தமிழகத்தில் கழகத்தினர் பல்வேறு ஊர்களில் அம்பேத்கர் பிறந்த நாளில் சிலைகளுக்கு மாலை அணிவித்து ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்றனர் .

களத்தூரில் : 14-4-2016 அன்று வேலூர் மாவட்டம் களத்தூரில் அம்பேத்கரின் பிறந்த நாள் விழா களத்தூர் கிளை, மக்கள் மன்றத்தால் எழுச்சி யோடு நடத்தப்பட்டது. ஜாதி ஒழிப்புப் போரில் உயிர்நீத்த தியாகிகளின் வீரவணக்கப் பாடலுடன் தொடங்கியது. தொடர்ந்து, மக்கள் மன்றத் தோழர்களின் பறைமுழக்கமும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன. கலைநிகழ்ச்சிகளின் நடுவே தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் காஞ்சி மாவட்ட செயலாளர் பரந்தாமன், காஞ்சி வழக்கறிஞர் அப்துல் ஹக்கீம், இயக்குநர் களஞ்சியம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் உரையாற்றினர்.

காஞ்சி மக்கள் மன்றத்தின் சார்பாக மகேஷ் நன்றி கூறினார்.

களத்தூர் மக்கள் தொடர்ச்சியாக மணல் கொள்ளைக்கு எதிராக, பல்வேறு நெருக்கடிகளுக்கு இடையே துணிச்சலோடு போராடிவருபவர்கள் ஆவார்கள்.

மன்னையில் : திருவாரூர் மாவட்டம் மன்னார் குடியிலுள்ள அம்பேத்கர் சிலைக்கு திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, விடுதலை சிறுத்தைகள் திருவாரூர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் செல்வம் ஆகியோர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இதுகுறித்து திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்டசெயலாளர் இரா.காளிதாசு, “புரட்சியாளர் அம்பேத்கர் 125ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தமிழக அரசு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், அரசு சார்பில் முழுஉருவ வெண்கல சிலைகளை அமைக்கவேண்டும்.

அம்பேத்கரின் ஜாதியை ஒழிக்கும் வழி என்கிற புத்தகத்தை உயர்கல்வி பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும். தமிழகத்தில் ஜாதியின் பெயரால் நடைபெறுகின்ற ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்திட மத்திய சட்ட ஆணையம் வடிவமைத்து கொடுத்திருக்கின்ற திருமண விவகார தலையீட்டு தடுப்புச் சட்டத்தை உடனடியாக தனி சட்டமாக இயற்றவேண்டும். ஜாதி மறுப்பு திருமண தம்பதியினருக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதோடு அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும்” என கூறினார்.

திருப்பூரில் : திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாள் விழா ஜாதி ஒழிப்பு உறுதியேற்பு நிகழ்வு காமராஜர் சாலையில் உள்ள அண்ணல் அம்பேத்கர் சிலை முன் நடைபெற்றது. கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி தலைமை தாங்கினார். அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு நடைபெற்றவுடன் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கவிஞர் கனல்மதி, ஜாதி ஒழிப்பு உறுதிமொழியை கூற கூடியிருந்த தோழர்கள் திரும்பச் சொல்லி உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் முகில்ராசு, மாநகர செயலாளர் நீதிராசன், மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மதுரை மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளைசாமி, அகிலன் உள்ளிட்ட தோழர்கள் உள்பட 30 பேர் கலந்து கொண்டனர்.

கழகத் தோழர் சங்கீதா-தனபால் இணையரின் மகள் யாழினி பிறந்த நாள் ஏப்.14 ஆகும். அம்பேத்கர் சிலை அருகிலேயே கேக் வெட்டி கொண்டாடப் பட்டது.

பேராவூரணியில் : ஏப் 14. பேராவூரணியில் தமிழக மக்கள் புரட்சிக்கழகம் சார்பில் அம்பேத்கர்  125ஆவது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மாநில செயற்குழு உறுப்பினர் கே.வி.முனியன் தலைமையில், ஏனாதி சம்பத் மற்றும் ஆயர் த.ஜேம்ஸ் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் திராவிடர் விடுதலைக்கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம், தலைமையாசிரியர் வீர.சத்திரசேகரன், மெய்ச்சுடர் நா. வெங் கடேசன், மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தா.கலைச் செல்வன், ஒட்டங்காடு மூர்த்தி ஆகியோர் உரையாற்றினார். வீரக்குடி இராசா வரவேற்றுப் பேசினார்.

நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன், “அம்பேத்கரின் கொள்கைகள் இன்று புறந்தள்ளப்பட்டு மாநிலத்திலும், மத்தியிலும் மதவாதமும், ஜாதிய அரசியலும் முன்னிறுத்தப்படுகிறது.  மாநில அரசுகளின் சுயாட்சி உரிமைகளை மத்திய அரசிடம் அடகு வைக்கும் அரசியலைத் தான் ஆளுகிற ஆண்ட கட்சிகள் செய்து வருகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சி உறுப்பினராகவும், எதிர்க்கட்சி உறுப்பினராகவும் மட்டுமே செயல்படுகிறார்கள், மக்களுக்கான தொகுதிக் கான சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினராக செயல்படுவதில்லை. இடஒதுக்கீட்டை மையப்படுத்தி அரசியல் செய்து வரும் பா.ஜ.க. ஏழை இந்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று குரல் கொடுத்து வருகிறது. ஏழை இந்துக்கள் என்பவர்கள் யார் என்பதை அக்கட்சி விளக்கவேண்டும்.

தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டில், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட அனைத்து இந்து ஜாதிகளும் இடம் பெற்றிருக்கின்றன. அப்படி யிருக்கும்போது பாரதிய ஜனதா கட்சி ஏழை இந்துக்கள் என்று யாரைக் குறிப்பிடுகிறது? அதற்கு அக்கட்சி விளக்கமளிக்குமா? மதத்தின் பெயரால் அக்கட்சி மக்களுக்குள் பிரிவினையை உண்டாக்கு வதோடு, ஜாதியின் பெயரால் இந்து மதத்திற்குள்ளும் பிரிவினையை உண்டாக்கி வருகிறது.

ஜாதிய ஆணவக் கொலைகளை தடுத்து நிறுத்த தனிச் சட்டம் இயற்றப்பட வேண்டும். இந்தத் தேர்தலில் ஜாதிய மதவாத அமைப்புகளை எதிர் கொள்வதே நமது குறிக்கோளாகும்” என்றார். நிறைவாக ஆயில் மதியழகன் நன்றி கூறினார். விழாவில் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

தூத்துக்குடியில் : தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையம் அருகில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழ்நாடு மாணவர் கழக தூத்துக்குடி அமைப்பாளர் சூரங்குடி பிரபாகரன் மாலை அணிவித்தார். அதற்கு பிறகு தோழர்கள் ஜாதி ஒழிப்பு முழக்கங்களை விண்ணதிர முழங்கி மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் கழகத்தின் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு, மாவட்ட செயலாளர் ச.ரவி சங்கர், மாவட்ட அமைப்பாளர் பால்.அறிவழகன், மாவட்ட பொருளாளர் வீரப் பெருமாள், மாவட்ட து. தலைவர் பால்ராசு, மாவட்ட துணைச் செயலாளர் ச.கா.பாலசுப்பிரமணியன், தோழர்கள் கோ.அ.குமார், செல்லத்துரை மற்றும் பல தோழர்கள் கலந்து கொண்டனர்.

சங்கராபுரத்தில் : 14.4.2016 அன்று விழுப்புரம் மாவட்ட கழகம் சார்பில் அம்பேத்கர் 125ஆவது பிறந்த நாளில் சங்கராபுரத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கழகத்  தோழர்கள் மாலை அணிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சங்கராபுரம் ஒன்றிய செயலாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட பொருப் பாளர்கள் ச.கு. பெரியார் வெங்கட், செ. நாவாப் பிள்ளை, க. இராமர், மு.நாகராஜ், குப்புசாமி, இரா. முருகன், மா.குமார் உள்பட பல்வேறு பகுதியிலிருந்து தோழர்கள் பங்கேற்றனர். அதேபோன்று செஞ்சி நான்குமுனை சாலையில் அம்பேத்கர் சிலைக்கு சாக்ரடீசு மாலை அணிவித்தார். இந்நிகழ்வில் பல் வேறு அமைப்பைச் சார்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

மேட்டூரில் : திராவிடர் விடுதலைக் கழக சேலம் மேற்கு மாவட்டம் சார்பில் அம்பேத்கரின் 125ஆவது பிறந்த நாளை 14.4.16 காலை 10.00 மணியளவில் மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராசு தலைமையில் கழகத் தோழர்கள் மேட்டூர் அச்சங் காடு பகுதியில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னையில் : சென்னையில் 14.4.2016 அன்று காலை 9 மணியளவில் அடையாறிலுள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் உருவ சிலைக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. பிறகு இரு சக்கர வாகனத்தில் ஊர்வலமாக மந்தைவெளி வள்ளீஸ்வரன் தோட்டத்தில் அம்பேத் கர் படத்திற்கும், சுப்புராயன் சாலையிலுள்ள உருவ சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது. இறுதியாக வி.எம். தெருவில் அம்பேத்கர் படத்திற்கும் மாலை அணிவிக்கப்பட்டது. அம்பேத்கர் பிறந்தநாள் மகிழ்வாக, மயிலை பகுதி கழகம் சார்பாக பொது மக்களுக்கு லட்டுகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில் வழக்கறிஞர் துரை அருண், தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர், மாவட்ட செயலாளர் இரா. உமாபதி, மாவட்ட தலைவர் வேழ வேந்தன், காஞ்சி மாவட்ட செயலாளர் தினேசுகுமார், விழுப்புரம் அய்யனார், வடசென்னை மாவட்டத் தலைவர் ரவி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

Pin It