசீயப் பத்திரிகைகளென்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் பத்திரிகைகளெல்லாம் “கங்காதரா மாண்டாயோ! கங்காதரா மாண்டாயோ!” என்கின்ற கதைபோல் ஒரே மூச்சாக கொஞ்சமும் விசாரிக்காமலும் யோசனையின்றியும் “நல்ல தீர்மானம்! நல்ல தீர்மானம்!” என்றே எழுதிக்கொண்டு வருகின்றன. பொது ஜனங்களும் இவற்றைப்பற்றி சரிவரச் சிந்திக்காமல் பத்திரிகைகளை நம்பியே ஏமாந்து போகிறார்கள். காங்கிரஸ் தீர்மானத்தின் முக்கிய தத்துவங்களெல்லாம் இரண்டு, மூன்று விஷயங்களிலேயே அடங்கிப்போயிருக்கிறது. அதாவது, சட்டசபைகளைக் காங்கிரஸ் கைப்பற்ற வேண்டியது; அதற்காகக் காங்கிரஸ் பணத்தை உபயோகப்படுத்திக் கொள்ளவேண்டியது. சட்ட மறுப்புத்தான் நல்ல ஆய்தம்; ஆனால், தேசம் அதற்கு லாயக்கில்லை. நிர்மாணத்திட்டத்தைப் பொது ஜனங்களையே நிறைவேற்றி வைக்கச்சொல்லிவிட வேண்டியது. சர்க்காரை இறுதியாகச் சில விஷயங்களைக் கேட்பது, அவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டால் சட்டசபைகளை விட்டு விலகிவிடுவதுமான விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

சட்டசபை செல்லும் நோக்கத்துடன் ஸ்ரீமான் தாஸ் தலைமையாகயிருந்து, காங்கிரஸுக்கு விரோதமான பிரசாரம் செய்து வரும் காலத்திலேயே சட்டசபை பிரவேசம் தேசீய விடுதலையை அளிக்காது, தேசீய ஒற்றுமையைக் குலைக்கும் என்பதாக நாம் ஆட்சேபித்த காலத்தில் பல காரணங்கள் சொன்னோம். அதாவது, பல காரணங்களால் சட்டசபையில் நமக்கு யோக்கியமான மெஜாரிட்டி கிடைக்காதென்றும், ஒரு சமயம் கிடைத்த போதிலும், அதனால் தேசத்திற்கு பிரயோஜனத்தை அளிக்கக்கூடிய மாதிரியில் ஒரு வேலையும் செய்து கொள்ளமுடியாதென்றும் சொல்லிவந்தோம். சென்ற தேர்தலில் சுயராஜ்யக் கக்ஷியார் சட்டசபைக்கு நின்றார்கள்; சில ஸ்தானங்களையும் கைப்பற்றினார்கள்; சிற்சில மாகாணங்களில் “மெஜாரிட்டி” அடைந்தார்கள்; தங்களுடைய தீர்மானங்களையும் நிறைவேற்றினார்கள். இதன் மூலம் நாட்டிற்கு என்ன பலன் உண்டாயிற்று? அலக்ஷியம் செய்யப்பட்டுக் கிடந்த பதவிகளில் மோகம் உண்டாகவும், ஒருவருக்கொருவர் அவநம்பிக்கை உண்டாகவும்,சர்க்காராரையே பயந்து நடுங்கும்படியாய்ச் செய்த ஒத்துழை யாமைத் தத்துவம் ஒடுங்கவும், மகாத்மாகாந்தியும் மற்றும் பல தீவிர தேசத் தொண்டர்களும், காங்கிரசில் ஒரு வேலையும் செய்ய முடியாமல் காங்கிரசை விட்டு விலகியிருக்க வேண்டியதுமான நிலைமையுமேயல்லாமல் வேறென்ன செய்ய முடிந்தது?


சட்டசபையில் ஒத்துழையாமை செய்வதென்றும், முட்டுக்கட்டை போடுவதென்றும் சொல்லிப்போன சுயராஜ்யக்கட்சியார் மிதவாதிகளோடு சேர்ந்துக் கொண்டு சர்க்காரை சீர்திருத்தம் கேட்கவும் அதைப்பற்றி விசாரிப்பதற்காக ஒரு கூட்டத்தையும், ஒரு கமிஷனையும் நியமிக்கும்படி சர்க்காரைக் கேட்கவும், சர்க்காரின் ராஜீய பாரத்திற்கு அநுகூலமாக அவர்களுக்கு யோசனை சொல்வதற்கு அவர்களால் ஏற்படுத்தப்பட்ட கமிட்டிகளில் அங்கம் பெறவும், இந்திய சட்டசபையை ஒழுங்காய் நடத்திக் கொடுப்பதற்காக சர்க்காரால் சம்பளம் கொடுக்கப்பட்ட உத்தியோகமாகிய அக்ராசனாதிபதி பதவிகளை ஏற்றுக்கொண்டு சர்க்கார் சட்டசபையை ஒழுங்காய் நடத்திக் கொடுக்கவும் மாத்திரம் முடிந்ததேயல்லாமல் வேறு என்ன காரியம் செய்ய முடிந்தது?

மாகாண சட்டசபைகளிலும் கல்கத்தா, மத்திய மாகாணம் ஆகிய இரண்டிடங்களில் மெஜாரிட்டியும் பெற்றார்கள். மந்திரிகள் சம்பளத்தை நிராகரித்தார்கள்; குறைத்தார்கள்; மந்திரிகளும் எடுபட்டார்கள், தங்களுக்கு அநுகூலமான பல தீர்மானங்களையும் செய்தார்கள். இவ்வளவும் செய்து என்ன பயன்? ஒரு மயிர்க்காலளவு சர்க்காரின் அக்கிரமமான ஆதிக்கத்தை அசைக்க முடிந்ததா? வங்காளத்தில் நிராகரித்த சம்பளத்தை சுயராஜ்யக் கட்சியார் தாங்களே மறுபடியும் அநுமதிக்க நேர்ந்தது. மத்திய மாகாணத்தில் குறைக்கப்பட்ட மந்திரிகளின் சம்பளத்தை மறுபடியும் சுயராஜ்யக் கட்சியாராலேயே உயர்த்த நேர்ந்தது. மற்ற மாகாணங்களைப் பற்றியோ வென்றால் பிராமணர்-பிராமணரல்லாதார் சண்டையும் இந்து - முஸ்லீம் சண்டையும் பலப்பட்டது.

ஓர் காலத்தில் கதர் மயமாயிருந்த மகமதியர்கள் இன்றையதினம் கதரென்றால், அது ஓர் மத விரோதமான சின்னமென்று கருதுகிறார்கள். காங்கிரஸ் தங்கள் நன்மைக்கு மிகவும் ஆதாரமானதென்று நினைத்த பிராமணரல்லாதார் இன்றையத்தினம் காங்கிரஸ், பிராமணர் ஆதிக்கங்களுக்கு அநுகூலமானதென்று, பெரும்பான்மையான பிராமணரல்லாதார் நினைக்கிறார்கள். மங்கிப் புகைந்துக் கொண்டிருந்த ஜஸ்டிஸ் கட்சி துலக்கம் செய்யப்பட்டு இந்தியா முழுமையுமே பற்றிக் கொண்டது. ஒத்துழையாமையின் பொருட்டு உடல், பொருள், ஆவி மூன்றையும் தியாகம் செய்யத் தயாராயிருந்த தொண்டர்களில் பெரும்பாலோர், இன்றைய தினம் வயிற்றுக்கொடுமைக்காக தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாக கூலிக்கு எலெக்ஷன் வேலை செய்ய நேர்ந்துவிட்டது.

இவ்வளவு காரியங்களைச் சட்டசபைப் பிரவேஷத்தின் மூலமாக நன்றாய் அறிந்துவிட்டு, மறுபடியும் சட்டசபைக்குக் காங்கிரஸ்காரர்கள் போகவேண்டும் என்றும், காங்கிரஸ் பணம் அதற்காக செலவு பண்ணவேண்டும் என்றும், காங்கிரஸ் ஸ்தாபனங்கள் அதற்கு உதவி செய்ய வேண்டுமென்றும் காங்கிரஸ் தீர்மானிக்குமானால் தேசத்திலுள்ளவர் களுக்குக் காங்கிரஸினிடம் எப்படி மதிப்பு வரும்? இதே மாதிரி அடுத்த வருடமும் தேர்தல்களில் சட்டசபைக்கு நின்று ஸ்தானங்கள் பெற்று, இன்னும் கொஞ்சம் அதிகமாகவே ஜெயம் பெறுவதாகவே வைத்துக் கொண்டாலும், சட்டசபைகளில் இதை விட வேறு வேலை என்ன செய்யக்கூடும்? இந்த வேலையையே திரும்பத் திரும்பச் செய்துக்கொண்டு வருவதில் தேசத்துக்கு என்ன பலன் விளையும்? நிர்மாணத் திட்டத்தைப் பற்றிக் கொஞ்சங்கூட கவலையில்லாத மாதிரியில் காங்கிரஸ் ஓர் தீர்மானம் செய்திருக்கிறது. அதாவது, நிர்மாணத்திட்டத்தை ஜனங்களே நிறைவேற்றிவைக்க வேண்டுமென்று தீர்மானித்து இருக்கிறது.

ஜனங்கள் நிர்மாணத் திட்டத்தை நிறைவேற்றி வைப்பதற்கு காங்கிரஸ் எதற்காகயிருக்க வேண்டும்? காங்கிரஸ் பணமெல்லாம் சட்டசபை தேர்தலுக்கு செலவழிக்கப்பட வேண்டும்; காங்கிரஸ்காரர்கள் இவ்வருஷம் பூராவும் எலெக்ஷன் வேலையாய் இருக்க வேண்டும்; நிர்மாணத்திட்டங்களை ஜனங்கள் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று தீர்மானிப்பதில் எவ்வளவு மோசமிருக்கிறதென்பதைப் பொது ஜனங்கள் நன்றாய் அறிய வேண்டும். காங்கிரஸ் பிரசாரமில்லாமலும், காங்கிரஸ் தொண்டர்களின் கட்டுப்பாடான வேலையில்லாமலும் நிர்மாணத்திட்டம் எப்படி நிறைவேறும்?

கதர் வேலை ஒன்று மாத்திரம் மகாத்மா காந்தி ஏற்றுக்கொண்டார். மற்றபடி மதுவிலக்கு, தீண்டாமை விலக்கு, பல வகுப்பு ஒற்றுமை முதலிய காரியங்கள் தேசத்தில் ஏற்படாமல் சுயராஜ்யம் எப்படி ஏற்படும்? இவைகளை எல்லாம் புறக்கணித்துவிட்டு சட்டசபைக்குப் போவதை மாத்திரம் காங்கிரஸின் நேரான வேலையாய் வைத்துக் கொள்ளுவதினால் படித்தவர்களுக்குச் சில வேலையும், பதவியும், சம்பளமும் கிடைக்குமேயல்லாமல் ஏழை ஜனங்களுக்கு - பொது ஜனங்களுக்கு - தொழிலாள ருக்கு என்ன பலன் உண்டாகும்? ஆனதால் தேசநன்மைக்கு இம்மாதிரி காங்கிரஸை எதிர்பார்ப்பது போல் பயித்தியக்காரத்தனமான காரியம் வேறொன்றுமில்லை என்பதே நமது அபிப்பிராயம்.


இனி காங்கிரஸின் யோக்கியதை பழய காலப்படி, உத்தியோகங்களை உற்பத்தி பண்ணவும், கோர்ட்டுகளை உற்பத்தி பண்ணவும், அதற்கேற்ற படிப்பான பள்ளிக்கூடங்களை உற்பத்தி பண்ணவும் ஆன காரியத்தைச் செய்யக்கூடியதாயும், காங்கிரஸ்காரர்கள் இதற்காக சட்டசபை முதலிய தேர்தலில் ஜெயம் பெற வேண்டியதாயும் இருக்குமேயல்லாமல் வேறொரு காரியத்திற்கும் உபயோகப்பட முடியாது. இக்காரியங்களால் குடியானவர்களுக்கு இனியும் வரி அதிகமாக உயரப் போகிறது. தொழிலாளிகளுக்கு இனியும் வேலையற்று தரித்திரம் அதிகமாகப் போகிறது. கோர்ட்டுகளுக்கும், வக்கீல்களுக்கும் வேலை ஏற்படுவதற்காக வேண்டி மதுபானத்தை அதிகப்படுத்த வேண்டியதாய்ப்போகிறது.

பிராமணர்கள் தங்களுடைய செல்வாக்கினாலும், சர்க்காருக்கு இரகசியமாய் நன்மை செய்வதன் மூலமாகவும் தங்களுடைய ஆதிக்கத்தைப் பலப்படுத்திக் கொள்ள வழி ஏற்படப் போகிறது. இதன் பலனாய் தீண்டாமையும், பிறவியில் உயர்வு தாழ்வும் நிலைத்து நிற்கப் போகிறது. இம்மாதிரியான பலன்களை தரத்தக்கதான காங்கிரஸ் தீர்மானங்களை நல்ல தீர்மானம் என்று சொல்லிக்கொண்டு பத்திரிகைகளால் பிழைக்க வேண்டியவர்களும் ராஜீய விஷயங்களின் பேரால் பிழைக்க வேண்டியவர்களும் பாமர ஜனங்களை ஏமாற்றுகிறார்கள். இந்நிலையுள்ள காங்கிரஸினாலும் அதன் தற்கால தீர்மானங்களினாலும் இந்தியாவிற்கு எந்த வழியிலேயும் உண்மையான சுயராஜ்யம் கிடைக்காது என்பதே நமது முடிவான அபிப்பிராயம். உத்தியோக ஆசையுள்ளவர்கள் போக, காங்கிரஸ் பெயரால் பிழைக்க வேண்டியவர்கள் போக, மற்றவர்கள் தங்கள் சமூக நன்மைக்கும், தேசநன்மைக்கும், நிர்மாணத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கும், இம்மாதிரி காங்கிரஸையே நம்பியிராமல் நூற்போர் சங்கம் போல வேறு பல ஸ்தாபனங் களை ஏற்பாடு செய்துக்கொண்டு அதன் மூலமாக உழைக்கவும் சட்டசபையின் மூலம் இவற்றிற்கு ஏதாவது கொஞ்சம் நஞ்சம் அநுகூலம் தேடிக் கொள்ளலாம் என்கிற மனசாக்ஷியுள்ளவர்கள் அந்தந்த ஸ்தாபனங்கள் மூலமாகவே சட்டசபைக்குச் செல்வதுமான காரியங்களைச் செய்வதும்தான் தேச முன்னேற்றத்துக்கான காரியமென்பது நமது அபிப்ராயம்.

மகாத்மா காந்தி அவர்களும் கொஞ்ச காலம் பொறுத்தாவது காங்கிரஸைத் தமது வழிக்கு அதாவது, தேசத்திற்கு உண்மையான சுயராஜ்யம் சம்பாதித்துக் கொடுப்பதற்கான வழிக்கு மறுபடியும் கொண்டுவரக் கூடுமென்று நினைப்பதும், அதுவரையில் மேற்கண்ட காரியங்களை அடியோடு விட்டுவிடாமல் தனி இயக்கப் பொறுப்பிலாவது செய்துக்கொண்டு வர வேண்டும் என்பதும் நமது அபிப்ராயத்துக்கு ஆதரவளிப்பதெனக் கருதுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 10.01.1926)

Pin It