game 450ஒரு ரூபாய்க்கு 100 காசுகள் என்கிறோம். 50 ஆண்டுகளுக்கு முன்னால், ரூபாய், அணா என்று கணக்கு இருந்தது. ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள். பிறகு ஒரு அணா, அரையணா, காலணா என்று வரும்.

அணாவிற்கும் குறைந்தது சல்லி எனப்படும். இரண்டு சல்லிக் காசுகள் சேர்ந்தால் காலணாவிற்குச் சமம். அதனால்தான், ‘சல்லிக் காசுக்கும் பயனில்லாதவன்’ என்னும் சொலவடை இன்றும் உள்ளது.

அந்தச் சல்லிக் காசுகளை எல்லாம் ஒரு கட்டாகக் கட்டிக் காளைகளின் கொம்புகளில் கோத்து விடுவார்கள்.

காளையை அடக்குபவர்கள் அந்தச் சல்லிக்கட்டை எடுத்துக் கொள்ளலாம். அதனையொட்டியே அந்த விளையாட்டிற்குச் சல்லிக் கட்டு என்று பெயர் வந்தது. ஆனால் இன்று அதனை நாம் ‘ஜல்லிக்கட்டு’ என்று தவறாக அழைக்கின்றோம்

வெட்டி எடுக்கப்படுவதால் உடுத்தும் ஆடைக்கு வேட்டி என்று பெயர் வந்தது. அதனை நாம் வேஷ்டி ஆக்கிவிட்டோம். “போகிற போக்கைப் பார்த்தால், தமிழன் ஆட்டுக்குட்டியைக் கூட, ஆஷ்டுக்குஷ்டி என்று அழைப்பான் போலிருக்கிறது” என்பார் பாரதிதாசன்..                                 

சல்லிக்கட்டு விளையாட்டு புழுதியைக் கிளப்பும். அதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையோ, இன்று தமிழ்நாட்டில் பெரும் போராட்டத்தைக் கிளப்பியுள்ளது.

சென்ற ஆண்டும் சல்லிக்கட்டு நடைபெறவில்லை. ஆனால் அப்போது சின்னச்  சின்ன எதிர்ப்புகளும், ஆர்ப்பாட்டங்களுமே இருந்தன. ஆனால் இந்த ஆண்டோ போராட்டங்கள் மிகப் பெரிய அளவில் நடைபெற்றன. தேர்தல் காலத்திற்கே உரிய குணங்களில் இதுவும் ஒன்று.

2014 மே மாதம், தில்லி உச்ச நீதி மன்றம் சல்லிக்கட்டுக்குத் தடை விதித்தது. ஏறத்தாழ ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, சல்லிக்கட்டு இந்த ஆண்டு  நடக்கும் என்ற அறிவிக்கையை, கடந்த 7 ஆம் தேதி, மத்திய அரசு வெளியிட்டது.

உச்ச நீதி மன்றத்தின் தடையை மீறி அதனை நடத்த வேண்டுமானால், அதற்கு ஓர் அறிவிக்கை போதாது என்பதும், அவசரச் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதும் சாதாரண மனிதர்களுக்கே தெரியும். மத்திய அரசுக்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

ஆனாலும் அறிவிக்கையை அரசு வெளியிட்டது. இப்போது நீதி மன்றம் அதற்கு இடைக்காலத் தடையை விதித்துள்ளது.

நாங்கள் அனுமதி வழங்கி விட்டோம், நீதி மன்றம்தான் தடுத்து விட்டது என்று இனிமேல் மத்திய அரசு மக்களிடம் கூறிவிடலாம். ஆனால் இப்போதெல்லாம் மக்கள் மிகுந்த ‘பாண்டித்தியம்‘ பெற்றவர்களாகி விட்டனர். மக்களை ஏமாற்றுவது கடினம் என்பதை அரசுகள் உணர வேண்டும்.

‘இனிமேல் மத்திய அரசினால் அவசரச் சட்டம் கொண்டு வர முடியாது. வேண்டுமானால், மாநில அரசு கொண்டு வபாட்டும், நாங்கள் ஆதரிக்கிறோம்‘ என்கிறார், மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன்.

மத்திய அரசால் முடியாததை மாநில அரசு எப்படிச் செய்ய முடியும் என்ற கேள்விக்குச் சட்ட வல்லுனர்கள் ஒரு விடை சொல்கின்றனர். அரசமைப்புச் சட்டத்தின் 7 ஆவது அட்டவணையில் அதற்கு இடம் உள்ளது என்கின்றனர்.

சல்லிக்கட்டு விளையாட்டை வைத்துப் பல்வேறு விளையாட்டுகள் இங்கு அரங்கேறிக் கொண்டுள்ளன. 

Pin It