கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மூன்று வேளாண் சட்டங்களில் ஒரு புள்ளி, கமாவை கூட அழிக்க மாட்டோம் என்று கடந்த காலங்களில் ஆணவமாகப் பேசிய ஒன்றிய பாஜக அரசு, இனி அப்படியெல்லாம் ஆணவமாகப் பேச முடியாது என்று உணர வைக்கத்தக்க சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. வக்பு வாரிய திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பி வைத்த கையோடு, ஒன்றிய அரசின் துறைகளில் உயர் பதவிகளுக்கு தனியார் துறை ஆட்களை நியமிக்கும் மோசமான முடிவைக் கைவிட்டிருக்கிறது ஒன்றிய பாஜக அரசு.

ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சகங்களில் இணைச் செயலாளர்கள், இயக்குநர்கள் பொறுப்புக்கு 45 பேரை நேரடித் தேர்வு (Lateral entry) செய்யவிருப்பதாகக் கடந்த வாரத்தில் அறிவிப்பு வெளியானது. ஒன்றிய அரசின் உயர் பொறுப்புகள் அனைத்தும் ஏற்கனவே பார்ப்பனமயமாக இருக்கின்றன. நாடாளுமன்றத்தில் 2022-இல் அளிக்கப்பட்ட விவரங்களின்படி, ஒன்றிய அரசின் அமைச்சகங்களின் பல்வேறு பொறுப்புகளை வகிக்கும் 322 பேரில் 254 பேர் பார்ப்பனர்கள் மற்றும் உயர்ஜாதியினர். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் இடத்தில் கூட பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடி சமூகத்தினர் இல்லை என்று சமீபத்தில் நாடாளுமன்றத்திலேயே ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார். அடுத்த ஒரு சில வாரத்திலேயே மீண்டும் இப்படியொரு அறிவிப்பை யு.பி.எஸ்.சி வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஏற்கெனவே உத்தரப் பிரதேசம், அரியானா போன்ற மாநிலங்களில் உயர் பதவிகளை ஆர்.எஸ்.எஸ்-ஸை சேர்ந்தவர்கள் கொண்டு நிரப்புவதாக சர்ச்சை எழுந்தது. இப்போது ஒன்றிய அரசின் உயர் பதவிகளிலும் தனியார் நிபுணர்களை அமர்த்தலாம் என்றால், யார் அந்த நிபுணர்களாக இருப்பார்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள். பொதுவாக இத்தகைய உயர் பொறுப்புகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளே நியமிக்கப்படுவர். எனவே ஏர் இந்தியாவைப் போல, எல்.ஐ.சி.-யைப் போல ஐ.ஏ.எஸ். பதவிகளையும் தனியார்மயமாக்குவது என்ற சதித்திட்டம்தான் இதற்குள் ஒளிந்திருக்கிறது. இந்த 45 இடங்களில் 22 பேரை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் எடுத்திருக்க வேண்டும். சமூகத்தின் பல்வேறு பின்புலத்தில் இருந்து இந்த 22 பேரும் வருவதற்கான வாய்ப்புகள் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் இருக்கின்றன. அதை விரும்பாத பாஜகவின் இந்துத்துவ மனநிலைதான் யு.பி.எஸ்.சி-யின் அறிவிப்பாக இருக்கிறது.

ஆனால் பலமான எதிர்க்கட்சிகள் இப்போது அமைந்திருப்பதால், எதிர்க்கட்சிகளின் அழுத்தத்திற்குப் பணிந்து தற்காலிகமாக பின்வாங்கியிருக்கிறது ஒன்றிய அரசு. இந்த நேரடி நியமன முறை திடீரென யு.பி.எஸ்.சி அறிவித்ததல்ல. சமூக நீதியைப் படுகுழியில் தள்ளுவதற்கான பாஜகவின் நீண்டகால செயல்திட்டங்களில் இதுவும் ஒன்று. 2018ஆம் ஆண்டிலேயே இதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டுவிட்டன. பிரதமரின் அறிவுறுத்தலின்படி 10 அமைச்சகங்களில் 50 இணைச் செயலாளர்கள், இயக்குநர்களை நேரடி நியமனம் செய்ய வேண்டுமென்று ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு (DoPT) 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அறிவுறுத்தப்பட்டது. அடுத்த 2 நாட்களில், இதுதொடர்பாக அதன் இடஒதுக்கீட்டுப் பிரிவிடம் ஒன்றிய பணியாளர் மற்றும் பயிற்சித் துறை கருத்துக் கேட்டது. இதுதொடர்பாக 1967 மற்றும் 1978ஆம் ஆண்டுகளில் DoPT-க்கு சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, “பிரதிநிதித்துவம் அல்லது இடமாற்றம் மூலம் நிரப்பப்பட்ட காலியிடங்களில் SC/ST களுக்கு இடஒதுக்கீடு இல்லை என்றும், ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் பதவிகளுக்கு இடஒதுக்கீடு குறித்த அறிவுறுத்தல்கள் எதுவும் இல்லை” என்றும் DoPT-இன் இடஒதுக்கீட்டு பிரிவு 2018 ஏப்ரலில் பதிலளித்துள்ளது.

மீண்டும் மே மாதத்திலேயே DoPT அதிகாரிகளுடன் பிரதமரும் ஆலோசனை நடத்தினார். அந்த பின்னணியில்தான் இப்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால் இந்த அறிவிப்பை யு.பி.எஸ்.சி. ஏதோ தன்னிச்சையாக வெளியிட்டது போல மோடி அரசு நாடகமாடுகிறது. மோடி அரசின் இந்த நாடகத்தை எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிகளும் உணர்ந்துகொண்டு கடுமையாக எதிர்த்திருக்கின்றன. அதன்பிறகு வேறு வழியில்லாமல் பின்வாங்கியிருக்கிறது பாஜக அரசு. இதுபோல தனியார் துறை சார்ந்த நபர்களை, அரசு சார்ந்த உயர் பொறுப்புகளில் அமர்த்துவதால் ஏற்படும் ஆபத்துகளுக்கு பங்குச்சந்தை ஒழுங்குமுறை வாரியம் (செபி) சிறந்த எடுத்துக்காட்டு.

தற்போது செபியின் தலைவராக இருக்கும் மதாபி பூரி புச் இதுபோல நேரடி நியமனம் செய்யப்பட்டவரே. அதானி குழுமம் மீது ஹிண்டன்பர்க் வைத்த குற்றச்சாட்டுக்களை நிராகரித்து செபி அறிக்கை கொடுத்தது இவரது நியமனத்திற்குப் பிறகே. இவரது கணவர் அதானி குழுமத்துடன் தொடர்புடைய சில நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதாக மீண்டும் ஹிண்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது. ஆக, ஒன்றிய அரசின் உயர் பொறுப்புகளில் தனியாரையோ அல்லது ஆர்.எஸ்.எஸ் பின்புலம் சார்ந்தவர்களையோ அமர்த்துவதால் அவரவர் நிறுவனத்திற்கும், கொள்கைகளுக்கும்தான் பயன்படும். அரசுக்கும், பிற்படுத்தப்பட்ட- பட்டியல் - பழங்குடி சமூகங்களுக்கும் பெருங்கேட்டையே விளைவிக்கும். ஜனநாயக சக்திகளான நாம் எச்சரிக்கையோடு இருப்போம்.

- விடுதலை இராசேந்திரன்