கீற்றில் தேட...

இங்கிலாந்து ஐரோப்பிய நாடுகளும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் உலகவர்த்தகத்தை தன் கட்டுபாட்டில் வைத்திரருந்தது, தொழில்புரட்சியின் விலைவாக உற்பத்தி கட்டுக்கடங்காமல் பெருகியது, குறைந்த விலையில் மூலப்பொருட்களை காலனிய தேசத்தில் இருந்து இறக்குமதி செய்து பின் பெருட்களை தயரித்து அதே காலனிய தேசத்தில் விற்று லாபம் குவித்தது.

காலனிய அமெரிக்கா சுதந்திரம் அடைந்த பிறகு இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் அரசியல் பெருளாதார தலையீடுகளை சுத்தமாக விரும்பவில்லை. எனவே ஓரு தன்னிச்சையான பொருளாதார வர்த்தக செயல்பாடுகளில் இருந்து, இந்தநிலைபாடு இருபதாம் நூற்றாண்டின் பொருளாதார வீழ்ச்சி வரை தொடர்ந்து ( The Great Depression 1929-33). பொருளாதார வீழ்ச்சியின் படிப்பினைகளுக்கு பிறகு வெளிநாட்டு வர்த்தகத்தை பெருக்கும் நோக்கத்தில் முரண்பாடுகளை இலகுவாக்கி ஐரோப்பா, இங்கிலாந்து , இலத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் வர்த்தகத்தில் ஈடுபட வர்த்தக கட்டண பறிமாற்று சட்டத்தை ( Reciprocal Tariff act ) ஜூன் 12 1934-ல் நடைமுறைக்கு கொண்டு வந்தது. இருபதாம் நூற்றாண்டின் முதல் இறுதியில் நடந்த இரண்டாம் உலக யுத்தம் அமெரிக்க பொருட்களுக்கு ஒரு புதிய சந்தையை ஏற்படுத்தி கொடுத்தது. இரண்டாம் உலகம் யுத்தம் முடிந்தவுடன் இங்கிலாந்தும் ஐரோப்பிய நாடுகளும் காலனிய காலத்து வெளிநாட்டு வர்த்தக தொடர்புகளை விரிவுபடுத்தவும், சர்வதேச மட்டத்தில் ஏகாதிபத்திய பொருளாதார அதிகார மையங்களை உருவாக்க 1944 –ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அமெரிக்காவில் பிரிட்டன்வுடஸ் (Bretton woods) என்னும் இடத்தில் நேசநாடுகளில் பிரதிநிதிகள் ஒன்றுகூடி உலக வங்கி (International Bank for Reconstruction and Development), சர்வதேச வர்த்தக நிறுவனம் (International Trade Organisation) போன்றவற்றை உருவாக்கினர்.

modi ram vilas baswanஉலக வங்கியும் சர்தவதேச நாயண நிதியமும் ஒப்புதல் பெற்று வேகமாக தனது பணியை துவங்கியது. சர்வதேச வர்த்தக நிறுவனம் பல முரண்பாடுகளால் நடைமுறைக்கு வர தாமதமாகி கொண்டிருந்து. எனவே அக்டோபர் 30, 1947-ல் 23 நாடுகள் ஒன்றிணைந்து கட்டணம் மற்றும் வர்த்தகத்திற்கான பொது ஒப்பந்த்தை உருவாக்கினர் ( Gentral Agreement on Tariff and Trade- GATT). ஜனவரி 1 1948-ம் ஆண்டு இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது. ஏறத்தாள 47 ஆண்டுகள் இவ்ஒப்பந்தத்தின் வாயிலாகவே ஐரோப்பிய அமெரிக்கா அரசு மூன்றாம் உலக நாடுகளை ஒரு பொருளாதார அடிமைகளாக மாற்றி அமைத்தது மேலும் நிர்வாக கட்டமைப்பு குறைபாடுகளை நிவர்த்தி செய்வற்காக ஏப்ரல் 14 1994 ஆண்டில் நடைபெற்ற உருகுவே இறுதி கூட்டத்தில் உலக வர்த்தக நிறுவனம் ( World Trade organization ) என்னும் கட்டமைப்பை உருவாக்க முடிவு செய்யப்பட்டது. ஜனவரி 1 1995-ம் ஆண்டு ஏகாபத்திய வர்த்தக பொருளாதாரத்தின் தன்னிச்சையான முடிவுகளை செயல்படுத்த உலக வர்த்தக நிறுவனம் நடைமுறைக்கு வந்தது. மூன்றாம் உலக நாடுகளின் குறைந்த பட்ச பொருளாதார இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்கிய பன்னாட்டு பெரு நிறுவனங்களின் அதிகார பீடமாக இந்த உலக வர்த்தக நிறுவனம் செயல்படதுவங்கியது.

வட அமெரிக்காவின் கரிபியன் தீவில் அமைந்துள்ள ஒரு சிறிய நாடுதான் ஹெய்டி குடியரசு ( Republice of Haiti ) 1994-ம் ஆண்டு அமெரிக்கா தனது ராணுவ தலையீடுகளில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியது. பிறகு 1996-ம் ஆண்டு ஹெய்டி குடியரசை ஒரு புதிய பொருளாதா கொள்கைக்குள் சிக்கவைத்தது. அதன்படி 50% ஏற்றுமதி இறக்குமதி கட்டண குறைப்புக்குள் தள்ளியது. இதன் விளைவாக 10 ஆண்டுகளில் உள்நாட்டு உணவு சந்தை முழுமுற்றாக அழிக்கப்பட்டது. 80 சதவீத உணவு தானியங்கள் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இன்று ஹெய்டி ஒரு பொருளாதார காலனிய நாடாக திகழ்கிறது. 2010 பேரிடர் காலகட்டத்தில் கூட அந்நாட்டு அமெரிக்காவின் உணவு தானியத்திற்காக காத்துக்கொண்டிருந்தது. இது போன்று ஒரு பொருளாதார அடிமைத்தனத்தில் வளரும் நாடுகளை சிக்கவைக்கவே ஏகாதிபதிய சக்திகள் விவசாய ஒப்பந்தத்தையும் வர்தக அனுசரனை ஒப்பந்தத்தை திணிக்கிறது,

உணவு பொருட்களுக்கான மானிய குறைப்பு ஏற்றுமதி கட்டண தடை பற்றிய விவாதம் என்பது உலக வர்த்தகத்தில் புதிய ஒன்றல்ல. ஏறத்தால 60 ஆண்டுகளுக்கு முன்பே போராசிரியர் கோட்ப்பிரெயட் ஹபர்லர் (Gottfried Haberler) தலைமையில் விவசாய பாதுகாப்புவாதத்தின் (Agricultural protectionism) பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த ஜீஏடிடி (GATT) முடிவு செய்தது. அதன் பயனாக 1958-ம் ஆண்டு ஹபர்லர் அறிக்கை (Haberler Report) சமர்பிக்கப்பட்டது. அவ்வரிக்கையின் முக்கியமாக பரிந்துரையே விவசாயத்திற்கான மானியத்தை கட்டுப்படுத்துவதுதான்.

இதே காலகட்டத்தில் ஐரோப்பிய நாடுகள் ரோம் உடன்படிக்கையில் (Treaty of Rome) கையெழுத்திட்டு ஐரோப்பிய பொருளாதார சமூகத்தை தோற்றுவித்தது (European Economic community). ஐரோப்பிய நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்தை ஊக்குவித்தல், கட்டணமற்ற சந்தையை உருவாக்குதல் போன்ற முயற்சியில் இச்சமூகம் உருவாக்கப்பட்டது. உலக பொருளாதாரத்தில் ஐரோப்பிய சமூகம் புதிய வீரியத்துடன் நகர்ந்தது. இதை உன்னிப்பாக கவனித்த அமெரிக்கா கென்னடி அரசு தன் நாட்டின் வர்த்தகத்தை பலப்படுத்த 1962-ம் ஆண்டு வர்த்தக விரிவாக்க சட்டத்தை (Trade Expansion Act) அமுல்படுத்தியது. இச்சட்டத்தின் துண்டுதலில் தான் மே 4 1964 முதல் ஜூன் 30 1967 ஆண்டு வரை ஜீஏடிடில் வர்த்தக கட்டணம் பற்றிய பேச்சுவார்த்தை 37 மாதங்கள் நடைபெற்றது. இதுவே புகழ்பெற்ற கென்னடி சுற்று (Kennedy Round) என்று அழைக்கப்படுகிறது. இச்சுற்றின் முக்கியமாக விவாதிக்கப்பட்டவை விவசாய பொருட்களின் வர்த்தக தடைகளை களைவது, கட்டணங்கள் அல்லாத தடைகளை நீக்குவது (Non Tariff Barries) மற்றும் கொட்டுதலுக்கு (anti dumping) தடை விதித்தல். இம்முடிவுகளை பற்றிய விவாதங்கள் தொடர்ந்தன. இதனை தொடர்ந்து டோக்கியோ கூட்டத்திலும் விவாதங்கள் முடிவுக்கு வராமல் பேச்சுவார்த்தையோடு நின்றுவிட்டது. சர்வதேச வர்த்தகத்தில் உறுதியான சில முடிகளை எடுக்க ஜிஏடிடியின் நிர்வாக கட்டமைப்பு போதவில்லை என்று அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் ஒரு கட்டமைப்பு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் உருகுவேவில் செப்டம்பர் 1986-ம் கூடியது. 87 மாதங்கள் நடந்த நீண்ட விவாதங்களுக்கு பிறகு இறுதியாக 15 ஏப்ரல் 1994-ம் ஆண்டு மொரோக்கோவில் உள்ள மார்கேஷல் முடிவை எட்டியது. அம்முடிவின் அடிப்படையில்
உலக வர்த்தக செயல்பாடுகள் அனைத்தும் உலக வர்த்தக நிறுவனம் (World Trade Organisation) என்னும் புதிய கட்டமைப்பு மூலம் முடிவு செய்யப்படும். இதுவே புகழ்பெற்ற மார்கேஷ் ஒப்பந்தம் (Marrakesh Agreement).

இதனிடையே 1992 நவம்பர் மாதம் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய பொருளாதார சமூகத்திற்கும் இடையே பிளேயர் இல்ல ஒப்பந்தம் (Blair House Accord) கையெழுத்தாகிறது. இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் நோக்கம் ஏற்றுமதி மானியம் மற்றும் உள்நாட்டு மானியத்தை குறைத்து கொள்ளுதல். இதன் பின்புலத்தில் தான் வளரும் நாடுகளின் விவசாய மானியத்தை குறைக்க ஒரு பலதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த ஜிஏடிடி முழு மூச்சுடன் செயல்பட துவங்கியது. உலக வர்த்தக நிறுவனம் செயல்பட துவங்கிய முதல் ஆண்டே விவசாய ஒப்பந்தத்தை (Agreement on Agrilculture) பரிந்துரை செய்தது. 50 ஆண்டு கால வரலாற்றில் இவ்வளவு மோசடியான ஒப்பந்தத்தை வளரும் நாடுகளின் தலையில் கட்ட அமெரிக்கா ஐரோப்பிய நாடுகள் முயற்ச்சித்து இதுவே முதல் முறை. உருகுவே சுற்றில் பரிந்துரை செய்யப்பட்ட இவ்விவசாய ஒப்பந்தம் மூன்று கூறுகளை கொண்டது.

  • சந்தை அனுகுதல் (Market Access)
  • உள்நாட்டு ஆதரவு (Domestic Support)
  • ஏற்றுமதி மானியம் (Export Subsidies).

 பொருட்களை அன்னிய நாட்டு சந்தையில் இறக்குமதி செய்ய இருவிதமான தடைகள் உள்ளன, ஒன்று கட்டணத்தடை (Tariff Barriers) கட்டணத் தடையென்பது இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு அரசு விதிக்கும் சுங்க வரியை கட்டிவிட்டு சந்தையில் விற்பனை செய்வது. இரண்டாவது கட்டணமற்ற தடை (Non Tariff Barriers) கட்டணமற்ற தடைன்பது அளவு ஒதுக்கீடு (Quotas) எவ்வளவு அளவு இறக்குமதி செய்யவேண்டும் என்று அரசு நிர்ணயித்தல் (Volume or Quantative restructions) இது மட்டுமல்லாது உரிமம் பெறுதல், தர சான்றிதழ் பெறுதல் ஏற்றுமதி வைப்பு போன்ற பல கட்டண தடைகள் உள்ளன.

1.     சந்தை அனுகுதல்

விவசாய ஒப்பந்தத்தின் முதல் கூறான சந்தையை அனுகுதல் என்பதன் முதல் நிபந்தனையே அனைத்து கட்டணமற்ற தடைகளை நீக்கிவிட்டு கட்டணப்படுத்துதல் (Tariffication) எனும் அடிப்படையை கொண்டு வரவேண்டும் அதுவும் அனைத்து நாடுகளும் குறைந்த ஒற்றை பிணைப்பு கட்டணத்தை (Single Bound Tariff) கொண்டு வரவேண்டுமென்று கூறுகிறது.           ஒரு குறிப்பிட்ட அளவு இறக்குமதிக்கு குறைவான நிரந்தர கட்டணத்தை (Tariff Rate Quota) செலுத்த வேண்டும். இதனால் அன்னிய பொருட்களுக்கு ஒரு நிரந்தரமான குறைந்தபட்ச சந்தையை அனுகமுடியும் (Minimum Market Access). 2002- முதல் இந்தியா அளவீட்டு தடை எனும் கட்டணமற்ற தடைகளை ஒழித்துவிட்டு, கட்டண விகித ஒதுக்கீடு முறை அமல்படுத்திவிட்டது (Tariff Rate Quota -Charges depending on the volume of import). இதனால் அன்னிய உணவு பொருட்கள் ஏற்கனவே ஒரு குறைந்தபட்ச சந்தையை அனுகும் வாய்ப்பு உருவாகிவிட்டது.

2.    உள்நாட்டு ஆதரவு

விவசாயிகளுக்கு அரசு கொடுக்கும் மானிய ஆதரவுகளை நிறுத்தவேண்டும். இந்த மானியங்களை மூன்று பிரிவுகளாக இவ்ஒப்பந்தம் பிரிக்கிறது.

  • மஞ்சல் பெட்டி (Amber Box Subsidies)
  • பச்சை பெட்டி (Green Box Subsidies)
  • நீலப்பெட்டி (Blue Box SUbsidies)

மஞ்சல்பெட்டி என்பது சர்வதேச விவசாய வர்த்தகத்தை நேரடியாக பாதிக்கும் மானியங்கள் (மின்சாரம், உரம், விதை, கடன், பாசனம், அரசு கொள்முதல், குறைந்தபட்ட ஆதரவு விலை போன்ற மானியங்கள்)

பச்சை பெட்டி என்பது சர்வதேச விவசாய வர்த்தகத்தை நேரடியாக பாதிக்காத மானியங்கள் (ஆய்வு, ஆராய்ச்சி, பேரிடர், பயிற்சி, கட்டமைப்பு, விற்பனை உயர்வு, சுற்றுச்சூழல்)

நீலப்பெட்டி நிலம் மற்றும் கால்நடை அளவிற்கு தொடர்புடையது. சில நேரங்களில் அரசு நேரடியாக பணம் கொடுத்து உற்பத்தியை குறைக்க செய்யும்.

விவசாய ஒப்பந்தத்தின்படி மஞ்சல் பெட்டி மானியத்தை முழுமுற்றாக நிறுத்தப்படவேண்டும். விவசாயிகளுக்கு நேரடியாக பயன்தராத பச்சை மற்றும் நீலப்பெட்டி மானியத்திற்கு தடையில்லை. வளர்ந்த நாடுகள் ஏறத்தால 360 பில்லியன் அமெரிக்க டாலர் மானியமாக கொடுக்கப்படுகிறது. வளரும் நாடுகள் வெறும் 50 பில்லியன் அமெரிக்க டாலர் மானியமாக செலவிடுகிறது. வளந்த நாடுகளில் விவசாயத்தை தொழிலாக கொண்ட மக்கள் மிக குறைவு. அவர்கள் விவசாய கட்டுமானத்தில் வளமான இடத்தில் இருக்கின்றனர். இவர்களோடு வளரும் நாடுகளை ஒப்பீடு செய்து முடிவுகள் எடுப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். மஞ்சல் பெட்டி மானியம் நிறுத்தப்பட்டால் வளரும் நாடுகளின் விவசாயிகள் தனது தொழிலை விட்டு பிழைப்பு நடத்துவற்கு நகரத்தை நோக்கி நகரவேண்டிய கட்டாயம் ஏற்படும். வருமான இழப்பு, பட்டினி, தற்கொலைக்கு தள்ளப்படுவார்கள். 

3.ஏற்றுமதி மானியம்

விவசாய பொருட்களை கொள்முதல் செய்து ஏற்றுமதி செய்வோருக்கு அரசு வருமானத்தில் வரிவிலக்கு தருவது நடைமுறை. இதனால் ஒரு நாட்டின் ஏற்றுமதி ஊக்குவிக்கப்படும். அதன் மூலம் அன்னிய செலாவணி இருப்பு கூடும். இவ்விவசாய ஒப்பந்தம் விவசாய பொருட்களுக்கான ஏற்றுமதி மானியத்தை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறது. இந்தியா போன்ற வளரும் நாடுகள் தனது ஏற்றுமதி மானியத்தை 24 சதவீதம் குறைத்து கொள்ளவேண்டும். இவற்றை நடைமுறைப்படுத்த 10 ஆண்டுகள் காலகெடு கொடுக்கப்படும் (1995-2004). வளர்ந்த நாடுகளில் விவசாயத்தை தொழிலாக கொண்டவர்கள் 4 சதவீதம் பேர், வளரும் நாடுகளில் 70 சதவீத மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர். வளர்ந்த நாடுகளில் தனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. ஆனால் வளரும் நாடுகளின் பங்கு 26 சதவீதம். எனவே ஏற்றுமதி மானியம் தடுக்கப்பட்டால் வளரும் நாடுகள் விவசாய துறையில் பின்னடவை சந்திக்கும். இவ்வனைத்தையும் மனதில் கொண்டு வளரும் நாடுகள், இந்தியா, சீனா, பீரேசில், தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளின் தலைமையில் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளாமல் விவாதத்தை நீடீத்தனர்.

1996-ம் ஆண்டு சிங்கப்பூரில் முதலாவது அமைச்சர் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நான்கு நிரந்தர பணிக்குழுக்களை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதில் இரண்டு முக்கியமான பணிக்குழுக்கள் ஒன்று அரசு கொள்முதல் பற்றிய வெளிப்படைத்தன்மையை அறியும் குழு, மற்றொன்று வர்த்தக அனுசரனைப்பற்றியது (Trade Facilitation). தங்கு தடையில்லாமல் குறைந்த செலவில் கட்டுபாடுகள் இல்லாமல் ஏற்றுமதி இறக்குமதி செய்வதற்கு இந்த வர்த்தக அனுசரணை துவங்கப்பட்டது. இதன் முடிவுகள் 1999-ம் ஆண்டு சியாட்டல் நகரத்தில் கூடயிருக்கும் அமைச்சர்கள் கூட்டத்தில் எட்டப்படும் என்று முடிவு செய்யப்பட்டது.

உலக வர்த்தக நிறுவனம் தனது மிக முக்கியமான சுற்றாக 1999-ம் ஆண்டு கூட இருந்த அமைச்சர் கூட்டத்தை கருத்தியது. இதை புத்தாயிரம் ஆண்டு சுற்று (Millennium Round) பெரியிட்டு அதற்கான வேலைகளை தீவிரமா செய்து கொண்டு இருந்து. நவம்பர் 30, 1999-ம் ஆண்டு அமெரிக்கா தனது வரலாற்றில் ஒரு மிகமுக்கியமான எதிர்ப்பை தனது மக்களிடம் இருந்து சந்தித்து. ஏறத்தால 50 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் ஒன்றுகூடி உலக வர்த்தக கூட்டத்தை ரத்து செய்யுமாறு போராட்டம் நடத்தினர். இப்போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் போராட்டம் மிக வீரியமாக நடந்ததால் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. உலமயமாக்கல் ஏகாதிப்த்திய முதலாளித்துவ பொருளாதார கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் பல குழுக்கள் ஒன்று சேர்ந்து நடத்திய இப்போராட்டத்தை “சியாட்டல் யுத்தம்” (Battle of Seatle) என்று பத்திரிக்கைகள் எழுதின. அமெரிக்க மக்களிடம் உலக வர்த்தக நிறுவனத்தின் செயல்பாடு குறித்த ஒரு பரவலான விவாதத்தை இச்சம்பவம் ஏற்படுத்தியததால், தொடர்ந்து ஊடகங்கள் இதைப்பற்றி விவாதம் செய்தது. இச்சம்பவம் மக்கள் மனதிலிருந்து விலகும் முன்பே அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தகர்கப்படுகிறது. மக்கள் விவாதத்தில் இருந்து சியாட்டல் ஒப்பந்தம் மாற்றபடுகிறது. இச்சம்பவம் நடந்து இரண்டு மாதத்தில் உலக வர்த்தக அமைச்சர் கூட்டம் நவம்பர் 2001-ம் ஆண்டு தோகாவில் கூறுகிறது. இதுவே உலக வர்த்தக நிறுவனத்தின் மிக முக்கியமான தோகா முன்னேற்ற சுற்று (Doha Development Agenda).

சர்வதேச மட்டத்தில் விவசாய பொருட்களுக்கான விலை கட்டுப்படுத்த முடியாத சூழல் வந்தால் வளரும் நாடுகள் தனது சந்தையையும் மக்கள் வாழ்வாதரத்தையும் பாதுக்காத்துக் கொள்ள இறக்குமதி செய்யும் பொருட்களின் கட்டணத்தை தற்காலிகமாக உயர்த்திக்கொள்ளவதற்கான பொறிமுறை பரிந்துரை செய்யப்பட்டது. (Special Safeguard Mechanism) இது சிறப்பு பாதுகாப்பு பொறி முறை எனப்படும். இதை வளர்ந்த நாடுகள் கடுமையாக எதிர்த்தனர். இப்பொறிமுறையை கூட அவசரகாலத்தில் மட்டும்தான் செயல்படுத்தமுடியும். வளரும் நாடுகளுக்கும் வளர்ந்த நாடுகளுக்கும் இடையே இத்திட்டத்தை செயல்படுத்தும் சூழல், முறையில் வேறுபாடுகள் எழுந்தன. எனவே இது ஒரு முடிவுக்கு வராமல் போயிற்று. இதே தோகா கூட்டத்தில் வர்த்தக அனுசரணை பற்றிய விவாதமும் எழுந்தது. இதை தொடர்ந்து 2003-ம் ஆண்டு கான்கன்னில் அமைச்சர் கூட்டம் கூடியது. வளரும் நாடுகளின் (G33) பிரதிநிதியாக ஜி4 (இந்தியா, சீனா, பிரேசில், தென்ஆப்ரிக்கா) சிறப்பு பொறிமுறை செயல்திட்டம் பற்றி விவாதித்தது. எனினும் ஒரு முடிவு எட்டப்படவில்லை. 2005-ம் ஆண்டுக்குள் இவ்விவாதம் முடிக்க வேண்டும் என்ற காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்பு 2004-ம் ஆண்டு ஜெனிவாவில் வர்த்த பிரதிநிதிகள் கூட்டம் கூடியது. அக்கூட்டத்தில் அமெரிக்க பிரதிநிதி ராபட் ஜெல்லிக், சிங்கப்பூர் விவாதத்தில் இருந்த வர்த்தக அனுசரணை (Trade Facilitation) மற்றும் அரசு கொள்முதல் (Government Procurement) போன்றவற்றை பற்றிய விவாதத்தை ஏற்படுத்தினர். அதுமட்டுமல்லாமல் ஏற்றுமதி மானியத்தை அகற்றுவது பற்றிய விவாதத்தையும் ஏற்படுத்தினார். இவ்வனைத்து பிரச்சினைகளும் 2005-ம்ஆண்டுக்குள் முடிவு எட்டப்படும் என்று மறைமுகமாக அமெரிக்க கெடு வைத்தது. இதை தொடர்ந்து 2004-ம் ஆண்டுக்கான பொதுசபை கூடி தோகா முன்னேற்ற நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த தேகா நிகழ்ச்சி நிரல் செயல்திட்டம் என்னும் கட்டமைப்பை உருவாக்கி பல விதிமுறைகளை பரிந்துரைத்து. (Doha Agenda Work Programme) இதைத்தான் ஜூலை தொகுப்பு 2004(July Package 2004) என்று கூறப்படுகிறது.

பின்பு டிசம்பர் 2005-ம் ஆண்டு 6-வது அமைச்சர்கள் கூட்டம் ஹாங்காங்கில் கூடியது. இக்கூட்டத்தில் விவசாய மானியத்தை 2013-க்குள் முழுமுற்றாக நீக்கப்டவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் சிறப்பு பொறிமுறை பற்றிய எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதை தொடர்ந்த 2008-ம் ஆண்டு ஜெனிவாவில் கூடிய கூட்டத்தில் தோகா முன்னேற்ற நிகழ்ச்சி நிரலை செயல்முறைப்படுத்த தேவையான வழிமுறைகளை (Draft Modalities) மிக விரிவாக 240 மணி நேரம் விவாதிக்கப்பட்டது. எனினும் பயன்தரவில்லை. இதை தொடர்ந்து இந்தியாவில் நடந்த (Mini-Ministerial Meeting) கூட்டத்திலும், 2009-ம் ஆண்டு லண்டனில் நடந்த ஜீ20 உச்சி மாநாட்டிலும் , 2011-ம் ஆண்டு நடத்த உலக பொருளாதார மன்ற மாநாட்டிலும் , 2012 நடந்த ஜெனிவா கூட்டத்திலும் இதை பற்றிய விவாதம் முடிவில்லாமல் தொடர்ந்தது.

டிசம்பர் மாதம் 2013-ம் ஆண்டு இந்தோனேசியா தலைநகர் பாலியில் அமைச்சர்கள் கூட்டம் கூடியது. இதில் மூன்று மிக முக்கிய விசயங்கள் விவாதிக்கப்பட்டன.

  • விவசாயம்
  • வர்த்தக அனுசரணை ஒப்பந்தம்
  • பருத்தி மானியம்,

விவசாயத்தை பொறுத்தவரையில் இறக்குமதி கட்டண முறைப்பு, மானிய ஒழிப்பு உணவு கையிருப்பு நீக்குதல் போன்றவை விவாதிக்கப்பட்டது. வர்த்தக அனுசரணை ஒப்பந்தம் என்பது எந்தவிதமான கட்டண கட்டுபாடும் இல்லாமல் நிர்வாக குறுக்கீடுகள் தவிர்த்து கட்டணமில்லாத தடைகள் இல்லாமல், இலகுவாக பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்ய ஒரு சர்வதேச வர்த்தக சூழலை உருவாக்குதல். அதாவது அரசு மற்றும் அதிகார பொறிமுறைகளின் தலையீடுகள் இல்லாத சூழல் உருவாக்கப்படுதல். பருத்தி பின்னாலடைகள் ஏற்றுமதிக்கு கொடுக்கப்பட்ட மானியத்தை நீக்குதல். போன்ற முடிவுகளும் இதற்கு அனைத்து நாடுகளும் உடன்படவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இந்தியா போன்ற வளரும் நாடுகள் இதற்கு கடும் எதிப்பு தெரிவித்தது.

ஏறத்தால 12 ஆண்டுகள் கடந்து விட்ட சூழலில் இன்னும் தோக முன்னேற்ற நிரழ்ச்சி நிரலின் முக்கியமான அம்சமான சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை (Special Safeguard Mechanism) மற்றும் உணவு கையிருப்பு (Food Stock Holding) பற்றி எந்த முடிவும் எட்டப்படாமல் பாலி தொகுப்பை (Bali Package) ஏற்றுக்கொள்ளமுடியாது என்று வெளிப்படையாக கூறிவிட்டனர். இந்த முடிவு வளர்ந்த நாடுகளை பெரிதும் எரிச்சலை ஏற்படுத்தியது. ஏன் என்றால் வர்த்தக அனுசரணைக்கு வந்தால் வளர்ந்த நாடுகளுக்கு பில்லியன் கணக்காக கட்டண செலவுகள் சேமிக்கப்படும் என்பது தான். இந்தியா உணவு பயிர்க்கான மானியத்தை இன்னும் நான்கு ஆண்டுகள் நிபந்தனை இன்றி தொடரலாம். எந்த தண்டனை நடவடிக்கையும் குறுக்கிடாது. பின்பு வரும் நான்கு ஆண்டுகள் இடைவெளியில் சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை பற்றிய ஒரு நிரந்திர முடிவு எடுக்கப்படும் என மலுப்பலான வாக்குறுதியை கூறி அமெரிக்கா வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்தும் முயற்ச்சியில் இருந்தது. ஆனால் வளரும் நாடுகள் வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை ஒரு பேரம் பேசும் கருவியாக (Bargaining Instrument) பயன்படுத்தியது. எனவே 2013-ல் ஒரு முடிவு எட்டப்படவில்லை.

wtc omc

2014-ம் ஆண்டு பாஜகவின் மோடி அரசு ஆட்சிக்கு வந்தது. சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை மற்றும் உணவு கையிருப்புக்கு நிரந்திர தீர்வு காணாமல் வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று கூறியது. 2014 ஜூலையில் நடந்த உலக வர்த்தக கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக கலந்து கொண்ட வணிகம் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மால சீதாராமன் சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை மற்றும் உணவு கையிருப்புக்கு நிரந்திர தீர்வு காணாமல் இந்தியா வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தில் சேராது என்று உறுதியளித்தார். இதன் விளைவாக 2014 ஜூலை 29-ல் அமெரிக்கா வெளியுறவு துறை செயலர் ஜான் கெர்ரி இந்தியா வந்து அமைச்சர்களை சந்தித்து இந்தியாவின் நிலைப்பாடு குறித்து வருத்தம் தெரிவித்தார். இது இந்தியா அமெரிக்கா நல்லுறவை பாதிக்கும் என்பதை உணர்த்தினார். எனினும் 2014- ஆகஸ்ட் 5ம் தேதி நிர்மலா சீதாராமன் கூறுகையில் சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை பற்றிய முடிவு எட்டாமல் வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை ஆதரிக்கமாட்டோம் என்று உறுதியளித்தார். ஆனால் செப்டம்பர் 2014-ல் மோடி அமெரிக்கா சென்று ஒபாமாவை சந்திக்கிறார். இந்த சந்திப்பில் வர்த்தக அனுசரணை ஒப்பந்தம் பற்றிய இந்திய நிலைப்பாடு அமெரிக்காவிற்கு வருத்தம் தருவதாக உணர்கிறார். அமெரிக்கா செல்வதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆகஸ்ட் 20 2014 –ல் முன்னால் ஹிமாச்சல பிரதேச முதலமைச்சர் சாந்தகுமார் தலைமையில் உயர்மட்டக்குழுவை மோடி அரசு உருவாக்குகிறது. இக்குழுவின் நோக்கம் இந்திய உணவுக்கழகத்தை மறுசீரமைப்பு செய்வதற்கான் ஆய்வு செய்தல். இக்காலகட்டத்தில் உலக வர்த்தக நிறுவனம் வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள 31.12.2015 யை இறுதி தேதியாக முடிவு செய்கிறது.

27.11.2014 ம் தேதி மத்திய மோடி அரசு ஒரு அரசாணையை வெளியிடுகிறது. அதில் மானியங்கள் அனைத்தும் நேரடியாக பணமாக பொது நிதி மேலாண்மை முறையில் மக்களுக்கு கொடுக்க வேண்டும். (Transfer of subsidies to direct benefit transfer system through public financial management) மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை சந்தை விலைக்கே வாங்கிக்கொள்ளவேண்டும்.இந்த அரசாணை வந்த அடுத்த நாள் 28.11.2014 ம் தேதி நிர்மலா சீதாராமன் பாராளுமன்ற உரையில் சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை பற்றிய தனது உறுதியை தளர்த்திக்கொள்கிறார். இந்த நான்கு மாத இடைவெளியில் அமெரிக்காவுடன் கைகோர்த்துக்கொண்டு இந்திய விவசாயிகளை மோடி கைவிடுகிறார். இவற்றை உறுதி செய்துகொள்ளும் விதமாக ஜனவரி 11 2015 அன்று அமெரிக்க செயலர் ஜான் கெர்ரி மோடியை குஜராத்தில் சந்திக்கிறார். இதே காலகட்டத்தில் சாந்தகுமார் குழு 22 ஜனவரி 2015 தனது அறிக்கையை சமர்பிக்கிறது. இவ்வரிக்கையில் முக்கியமான பரிந்துரைகளை இந்திய உணவு கழகத்தில் வேலை செய்வோரை குறைத்து கொண்டு மாநில அரசின் வழிகாட்டுதலில் தனியாரிடம் உதவியை நாடவேண்டும், 67 சதவீத மக்களால் பொது விநியோக முறையில் உள்ளனர். அவர்களை 40 சதவீத மாக குறைக்கை வேண்டும் மக்களுக்கு 500 முதல் 700 வரையிலான பணத்தை கொடுத்து சந்தையை நாட செய்யவேண்டும் போன்ற பரிந்துரைகள் அதில் கூறப்பட்டுள்ளது.

தோகா ஒப்பந்தத்தின் படி மஞ்சல் பெட்டி மானியத்தை விவாசய உற்பத்தியில் 10 சதவீதம் குறைக்க வேண்டும். அதுவும் 1986 வருட உற்பத்தியை அளவீடாக எடுத்துக்கொள்ள வேண்டும். இதை நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் விவசாய உற்பத்தி குறையும் அதனால் அரசு கொள்முதல் குறையும், இக்கொள்முதலுக்கு ஏற்ப 67 சதவீதம் பயன்பெறுவோர்களை 40 சதவீதம் குறைக்க வேண்டும், பின்பு நேரடியாக பணமும் கொடுத்து உதவலாம். எனவே எதிர்காலத்தில் உற்பத்தி குறையும் பட்சத்தில் என்ன நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே முடிவுசெய்கிறது. சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை, உணவு கையிருப்பு பற்றிய முடிவு எட்டப்படாமல் விவசாய ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தும் பட்சத்தில் எப்படி சூழ்நிலையை எதிர்கொள்வது என்பதற்காகவே இக்குழு பரிந்துரை வழங்கியுள்ளது. அதாவது சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை மற்றும் உணவு கையிருப்பு பற்றிய இறுதி முடிவு எட்டாது என்பதை ஜான்கெர்ரி இந்தியா வந்து போனதற்கும் (29.7.14) மோடி ஒபாமை சந்திப்பதற்கு இடையே முடிவு செய்யப்படுகிறது. வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தின் வெற்றி உறுதியாகிவிட்ட நிலையில ஜனவரி 27, 2015-ல் ஒபாமா இந்தியா வந்து மோடியை நட்பு பாராட்டுகிறார்.

நைரொபியில் நடந்த பத்தாவது அமைச்சர்கள் கூட்டத்தில் நிர்மலா சீத்தாராமன் கலந்த கொள்கிறார். வளரும் நாடுகளுக்கு இது முக்கியமான காலகட்டம் என்பதால் அதிகம் கவனம் பெற்ற கூட்டமாக இது திகழ்ந்தது. இந்தியா தனது மறைமுக நிகழ்ச்சி நிரலோடு நைரோபி சென்றது. கூட்டத்தில் ஏற்றுமதி மானிய தடை முடிவு செய்யப்படுகிறது. பருத்தி மானியத்தடை முடிவு செய்யப்படுகிறது. ஏற்றுமதி கடன் தடை முடிவாகிறது. வர்த்தக அனுசரணை ஒப்பந்தம் பற்றிய சிறப்பு விவாத அனுசரணையார்கள் (Facilitaters Meeting) சந்திப்பு நடைபெறுகிறது அதில் இந்திய பிரதிநிதி நிர்மலா சீத்தாராமன் கலந்த கொள்ளவில்லை. விவசாய ஒப்பந்தம் குறித்த கூட்டத்தில் உணவு கையிருப்பு பற்றி விவாதிக்கவே இல்லை. 18.12.15 நடந்த சிறப்பு ஐவர் கூட்டத்தில் வளரும் நாடுகள் சார்பாக சீனா காரசாரமான விவாதத்தில் ஈடுபட்டபோது இந்தியா மெளனம் காத்தது. இப்படி செயலற்று அமைதியாக இருந்து வளரும் நாடுகளின் அனைத்து விவசாய பெருமக்களையும் அமெரிக்க ஐரோப்பிய பெரு வணிகர்களிடம் விற்றுவிட்டு ஊர் திரும்பினார். நிர்மால சீத்தாராமன் இந்தியா வந்தவுடன் பாராளுமன்றத்திலையோ, மாநில அரசிடமோ எந்த ஆலோசனையும் நடத்தாமல் வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ள உறுதி தருவதாக ஒரு ஏற்பு கடிதத்தை (Instrutement of acceptence) உலக வர்த்தக நிறுவன தலைமை இயக்குநருக்கு அஞ்சலி பிரசாத்திடம் கொடுத்து அனுப்பினார். இந்த அஞ்சலி பிரசாத் தான் உலக வர்த்தக நிறுவனத்திற்கான இந்தியாவின் நிரந்திர பிரதிநிதி. இவரின் வழிகாட்டலில் தான் அனைத்தும் நடந்தேறியது.

உணவு கையிருப்பு, சிறப்பு பாதுகாப்பு பொறிமுறை பற்றிய எந்த இறுதிமுடிவும் எடுக்காமல் வர்த்தக அனுசரணை ஒப்பந்தத்தை 76-வது நாடாக இந்தியா ஏற்றுக்கொண்டு ஒப்புதலை 22 ஏப்ரல் 2016 உலக வர்த்தக நிறுவனத்திடம் ஒப்படைத்தது. இனிமேல் விவசாயம் மானியம் இல்லாமல் அழிக்கப்படும். விவசாயம் அழிந்தால் அரசு கொள்முதல் செய்ய தேவைஇல்லை. தானியக்கிடங்கு தேவையற்றது. நியாய விலைக்கடைகள் முடப்படும். உணவு தானியங்கள் கப்பல் கப்பலாக இறக்குமதி செய்து, தொடர்வண்டி மூலம் இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் போகும். அதன் விலை சிறிது காலம் குறைவாக இருக்கும். பின்பு அமெரிக்க பெருவணிகர்கள் அதன் விலையை உயர்த்தி லாபம் சம்பாரிப்பார்கள், சந்தை விலைக்கு வாங்கமுடியாத ஏழைகளுக்கு தரம் குறைவான உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்படும். அதை உண்டு உடல் நலக்குறைவு ஏற்படும் அதற்கான மருந்தும் இறக்குமதி செய்யும் நிலை உருவாகும். சந்தையில் தரம் குறைந்த பொருளை கூட வாங்க முடியாத ஏழைகள் பஞ்சத்தில் இறப்பார்கள். பேரிடர் காலங்களில் உணவு பொருட்களுக்காக அமெரிக்கா ஐரோப்பிய முதலாளிகளிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.

- சத்தியராஜ் குப்புசாமி