திராவிட இயக்கத்தையும், தந்தை பெரியாரையும் எப்படியாவது இழித்தும், பழித்தும் பேசிவிட வேண்டும் என்று விரும்புகின்றவர்கள் அதற்கான வாய்ப்புக்காகக் காத்துக் கிடக்கிறார்கள். இப்போது அவர்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. முல்லைப் பெரியாறு அணைச் சிக்கலும், அதனையயாட்டி எழுந்துள்ள தேவிகுளம், பீர்மேடு யாருக்குச் சொந்தம் என்னும் கேள்வியும், திராவிட இயக்கத்தின் மீது பழிபோடும் விதத்திலேயே கையாளப்படுகின்றது.
நம் தமிழ்த் தேசிய நண்பர்கள் இரண்டு விதத்தில் இதற்கு "வியாக்கியானம்' செய்கின்றனர். திராவிடம் என்று நாம் பேசிக்கொண்டிருப்பதால்தான், மலையாளிகளோடு சிக்கலைத் தீர்த்துக் கொள்ள முடியவில்லை என்கின்றனர். அடுத்ததாக, அன்றைக்கே தேவிகுளம், பீர்மேடு சிக்கலில் பெரியார் சரியாக நடந்து கொள்ளவில்லை என்றும், அனைத்துக் கட்சியினர் நடத்திய கூட்டத்தில் கூட, அவர் கலந்துகொள்ளவில்லை என்றும் கூறுகின்றனர்.
திராவிட இயக்கம் என்பதற்கும், ஆந்திர, கேரள, கர்நாடக உறவிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைப் பலமுறை, பல சான்றுகளின் அடிப்படையில் விளக்கியாயிற்று. பார்ப்பன எதிர்ப்புத் தமிழ் உணர்வே திராவிடம் ஆகின்றது என்பதைப் புரிய வைப்பதற்கு முயற்சிகள் பல எடுத்தாயிற்று. எனினும் சொன்னதையே அவர்கள் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். தூங்குகின்றவர்களைத்தான் எழுப்ப முடியும் என்பதை இப்போது நாம் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
இன்னொரு குற்றச்சாட்டிற்கு விளக்கமாக விடை சொல்ல வேண்டிய கடமை நமக்கு உள்ளது. அண்மையில் விடுதலை நாளேட்டில், திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் இது குறித்த தந்தை பெரியாரின் அறிக்கைகள் மூன்றினை எடுத்து வெளியிட்டிருக்கிறார். 1956 சனவரி 21, 25,26 ஆகிய நாள்களில் அந்த அறிக்கைகளைப் பெரியார் தந்திருக்கிறார். அவற்றுள் உள்ள செய்திகளைக் கவனமாகப் படித்தால் பல உண்மைகள் நமக்குப் புலப்படும்.
தேவிகுளம், பீர்மேடு தொடர்பாகப் பெரியாரும், ம.பொ.சி.யும் சந்தித்துப் பேசியுள்ளனர். இருவருக்கும் இடையில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உண்டு என்பதை நாம் அறிவோம். தமிழகம் முழுவதும் திராவிட இயக்க எதிர்ப்பு மாநாடுகளை 50களின் தொடக்கத்தில் நடத்தியவர் ம.பொ.சி. என்பதும் உலகறிந்த செய்தி. ஆனாலும் தமிழக நன்மை கருதி அவர் அழைத்த போது, அந்த அழைப்பை ஏற்றுப் பெரியார் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதன் முழு விவரத்தை சனவரி 21ஆம் நாள் அறிக்கையில் பெரியார் வெளியிட்டுள்ளார். அதன்படி, தேவிகுளம், பீர்மேட்டை மீட்பதற்கு முழு ஆதரவையும் திராவிடர் கழகம் வழங்கும் என்று அவர் கூறியுள்ளார். "எல்லைக் கமிசன் என்பது எல்லை வரையறுப்பதில் நமக்கு (தமிழர்களுக்கு) செய்துள்ள ஓர வஞ்சனையான காரியங்களைத் திருத்துதல்"என்பதை இருவரும் ஏற்றுள்ளனர். ஆனால் அத்தோடு நின்றுவிடாமல் மேலும் சில செய்திகளையும் வலியுறுத்த வேண்டும் என்றும், அதற்காகவே அனைத்துக் கட்சிகளினுடைய கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் பெரியார் கூற, சிலம்புச் செல்வர் அதனை ஏற்றிருக்கின்றார்.
பெரியார் முன்வைத்த வேறு சில சிக்கல்கள் எவை என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்தி மொழி ஆட்சி மொழியாக நீடிப்பதைத் தடுப்பது, இராணுவம் போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற ஆட்சியதிகார உரிமைகள் அனைத்தையும் தமிழ்நாடு பெற வேண்டும் எனக் கோருவது, மதராஸ் அல்லது சென்னை ராஜ்ஜியம் என்பதற்குப் பதிலாகத் தமிழ்நாட்டிற்குத் தமிழ்நாடு எனப் பெயரிட வேண்டும் என வலியுறுத்துவது ஆகியவை பெரியார் முன்மொழிந்த கோரிக்கைகளாகும். இவற்றோடு சேர்த்து தட்சிணப் பிரதேசத் திட்டத்தையும் நாம் உறுதியாக எதிர்க்க வேண்டும் என்கிறார் பெரியார்.
பெரியார் முன்வைத்துள்ள நான்கு கோரிக்கைகளையும் கவனமாகப் படித்தால், தமிழக வரலாற்றில் பல புதிய செய்திகளை அறிந்துகொள்ள முடியும்.
பெரியார் "தமிழ்நாடு தமிழருக்கே' என்னும் முழக்கத்தை முன்வைத்தவர். ஆனால், அனைத்துக் கட்சிகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் அதனை முன்னிறுத்தினால், பலருக்குச் சிக்கல் ஏற்படும், ஆதலால், "திராவிடர் கழகம், தமிழ்நாடு, யூனியனிலிருந்து பூர்ண சுயேச்சை உரிமையுடன் தனித்து இயங்க வேண்டும் என்பதாக முடிவு செய்து கொண்டிருந்த போதிலும், அந்த கொள்கைக்குப் பாதகம் இல்லாமலும், மேற்கண்ட வியங்களைப் பற்றிய கிளர்சியை முன்னிட்டு மற்ற ஸ்தாபனக்காரர்களுடைய ஒத்துழைப்பையும், நட்பையும் முன்னிட்டு", இராணுவம், போக்குவரத்து, வெளிநாடு உறவு தவிர்த்த மற்ற ஆட்சி அதிகார உரிமைகள் தமிழ்நாட்டுக்குக் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்னும் வாசகத்திற்கு இணங்கிப் போவதாக அந்த அறிக்கையிலேயே அவர் ஒரு விளக்கமும் கொடுத்துள்ளார்.
கூட்டு நடவடிக்கை என்று வரும்போது, எல்லோரும் ஏற்கத்தக்க மிகக்குறைந்த பொதுவான செயல்திட்டங்களை முன்வைக்க வேண்டும். அதற்கேற்ப இங்கே பெரியார் பிறருடன் இணங்கிப் போகும் தன்மையைக் காணமுடிகிறது. அதே வேளையில், குறிப்பிட்ட சில அதிகாரங்களை மட்டும் மத்திய அரசுக்கு அளித்துவிட்டு, எஞ்சியவைகளை மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்னும் தன்னுரிமைச் சிந்தனையையும் அன்றே பெரியார் வைத்துள்ளார். தமிழ்நாட்டில் தன்னுரிமைக் கோட்பாட்டைத் தாங்கள்தான் அறிமுகப்படுத்தியது போல இங்கு சிலர் கூறிக்கொண்டுள்ளனர். பழைய ஏடுகளைப் புரட்டும் போதுதான் உண்மை என்னவென்று உலகம் அறியும்.
இன்னொன்றையும் இங்கு நாம் கவனிக்க வேண்டியுள்ளது. திராவிட நாடு கேட்டதால்தான், தமிழ்த்தேசிய உணர்வே இங்கு மழுங்கிப் போய்விட்டது என்பதாக ஒரு திரிபுவாதம் இப்போது பரப்பப் படுகின்றது. ஆனால் ஏறத்தாழ திராவிட நாட்டிற்கு இணையான தட்சிணப் பிரதேசத் திட்டத்தைப் பெரியார் கடுமையாக எதிர்த்துள்ளார்.
1950களின் மத்தியில், தட்சிணப் பிரதேசத் திட்டம் என்னும் ஒன்றை இந்திய அரசு கொண்டுவந்தது. இந்தியாவை எட்டுப்பகுதிகளாகப் பிரிப்பதே அத்திட்டம். அதன்படி -
1.வங்காளம், பீகார், அசாம் 2.ஆந்திரா, ஒரிசா 3.குஜராத், ராஜஸ்தான் 4.தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் 5.மகாராட்டிரம் 6.மத்தியப் பிரதேசம் 7.உத்தரப்பிரதேசம் 8.பஞ்சாப் ஆகிய எட்டுப் பகுதிகள் உருவாக்கப்படும். இத்திட்டத்தை உள்துறை அமைச்சகத்தின் சார்பில் வல்லப பந்த் முன்மொழிந்தார்.
திராவிட நாடு கேட்ட பெரியார்தான், இதனைக் கடுமையாக எதிர்த்தார். பார்ப்பனீயத்தையும், சமற்கிருதத்தையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலை கொண்ட கன்னட, கேரளர்களோடு நாம் இணைய முடியாது என்றார். மலையாளிகளைப் பற்றி அவர் கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.
"ஏறக்குறைய பார்ப்பனக் குறும்பும், மலையாளக் குறும்பும் ஒன்றுதான். இரண்டிற்கும் ஒற்றுமை அதிகம். பார்ப்பானுக்குள்ள புத்தியயல்லாம் மலையாளிக்கும் உண்டு" என்று எழுதுகிறார் பெரியார்.
அது மட்டுமல்லாமல், "தட்சிணப் பிரதேசம் ஏற்படுவது என்பது தமிழர்களுக்கு வாழ்வா, சாவா என்பது போன்ற உயிர்ப் பிரச்சினையாகும். தட்சிணப் பிதேசம் ஏற்படுமானால், முன்பின் நடந்திராத கிளர்ச்சி செய்வதற்குத் தமிழ் மக்களை நெருக்குவதாகிவிடும்"என்கிறார் பெரியார். இவரைத்தான் தமிழ்த் தேசிய எதிரி என்று தமிழின எதிரிகள் கூறுகின்றனர். ஆயிரம் முறை கூறியுள்ள அதே சொற்களை இங்கு மீண்டும் ஒரு முறை கூற வேண்டியுள்ளது. பார்ப்பன எதிர்ப்புத் தமிழுணர்வுதான் "திராவிடம்'என்று இங்கு அறியப்பட்டதேயல்லாமல், கன்னட, கேரள, ஆந்திர நிலத்தோடு தமிழகத்தை இணைப்பது திராவிட இயக்கத்தின் நோக்கமன்று.
எல்லாம் சரி, தேவிகுளம், பீர்மேடு பற்றிய அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் ஏன் பெரியார் கலந்து கொள்ளவில்லை என்ற கேள்வி இப்போதும் கேட்கப்படுகின்றது.
அது குறித்து உண்மைகளையும், அதற்கு ம.பொ.சி.தான் காரணம் என்பதையும் பெரியாரின் அறிக்கைகள் தெளிவுபடுத்துகின்றன.
பெரியாரும், ம.பொ.சி.யும் பேசி எடுத்த முடிவுகளின்படி, பெரியார் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் கூட்டத்தில் முன்வைப்பது என்றும், அனைத்துக் கட்சிகளுக்கான அழைப்பு மடலில், ம.பொ.சி., பெரியார், அந்தோணிப்பிள்ளை, சுயம்பிரகாசம் (திராவிட பார்லிமென்டரி கட்சித் தலைவர்), பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அல்லது பி.டி.ராஜன் ஆகிய ஐவர் கையயாப்பங்களிட்டு அனுப்புவது என்றும் முடிவானது. அதனைத் தொலைபேசி மூலமும், கடிதம் மூலமும் ம.பொ.சி.யிடம் பெரியார் மறுஉறுதி செய்தார்.
எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்ட ம.பொ.சி., இறுதியில் வேறுவிதமாகச் செயல்பட்டார். அனைத்துக் கோரிக்கைகளையும் கைவிட்டுவிட்டு, பீர்மேடு ஒன்றை மட்டுமே அழைப்பில் குறிப்பிட்டதோடு, தான் ஒருவர் மட்டுமே கையயாப்பமிட்டு அனைவருக்கும் கடிதங்களை அனுப்பி வைத்தார். அதனால்தான் தந்தை பெரியார்,
"இது சிறிதும் நேர்மை அற்ற காரியம் என்பது எனது கருத்து. இப்படிப்பட்டவர்களுடன் நான் எப்படி இவ்வளவு பெரிய காரியத்தில் கலந்து மக்களை ஈடுபடச் செய்ய முடியும்? ஆதலால் அந்தக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியவில்லை என்பதை விசனத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தன் நிலையைத் தெளிவுபடுத்தினார்.
பெரியாரின் நிலைப்பாடு எவ்வளவு நேர்மையானது என்பதை இதன் மூலம் நாம் அறியலாம்.
தேவிகுளம் - பீர்மேடு சிக்கலைப் பொறுத்தவரையில் அவர் உறுதியாக இருந்தார். அதற்காக எந்த நிலையிலும் போராட அவர் தயாராக இருந்தார்.
"இன்று யூனியன் மத்திய அரசாங்கத்தின் நடத்தை நாளுக்கு நாள் தமிழர்களை - தமிழ்நாட்டை - அழுத்தி வடநாட்டுச் சுரண்டலுக்கும், ஆதிக்கத்திற்கும் அடிமையாக்கும் காரியத்தில் முனைந்திருக்கிறது.
அடிமை வாழ்வை விட, எதிர்த்து அழிந்து போகும் வாழ்வே மேலானது"
-இதுதான் பெரியாரின் கூற்று. இதுதான் திராவிட இயக்கத்தின் தமிழினப் பற்று.