பிரபாத் பட்நாயக்

 தமிழில்: அசோகன் முத்துசாமி

 முதலாளித்துவம் நவீனத்துவத்தைக் கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது; அதில் பாபாக்களுக்கும், சுவாமிகளுக்கும், அரை பாபாக்களுக்கும் அரை சுவாமிகளுக்கும் பாத்திரம் எதுவும் இல்லாத மதச்சார்பற்ற அரசியலும் அடங்கும். புதிய தாராயமய சீர்திருத்தங்கள் முதலாளித்துவ வளர்ச்சியை துரிதப்படுத்துகின்றன, அதனால் நவீனத்துவத்தை நோக்கிய நமது பயணமும் வேகமடைகிறது என்று சீர்திருத்தங்களை பலர் ஆதரித்தனர். இடதுசாரிகள் எப்போதுமே இந்த நிலையை மறுத்து வந்துள்ளனர். முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையை தாமதமாக மேற்கொள்ளும் நாடுகளில் முதலாளித்துவ வர்க்கம் நிலப்பிரபுத்துவ, அரை நிலப்பிரபுத்துவ வர்க்கங்களுடன் கூட்டு சேர்கின்றது; ஆதலால், இன்றியமையாத வகையில் பழைய சமூக அமைப்பிற்கு பலத்த அடி கொடுப்பதற்குப் பதிலாக அதனுடன் சமரசம் செய்து கொள்கிறது; அது நவீனத்துவத்தை நோக்கிய பயணத்திற்குத் தடையாக இருக்கின்றது என்று இடதுசாரிகள் வாதிட்டனர். முதலாளித்துவத்தைத் தாண்டிச் செல்ல முயற்சிக்கும் சமூக சக்திகளால் மட்டுமே (இடதுசாரிகள்-மொர்) நாட்டை நவீனத்துவத்திற்கு  அழைத்துச் செல்லவும் முடியும்.

 நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் மிக வேகமாக வளர்ந்து கொண்டிருப்பதும், சர்வதேச அரங்கில் நாட்டிற்குப் புதிதாகக் கிடைத்துள்ள 'கவுரமும்', மேட்டுக்குடியினர் உலகமயமாக்கப்பட்டிருப்பதும் இடதுசாரிகளின் நிலைப்பாடு தவறு என்கிற எண்ணத்தை உருவாக்கியிருந்தால், கருப்புப் பணத்திற்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக மிரட்டிய பாபா ராம்தேவிடம் நான்கு மத்திய அமைச்சர்கள் மிகக் கேவலமான முறையில் மன்றாடிய சம்பவம் அந்த எண்ணத்தைப் போக்கியிருக்க வேண்டும்.

இந்த சம்பவம் இன்னும் நம்மிடையே பழமை நீடித்திருக்கிறது என்பதை வலியுறுத்திக் கூறுவது மட்டுமின்றி, எல்லையற்ற கலக்கத்தை உண்டாக்கும் ஒன்றை வெளிப்படுத்தவும் செய்திருக்கிறது; அது, புதிய தாராளமய இந்தியா பழமையை எதிர்ப்பதற்குப் பதிலாக உண்மையில் அதைப் பலப்படுத்திக் கொண்டிருக்கிறது. கப் பஞ்சாயத்துகள் புத்துயிர் பெற்றிருப்பதை நாம் பார்த்தோம்; இப்போது, சாகும்வரை உண்ணாவிரதம் என்ற பெரும் மிரட்டலுடன் ஒரு பாபா தன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ற வகையில் அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று கோருகிறார். நம்முடைய வளர்ச்சி சாதனைகளைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளும் இன்றைய அரசாங்கம் ஓடோடிச் சென்று அத்தகைய ஒரு சாமியாரை தாஜா செய்கின்றது. அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று களியாட்டம் போடுகின்ற ஒரு பாபாவை தாஜா செய்ய ஜவஹர்லால் நேருவோ, அல்லது இந்திரா காந்தியோ கூட, நான்கு காபினெட் அமைச்சர்களை அனுப்பியிருப்பார்களா?

பொருளாதார ரீதியாக 'வெற்றி' அடைந்திருந்தபோதிலும் அரசாங்கம் இவ்வளவு கீழான நிலைக்கு வீழ்ந்து விடவில்லை;  உண்மை என்னவெனில், அந்தப் பொருளாதார வெற்றியால்தான் இந்த வீழ்ச்சி ஏற்பட்டது. பின்பற்றப்படும் பொருளாதாரப் பாதை தவிர்க்க முடியாத வகையில் முதலாளித்துவ அரசியல் வர்க்கம் முழுவதையும் ஊழலில் சிக்க வைக்கின்றது. அது அரசியலை மதிப்பிழக்கச் செய்கிறது; ஆதலால், அனைத்து வகையான பாபாக்களுக்கும், சாமியார்களுக்கும், தங்களைத் தாங்களே ரட்சகர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களுக்கும் களத்தைத் திறந்து விடுகின்றது; அவர்கள் எவருக்கும் பதில் சொல்ல வேண்டியதில்லை; அவர்களே ஊழலற்றவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கூட இல்லை; களத்தில் நுழையும் அவர்கள் சமூக ஒப்புதல் எதுவும் இல்லாத தங்களது சொந்த நிகழ்ச்சி நிரலை அரசின் மீது திணிக்கிறார்கள். அரசியலை மதிப்பிழக்கச் செய்வது என்பது தவிர்க்கவியலாத வகையில் ஜனநாயகத்தை பலவீனப்படுத்துவதாகும்; எந்தப் பழமைக்கு எதிராக நாம் சுதந்திரப் போராட்டம் நடத்தினோமோ அந்தப் பழைய காலத்திற்கு நம்மை பின்னோக்கி தூக்கி எறிவதாகும்.

ஆனால், ஊழலும் பொருளாதாரப் பாதையும் எப்படி இணைக்கப்பட்டிருக்கிறது? சட்ட விரோதமாக வழங்கப்பட்ட சேவைகளுக்காக பணம் கொடுக்கப்படுவதையே ஊழல் என்கிறோம்; அதாவது, அவை விலை கொடுத்து வாங்கக் கூடிய சரக்குகள் இல்லை; அல்லது நிர்ணயிக்கப்பட்ட அளவு மட்டுமே விற்கப்படும் ரேஷன் முறையில் வழங்கப்படுவதைவிடக் கூடுதலாக சில பொருட்களையும், சேவைகளையும் வாங்குவதற்காக நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட அதிகமாகப் பணம் கொடுப்பதை ஊழல் என்கிறோம். ஒரு தொலைபேசி இணைப்புக்காக சட்டப்படி என்ன கட்டணம் செலுத்த வேண்டுமோ அதை நான் ஏற்கனவே செலுத்தியிருந்த போதிலும், அதற்காக நான் லஞ்சம் கொடுத்தால் அது முதல் வகை ஊழலாகும்; எனது குழந்தைக்கு கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை எனில் (கல்லூரி இடங்களின் எண்ணிக்கையும் ஒரு வரம்பிற்கு உட்பட்டதே), நுழைவுக் கட்டணத்தைவிட அதிகமான பணம் கொடுத்து இடம் வாங்கினால் அது இரண்டாவது வகை ஊழலாகும். பெரும்பாலான ஊழல்களை இந்த இரண்டு வகைகளில் ஏதேனும் ஒன்றைச் சேர்ந்தவையாக வகைப்படுத்தி விடலாம். ஆனால், அடிப்படையான விஷயம் இதுதான்: ஊழல் எனும் கருத்துருவாக்கத்தின் அடிப்படையாக இரண்டு செயல் களங்களுக்கு (அல்லது செயல் பரப்பு) இடையிலான வேறுபாடு இருக்கின்றது; ஒன்று தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களம்; மற்றொன்று அதற்கு வெளியே இருக்கும் களம்.

தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்தில்  ஊழலைப் பற்றி நாம் பேசுவதில்லை; தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்திற்கு வெளியே இருக்கின்ற களத்தில் தடையற்ற சரக்கு பரிவர்த்தனைக் களத்தில் போல் ஒரு விலை வாங்கப்படும்போதுதான் ஊழல் நிகழ்கின்றது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், இந்த இரண்டு களங்களின் எல்லைகள் தாண்டப்படக் கூடாது, பாதுகாக்கப்பட வேண்டும், அவ்வளவுதான். இது சாத்தியமா?

சரக்குமயமாக்கல்

 முதலாளித்துவத்தின் கீழ் எல்லாவற்றையும் சரக்குகளாக்கும் ஒரு போக்கு எங்கும் ஊடுருவிப் பரவுகின்றது; அதாவது, எல்லாவற்றையும் சரக்காக ஆக்கும் ஒரு போக்கு என்பதைக் கண்டுபிடித்தது கார்ல் மார்க்சின் மிக ஆழமான அறிவுக் கூர்மையாகும். தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்திற்கும் அதற்கு வெளியே இருக்கும் களத்திற்கும் இடையிலான எல்லை எப்போதும் வெளி நோக்கி தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. (அதாவது, தடையற்ற சரக்கு பரிவர்த்தனை நிகழும் பரப்பின் எல்லை விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது-மொர்). ஆனால், இந்த எல்லை சட்டபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு விட்டால், பின்னர் அதை வெளி நோக்கி தள்ளுவது சட்டத்தை மீறுவதாகிவிடும். அதாவது, அது ஊழலாகிவிடுகின்றது. புதிய தாராளமய சகாப்தத்திற்கு முன்னர், அதாவது 'லைசன்ஸ்-கோட்டா-பெர்மிட் ராஜ்' என்றழைக்கப்பட்ட முறை இருந்த காலத்தில் அத்தகைய ஒரு எல்லை வெளிப்படையான வகையில் சட்டபூர்வமாக நிர்ணயிக்கப்பட்டது. இது ஊழலுக்கு ஒரு சுலபமான விளக்கத்தை அளித்தது (இந்த எல்லை தவறாகவும், தன்னிச்சையாகவும் நிர்ணயிக்கப்பட்டது என்கிற வாதத்தின் அடிப்படையில்); மற்றும் புதிய தாராளமய சீர்திருத்தங்கள் மூலம் இந்த எல்லையை வெளியே தள்ளினால் ஊழல் மறைந்து விடும்; அல்லது குறைந்தபட்சம் குறைந்துவிடும் என்கிற ஒரு தோற்றத்தையும் உண்டாக்கியது.

 இரண்டு கண்கூடான விஷயங்களை இந்த வாதம் தவறவிட்டுவிட்டது. முதலாவதாக, இந்த எல்லையை நாம் எவ்வளவு தூரம் வெளி நோக்கி தள்ளினாலும், சட்டபூர்வமான எல்லை ஒன்று எப்போதும் இருக்க வேண்டும்; ஏனெனில், அனைத்துமே விற்பனைக்கு உரிய ஒரு சமுதாயத்தை கற்பனையே செய்து பார்க்க முடியாது (தேர்வு முடிவுகள் ஒரு சரக்காக ஆகிவிட்டால் என்ன நிகழும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்); அத்தகைய ஒரு சட்டபூர்வமான எல்லை இருந்தாலும் கூட, முதலாளித்துவத்தின் உள்ளியல்பாக இருக்கும் அதை வெளி நோக்கி தள்ளுகிற போக்கு ஊழலை உற்பத்தி செய்யும். இரண்டாவதாக, இந்த சட்டபூர்வ எல்லைக் கோடு எந்த அளவு ஆற்றலுடன் வெளிநோக்கித் தள்ளப்படுகின்றது என்பது பணம் பண்ணுவது எந்த அளவிற்கு மரியாதைக்குரிய செயலாகக் கருதப்படுகின்றதோ அதைப் பொருத்தே அமைகின்றது. அதாவது முதலாளித்துவ விழுமியங்கள் எந்த அளவிற்குப் பரவியிருக்கின்றது என்பதைப் பொருத்தே அமைகின்றது. புதிய தாராளமயச் சீர்திருத்தங்கள் அத்தகைய விழுமியங்களை எங்கும் ஊடுருவிப் பரவச் செய்துவிட்டன; நம்முடைய பொது வாழ்வில் ஊழல் எந்த அளவு சக்தியுடன் நுழைகின்றதோ அந்த சக்தி  அதற்கேற்ற அளவு பெருகியுள்ளது. தடையற்ற சரக்கு பரிவர்த்தனை களத்தின் சட்டபூர்வ எல்லையை அமல்படுத்தும் இறுதிப் பொறுப்பு எப்போதுமே அரசின் அரசியல் ஊழியர்களிடம் இருப்பதால், முதலாளித்துவ தர்க்க நியாயம் முதலாளித்துவ அரசியல் வர்க்கத்தவர்களை ஊழல் செய்பவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்களாக ஆக்குகின்றது.

ஊழலை சட்டபூர்வமானதாக ஆக்குவதன் மூலம் அதை ஒழித்துவிடலாம் என்கிற கருத்து பிழையானதாகும். தார்மீக ரீதியாக மட்டுமின்றி பகுத்தாயும் அறிவு ரீதியாகவும்; ஏனெனில், தடையற்ற சரக்கு பரிவர்த்தனைப் பரப்பிற்கு ஒரு எல்லை எப்போதுமே இருக்க வேண்டும்; முதலாளித்துவ விழுமியங்கள் எங்கும் பரவியிருக்கும் ஒரு உலகில் அப்போதும் கூட அது ஊழலை உற்பத்தி செய்யும்: எடுத்துக் காட்டாக, மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கான இடம் ஒரு சரக்காக ஆக்கப்பட்டு, அதிக விலை கொடுப்பவருக்கு விற்கப்பட்டாலும் கூட, அது மருத்துவக் கல்லூரிகளில் ஊழலை முடிவிற்குக் கொண்டு வந்து விடாது; ஏனெனில், அப்போது தேர்வு முடிவுகள் திருட்டுத்தனமாக வாங்கி விற்கப்படும். லோக்பால் சட்டம் கொண்டு வந்துவிட்டால் போதும் ஊழல் ஒழிந்து விடும் என்கிற எண்ணம் பிழையானது; எங்கும் முதலாளித்துவ விழுமியங்கள் பரவியிருக்கும் ஒரு உலகில் லோக்பால் அலுவலகமே ஊழலின் உறைவிடமாக ஆகிவிடும். ஒரு மூத்த உச்சநீதிமன்ற நீதிபதி சமீபத்தில் விளக்கியது போல், பணி ஓய்வுப் புகலிடங்களுக்கான ஆசையில் (அவற்றை அளிப்பது அரசாங்கத்தின் விருப்பத்திற்கு உரியது) பணியிலிருக்கும் நீதிபதிகள் அரசாங்கத்திற்குச் சாதகமான தீர்ப்புகளை வழங்குவதன் மூலம் அதன் தயவைப் பெற முயற்சிக்கின்றனர்.

எந்த நடவடிக்கை எடுத்தாலும் ஊழலின் அளவை மாற்ற முடியாது என்பதோ, அதை எப்போதும் குறைக்க முடியாது என்பதோ விஷயமல்ல. நமது தற்போதைய பொருளாதார பாதையுடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள பணம் பண்ணுவதற்கான பேராவல், வாழ்வின் ஒவ்வொரு துறையிலும் சரக்குமயமாக்கலின் ஊடுருவல் ஆகியவை எங்கும் ஊடுருவிப் பரவிக் கொண்டிருக்கும் முதலாளித்துவ விழுமியங்கள் பற்றிய விவாதம் முழுவதையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது என்பதுதான் விஷயம்; அதனிடத்தில் அனைத்து வகையான சுலபமான உடனடித் தீர்வுகளும் சாமியார்களாலும், தங்களைத் தாங்களே ரட்சகர்கள் என்று அழைத்துக் கொள்பவர்களாலும் தேசத்தின் தொண்டைக் குழிக்குள் திணிக்க முயற்சிக்கப்படுகின்றது; சந்தர்ப்பவாத அரசியல் வர்க்கம் ஜனநாயகத்திற்குக் கேடான வகையில் அவர்களது செயல்களுக்குப் பணிந்து போகின்றது.

ஒரு ஜனநாயக சமுதாயத்தில் சாமியார்கள், துறவிகள், ரட்சகர்கள் உள்பட அனைவருக்குமே தேசத்திற்கு எது நல்லது என்பது குறித்து கருத்துக்கள் சொல்வதற்கும் அவற்றுக்காகப் போராடுவதற்கும் நிச்சயமாக உரிமை உண்டு. ஆனால், இரண்டு எச்சரிக்கைகள் அவசியம். முதலாவதாக, ஒரு தனிநபர் தனக்கு இழைக்கப்பட்ட தீங்கிற்கு பரிகாரம் பெறுவதற்காக சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினால் அதில் நியாயம் உண்டு என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து என்றபோதிலும், ஒரு ஜனநாயக சமுதாயத்தில் குறிப்பிட்ட பொதுக் கொள்கைகளைக் கோருகிற விஷயத்தில் அது ஒரு முறையான போராட்ட ஆயுதமல்ல; ஏனெனில், ஜனநாயக சமுதாயத்தில் அத்தகைய கொள்கைகளை தீர்மானிப்பதற்கு அரசியல் சட்ட ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட அமைப்புகள் இருக்கின்றன. இரண்டாவதாக, ஒரு குறிப்பிட்ட வகையான பொதுக் கொள்கைகளைக் கோருவது போன்ற ஒரு அரசியல் நோக்கத்திற்கான அணி திரட்டல் அரசியலற்ற பற்றுகளின் அடிப்படையில் செய்யப்பட முடியாது. மத, ஆன்மீக அல்லது மற்ற காரணங்களுக்காக கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கையை பெற்றிருக்கும் ஒருவர் அந்த நம்பிக்கையைப் பயன்படுத்தி அவர்களை அரசியல் கோரிக்கைளுக்காக அணிதிரட்டினார் என்றால் அது மதச்சார்பற்ற அரசியலை சீர்குலைக்கும் வேலையாகும். அத்தகைய ஒரு நபரை தாஜா செய்யும் ஒரு அரசாங்கம் அந்த சீர்குலைவு வேலைக்குத் துணை போகின்றது.

அத்தகைய ஒரு சீர்குலைவு அபாயம் சமகால இந்தியாவை மிரட்டிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிகழ்வுகள் மற்ற சாமியார்களும், பாபாக்களும் தங்களது சொந்த கோரிக்கைகளை எடுத்துக் கொண்டு களமிறங்குவதற்கான துணிச்சலை அளிக்கும். அந்த கோரிக்கைகள் எவ்வளவு நல்லவை போல் தெரிந்த போதிலும், கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளில் நமது மிகப் பெரிய சாதனைகளான நமது ஜனநாயகத்தையும் மதச்சார்பின்மையையும் அத்தகைய போக்கு மெல்ல மெல்ல அழித்துவிடும்.        

ஆதாரம்: நீயூஸ்கிளிக் (newsclick.in) 4.6.11

Pin It