தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட நூற்றாண்டு நிறைவு விழா கடந்த 12.12.2024 அன்று கேரள மாநிலம் வைக்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
”வைதிக இந்துக்கள் கொண்டிருக்கும் வெறியைப் போக்க நமக்கு ஒரு வழிதான் உள்ளது. அதாவது அவர்களுடன் நாம் பொறுமையுடன் விவாதம் செய்தும் சரியாக நடந்தும்தான் அவர்களை அதனைக் கைவிடும்படி செய்யக்கூடும்” என்று காந்தி தனது யங் இந்தியா இதழில் கட்டுரை எழுதிக் கொண்டிருந்தபோது, போராட்டக் களத்திற்கு நேராகச் சென்று, போராடி அதன் விளைவாகக் கடுமையான சிறைக் கொடுமைகளையும் எதிர்கொண்டவர் பெரியார்.
தந்தை பெரியாரின் போராட்ட வரலாற்றில் குறிப்பிடத்தக்க போராட்டம், வைக்கம் போராட்டமாகும். கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் நடப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்ட அவலம் நடந்த அக்காலகட்டத்தில் போராட்டத்தைத் தீவிரப்படுத்தி வெற்றி பெறச் செய்தது பெரியாரின் போராட்டத்தின் விளைவே. மிக முக்கியமாக, இந்தக் கிளர்ச்சியில் முதலில் பங்கு பெற்றவர்கள் பெரியாரின் குடும்பத்துப் பெண்கள் என்று வைக்கம் போராட்ட வரலாற்றை ஆவணப்படுத்தியுள்ள ஆய்வாளர் பழ.அதியமான் குறிப்பிடுகிறார். வைக்கம் போராட்டம் அண்ணல் அம்பேத்கரின் மகத் குளப் போராட்டத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது.
இன்று அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் அளவிற்கு தமிழ்நாட்டில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்றால் அதற்கு பெரியாரின் இயக்கம் விதையாக இருந்தது. என்றாலும் ஜாதியைப் பாதுகாக்கும் சமூகமும், அரசியலமைப்புச் சட்டமும் இருக்கும் வரையில் பார்ப்பனியம் ஏதாவது ஒரு முறையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனவே சமூக மாற்றத்திற்கான பரப்புரையைத் தொடர்ந்து மேற்கொள்வதோடு, தந்தை பெரியார் அரசியலமைப்பில் கோரிய மாற்றங்களைத் தொடர்ந்து வலியுறுத்துவதே வைக்கம் நூற்றாண்டில் நாம் முன்னெடுக்க வேண்டிய பணியாகும்.
- கருஞ்சட்டைத் தமிழர்