கணினிகளில் என்.அய்.. நடத்திய மோசடிகள்

போலி ஆதாரங்கள் மூலம் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பது அம்பல மாகிவிட்ட பிறகும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்காமல் சிறையில் அடைத்து வைப்பது எவ்வித நியாயமும் அற்றது.

பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமியின் கணினியில் திட்டமிட்டு ஹேக்கர் களால் வழக்குத் தொடர்பான ஆவணங்கள் திணிக்கப்பட்டது அமெரிக்க நிறு வனம் வெளியிட்ட ஆய்வறிக்கை மூலம் அம்பலமாகி யுள்ளது.

1818 ஜனவரி 1ஆம் தேதி மராட் டியத்தில் உள்ள பீமா கோரே கானில் பிரிட்டிசாருக்கும் பேஷ்வா பார்ப்பனர்களுக்கும் இடையே போர் நடந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் ஆதரவோடு பேஷ்வா பார்ப்பனர்களைக் கிழக்கிந்திய கம்பெனி வீழ்த்தி போரில் வெற்றி பெற்றது. போரில் உயிர் நீத்த தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த 49 பேரின் நினைவாக பீமா கோரே கானில் நினைவுத்தூண் அமைக்கப் பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி அதன் 200 ஆவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மறுநாள் பீமா கோரேகானில் கலவரம் வெடித்த தால், அந்த நிகழ்ச்சியில் பேசிய வர்கள் மீது வழக்கு பாய்ந்தது. உள்ளூர் போலீசார் விசாரணை யைத் தொடங்கிய நிலையில் மாவோயிஸ்டுகளுக்கு தொடர் புள்ளதாகக் கூறி விசாரணையில் நுழைந்த என்.ஐ.ஏ., தெலுங்கானா- வைச் சேர்ந்த பிரபல கவிஞர் வரவர ராவ், வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், தமிழ்நாட்டைச் சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களைக் கைது செய்தது.  ஸ்டேன் சுவாமி உள்ளிட்டோர் கைது செய்யப் பட்டதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், கலவரம் ஏற்படுத்தவும், பிரதமரைக் கொல்லவும் இவர்கள் சதி செய்ததாக குற்றம் சாட்டிய தேசிய புலனாய்வுத்துறை, அவர்கள் மீது உபா சட்டத்தில் நடவடிக்கை எடுத்தது.

மராட்டிய மாநிலம் தலோஜா மத்திய சிறை யில் அடைக்கப்பட்ட ஸ்டேன் சுவாமி, வயது முதிர்வு, பார்கின்சன் நோயால் ஏற்படும் கை நடுக்கம் உள்ளிட்ட நோய்கள் காரணமாக மருத்துவ ரீதியிலான ஜாமீன் கேட்ட போதுகூட, நீதி மன்றம் மறுத்தது. உடல்நலம் மோசமான நிலையிலும் அவரை மருத்துவமனை சிகிச்சைக்கு அனுப் பினார்களே தவிர, ஜாமினில் வெளியே அனுப்ப வில்லை. கை நடுக்கம் காரண மாக, உறிஞ்சிக் குடிப்பதற்குச் சிறையில் தனக்கு ஸ்ட்ரா வேண்டும் என்ற அவரது வேண்டுகோள்கூட ஏற்கப் படாதது மனித உரிமை ஆர்வலர் களை கொந்தளிக்க வைத்தது. மன நலமும் உடல்நலமும் பாதிக்கப்பட்டு, கொரோனா பாதிப்புக்கும் ஆளான ஸ்டேன் சுவாமி, 8 மாத சிறைவாசத்துக்குப் பின், 2021ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி மாரடைப்பால் காலமானார்.

ஸ்டேன் சுவாமி கைது செய்யப் பட்ட அவரது சதி வேலைக்கான ஆதாரங்கள் அனைத்தும் ஸ்டேன் சுவாமியின் கணினியில் இருப்பதாக என்.ஐ.ஏ. கூறியது. இதனை திட்டவட்டமாக மறுத்த ஸ்டேன் சுவாமி தரப்பு வழக்கறிஞர்கள், அமெரிக்காவில் உள்ள டிஜிட்டல் தடயவியல் அமைப்பான அர்செனல் கன்சல்டிங் நிறுவனத்தை அணுகினர். அந்நிறுவனத்திடம் ஸ்டேன் சுவாமி பயன்படுத்திய கம்ப்யூட்டரின் மின்னணு நகலை வழங்கி, ஆய்வு செய்யக் கோரினர். அதனடிப்படையில் அர்செனல் நிறுவனம் நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகி யுள்ளன. அமெரிக்காவின் பிரபல செய்தி இதழான வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள அந்த ஆய்வறிக்கையில், ஸ்டேன் சுவாமியின் கம்ப்யூட்டரில் பல்வேறு ஆவணங்கள் திணிக்கப் பட்டிருப்பதாக கூறுகிறது. கைது செய்யப்படுவதற்கு முந்தைய 5 ஆண்டுகள் ஸ்டேன் சுவாமியின் கணினி முழுமை யாக ஹேக் செய் யப்பட்டுள்ளதும், ஸ்டேன் சுவாமிக்கு தெரி யாமல் ஏராள மான கோப்புகள் அவரது கம்ப் யூட்டரில் திணிக் கப்பட்டதும் ஆய்வில் வெளி வந்துள்ளது.

மாவோயிஸ்டுகளுக்கு எழுதிய கடிதங்கள் என காவல்துறையால் சொல்லப்பட்ட கடிதங்கள் உள்ளிட்ட 44 ஆவணங்களே ஹேக்கர்கள் மூலம் ஸ்டேன் சுவாமியின் கணினியில் திணிக்கப் பட்டுள்ளன என்றும் ஆய்வறிக்கை கூறுகிறது.

2014 அக்டோபர் மாதம் ஸ்டேன் சுவாமியின் கணினியில் NetWire என்ற மென்பொருளை செலுத்திய ஹேக்கர்கள், கணினிக்கான கடவுச்சொற்களைத் திருடியதுடன், ரிமோட் கண்ட் ரோல் மூலம் அதனை இயக்கும் வகையிலும் மாற்றி அமைத்துள்ளனர். ஸ்டேன் சுவாமியின் கணினியில் இருந்த 24,000க்கும் அதிகமான கோப்புகளை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

இறுதியாக 2019 ஜூன் 11 ஆம் தேதி, ஸ்டேன் சுவாமி கைது செய்யப்ளபட்டு, அவரது கணினி பறிமுதல் செய்யப்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பு,  கண்காணித்தது, கோப்புகளைத் திருடியது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் தடம் தெரியாமல் அழித்துள்ளனர். இதே வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சமூக ஆர்வலர் ரோனா வில்சன் மற்றும் வழக்கறிஞர் சுரேந்தர் கட்லிங் (Gadling) ஆகியோரின் கணினியில் இருந்தும், இதே யுக்தி பயன்படுத்தப்பட்டு கோப்புகள் திருடப்பட்டுள்ளதையும் அர்செனல் ஆய்வறிக்கை வெளிச்சம் போட்டு காட்டி யுள்ளது.

பீமா கோரேகான் வழக்குக்கு பிறகே சமூக செயற்பாட்டாளர் களை அர்பன் நக்சல்கள் என்ற புதிய சொல்லை வைத்து பாரதிய ஜனதா பிரமுகர்கள் உச்சரிக்கத் தொடங்கியுள்ளனர்.

எனவே சமூக செயற்பாட் டாளர்கள், ஒன்றிய அரசுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை ஒடுக்குவதற்காக திட்டமிட்டே ஹேக்கர்கள் மூலம் பொய்யான ஆவணங்களைத் திணித்து, அதன் பேரில் நடவடிக்கை எடுக்கும் சதிச் செயல்கள் அரங்கேற்றப்பட் டுள்ளன என்பது வெட்ட வெளிச்ச மாகியுள்ளது. போலி ஆதாரங்கள் மூலம் கைது நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டிருப்பது அம்பல மாகிவிட்ட பிறகும், பீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்காமல் சிறையில் அடைத்து வைப்பது எவ்வித நியாயமும் அற்றது. எதிர்காலத்தில் இதே பாணியில் சமூக செயற்பாட்டாளர்கள் முடக்கப்படாமல் இருக்க ஹேக்கர்களை வைத்து போலி ஆவணங்களை திணித்தது யார் என்ற விசாரணை நடத்த வேண்டியதும் அவசியமாகியுள்ளது. 

- ர.பிரகாஷ்

Pin It