கழகம் சார்பில் காவல்துறைக்குக் கோரிக்கை!
விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் நடக்கும் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரி கழக சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மனு அளிக்கப்பட்டுவருகிறது.
சென்னை: விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரியும், சிலைத் தயாரிப்பு - ஒலிப் பெருக்கி பயன்படுத்துதல் உள்ளிட்டு அரசு வகுத்த வழிகாட்டு நெறிகளைச் சரியான முறையில் பின்பற்ற வேண்டும், அதை அரசு கண்காணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி 20.08.2024 அன்று சென்னை மாநகரக் காவல் ஆணையரகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.
கோவை: விநாயகர் சதுர்த்தி என்ற பெயரில் இந்துத்துவ அமைப்புகள் நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆணைகளைத் துளியும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் தீங்கு விளைவிக்கும் இவ்விழாவினை அரசு உரிய முறையில் கண்காணிக்க வேண்டுமெனவும், பிளாஸ்டர் பாரிஸ் சிலைகளை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை உள்ளிடக்கிய மனு ஒன்றினை 20.08.2024 அன்று கோவை மாவட்டக் கழக சார்பில் கோவை மாநகரக் காவல் ஆணையர், இந்துசமய அறநிலையத்துறை இணை ஆணையர், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய ஆணையர் உள்ளடக்கிய துறை அதிகாரிகளிடம் மனு அளிக்கப்பட்டது.
தேனி: விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் என்ற பெயரில் ஆர்எஸ்எஸ் இந்து முன்னணிக் கும்பல்கள் நீதிமன்ற உத்தரவுகள், அரசாணைகள், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய வழிமுறைகள் ஆகியவற்றைக் கடைப்பிடிக்காமல் கலவரத்தைத் தூண்டும் வகையில் செயல்படுவதைக் கண்காணித்து அவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தேனி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது
இந்நிகழ்வில் தி.வி.க. மாவட்ட அமைப்பாளர் தேனிராயன், பெரியார் சிவா, காளியப்பன், தமிழரசி, சோலையம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சேலம் : விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களில் நடக்கும் அத்துமீறல் மற்றும் விதிமீறல்களைத் தடுக்கக் கோரி 21.08.2024 அன்று சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது. இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் டேவிட், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் தங்கதுரை, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வெற்றிமுருகன், சேலம் மாநகர செயலாளர் ஆனந்தி, சேலம் மாநகர அமைப்பாளர் தேவராஜ், வெள்ளார் சிவ சண்முகம், அருள்பாண்டியன், இளம்பிள்ளை கோபி, நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பழனி கோயிலைப் பார்ப்பனர்கள் அபகரித்தது எப்படி?
முருகன் மாநாட்டில் 3,000 நூல்கள் வழங்கி கழகம் பரப்புரை
தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பழனியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு ஆகஸ்ட் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அம்மாநாட்டில் கழக இணையதளப் பிரிவு வெளியிட்ட “பழனி கோயில் வழிபாட்டு உரிமையைப் பறித்தப் பார்ப்பனர்கள்” என்ற நூல் சலுகை விலையில் விற்பனை செய்யப்படும் என்று திண்டுக்கல் மாவட்டக் கழகம் அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் ஆகஸ்ட் 24 ஆம் தேதி அதிகாலை 4 மணியளவில் கழகத்தின் திண்டுக்கல் மாவட்டத் தலைவர் மருதமூர்த்தி பழனி காவல்துறையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டார். கைதுக்கு அஞ்சாத கழக செயல்வீரர்கள், ஏற்கனவே திட்டமிட்டபடி காலை 7 மணி முதலே பழனி ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு நூல்களை இலவசமாக வழங்கினர். மாநாடு நடைபெற்ற பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் நூல்களை விநியோகம் செய்வதற்காகச் சென்ற திண்டுக்கல் மாவட்டக் கழகச் செயலாளர் மாக்சிம் கார்க்கி, மாவட்ட அமைப்பாளர் ராஜா ஆகிய இருவரையும் பழனி காவல்துறையினர் கைது செய்தனர்.
மற்றொருபுறம் கழகச் செயல்வீரர்களான கபாலி, பெரியார், சங்கர், ஆயுதன், ஜெயசங்கர் உள்ளிட்டோர் 3,000க்கும் மேற்பட்ட நூல்களைப் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்தனர். பின்னர் அவர்கள் ஐவரையும் பழனி காவல்துறை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனையறிந்த கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர். இதனையடுத்து பிற்பகல் 2:30 மணியளவில் தோழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
“பழனி கோயில் வழிபாட்டு உரிமையைப் பறித்தப் பார்ப்பனர்கள்” என்ற நூலை விநியோகம் செய்ததற்காகத் திண்டுக்கல் மாவட்டக் கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டது தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலரும் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் தோழர்கள் மீதான தடுப்புக்காவல் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்தனர். திண்டுக்கல் மாவட்டக் கழகத் தோழர்களின் துணிச்சலும், களப்பணியும் பலராலும் பாராட்டப்பட்டது.
கவனம் ஈர்க்கும் கழகம்!
நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ஓராண்டுக்கும் மேல் திராவிடர் விடுதலைக் கழகம் மாநிலம் தழுவிய அளவில் தீவிர பரப்புரை மேற்கொண்டு, பாஜக ஆட்சியின் பேராபத்துகளை மக்கள் மத்தியில் எடுத்துரைத்தது. அரசியல் கட்சிகளுக்கு முன்பாகவே பரப்புரைக் களத்தில் முதலில் இறங்கிய இயக்கம் திராவிடர் விடுதலைக் கழகம். எது “சனாதனம்? எது திராவிடம்” என்ற தலைப்பில் தமிழ்நாடு முழுக்க சுமார் ஆயிரம் தெருமுனைக் கூட்டங்களும், தேர்தல் நெருங்கிய சமயத்தில் “சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம் ஜனநாயகம் காப்போம்” என்ற தலைப்பில் சுமார் 300 தெருமுனைக் கூட்டங்களும் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டன. 2 ஆண்டுகளுக்கு முன்பு திராவிட மாடல் என்றால் என்ன என்பதை விளக்கி தெருமுனைக் கூட்டங்களும், அதனையொட்டிய மண்டல மாநாடுகளும் நடத்தப்பட்டன.
இதில் தலைநகர் சென்னையில் மட்டும் ஒட்டுமொத்தமாக கடந்த 2 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட தெருமுனைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. கழகம் முன்னெடுக்கும் இந்தப் பணிகளுக்கு களத்தில் இருந்து கிடைத்த பேராதரவுக்கு அடையாளமாக மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புதிது புதிதாகப் பலம் இளம் தோழர்கள் கடந்த சில மாதங்களில் இணைந்திருக்கின்றனர். சென்னையில் கழக நிகழ்ச்சி நடந்தாலே புதிய தோழர்கள் இணைப்பும் கட்டாயம் இருக்கும் என்கிற அளவுக்கு புதிய புதியத் தோழர்கள் கழகத்தில் இணையப் பேரார்வம் காட்டுகின்றனர்.
இன்ஸ்டகிராமில் முற்போக்குக் கருத்தியலைப் பேசி, ஆயிரக்கணக்கான ஃபாலோயர்களைக் (பின்தொடர்பவர்கள்) கொண்டிருக்கும் தோழர்கள் தவுபிக், லியோ, ஊடகவியலாளர் ஸ்ரீஜன், பொன்மலர், மருத்துவர் சுருதி, ஐடி ஊழியர்கள் அபிநந்தன், விஷால், கல்லூரி மாணவர்கள் ராகுல், நிறை, அழகிரி, மதன் ராகேஷ், ஜானகி ராமன், சட்டக்கல்லூரி மாணவர் ராஜா எனப் பல்வேறு தளங்களில், பல்வேறு துறைகளில் பெரியாரிய- திராவிட இயக்கக் கருத்தியலை பரப்பிக் கொண்டிருக்கும் தோழர்கள் சென்னை மாவட்டக் கழகத்தில் இணைந்திருக்கின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்று புதிய தோழர்கள் இணையும் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கிறது. புதிய தோழர்களை வரவேற்போம், இணைந்து செயல்படுவோம்.
- பெ.மு. செய்தியாளர்