student neetபொதுமக்கள் கருத்துக்கணிப்பு

கருத்துக்கணிப்பு அறிக்கை

I. கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு - ஓர் அறிமுகம்:

ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள தேசிய கல்விக் கொள்கையின் பாதக அமசங்களை தமிழக மக்கள் மத்தியில் எடுத்துச் செல்வதற்காக உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல்வேறு வெகுசன போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து வருகிறது.

2016-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகள் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக சனநாயக வழிமுறைகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள், கருத்தமர்வுகள், மாநாடுகள், மக்கள் சந்திப்புகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகளை தொடர்ச்சியாக நடத்தி வந்துள்ளன. இந்தக் கல்விக் கொள்கை தமிழகத்தை 100 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்துச் செல்லும் பேராபத்துகளைக் கொண்டிருப்பதால், “தமிழக அரசே! தேசியக் கல்விக் கொள்கை 2020ஐ தமிழ்நாட்டிற்குள் அனுமதியாதே!” என்ற ஒற்றை முழக்கத்தை முன்வைத்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அறவழியில் கருத்துப் பரப்பலை இக்கூட்டமைப்பு எழுச்சியோடு முன்னெடுத்து வருகிறது!

இக்கூட்டமைப்பில் கல்வியாளர்கள், மாணவர் அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள், பெற்றோர் கழகங்கள், மக்கள் இயக்கங்கள், மனித உரிமைக் குழுக்கள், குழந்தை உரிமை ஆர்வலர்கள், பெண்ணுரிமை அமைப்புகள், தலித் மற்றும் பழங்குடியின அமைப்புகள், தொழிற்சங்கங்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அரசியல் கட்சிகள் போன்ற பல்வேறு தரப்பட்டோரும் அங்கம் வகிக்கின்றனர்.

தமிழகத்தில் நம் மக்களுக்கான கல்வி உரிமையைப் பாதுகாக்க உருவாக்கப்பட்ட ஒரு கூட்டு முயற்சி! பலரும் இணைந்த முன்னெடுப்பு! நாளைய இளைய தலைமுறையினருக்கு அடிப்படை கல்வி உரிமை மறுக்கப்படக்கூடாது என்ற ஒரே நோக்கத்தில் இக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

II. நீட் தேர்வும் பின்னணியும்:

இந்தியாவில் நீட் நுழைவுத்தேர்வு, அறமற்ற வகையிலே ஒன்றிய அரசால் திணிக்கப்பட்டது. 2013ஆம் ஆண்டில் மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு உச்சநீதிமன்றத்தில் நீட் தேர்வு குறித்துத் தீர்ப்பு வழங்கியது. மூன்று நீதிபதிகளில் இரண்டு நீதிபதிகள், நுழைவுத்தேர்வுக்கு எதிராகத் தீர்ப்பளித்தனர். ஆனால், மூன்றாவது நீதிபதியாகிய ஏ.ஆர்.தவே அவர்கள் மட்டும் நீட் தேர்வு தேவை எனத் தீர்ப்பளித்தார்.

பாரதிய சனதாக் கட்சி ஆட்சிக்கு வந்த பின், நீட் தேர்வு குறித்து மறுசீராய்வு மனு ஒன்றியஅரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஏற்கனவே நீட் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட குழுவைப் பாரதிய சனதா அரசு அமைத்தது. நீட் தேர்வு குறித்த மனு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி ஏ.ஆர்.தவே தலைமையிலான அமர்வு நீட் தேர்வைக் கட்டாயமாக்கிவிட்டது.

நீட் தேர்வுக்கு ஆதரவாக முன்பு தீர்ப்பளித்த நீதிபதி ஏ ஆர் தவே அவர்கள், இந்த அமர்வுக்குத் தலைமை ஏற்றது சரியல்ல என்ற விமர்சனம் அப்போதே எழுந்தது. பிறகு, ஒன்றிய அரசின் நல்வாழ்வுத் துறை சார்பாக அமைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட நிலைக் குழுவுக்கு நீட் தேர்வு குறித்து முடிவெடுக்க மீளாய்வுக்காக அனுப்பப்பட்டது.

08 / 03 / 2016 அன்று அக்குழு நாடாளுமன்றத்தில் இது குறித்து அறிக்கை சமர்ப்பித்தது. இது நாடாளுமன்ற நிலைக்குழுவின் 92ஆவது அறிக்கையாகும். இந்திய அளவில் நடத்தப்படும் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குக் கேட்கும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என மிகத் தெளிவாக நிலைக்குழு பரிந்துரைத்தது.

பிறகு, மத்தியப்பிரதேச மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாகச் சட்டமியற்றும் அதிகாரம் மாநில அரசுக்கு உண்டா என்ற கேள்வி எழுந்த போது, உச்சநீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு 02/05/2016 -ஆம் ஆண்டு (Modern Dental College Case) தீர்ப்பு வழங்கியது.

"அரசமைப்புச் சாசனத்தின் படி மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கான மாணவர் சேர்க்கை குறித்துச் சட்டமியற்றும் அதிகாரம், மாநிலச் சட்டப்பேரவைக்கு உண்டு. ஒன்றிய அரசுக்கு மட்டுமே அந்த அதிகாரம் உண்டு என்பதை ஏற்க இயலாது" என அத்தீர்ப்பு தெளிவாகக் குறிப்பிட்டது.

இத்தகைய பின்னணியில், வலுக்கட்டாயமாக மாணவர்கள் மீது நீட் தேர்வை முதலில் திணித்து விட்டு, இப்பொழுது அதை நியாயப்படுத்துவது அறமற்ற செயல் ஆகும். அவ்வகையில் நீட் தேர்வு என்பது, "முதல் கோணல், முற்றிலும் கோணல்" என்பதாக ஆகிப்போனது.

பல்வேறு மொழிகள், மரபுகள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள் கொண்ட பல மாநிலங்கள் இந்தியாவில் உள்ளன. இந்தியா என்பது ஒரு நாடு என்பதைக் காட்டிலும், ஒரு துணைக் கண்டம் எனக் குறிப்பிடுவது பொருத்தம் மிக்கதாகும்.

பீகார் மாநிலத்தின் நிலவியல் அமைப்பு, வரலாறு, தொழில் நிலவரம் போன்றவை குறித்துத் தமிழ்நாட்டு மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா? உறுதியாக அவை தேவையற்றைவை என்பது மட்டுமல்ல, கற்றலின் சுமையைக் கூட்டுவதாகவும் ஆகிவிடும்.

மேலும் இந்தியா முழுவதும் ஒரே வகையான கல்விக் கட்டமைப்பு இருக்கவில்லை. அப்படி இருக்கும் போது, ஒரே வகையான தேர்வு என்பது பொருத்தமற்றது. மாநிலங்களின் கல்வி உரிமையைப் புதுதில்லியில் இருக்கக் கூடியவர்கள் தீர்மானிப்பது, சனநாயகத்துக்கு எதிரானதாகும். பெரும்பாலான தமிழ்நாட்டு மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் பயில்கின்றனர்.

ஆனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் அவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாய சூழல் நிலவுகிறது. இது அறிவுக்குப் புறம்பான ஒன்றாகும். படிப்பது ஒன்றில், தேர்வு எழுதுவது மற்றொன்றில். இப்படிப்பட்ட சூழல் எந்த நாட்டிலும் இருக்க முடியாது.

இவ்வகையான நியாயமற்ற அணுகுமுறையால், 2017ஆம் ஆண்டில் அனிதாவின் உயிர் காவு வாங்கப்பட்டது. மாநிலப்பாடத்திட்டத்தில் படித்து 1200 மதிப்பெண்களுக்கு 1176 மதிப்பெண்கள் எடுத்துச் சாதனை படைத்த அனிதா, தனக்குத் தொடர்பில்லாத சிபிஎஸ்இ பாடத்திட்ட அடிப்படையில் கேட்கப்பட்ட நீட் தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை.

இது நீட் தேர்வின் பெயரால் குழந்தைகள் மீது ஏவப்பட்ட கடும் வன்முறையாகும். அனிதாவின் அநியாயமான மரணத்திற்கு நீதிகேட்டுத் தமிழ்நாடே கொந்தளித்தது. ஆனால் ஒன்றிய அரசு அதை சிறிதும் பொருட்படுத்தவில்லை என்பது வரலாறு.

அனிதா மட்டுமல்ல, புவனேசுவரி (கட் ஆப் - 197.25 ) செயப்பிரியா (கட் ஆப் - 197) ஆகியோரும் நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வாய்ப்பை இழந்தனர். மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வினால் தற்கொலை செய்து கொண்டது அண்மைக்கால வரலாறு. இப்படி மாநிலப் பாடத்திட்டத்தில் மிகச்சிறந்த சாதனைகள் படைக்கும் மாணவர்கள், நீட் அரக்கனால் மன அழுத்தத்திற்கு உள்ளாகி, ஆண்டுதோறும் தற்கொலை செய்து கொள்வது இன்றும் தொடர்கதையாகி வருவது மிகப்பெரும் அவலம்.

மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுமென்றால், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டும். அதற்குத் தனிப்பயிற்சி கட்டாயம் தேவை. அப்படிப்பட்ட தனிப் பயிற்சி பெறுவதற்குப் பல இலட்சக்கணக்கான ரூபாய்களை மாணவர்கள் கொட்டி அழ வேண்டியுள்ளது. ஏறக்குறைய எட்டு அல்லது ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் போதே தனிப்பயிற்சி நிலையங்களுக்குச் சென்று ஆயத்தமானால் தான், நீட் தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெறமுடியும். கிராமங்களிலுள்ள ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மாணவர்கள் இலட்சக்கணக்கான ரூபாய்களை நீட் தனிப்பயிற்சிக்காகச் செலுத்தவே முடியாது.

நீட்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும். அப்படி அதிக மதிப்பெண் பெறுவதற்காகத் தான் தனிப்பயிற்சி என்ற தூண்டிலை வணிக நிறுவனங்கள் கையில் வைத்துக் கொண்டு கொள்ளை அடிக்கின்றன. நீட் பயிற்சி என்பது பணம் கொட்டும் வணிகம் ஆகிவிட்டது.

இப்படிப்பட்ட தனிப்பயிற்சி வணிகத்தின் ஆண்டு வருமானம் 1700 கோடி ரூபாய் எனப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதனால் தான் ரிலையன்ஸ் போன்ற மிகப்பெரும் வணிக நிறுவனங்கள் இத்துறையில் ஈடுபட்டுள்ளன. Allen, Aakash, FIIT, JEE, BYJUS போன்ற பெரும் வணிக நிறுவனங்கள், இத்துறையில் ஆண்டுதோறும் கோடிகளை அள்ளுகின்றன.

இவ்வாறு நீட் தேர்வு என்பது முற்றிலும் வணிகமயத்தை ஊக்குவிக்கக் கூடிய ஒன்றாக மாறிவிட்டது. பணம் இருப்பவர்களுக்கு தான் மருத்துவக்கல்வி என்பது எழுதப்படாத சட்டம். ஏழைகள் என்றால், கிள்ளுக்கீரையா? இது சனநாயக விழுமியங்களுக்கு முற்றிலும் எதிரானது. இதை ஒருக்காலும் ஏற்க முடியாது. மேலும் மாநிலப் பாடத்திட்டத்தின் பாடங்கள் குறித்து அக்கறை இல்லாத தன்மையை மாணவர்களிடம் நீட்தேர்வு உருவாக்கியுள்ளது.

பன்னிரெண்டாம் வகுப்பு அரசுப் பொதுதேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றாலும் கவலையில்லை, நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றால் போதும், மருத்துவக் கல்லூரிக்கு எளிதில் சென்று விடலாம் என்ற எண்ணம் பெரும்பாலான மாணவர்களிடம் மேலோங்கி வருகிறது. இத்தகைய போக்கு, கல்வியின் நோக்கத்தையும், கற்றல் திறனையும் முற்றிலும் சிதைத்து விடும். கற்போரை வெறும் தேர்வு இயந்திரமாக மாற்றும் இந்த நீட் தேர்வு, கல்வி நெறிகளுக்கு முற்றிலும் புறம்பானது.

மாநிலங்களுக்கு கல்வி உரிமை என்பது கூட்டாட்சியின் அடிப்படை நோக்கமாக இருக்கவேண்டும். ஆனால் நுழைவுத்தேர்வு குறித்த அனைத்து முடிவுகளையும் மையப்படுத்தப்பட்ட சிபிஎஸ்சி அமைப்பு தீர்மானிப்பது என்பது மாநில உரிமைகளுக்கு முற்றிலும் முரணானதாகும்.

2018ஆம் ஆண்டு நீட் நுழைவுத்தேர்வில் தமிழ் வினாத்தாளில் இருந்த 180 மொத்தக் கேள்விகளில், 49 கேள்விகள் பிழையான கேள்விகளாகவே இருந்தன. எனவே அதற்குரிய 196 மதிப்பெண்கள் தமிழ் வழியில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, சிபிஎஸ்இ பிடிவாதமாக அதை மறுத்துப் புறந்தள்ளி விட்டது.

இதன் காரணமாக அந்த ஆண்டில் நீட் தேர்வை தமிழ் வழியில் எழுதிய எண்ணற்ற மாணவர்களின் மருத்துவக் கனவை சிபிஎஸ்இ-ன் தான்தோன்றித்தனமான வன்முறை நாசமாக்கி விட்டது. தமிழ்நாடு அளவிலான தேர்வு என்ற நிலை இருந்திருந்தால், இந்தக் கொடுமை நிகழ்ந்திருக்காது.

மருத்துவக் கல்வியின் தரத்தை உறுதி செய்யவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையைத் தடுத்து நிறுத்தவும் நீட் தேர்வு கொண்டு வரப்படுவதாக முதலில் ஆடம்பரமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், நீட் தேர்வு திணிக்கப்பட்டதற்குப் பிறகு இன்றைய நிலை என்ன? நீட் தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றிருந்தாலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் பணம் கொடுத்து எளிதில் இடம் பெற்றுவிட முடியும்.

பணம் என்பது முக்கியமாகிவிட்ட பிறகு, மருத்துவக் கல்வியின் தரத்தை எவ்வாறு உயர்த்த முடியும்? தனியார் மருத்துவ கல்லூரிகளில் நன்கொடை என்ற பெயரில் பெரும் தொகை முதலில் மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டது. நீட் தேர்வுக்கு பிறகு நன்கொடை என்பதை மாற்றி, கட்டணம் என்ற பெயரில் இப்பொழுது பெரும் தொகை வசூலிக்கப்படுகிறது. நன்கொடை என்பது இப்பொழுது சட்ட அங்கீகாரம் பெற்றுவிட்டது.

குறைந்த தகுதியோடு படிப்பை முடித்துவிட்டு வரும் "நன்கொடை மருத்துவர்கள்" எந்த அளவு மக்களின் உயிரைக் காப்பாற்றப் போகிறார்கள் என்ற வினா பொதுவாக எழுகிறது. எனவே நீட் தேர்வின் நோக்கங்கள், உறுதியளித்தபடி நிறைவேறவில்லை என்பது கடந்த காலப் படிப்பினை ஆகிவிட்டது.

நாடு முழுவதும் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் இருக்கின்ற காரணத்தால், நீட் என்னும் ஒரே நுழைவுத்தேர்வைப் பரிந்துரைக்கிறோம் எனக் கூறப்பட்டது. இது உண்மையா? அனைத்திந்திய மருத்துவச் சேவைகளுக்கான கல்லூரி (All India Institute of Medical Sciences - AIIMS), ஜிப்மர் (JIPMER) மற்றும் இந்தியத் தொழில்நுட்பக் கல்லூரி (Indian Institute of Technology - IIT) ஆகிய நிறுவனங்களுக்கு இன்றும் கூடத் தனித்தனி நுழைவுத் தேர்வுகள் மூலம் தான் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. இவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு ஏன்? இதுதான் நாடு முழுவதும் ஒரே தேர்வு என்பதன் அடையாளமா?

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு விலக்குக் கோரித் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 01/02/2017 அன்று இரண்டு தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டது. மோடி அரசு அதைக் கண்டு கொள்ளவில்லை.

ஆனால், தமிழகத்திலுள்ள எதிர்க்கட்சிகள், சனநாயக இயக்கங்கள், பெரும்பான்மையான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகிய அனைவரும் தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வு தேவையில்லை என்ற கருத்தில் உள்ளனர். இதற்காகத் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் தொய்வுறாமல் நடந்து வந்துள்ளன. எனவே "மக்கள்தீர்ப்பே மகேசன் தீர்ப்பு" என்ற வகையில், நீட் தேர்வைத் தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது.

நீட் தேர்வு என்பது மாற்றவே முடியாத கடவுள் கட்டளை என்பது போலச் சில "கல்வியாளர்கள்" பிதற்றி வருகின்றனர். சிலர் பூச்சாண்டி காட்டுகின்றனர். "நீட் தேர்வில் சில குறைபாடுகள் இருக்கலாம். அவற்றைப் போகப்போகச் சரிசெய்து விடலாம்" எனவும் சிலர் அருள்வாக்கு வழங்குகின்றனர்.

ஆனால் இவை எல்லாம் திசை திருப்பும் வாதங்களாகும். தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு 2007ஆம் ஆண்டு ஒழிக்கப்பட்டு, பிறகு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கான சேர்க்கை நடைபெற்றது. மிகுந்த வெளிப்படைத் தன்மையோடு நடைபெற்ற அதே அணுகுமுறை மீண்டும் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற குரலும் எழுகிறது.

III. நீட் கருத்துக்கணிப்பின் நோக்கம்:

தமிழ்நாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் நுழைய, நீட் எனும் அகில இந்திய தேர்வை ஒன்றிய அரசு 2017ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தியது. இத்தேர்வினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவதாக எதிர்ப்புக் குரல்கள் எழுகின்றன. இன்றையத் தமிழக அரசு நீட் தேர்வு தொடர்பான பாதிப்பினை அறிய நீதியரசர் ஏ.கே.ராஜன் அவர்கள் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து மக்களிடம் கருத்து கோரியுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் நீட் தேர்வு குறித்து என்னவிதமான மனநிலையில் இருக்கின்றனர்? பெற்றோர்கள் எப்படி பார்க்கிறார்கள்? பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் இதனை எவ்வாறு எடுத்துக் கொள்கிறார்கள்? ஆசிரியர்களின் பார்வை எப்படி உள்ளது? என்பதை உள்ளது உள்ளபடி அறிய வேண்டும் என்கிற நோக்கில் பொதுமக்களிடம் நீட் தேர்வு குறித்து ஒரு கருத்துக் கணிப்பினை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு பொதுமக்களின் எண்ணங்களை எவ்வித மிகைப்படுத்தலும் இல்லாமல் வெளிப்படுத்திட வேண்டும் என்று முடிவு செய்தது.

IV. நீட் கருத்துக்கணிப்பு முறை:

"கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு - தமிழ்நாடு & புதுச்சேரி" சார்பில், "நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையா? பொதுமக்கள் கருத்துக் கேட்பு" எனும் ஆய்வு 28.06.2021 முதல் மேற்கொள்ளப்பட்டது.

1. கருத்துக்கணிப்புப் படிவமும் முன்வைக்கப்பட்ட கேள்விகளும்:

இந்த ஆய்விற்கென 16 கேள்விகள் அடங்கிய சிறப்பு ஆய்வுப் படிவம் ஒன்று உருவாக்கப்பட்டது. இப்படிவத்தினை இணையவழியில் “கூகுள் படிவமாக" எளிமையாக தமிழில் பூர்த்தி செய்கிற வகையில் உருவாக்கப்பட்டது.

இந்த ஆய்வில், தமிழக மாணவர்கள் நீட் தேர்வினால் அடைந்த பாதிப்புகள், மாணவர்கள் தற்கொலைக்கு நீட் தேர்வு வழி வகுக்கும் சூழல், நீட் தேர்வினால் இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படுதல், சமச்சீரற்ற கல்விமுறைகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரே தேர்வு முறையை அறிமுகப்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பு (State Board, CBSE, ICSE, International), நீட் தேர்வு முறையால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் இழப்பு, நீட் தேர்வால் தமிழ்நாட்டு உரிமைகள் மற்றும் நலன்களில் ஏற்படும் பாதிப்பு, நீட் தேர்வால் பயன்பெறுவோர் யார் மற்றும் இன்றைய தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு முற்றிலும் விலக்குப் பெறும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு போன்ற அம்சங்களை மையப்படுத்திய கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

2. கருத்துக்கணிப்பு பகுதி வரையறை:

"நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குத் தேவையா? பொதுமக்கள் கருத்துக் கேட்பு" எனும் ஆய்விற்கான பகுதி எல்லையாக தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 38 மாவட்டங்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய இரு பகுதிகளும் தீர்மானிக்கப்பட்டது.

ஆக ஒட்டுமொத்தமாக 40 பகுதிகள் ஆய்விற்கென எடுத்துக் கொள்ளப்பட்டன. இதற்கான கூகுள் படிவத்தின் மின்முகவரி (Google Form Link) சமூக வலைத்தளங்களில் பரவலாக்கம் செய்யப்பட்டது. ஆய்வுப் பகுதியில் உள்ள மக்கள் இந்த ஆய்வில் பங்கேற்கும் விதமாக, தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளும் வகையில் ஆய்வுப் படிவத்தின் மின்முகவரி பரவலாக்கம் செய்யப்பட்டது.

3. கருத்துக்கணிப்பிற்கான கால வரையறை:

இந்த கருத்துக்கணிப்பு 28.06.2021 அன்று காலை 10 மணியளவில் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டது. 14.07.2021 அன்று மாலை 4 மணியோடு பொதுமக்கள் கருத்து பகிரும் கால அளவு நிறைவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 17 நாட்கள் இந்த கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டது.

4. கருத்துக்கணிப்பில் யாரெல்லாம் பங்கேற்கலாம்?:

இந்த கருத்துக்கணிப்பில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் என்ற பொது வரையறை தீர்மானிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகிய நான்கு வகையினர் நேரடியாக நீட் தேர்வினால் தொடர்புள்ளவர்களாக இருப்பதனால் அவர்கள் பங்கேற்கிற வகையில் இந்த கருத்துக்கணிப்பு அமைந்தது. கூடுதலாக “மற்றவர்கள்” என்ற பொது வகையினர் பங்கேற்பதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.

நீட் தேர்வு கருத்துக்கணிப்பு முடிவுகள்

V. நீட் தேர்வு கருத்துக்கணிப்பு முடிவுகள்:

கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் 42,834 பொதுமக்கள் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு தேவையா? என்பது குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். இந்தக் கருத்துக்கணிப்பில் கீழ்க்காணும் ஒன்பது மையக்கேள்விகள் முன்வைக்கப்பட்டன.

1. நீங்கள் நீட் தேர்வை விரும்புகிறீர்களா?
2. தமிழக மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிப்படைகிறார்களா?
3. மாணவர்கள் தற்கொலைக்கு நீட் தேர்வு வழி வகுக்கிறதா?
4. நீட் தேர்வினால் இடஒதுக்கீடு முறை பாதிக்கப்படுகிறதா?
5. சமச்சீரற்ற கல்விமுறைகளில் பயிலும் மாணவர்களுக்கு ஒரே தேர்வு முறை சரிதானா? (State Board, CBSE, ICSE, International)
6. நீட் தேர்வு முறையால் அரசுப் பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களா?
7. நீட் தேர்வு தமிழ்நாட்டின் உரிமையில் - நலனில் தலையிடுகிறதா?
8. நீட் தேர்வு மூலம் யாருக்கெல்லாம் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்கிறது?
9. இன்றைய தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு முற்றிலும் விலக்குப் பெறும் என்று நம்புகிறீர்களா?

இந்தக் கேள்விகளுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்தைச் சார்ந்த 42,834 பொதுமக்கள் பங்கேற்று தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். இவர்கள் முன்வைத்த கருத்துக்களின் முடிவுகள் தொகுக்கப்பட்டு கீழ்க்கண்டவாறு பகுப்பாய்வு செய்யப்பட்டிருக்கிறது.

1. கருத்துக்கணிப்பில் பாலின விகிதம்:

இந்த கருத்துக்கணிப்பில் ஆண்களும் பெண்களும் சம அளவில் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, கலந்து கொண்டோரில் 50.5% பெண்களாகவும் 49.5% ஆண்களாகவும் உள்ளனர். கருத்துக்கணிப்பில் திருநர் சார்ந்தோரின் பங்களிப்பு மிக குறைந்த அளவிலேயே உள்ளது.

பொதுவாக, இதுபோன்ற கருத்துக்கணிப்பில் பெண்களின் பங்கேற்பு விழுக்காடு குறைந்த அளவிலேயே இருக்கும். ஆனால், இந்தக் கருத்துக்கணிப்பில் பெண்கள் மிகுந்த ஆர்வத்தோடு தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பது கவனத்தில் எடுத்துக் கொள்ளும் வகையில் உள்ளது.

2. கருத்துக்கணிப்பில் பங்கேற்றோர் விவரம்:

இந்த கருத்துக்கணிப்பில் பங்கேற்றோரில் 39% பேர் பெற்றோராகவும் 16.8% பேர் பள்ளி மாணவர்களாகவும் உள்ளனர். இதில் 16.2% பேர் கல்லூரி மாணவர்களாகவும் 7.2% பேர் ஆசிரியர்களாகவும் உள்ளனர். மேலும் 20.8% பேர் மற்றவர்கள் எனும் பிரிவைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் கல்லூரிக் கல்வியை முடித்த நபர்களாகவும், திருமணமாகாத இளைஞர்களாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது.

3. நீட் தேர்வை நாங்கள் விரும்பவில்லை:

இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட பெரும்பாலானோர் அதாவது 87.1% மக்கள் நீட் தேர்வை அவர்கள் விரும்பவில்லை என்ற கருத்தை முன் வைத்துள்ளனர். வெறும் 11.9% மக்கள் மட்டும் நீட் தேர்வை விரும்புவதாக கூறுகின்றனர். 1% மக்கள் நீட் பற்றி ஏதும் கருத்து கூற விரும்பவில்லை.

இதன் மூலம் நீட் தேர்வை பெரும்பான்மையான தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை என்பதை உறுதிபட அறிய முடிகிறது.

4. நீட் தேர்வினால் தமிழக மாணாக்கர்கள் பாதிப்பு அடைகின்றார்கள்:

நீட் தேர்வினால் தமிழக மாணாக்கர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக பெரும்பான்மையினர் கருத்து தெரிவிக்கின்றார்கள். 90.5% மக்கள் நீட் தேர்வினால் தமிழக மாணாக்கருக்கு பாதிப்பு என்ற கருத்தை முன்வைக்கின்ற போது மிக குறைந்த அளவிலான அதாவது 7.8% மக்கள் மட்டும் பாதிப்பு இல்லை என்கின்றனர்.

நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்தியதா இல்லையா என்பது தெரியாது என்று 1.7% மக்கள் கூறுகின்ற அதே வேளையில் நீட் தேர்வை விரும்பும் ஒரு சிலர் கூட நீட் தேர்வினால் பாதிப்பு என்ற கருத்தை முன் வைத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை விரும்பும் ஒரு சிலர் கூட நீட் தேர்வினால் பாதிப்பு என்ற கருத்தை முன் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது

5. நீட் தேர்வு மாணாக்கர்கள் மத்தியில் தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது:

நீட் தேர்வு மாணாக்கர் மத்தியில் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. அவர்களிடத்தில் தற்கொலை எண்ணத்தை தூண்டுகிறது என்று பெருவாரியான மக்கள் கூறுகின்றனர். 8.6% மக்கள் இல்லை என்றாலும் 4.5% பேர் தெரியவில்லை என்றாலும் 86.9% மக்கள் நீட் தேர்வு தற்கொலைக்கு வழி வகுக்கிறது என்று பதிவு செய்துள்ளனர்.

மாணவர்கள் தற்கொலைக்கு நீட் தேர்வு வழி வகுப்பதாக 86.9% மக்கள் தெரிவித்துள்ளனர்

6. சமச்சீரற்ற கல்விமுறையில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஒரே தேர்வு முறை சரியல்ல:

சமச்சீரற்ற கல்விமுறையில் பயிலும் மாணாக்கர்களுக்கு ஒரே தேர்வு முறை சரியல்ல என்று 67 விழுக்காட்டிற்கு மேற்பட்ட மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அது பற்றி தெரியவில்லை என்று 8.8% மக்கள் கருத்து தெரிவிக்கின்ற அதே வேளை 24.2% பேர் தேர்வு முறை சரியென்ற கருத்தையும் முன் வைக்கின்றனர்.

7. நீட் தேர்வினால் இட ஒதுக்கீடு முறை பாதிக்கப்படுகிறது:

நீட் தேர்வினால் இடஒதுக்கீடு முறை பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சத்தை 83.2% மக்கள் வெளிப்படுத்துகின்றனர். 9.1% மக்கள் இல்லை என்கின்ற கருத்தை முன் வைக்கின்ற வேளையில் இதுப்பற்றி தெரியவில்லை என்பதை 7.7% மக்கள் முன் வைக்கின்றனர்.

8. நீட் தேர்வால் அரசு பள்ளி மாணாக்கர்கள் பாதிப்பு அடைகின்றார்கள்:

நீட் தேர்வினால் அரசு பள்ளி மாணாக்கர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாக 89.7% மக்கள் கூறுகின்றனர். பாதிப்பு இல்லை என்று 7.1% மக்களும், தெரியாது என்று 3.2% மக்களும் கூறுகின்றனர்.

அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணாக்கர்கள் நீட் தேர்வு முறையினால் அதிகமாக பாதிக்கப்படுவதாக 89.7% மக்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

9. நீட் தேர்வு தமிழ்நாட்டின் உரிமையில் - நலனில் தலையிடுகிறது:

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் பங்கேற்ற நிலையில், நீட் தேர்வு மாநில உரிமைகள் மற்றும் நலனில் தலையிடுகிறதா? என்ற கேள்வி மிகுந்த முக்கியத்துவத்தை பெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மக்களின் எண்ண ஓட்டத்தை இந்த கேள்விக்கான பதில் அழுத்தமாக பதிவு செய்வதை கவனிக்க முடிகிறது.

நீட் தேர்வு மாநில உரிமைகள் மற்றும் நலனில் தலையிடுகிறது என்ற கருத்தை மிக அழுத்தமாக 79.6% மக்கள் முன் வைக்கின்றனர். 11.1% மக்கள் நீட் தேர்வு தமிழ்நாட்டின் உரிமையில் தலையிடவில்லை என்ற பதிலை முன் வைக்கும் வேளையில் 9.3% மக்கள் தெரியவில்லை என்ற பதிலையும் முன் வைக்கின்றனர்.

8. தனியார் பயிற்சி மையங்களில் நீட் பயிற்சி பெற்ற, வசதி வாய்ப்புள்ள மாணாக்கர்களே நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரிகளுக்கு செல்லும் வாய்ப்பை அதிகம் பெறுகின்றனர்:

நடுவண் இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ) பாடத்திட்டத்தில் பயில்வதோடு மட்டுமில்லாமல், தனியார் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும், வசதி வாய்ப்பு மிகுந்த மாணாக்கர்கள் தான் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை மக்கள் பெருவாரியாக பதிவு செய்துள்ளனர்.

கிராமப்புற, ஏழை எளிய மாணாக்கர்கள், அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்கர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற முடியும் என்ற கருத்தை வெறும் 2 – 3 விழுக்காடு மக்களே கூறியுள்ளனர். நீட் தேர்வு மூலம் மருத்துவ கல்லூரிகளுக்குச் செல்லும் வாய்ப்பை அதிகம் பெறுபவர்கள் யார் என்ற கேள்விக்கு கீழ்கண்ட வரிசைப்படி மக்கள் பதில் அளித்துள்ளனர். ஏறத்தாழ 3% மக்கள் மட்டும் இது பற்றி ஏதும் கருத்து கூறவில்லை.

1. பணம் படைத்தவர்கள் (60.6%)
2. சி.பி.எஸ்.இ மாணாக்கர்கள் (54.8%)
3. கோச்சிங் மையங்களில் பயின்றவர்கள் (53.1%)
4. மெட்ரிக் பள்ளி மாணாக்கர்கள் (29.6%)
5. திறமையானவர்கள் (15.4%)
6. அரசு & அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்கள் (3%)
7. ஏழை எளிய மாணாக்கர்கள் (2.7%)
8. கிராமப்புற மாணாக்கர்கள் (2.5%)
9. மற்றவர்கள் (2.1%)

கருத்துக்கணிப்பில் இக்கேள்விக்கு பத்து விதமான பதில்கள் ஒன்றுக்கு மேல் தெரிவு செய்யும் வகையில் கொடுக்கப்பட்டிருந்தன. ஆகவே, பதிலளிக்கும் நபர் ஒன்றுக்கும் மேற்ப்பட்ட கருத்தினை தெரிவு செய்திருக்கிறார்கள்.

9. தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு முற்றிலும் விலக்கு பெறும் என நம்புகிறோம்:

கருத்துக்கணிப்பில் பங்கேற்ற மக்களில் 75.8% மக்கள் தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு கட்டாயம் விலக்கு பெறும் என்ற நம்பிக்கையை பதிவு செய்திருக்கிறார்கள். தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கும் அரசு மீது மக்கள் ஆழமான நம்பிக்கையை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 75.8 விழுக்காட்டில், 36.5% மக்கள் தமிழ்நாடு அரசு நீட் தேர்விற்கு முற்றிலும் விலக்கு பெறும் என்ற முழுமையான நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள். அதே நேரம் 7.6% மக்களுக்கு தமிழக அரசால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. 8.7% மக்கள் விலக்கு பெற முடியாது என்ற கருத்தையும் 8% மக்கள் தெரியாது என்ற கருத்தையும் முன் வைக்கின்றனர்.

10.நீட் தேர்வு வேண்டாம். நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்:

இறுதியாக, நீட் தேர்வு குறித்த வேறு ஏதும் கருத்து கூற விரும்புகின்றீர்களா என்ற கேள்விக்கு ஒருமித்த குரலில் ‘நீட் தேர்வு வேண்டாம்’, ‘நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்’ என்ற கோரிக்கையை முன் வைக்கின்றனர். இக்கேள்விக்கு பதிலளித்த அனைத்து மக்களும் ஒருமித்த குரலில் இக்கோரிக்கைகளை வைத்து இருப்பது, நீட் தேர்வு முறையில் மக்களுக்கு இருக்கும் அதிருப்தியை சுட்டிக் காட்டுகின்றது. மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்தை மக்கள் வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.

நீட் தேர்வு குறித்த கருத்துக்கணிப்பு பார்வைகளும் பரிந்துரைகளும்

VI.பார்வைகளும் பரிந்துரைகளும்:

கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் நீட் தேர்வு தேவையா? என்பது குறித்து பொதுமக்கள் வெளிப்படுத்திய கருத்துகளை பகுப்பாய்வு செய்ததன் அடிப்படையில் கீழ்க்காணும் பார்வைகளும் பரிந்துரைகளும் முன்வைக்கப்படுகின்றன.

1. இந்திய அரசியலமைப்பு முன்வைக்கும் கூட்டாட்சி தத்துவம், ஒவ்வொரு மாநில அரசுக்கும் உகந்த மாநில கல்விக்கொள்கை, கல்விமுறை மற்றும் பாடத்திட்டத்தை வகுப்பதற்கான உரிமைகளை வழங்கியுள்ளது. ஆகவே, மொழி, இன, பண்பாட்டு ரீதியாக பன்முகத்தன்மையோடு, கல்வித்தரம் மற்றும் கல்வி மேம்பாட்டில் வேறுபட்ட நிலைகளில் இருக்கும் மாநிலங்களுக்கு ஒற்றை கல்விமுறையும் தேசிய அளவிலான தகுதித் தேர்வுமுறையும் ஏற்புடையதல்ல. இது கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில உரிமைகளுக்கும் முற்றிலும் எதிரானது.

நீட் தேர்வு வழியாக மாணாக்கர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பை தட்டிப் பறிக்கும் போக்கை பெருவாரியான தமிழக மக்கள் கடுமையாக எதிர்க்கின்றனர்; மாநில அரசின் கல்வி உரிமையில் ஒன்றிய அரசு தலையிடுவதை ஏற்றுக்கொள்வதில்லை. பொது நுழைவுத்தேர்வு குறித்த முடிவுகளை எடுப்பதற்கான அனைத்து உரிமைகளும் மாநிலங்களுக்கே என்பதை மக்கள் உறுதியிட்டு கூறுகின்றனர்.

2. கல்வி ஒவ்வொருவரின் பிறப்புரிமையாகும். அனைவருக்குமான பாகுபாடற்ற, தரமிக்க, சமத்துவமான கல்வி என்பது இந்திய அரசியல் அமைப்பில் உறுதி செய்யப்பட்ட ஒன்று. இவை இந்தியா ஏற்புறுதி செய்துள்ள பல்வேறு பன்னாட்டு மனித உரிமை உடன்படிக்கைகளிலும் உறுதி செய்யப்பட்டவை ஆகும். ஆனால், நீட் தகுதித் தேர்வு, உயர்கல்வி பயிலும் வாய்ப்பில் பெரும் பாகுபாட்டையும் ஏற்றத்தாழ்வையும் உருவாக்கி வருகின்றது என்பதை மக்கள் கருத்துக்கணிப்பில் தெட்டத் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றனர்.

நடுவண் இடைநிலை கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) பாடத்திட்டத்தில் பயில்வதோடு மட்டுமில்லாமல், தனியார் நடத்தும் பயிற்சி வகுப்புகளுக்கு சென்று பயிற்சி பெற்றால் தான் நீட் தேர்வில் வெற்றி பெற இயலும் என்ற நிலை தற்போது உருவாகி இருக்கின்றது.

இது, சமச்சீர் கற்றல் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், அரசு பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைக் குழந்தைகளின் உயர்கல்வி வாய்ப்பை, குறிப்பாக விளிம்பு நிலையில் இருக்கும் தலித், பழங்குடி மற்றும் கிராமப்புற பெண் குழந்தைகளின் உயர்கல்வி உரிமைகளை முழுமையாக அபகரிக்கும் செயலாகும். இச்செயல், இந்திய அரசியல் அமைப்பு உறுதிப்படுத்தும் சமத்துவம், பாகுபாடின்மை மற்றும் சமூகநீதி கோட்பாடுகளுக்கு முற்றிலும் எதிரானதாகும்.

3. குழந்தைகளின் நலன், கல்வி, வளர்ச்சி, பாதுகாப்பு மற்றும் அவர்களின் உரிமைகள் குறித்த கொள்கைகளும் திட்டங்களும் குழந்தைகளின் அதிகபட்ச நலன்களை (Best interest of the child) மையமாகக் கொண்டு வகுக்கப்பட வேண்டும் என்பதை இந்தியா ஏற்புறுதி செய்துள்ள ஐ.நா.வின் குழந்தை உரிமைகளுக்கான பன்னாட்டு உடன்படிக்கை வலியுறுத்துகின்றது.

ஆனால் நீட் தேர்வு முறை, உயர்நிலைப்பள்ளி வகுப்பு பாடத்திட்டம் மற்றும் நீட் தகுதி நுழைவுத்தேர்வுக்கான பாடத்திட்டம் ஆகிய இரண்டும் மாணவர்களுக்கு பெரும் மன உளைச்சலை உருவாக்குகிறது. அவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை குலைத்து, சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கச் செய்கிறது; அவர்களின் உயர்கல்வி கனவைச் சிதைக்கின்றது; கூடுதலாக அவர்களின் உடல் நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, மாணக்கர்களை தற்கொலைக்கும் தூண்டுகிறது என்பது மக்களின் கருத்துக்கணிப்பில் தெளிவாகிறது.

4. நடுவண் இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தும் நீட் தேர்வில் பள்ளிக் கல்வியை பயிலுவதோடு மட்டுமில்லாமல், தனியார் நடத்தும் நீட் பயிற்சி மையங்களுக்கு சென்று பயிற்சி பெறும் வசதி வாய்ப்புள்ள மாணாக்கர்கள் மட்டும் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருப்பதை மக்கள் கருத்துக் கணிப்பிலும், பல்வேறு தரவுகளிலும் வெளிப்படுகிறது.

நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, தனியார் பள்ளிகளில் இரு கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. பள்ளிக் கட்டணத்தோடு, நீட் பயிற்சி வகுப்புக்கான கட்டணமும் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. நீட் தேர்வு, பள்ளி கல்விமுறையை பயிற்சி மைய முறையாக மாற்றி பள்ளிக் கல்வியை வணிகமயமாக்கியுள்ளது. கடந்த 6-7 ஆண்டுகளில் கட்டுப்பாடற்ற தனியார் பயிற்சி மையங்கள் அதிக அளவில் உருவெடுத்துள்ளதால் ஏழைஎளிய மாணக்கர்களின் உயர்கல்வி கனவு எட்டாக்கனியாகி வருகிறது.

பாகுபாடற்ற, சமத்துவமான, சமச்சீர் பொதுக் கல்வியை அனைவருக்கும் வழங்குவது அரசின் தலையாய கடப்பாடு ஆகும். கல்வி உரிமையை பாதுகாத்து, அனைவருக்கும் சமமாக உறுதி செய்யாமல் நீட் தேர்வு மூலம் உயர்கல்வியை வணிகமயமாக்கும் ஒன்றிய அரசின் செயல்பாடு மிகப் பெரிய கல்வி உரிமை மீறலே. இது ஒன்றிய அரசு தனது கடப்பாடு மற்றும் பொறுப்புணர்ச்சியிலிருந்து முழுவதுமாக தவறிய செயலாகும்.

5. வரலாற்று ரீதியாக அநீதி இழைக்கப்பட்டு, கல்வி மறுக்கப்பட்டு, வறுமையின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ள நிலையில் உள்ள பின்தங்கிய வகுப்பினர், தலித் மற்றும் பழங்குடியினர்களுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு முறை நீட் தேர்வினால் ஆபத்துக்கு உள்ளாகிவிட்டது. இடஒதுக்கீடு என்பது இந்திய அரசியல் அமைப்பு வழங்கும் சமத்துவ உரிமையின் அடிப்படையிலானது. ஆகவே இதைப் பாதுகாத்து, உயர்கல்வி பயிலும் வாய்ப்பு விளிம்புநிலை மாணாக்கருக்கு கிடைப்பதை உறுதி செய்வது ஒன்றிய மற்றும் தமிழக அரசின் கடமையாகும்.

6. கோவிட் 19 பெருந்தொற்று மற்றும் அதன் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ஊரடங்கு நடவடிக்கைகளினால், கடந்த ஓராண்டிற்கு மேலாக, பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ள நிலையில், வசதி வாய்ப்புள்ள குடும்பங்களைச் சார்ந்த மாணாக்கர்கள் மட்டும் இணையவழியில் கல்வி பெறுகின்றனர்.

ஆனால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணாக்கர்கள் இத்தகைய இணையவழி அல்லது மின்னனு கருவி வாயிலாக கற்கும் வாய்ப்பில்லாமல் உள்ளனர். இதனால் கற்றல் வாய்ப்பில் மிகப்பெரிய இடைவெளி அதிகரித்துள்ளது. இது மாணாக்கர்களிடையே பரந்துபட்ட பாகுபாட்டினை உருவாக்கியுள்ளது.

இத்தகையச் சூழலில் இணையவழிக் கல்வி வாய்ப்பு பெற்ற மாணாக்கர்களுக்கும், எந்தவித கற்றல் வாய்ப்பும் இல்லாமல் புறக்கணிக்கப்பட்ட மாணாக்கர்களுக்கும் ஒரே வித தகுதித் தேர்வை எந்த விதத்தில் நியாயப்படுத்த முடியும்? இது அனைவருக்குமான சமத்துவப் பாகுபாடற்ற கல்வி கோட்பாட்டிற்கு எதிரான செயலாகும். ஆகவே நீட் தேர்வு முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று.
சுருக்கமாக, நீட் தேர்வு என்பது

o கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாநில உரிமைகளுக்கும் எதிரானது.
o நீட் தேர்வு மொழி உரிமைக்கு எதிரானது
o சமத்துவமான, பாகுபாடற்ற, தரமிக்க, அனைவருக்குமான கல்வி உரிமையைப் பறிப்பது.
o கல்வி உரிமையை உறுதி செய்யும் அரசின் கடப்பாட்டிலிருந்து ஒன்றிய அரசு விலகிக் கொள்வது.
o கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணாக்கர்களின் உயர்கல்வி உரிமையை அபகரிப்பது.
o குழந்தை உரிமைகளுக்கும் அவர்கள் நலன்களுக்கும் எதிரானது.
o இட ஒதுக்கீட்டு முறையை நிர்மூலமாக்கி சமூகநீதியை மறுப்பது.
o கல்வித்தளத்தில் பாகுபாட்டையும் சமத்துவமின்மையையும் அதிகரிப்பது.
o பெருகி வரும் கோச்சிங் மையங்கள் வாயிலாக கல்வியை முற்றிலும் வணிகமயமாக்குவது.

7. நீட் தேர்வு முறை, கல்வி உரிமை மீறல்களுக்கு தொடர்ந்து இட்டுச் செல்கிறது. ஆகவே, நீட் தேர்வை இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட 87.1% மக்கள் முழுமையாக எதிர்க்கின்றனர். தமிழக மாணவர்கள் நீட் தேர்வினால் பாதிப்படைகிறார்கள் என்று 90.5% மக்கள் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளனர்.

தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முறை குறித்து முடிவு எடுக்கும் உரிமை மாநில அரசுக்கே உள்ளது என்று வலியுறுத்துகின்றனர். மேலும் தமிழ்நாடு அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கும் அல்லது நீட் தேர்வில் இருந்து தமிழ்நாடு விலக்கு பெறுவதற்கும், தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்று 75.8% மக்கள் முழுமையாக நம்புகின்றனர்.

மக்களின் நம்பிக்கையை காக்கும் பொருட்டு தமிழக அரசு நீட் தேர்வை ரத்து செய்வதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் விரைவாக எடுக்க வேண்டும். நீட் தேர்வில் இருந்து இந்த ஆண்டே தமிழ்நாட்டிற்கு நிரந்தர விலக்கு பெற வேண்டும் என ஒட்டுமொத்த தமிழகமே எதிர்ப்பார்க்கிறது.

8. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய நீதியரசர் திரு.ஏ.கே. இராஜன் அவர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டதை கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு வரவேற்கின்றது.

9. கல்வியை மாநிலப் பட்டியலுக்கு முழுமையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மற்ற மாநில அரசுகளின் ஒத்துழைப்போடு இணைந்து தமிழ்நாடு அரசு முன்னெடுக்க வேண்டுகின்றோம்.

10. நீதிபதி ஏ கே ராஜன் குழுவை எதிர்த்துப் போடப்பட்ட வழக்கில் மாணவர் நலன் சார்ந்து நீதியான தீர்ப்பினை வழங்கிய உயர்நீதிமன்றத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தொடர்புக்கு
9442618117 - 9994368503 – 9994368571

logo education community

- கல்விப் பாதுகாப்புக் கூட்டமைப்பு – தமிழ்நாடு & புதுச்சேரி

Pin It