periyar 350பெரியார் இறுதி ஊர்வலம் நடந்த  டிசம்.25, 1973 நாளில் ‘மக்கள் குரல்’ நாளேட்டில் மறைந்த மூத்த பத்திரிகையாளர் சோலை எழுதிய உணர்ச்சிகர கட்டுரையை இங்கு வெளியிடுகிறோம். ஆர்.

சமுதாயத்தைச் சீர்திருத்த வந்த சரித்திர நாயகர்கள் பலரை வரலாறு சந்தித்திருக்கிறது. சமுதா யத்தில் மறுமலர்ச்சி காண போதி மரத்திலிருந்து புறப்பட்ட புத்தன் வெற்றி பெறவில்லை. அவனது சமுதாய மறுமலர்ச்சி சமயத்தின் ஒரு கிளையானது.

தென்னகத்தே ஒரு இராமலிங்கன் தோன்றினான். முடை நாற்றம் வீசுகின்ற மூடப் பழக்கங்களைச் சுட்டெரிக்கப் புறப்பட்டான். கடைசியில், “கடை விரித்தேன்; கொள்வாரில்லை” என்று கடையை மூடி நடையைக் கட்டினான். அவனது இயக்கமும் சமயத்தின் ஒரு வடிகாலானது.

ஆனால் இந்த நூற்றாண்டில் ஈரோட்டிலிருந்து ஒரு வெண்தாடி வேந்தன் ஊன்றிய தடியோடு ஊர் முழுக்கச் சுற்றுலாக் கிளம்பினான். அவன் தனது சமுதாய மறுமலர்ச்சி இயக்கத்திற்கு சமுதாயத்தை, கடவுளை, சாஸ்திரத்தை அடித்தளமாகக் கொள்ளவில்லை. அத்தனைத் தீமைகளுக்கும் அவைகளே ஊற்றுக்கண் என்பதை உணர்ந்தான்! எனவே சாதியைச் சாடினான்! சமயத்தைச் சாடினான்! கடவுளர்களை வாதுக்கு அழைத்தான்! அவன் தேவதூதன் அல்ல; மனித இனத்தின் மங்காப் புகழ் கொண்ட தூதன். மனித இனத்தின் அந்தத் தூதன் அதோ! போகின்றான்.

சாதிக்குள்ளே - சமயத்திற்குள்ளே குட்டிக்கரணம் போட்டவர்களையெல்லாம் - அவர்கள் எவ்வளவு பெரிய சமுதாயச் சீர்திருத்தவாதிகளாகயிருந்தாலும் சாதி, சமயத்தின் காவலர்கள் முக்காடு போட்டு, விபூதிப் பொட்டலத்தைக் கொடுத்துக் கடவுளர்களாகவோ ஞானிகளாகவோ ஆக்கி, அவர்களது கதையை ‘முற்றும்’ என்று எழுதினர். ஆனால் அவர்களை வென்று, சாதிகளையும் வென்று இன்றைக்குக் கலப்பு மணம் செய்தால் அரசுப் பரிசு என்ற நிலையை உருவாக்கிய மனித தூதன் அதோ! போகின்றான்!

தென்னகத்தில் தேசிய விடுதலை இயக்கமே அவனது வீட்டுத் தொட்டிலிலேதான் பிறந்து வளர்ந்தது. அதற்காக அவன் இழந்தது ஏராளம்! பொது நிலையங்களில் அவன் ஏற்றிருந்த 29 பதவிகளைத் தாராளமாகத் துறந்தான். வாணிபத்தில் வந்த ஆண்டுக்கு 20 ஆயிரம் வருமானத்தை இழந்தான்.

இந்தப் போரின் முடிவே ஈரோட்டு இராமசாமி மனைவி (ஈரோட்டிலுள்ள இரு பெண்மணிகளின்)யின் கரங்களிலேதான்இருக்கிறது என்று காந்தியடிகளே கூறினார்.

ஆமாம்! அடிமையுண்ட இந்தியாவில் தென்னகத்தின் தளபதியாக அவன் பவனி வந்தான். சுதந்தரம் கேட்டு சொத்துக்களை இழந்த அந்த மனிதத் தூதன்தான் அதோ! போகின்றான்!

தீண்டாமைப் ‘பேயை’த் தீர்த்துக் கட்டிட அவன் வைக்கத்திலே கொடி உயர்த்தினான். சமுதாயத்தின் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு அடைத்துக் கிடக்கும் வீதியின் கதவுகளைத் திறக்கக்கோரி சிங்கமென கர்ஜித்தான்! அதற்காக அவன் சிறையிலேயே பூட்டப்பட்டான்! இன்றைக்கு எல்லா கதவுகளும் எல்லோருக்கும் திறந்தே கிடக்கின்றன. அந்தச் சாதனையின் சின்னமாகப் பவனி வந்த மனிதத் தூதன் அதோ! போகின்றான்!

சாதியை ஒழித்திட அவன் பட்டிதொட்டியெல்லாம் நடந்தான். அதற்காக அவன் கல்லடிபட்டான்; சொல்லடிபட்டான். நிர்வாணமாக நின்ற தமிழ்ச் சமுதாயத்திற்கு அவன் தன்மான ஆடை தரித்தான். ஆனால் இன்றைக்கு எவர் கோட்டைக்கு வரினும் அவரது பள்ளியில் படித்த பிள்ளைகளே அவர்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

தனது வாழ்நாளிலேயே இத்தகைய மகத்தான சாதனையை மணிமகுடமாக்கிக் கொண்ட அந்த மனிதத் தூதன் அதோ! போகின்றான்!

தமிழகத்தில், முதன்முதலாக சமதர்ம இயக்கத்திற்கு வித்தூன்றிய வித்தகனும் அவனே; புரட்சியில் மலர்ந்த சோபிதமான சோவியத் யூனியனில் இங்கிருந்து சென்று உலவிய முதல் மகனும் அவனே. அவன்தான் எங்களுக்கு மாமேதை லெனினை அறிமுகம் செய்தான். அவன்தான் மார்க்சையும், ஏங்கல்சையும் ‘குடிஅரசு’ ஏட்டின் மூலம் ஊரெல்லாம் நாடெல்லாம் அழைத்துச் சொன்றான். இன்றைக்கு உலகின் மூன்றில் ஒரு பகுதியில் ஆட்சிக் கொடியாகப் பறக்கின்ற செங்கொடியின் தத்துவப் பெரியார் - “கம்யூனிஸ்ட் அறிக்கையை” முதன்முதலாக தமிழகத்தில் வெளியிட்டவனும் சுயமரியாதை சமதாமவாதிகளின் மாநாடு கண்டவனும் அவனே. நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே பொதுவுடமைத் தத்துவங்களைப் புத்தகங்களாக நடமாட விட்டவனும் அவனே.

தேசிய விடுதலை இயக்கமா? அவனே முதல்வன்! பொதுவுடமை இயக்கமா? - அவனே முன்னவன்! சுயமரியாதை இயக்கமா? அவனே முதல்வன்! தன்மான இயக்கமா? - அவனே முன்னவன்! மொழி காக்கும் இயக்கமா? அவனே முதல்வன்! மனித இனத்தின் அந்தத் தூதன்தான் அதோ! போகின்றான்!

அவன் கண்ட போராட்டங்கள் எத்தனை? ஆனால் மனித இனம் உய்யத்தான் அத்தனைப் போராட்டங்களையும் கண்டான்! அவன் ஒரு பிறவிப் போர் வீரன்! எங்கள் கட்டுத் தளைகளை அறுக்க அவன் போராடிக் கொண்டே இருந்தான். அவன் வயதில், அறிவில் முதியோன்! ஆனால் நாட்டின் வாய்மைப் போருக்கு என்றுமே அவன் இளைஞன்! அதோ! மனித இனத்தின் அந்தத் தூதன் போகின்றான்! புகழ் சுமந்து போகின்றான்! எடுத்த காரியம் யாவினும் வெற்றி என்று நிறைவோடு போகின்றான்!

ஆமாம்; அவன் எங்கே போகின்றான்? வாழ்க்கைப் பயணம் முடிந்தது என்று போகின்றானா? அவன் சிந்திக்கத் தெரிந்த மனிதர்களின் இதயங்களிலெல்லாம் குடிகொள்ளப் போகின்றான்? அறிவுக் கண் திறந்த உலகமெல்லாம் நீங்காத நிலை கொள்ளப் போகின்றான்! அதோ! மனித இனத்தின் தூதன் போகின்றான்!

Pin It