துருக்கி தூதுகோஷ்டி சம்பந்தமாக தேவி தீட்டிய துணைத் தலையங்கத்தை அறிவைக் கொண்டு அவசியம் பார்ப்போமேயானால், இந்த ஞானம் இதற்கு எப்பொழுது வந்தது என்றோ, யாருக்கு இந்த உபதேசம் என்றோ எண்ண வேண்டியிருக்கிறது. ஊருக்கு உபதேசம் செய்ய வந்த உத்தம தேவி, தனக்கும், உற்ற உறவினர்களாகிய காங்கிரஸ் தோழர்களுக்கும் அந்த உபதேசம் பயன்படுமா என்பதுதான் நமது கேள்வி. அதனுடைய உபதேசம் அறிவு கலந்த உபதேசம் தான்.

அது உபதேசிக்கும் முறையில் அரசியலில் மதத்தைப் புகுத்தலாகாது என்ற சீரிய நோக்கம் அந்தத் தாளுக்குரியோர்களும், அத்தாளை ஆதரிக்கும் காங் கிரஸ் தோழர்களும் ஏற்றுக்கொண்டார்களா? அல்லது ஏற்க முற்படுவார்களா? என்று, அத்தாசன் தலைப் பெயரைக் கொண்டே முடிவுகட்டப் போனால், குதிரைக் கொம்பாகத்தான் முடியும்.

ஏனென்றால் பல மதத்தினர்களும், பல மொழியினர்களும் கொண்ட இப்பரந்த உபகண்டமாகிய இந்நாட்டின் அரசியல் ஞானத்தை அள்ளி வீசுவதாகப் பறைசாற்றிக் கொள்ளும் தேசியத் தாள்களும்-ஏன்? குறிப்பாக “பாரத தேவி” என்றதாள், தன் பெயர் தேச சம்பந்தமான குறிப்புப் பெயராகிய பரதன், பாரதம் என்கின்ற சொற்களினின்று வந்தது என்று உணர்ந்த பிறகும், தன் பெயரை மாற்றி உப தேசிக்கும் அளவில் நிற்குமா என்பது சந்தேகத்திற்கு இடமாகவே இருக்கின்றது.

அதுதான் போகட்டும். அது அன்றாடம் அள்ளி வீசும் அரசியல் ஞானமாகிய காந்தியமும் காங்கிரஸ் வேலைத் திட்டங்களும் எதனை அடிப்படையாகக் கொண்டு இருக்கின்றது? ஆத்மார்த்த சம்பந்தமான மதப்பிரச்சாரத் தின் பதமல்லவா? “மஹாத்மா” என்ற அடைமொழி காந்தியாருக்குத் தந்து காங்கிரஸ் வியாபாரம் நடத்தி வருகிறார்கள்.

இக்கலிகாலத்தில் அவர்தான் அவதாரம் செய்திருக்கிறார் என்றும், அவர் விரும்பும் இராஜ்யம் (ஆகிய) ஹிந்து தர்மமாகிய வர்ணாஸ்ரம தர்மத்தை அடிப்படையாகக் கொண்ட ராமராஜ்யம் என்னும் அத்திட்டத்தைக் கொண்ட வார்தா கல்விப் படிப்பும், மஹாத்மா சிறையினின்று மாயமாகப் போய்விட்டார் என்பதும், மஞ்சள் பெட்டி மகத்துவமும், தீபாவளிக்கு எண்ணெய் ஸ்நானம் செய்து கதர் வாங்குங்கள் என்றும், ஹரி ஜனத் தொண்டு என்றும், அந்தம்மாளின் மக்கள் 40 கோடி மக்களாகிய நாம் என்று யார் சொல்லி வரு கின்றார்கள் என்று வாசகர்களே முடிவுகட்ட வேண்டிய பிரச்சனையுமாகும்.

இதுவும் தவிர மதச்சம்பந்தமான தேர் திருவிழாக்களில் காந்தியங்களும் காங்கிரஸ் கொடிகளும் உபயோகிப்பது, கற்பூர ஆராதனைகள் நடத்து வது, வந்தே மாதரப் பாடல்கள் பாடுவது ஏன்? அரசியல் அறிவுமிக்க ஆச்சாரியார்கள் கூட அரசாங்கத்தில் சட்டங்கள் இயற்றுவது, அதனை ஆதரிக்கும் முறையில் காணாதது கண்டோம் எனத் தலையங்கங்கள் எழுது வது, இவைகளைப் படித்துப் பரவசமடையும் பாமர மக்கள் மத சம்பந்தமான திருமணங்களில் கதர் திரு மணங்கள் என்றும், காந்தி உருவப்படங்களுடன் திருமணத் தாள்களும் வாழ்த்துப் பாக்களும் நடத்துவது என்றால் தேவி தீட்டிய தெளிந்த ஞானத்திற்கும் மேற்படி குறித்த செயல்களுக்கும் ஒப்பிட்டுப் பார்ப்போமானால் மலைக் கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமாக மாத்திரமல்ல, ஊருக்கு உபதேசித்தேனே தவிர, உமக்கா சொன் னேன் என்ற புராணிகர் கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

மதத்துடன் அரசியலைப் புகுத்தலாகாது என்ற அறிவான தொண்டில் ஈடுபட்ட ஈ.வெ.ரா. இயக்கத் தினர்களாகிய இந்நாட்டின் சுயமரியாதை இயக்கத் தினர்களை இழிவுபடுத்தவில்லையா? நாஸ்திகர்கள் என்றல்லவோ நாத்தழும் பேறவும் பத்திகள் நிறைய வும் பழித்து வந்தார்கள்.

இவ்வளவையும் சோற்றில் மறைத்த பூசணிக் காய் போன்று பத்தினிப் பேச்சு பேசுவது நாணயமா என்று நாம் கேட்கின்றோம்.

நம்மைத்தான் போகட்டும்-தேவி திருத்த முயலும் முஸ்லிம் லீக் தலைவராகிய முகம்மதலி ஜின்னாவை விட்டார்களா? தாடியில்லை, கோட் போட்டுக் கொள்ளு கிறார். பிற மதத்தினரை மணந்தார். ஆதலால் அவர் இஸ்லாமல்ல. அவரை இஸ்லாமியத் தலைவராக ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று பிளவு ஏற்படுத்த முயலவில்லையா என்று கேட்கின்றோம்.

தேவக்கூட்டத்தாராகிய தேசியவாதிகள் “தேசத் துரோகிகள்” தெளிந்து முடிவு கட்டிய உபதேச மாகிய “அரசியலில் மதத்தைப் புகுத்தலாகாது” என்ற கொள்கையை ஏற்று நடப்பார்களேயா னால், எளிதில் இந்நாட்டின் விடுதலை பெறு வார்கள் என்பதில் சந்தேகமில்லை.

(- “விடுதலை, 1.2.1943)

Pin It