supreme courtபாபர் மசூதி விவகாரம் தொடர்பான அயோத்யா வழக்கில் வழங்கப்பட்டுள்ள ‘வரலாற்றுச் சிறப்புமிக்க’ தீர்ப்புடன் ஓர் இணைப்பும் சேர்க்கப்பட்டுள்ளது. அதை எழுதிய நீதிபதியின் பெயர் குறிப்பிடப் படவில்லை. பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்பது தொடர்பான வழக்கு அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தபோது, அந்த நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்ட சாட்சியங்கள் உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்பட்டன. அவற்றில் உச்ச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்புக்காக ஏற்றுக் கொண்ட சாட்சியங்களில் ஒன்று ராஜிந்தர் சிங் என்ற சீக்கியர் கூறியதாகும்.

“சீக்கிய வழிபாட்டு மரபு பற்றிய மத, பண்பாட்டு, வரலாற்று நூல்கள் பற்றிய ஆய்வில் அக்கறை கொண்டவர்” என்றும், “சீக்கியர்களுக்கு என்றேயான வழிபாட்டு முறை, அவர்களது வரலாறு ஆகியன பற்றிய பல புத்தகங்களிலிருந்து மேற்கோள் காட்டியவர்” என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அவரைப் பற்றிக் கூறுகிறது. இப்படிக் கூறுகையில் உச்ச நீதிமன்றம் ‘Sikh cult’ என்ற சொற்களைப் பயன்படுத்தியுள்ளதற்குப் பல சீக்கிய மதத் தலைவர்களும் வரலாற்று அறிஞர்களும், வழக்குரைஞர்களும் கடும் ஆட்சேபணை தெரிவித்துள்ளனர் என்று ‘தி ஒயர்’ டிஜிட்டல் ஏட்டில் 13.11.2019இல் வெளிவந்துள்ள கட்டுரை ஒன்று கூறுகிறது (Why Sikhs Are Angry With the Ayodhya Judgment).

ஏனெனில் ‘cult’ என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, “பெரும்பாலும் ஒன்றுகூடி வாழ்கின்ற, அதீதமானதும் விநோதமானதுமான நம்பிக்கைகள் என்று பலரால் கருதப் படுகின்றவற்றைக் கொண்டுள்ள ஒரு மதக் குழு” என்று பொருள் என கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதி கூறுகிறது. “வழக்கத்துக்கு மாறானது, போலியானது என்று கருதப் படக்கூடிய ஒரு மதம்” என்று மிரியம் வெப்ஸ்டர் அகராதி கூறுகிறது. ஆகவே, தங்கள் மதத்தை ‘cult’ என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தவறாகவோ, கவனக் குறைவாகவோ பயன்படுத்தியுள்ளதை சீக்கிய சமுதாயத்தினர் ஆட்சேபணைக்கு உரியதாகக் கருதுகின்றனர்.

பாபர் மசூதி தொடர்பாக இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே இருந்த தாவாவில் தங்கள் மதத்தை வம்புக்கு இழுத்திருக்கக் கூடாது என்று கூறும் அவர்கள், மேற்சொன்ன ராஜிந்தர் சிங், 1510-11இல் குருநானக், ‘ராம ஜென்ம பூமிக்கு’ தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார் என்று தனது சாட்சியத்தில் கூறியதை எந்த ஆட்சேபணையும் இல்லாமலும் சீக்கிய மதத் தலைவர்களையோ, சீக்கிய அறிஞர்களையோ கலந்தாலோசிக்காமலும் உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டதையும் அவர்கள் விமர்சித்துள்ளனர். சிலை வழிபாட்டிலோ சடங்காச்சாரங்களிலோ நம்பிக்கை கொண்டிராத குருநானக் அயோத்திக்கோ, மெக்காவுக்கோ, வேறு எந்த இடத்துக்கோ சென்றிருந்தாலும் உருவம் இல்லாதவரும், எல்லோருக்கும் பொதுவானவருமே கடவுள் என்பதை உபதேசிக்கவே சென்றிருப்பார் என்றும், தரிசனம் செய்வதற்காக அவர் ராம ஜென்ம பூமிக்குச் சென்றார் என்பது அப்பட்டமான வரலாற்றுத் திரிபு என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல், இன்றைய உத்தரப் பிரதேசத்தில் இருப்பதும் முன்பு அவத் என்றழைக்கப் பட்டதுமான சிற்றரசைச் சேர்ந்த காவல் துறை அதிகாரி ஒருவர் கூறியதாகச் சொல்லப் படுவதையும் உச்ச நீதிமன்றம் இந்துக்களுக்கு சார்பான சாட்சியமாக எடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த அதிகாரி, சீக்கியர்களில் நிஹாங் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ராம ஜென்ம பூமியில் நெருப்பை வளர்த்து பூஜை செய்ததாகக் கூறியுள்ளார். சீக்கிய மதத்துக்கு விரோதமான இந்தக் காரியங்களை ஒரு நிஹாங் சீக்கியர் ஒருபோதும் செய்திருக்க மாட்டார் என்றும், இப்படிப்பட்ட சாட்சியத்தை உச்ச நீதிமன்றம் எந்தப் பரிசீலனையுமின்றி ஏற்றுக் கொண்டது தவறு என்றும் சீக்கிய மதத் தலைவர்களும் அறிஞர்களும் கூறியுள்ளனர்.

மேற்சொன்ன இரண்டு சாட்சியங்களையும் ‘தயாரித்தவர்கள்’ சங் பரிவாரத்தினர் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

மத நம்பிக்கை என்பது பொதுவாக அந்தந்த மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் புனித நூல்கள் என்று கருதப் படுவனவற்றையும், அந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சமயச் சான்றோர்களால் வகுக்கப்பட்டு, அந்த மதத்தைப் பின்பற்றுபவர்களால் குறைந்தபட்சம் கோட்பாட்டளவிலேனும் கடைப்பிடிக்கப்படச் செய்யப் படுவனவற்றையும் அடிப்படையாகக் கொண்டவை. இந்தியாவில் சீக்கியர்களுக்கு குரு கிரந்தம், பார்சிகளுக்கு அவெஸ்தா, கிறிஸ்தவர்களுக்கு விவிலியம், முஸ்லிம்களுக்கு குரான் என்று புனித நூல்கள் உள்ளன. ஆனால், இந்துக்களுக்கு அப்படிப்பட்ட புனித நூல் ஏதும் இல்லை. ‘பகவத் கீதை’யை இந்துக்கள் எல்லோருக்குமான புனித நூலாக்குவதற்கான முயற்சியை சங் பரிவாரம் மேற்கொண்டுள்ளது என்றாலும், இதுவரை அது பலிக்கவில்லை.

மேலும், அதிலுள்ள அறநெறிகளைப் பின்பற்றினால், ஒருவன் சகோதரக் கொலையைச் செய்வதும்கூட நியாயப்படுத்தப் பட்டுவிடும். ஆனால், அண்ணல் அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல, கொலை செய்தவன் எவனாவது நீதிமன்றத்தில் கிருஷ்ணன் கூறியதை மேற்கோள் காட்டி, “நான் அழித்தது உடலைத் தானே அன்றி ஆன்மாவை அல்ல” என்று கூறினால் அதை நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளாது. அதனால்தான் சங் பரிவாரத்தினரிடம் இல்லாத, இருக்கவே முடியாத தமிழர்களின் அறநூலான ‘திருக்குறளை’ சுவீகாரம் எடுத்துக் கொள்ள அவர்கள் தவியாய்த் தவிக்கின்றனர்.

இந்துக்கள் என்று முதலில் முஸ்லிம்களாலும் பின்னர் ஆங்கிலேயர்களாலும் வகைப் படுத்தப்பட்டவர்களும், பல்வேறு சாதிகளையும் பல்வேறு தெய்வங்களையும் பல்வேறு சமயச் சடங்குகளையும், ஆச்சாரங்களையும் கடைப் பிடிப்பவர்களுமான மக்களுக்கென்று ‘இந்துச் சட்டத் தொகுப்பு’ என்பதே ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில்தான் பார்ப்பனர்கள் போன்ற இரு பிறப்பாளர்களின் துணையோடு உருவாக்கப் பட்டது. பின்னர் இந்து சமுதாயத்திலுள்ள பிற்போக்குத்தனமான நடைமுறைகள், பெண்ணடிமைத்தனம் முதலியவற்றைப் போக்குவதற்காக இந்திய அரசமைப்பு அவையில் அம்பேத்கர் கொண்டு வந்த இந்து சட்டத் தொகுப்பு மசோதா அந்த அவையிலிருந்த பிற்போக்காளர்களால் எதிர்க்கப்பட்டதால் நிறைவேற்றப்படவில்லை. எனினும் பின்னர் அது பகுதி பகுதியாக இந்திய நாடாளுமன்றத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஆனால், ‘பகவத் கீதை’யை இந்துக்களின் பொது புனித நூலாக்குவதற்கு இந்திய நாடாளுமன்றத்தில் முயற்சி செய்யப்படவில்லை.

உலகில் பொதுவாக, ‘புனித நூல்’ என்பது ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் நம்பிக்கைக்கு அடிப்படையாக இருப்பதால், அப்படிப்பட்ட ‘புனித நூல்’ என்பது இந்துக்களுக்கு இல்லாத குறை போக்கப்பட வேண்டும் என்பதற்காகவோ என்னவோ, உச்ச நீதிமன்றத்தால் இப்போது புராணங்களும் தர்மசாஸ்திரங்களும் இந்துக்களின் ‘நம்பிக்கை’களுக்கு ஆதாரமாகக் கொள்ளப்படுகின்றன என்று கருதலாம்.

வைதீகம் அழிந்த அறிவுக் கூடங்கள்

இப்படிப்பட்ட சூழலில் வரலாற்றை எழுதுவதற்கோ, அறிவியல், பண்பாடு ஆகியவற்றைப் பற்றி விளக்கவோ ‘நம்பிக்கை’ ஒன்றே போதுமானது என்ற நிலை வலுப்பட்டு வருகிறது. மறுக்கமுடியாத வரலாற்றுச் சான்றுகளைக் கொண்டவற்றையோ, ஐம்புலன்களுக்குத் தெளிவாகப் புலப்படுகின்றவற்றையோ, பகுத்தறிவால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படக் கூடியனவற்றையோ நிராகரித்துவிட்டு, ‘நம்பிக்கை’யின் அடிப்படையில் மட்டுமே கூறப்படுவனவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிர்பந்தம் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

எடுத்துக்காட்டாக, பண்டைய இந்தியாவில் உயர் கல்வி, அறிவு ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான முக்கிய மையங்களாக இருந்தவை என்று இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள வரலாற்று அறிஞர்களால் (இவர்கள் எல்லோரும் மார்க்ஸிஸ்டுகளோ, முஸ்லிம்களோ அல்லர்) கருதப்படுபவை பீகாரிலுள்ள நளந்தாவிலும், ஒடிசாவிலுள்ள புஷ்பகிரியிலும், தற்போதைய பாகிஸ்தானிலுள்ள தக்ஷசீலாவிலும் இருந்த பல்கலைக்கழகங்கள். இவை யாவும் பௌத்த மையங்களாகும்.

கி.பி.5 ஆம் நூற்றாண்டிலிருந்து 12 ஆம் நூற்றாண்டு வரை நீடித்த நளந்தா பல்கலைக் கழகம், இன்றைய நவீன பல்கலைக் கழகங்களைப் போல உணவு, உறைவிட வசதிகளைக் கொண்டிருந்தது. பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களையும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆசிரியர்களையும் கொண்டிருந்த அந்தப் பல்கலைக் கழகத்தில் ஏராளமான வெளிநாட்டு மாணவர்களும் இருந்தனர். கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் பல பாகங்களில் பயணம் செய்தவரும், அறிஞரும் மொழி பெயர்ப்பாளருமான ஹுவென் ஸாங், நளந்தா பல்கலைக் கழகம் அறிவுக் கோவிலாக மட்டுமின்றி, ‘சகிப்புத் தன்மையின், மத சகிப்புத் தன்மையின் உச்ச நிலையைக் கொண்டிருந்தது’ என்பதைப் பதிவு செய்துள்ளார். பன்மைத்துவம் கொண்டிருந்த அப்பல்கலைக் கழகம், அறிவுக்கு - ஒரு தனிப்பட்ட நபரால் அல்ல - பலர் ஒன்றுசேர்ந்து உருவாக்கும் அறிவுக்கு முதன்மை கொடுத்ததால்தான் அண்டை நாடுகள் பலவற்றைச் சேர்ந்த மாணவர்கள் அந்தப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தனர். வைதீகப் பார்ப்பனியம் வளர்ந்து வலுமிக்கதாகிய போதுதான், அந்தப் பல்கலைக் கழகங்களெல்லாம் அழிக்கப்பட்டன.

மத்திய அமைச்சரின் பொய்யுரை

ஆனால், சகிப்புணர்வு சிறிதுமற்ற, வரலாற்றை திரிக்கின்ற, இந்தியாவின் பன்மைத்துவப் பண்பாட்டு மரபைத் துடைத்தெறிகிற, ‘நினைவுக்கெட்டாத பழங்காலத்திலிருந்தே’ இந்து (பார்ப்பன) நாகரிகம்தான் இந்தியாவில் கோலோச்சி வருவதாகச் சொல்லி வருகின்ற சங் பரிவாரத்தைச் சேர்ந்த இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் புதிய கயிறொன்றைத் திரித்துள்ளார். அதாவது, இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே மிகப் பழமை வாய்ந்த பல்கலைக் கழகம், உத்தரகாண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்திலுள்ள பத்ரிநாத்தில் இருந்ததாகவும் அது ‘பத்ரிஸ்’ பல்கலைக் கழகம் என்று அழைக்கப்பட்டு வந்ததாகவும், அண்மையில் டேராடூன் நகரில் நிகழ்த்திய உரையொன்றில் கூறியுள்ளார். அப்படிப்பட்ட பல்கலைக் கழகம் இருந்ததற்கான எந்தச் சான்றும் இல்லை. ஆனால், அமைச்சரோ அதன் பழம் புகழ் மீண்டும் நிலைநாட்டப்படும் என்று கூறியுள்ளார். மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திலிருந்து இதற்காக நிதி ஒதுக்கப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை!

ஏனென்றால், ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் போன்ற ‘வரலாற்று அறிஞர்’களுக்கு நரேந்திர மோடி, அமித் ஷா போன்ற பேராசிரியர்கள் இருக்கிறார்கள். 2014ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின்போது நரேந்திர மோடி, அந்நியப் படையெடுப்பாளனாகிய மகா அலெக்ஸாந்தர் பீகார் மண்ணில் தோற்கடிக்கப் பட்டதாகக் கூறினார். உலகிலுள்ள பல வரலாற்று அறிஞர்கள் திரட்டியுள்ள வரலாற்றுச் சான்றுகளின்படி, மாஸிடோனியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டர் ஒருபோதும் பீகாருக்கு அருகில்கூட வந்ததில்லை. மோடி, இதோடு நிற்கவில்லை. இப்போது பாகிஸ்தானிலுள்ள தக்ஷசீலாவையும் பீகாரிலுள்ள நளந்தாவையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பினார். மேலும், கி.பி. 3-4ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சந்திரகுப்த மௌரியரை ‘குப்த’ வம்ச ஆட்சியாளர் என்றும் கூறினார். இவை யெல்லாம், திருக்குறளையும் புறநானூற்றையும் கரைத்துக் குடித்துள்ள மோடி ‘வாய் தவறிக் கூறியவை’ என்று வைத்துக் கொண்டாலும், மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரோ, அதுபோன்ற சந்தேகத்துக்கு இடமே தரவில்லை. அவர் கூறியது தவறு என்று சுட்டிக் காட்டப்பட்ட போதிலும், அந்தத் தவற்றை அவர் இதுவரை ஒப்புக் கொள்ளவே இல்லை. உலகிலேயே மிகப் பழைமையான ‘பத்ரிஸ்’ என்ற பல்கலைக் கழகம் பத்ரிநாத்தில் இருந்தது என்று அவர் சொல்வதற்குக் காரணம், இந்துக்களின் புனிதத் தலங்களிலொன்றாக பத்ரிநாத் இருப்பதும், இந்துகளின் மத நம்பிக்கையைப் பயன்படுத்தி பொய்யை மெய்யாக்க முயலுவதும்தான்.

சங் பரிவாரத்தினருக்கு பத்ரிநாத் மிக முக்கிய இடம். பௌத்தக் கருத்துகளை அப்படியே நகல் செய்து, ஆனால் அவற்றுக்கு முற்றிலும் வேறான விளக்கத்தைக் கொடுத்து அவற்றை முற்றிலுமாக ஒழித்துக் கட்டுகிற அத்வைத வேதாந்தத்தைத் தோற்றுவித்து வருணாசிரம தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டிய ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட புண்ணியத் தலம்தான் பத்ரிநாத். ஆக, இந்திய வரலாறு முழுவதையும் பார்ப்பனிய சாயலில் வார்த்தெடுக்கும் சங் பரிவாரத்தின் முயற்சிகளிலொன்றுதான் ‘பத்ரிஸ்’ பற்றிய ‘கண்டுபிடிப்பு’.

மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் போக்ரியால் 44 புத்தகங்களை எழுதியுள்ள அறிஞராக சங் பரிவாரத்தால் போற்றப்படுகிறவர். ‘சோதிட சாஸ்திரம்’ உலகிலேயே மிக உயர்ந்த ‘அறிவியல்’ என்றும், வெட்டப்பட்ட தலையை இன்னொரு உடலில் பொருத்தக் கூடிய மருத்துவ, அறிவியல் அறிவு பழங்கால இந்தியர்களிடம் (இந்துக்களிடம்) இருந்தது என்பதற்கான சான்றே விநாயகர் என்றும் நாடாளுமன்றத்தில் பேசியவர் இவர்தான். பண்டைக்கால இந்தியர்கள் அணு ஆயுத சோதனைகளை நடத்தினார்கள் என்ற ‘நம்பிக்கை’ கொண்டிருப்பவர் இவர்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தில் அறிவியல், தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த ஹர்ஷ்வர்தன், ஐன்ஸ்டினின் சார்புநிலைக் கோட்பாட்டைவிட (E = MC squared) மிக உயர்ந்த அறிவியல் கோட்பாடுகளை வேதங்கள் கொண்டிருக்கின்றன என்று உலகப் புகழ் பெற்ற அறிவியல் அறிஞர் ஸ்டீஃபன் ஹாக்கிங்ஸ் கூறினார் என்ற அப்பட்டமான பொய்யை சென்ற ஆண்டு நடந்த இந்திய அறிவியலாளர்கள் மாநாட்டில் கூறினார். இப்போது சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள அவர், அண்மையில் டெல்லி நகரம் கடுமையான காற்று மாசால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தபோது, மக்கள் எல்லோரும் கேரட் சாப்பிட்டால் எல்லாம் குணமாகி விடும் என்ற ‘மருத்துவ ஆலோசனை’ வழங்கினார்.

மக்கள் காற்று மாசால் அவதிப்பட்டிருந்ததைப் போக்குவதற்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான உத்தரவுகளைப் பிறப்பித்துக் கொண்டிருந்தபோது உத்தரப் பிரதேச அமைச்சர் சுனில் பராலா, மழை பொழியுமாறு இந்திரனை வேண்டிக் கொள்ளும் யாகங்களை நடத்த வேண்டும் என்ற ‘மேலான யோசனை’யைத் தெரிவித்தார். லக்னோ நகரிலிருந்து 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஓரிடத்தில் இந்து அமைப்பொன்றைச் சேர்ந்தவர்கள் ‘மகா யக்ஞம்’ ஒன்றை நடத்தி, 50 டன் மாமரக் கட்டைகளையும் ஏராளமான பசு நெய்யையும் எரித்தனர்.

திரிபுரா மாநில முதலமைச்சரோ (இவரும் ஒரு ‘சங்கி’தான்) இன்னும் ஒருபடி முன் சென்று மகாபாரதக் காலத்திலேயே இன்டர்நெட்டும் செயற்கைக்கோள் மூலம் செய்யப்படும் தகவல் தொடர்பும் இருந்ததாகக் கூறினார்.

மாலேகான் குண்டு வெடிப்பில் குற்றம் சாட்டப்பட்டு, மோடி அரசாங்கத்தின் தயவினால் ‘குற்றமற்றவராக்கப் பட்ட’வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ‘பெண் சாமியார்’ ப்ரக்ஞ்யா சிங் தாகூர், அண்மையில் சில பாஜக தலைவர்கள் இறந்து போனதற்குக் காரணம் எதிர்க் கட்சிகளிடம் ‘கொல்லும் சக்தி’ ( மாரக் சக்தி) இருப்பதுதான் என்றார்.

‘நம்பிக்கை’ இருந்தாலே போதும் - “இந்தியனின் நோக்குநிலையிலிருந்து’ இந்திய வரலாறு, இந்திய அறிவியல் முதற்கொண்டு உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் வரை எதையும் எழுதலாம்; எழுதவும் வேண்டும். இதுதான் அமித் ஷா பெனாரஸ் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை மூலம் இந்திய மக்களுக்கு விடுத்துள்ள செய்தி.

கட்டுரையாளர் குறிப்பு :

எஸ்.வி.ராஜதுரை (எஸ்.வி.ஆர்.) மார்க்சியச் சிந்தனையாளரும், எழுத்தாளரும் ஆவார். மார்க்சியம், பெரியாரியம், அம்பேத்கரியம் தமிழக அரசியல் பற்றிய பல நூல்களையும் கட்டுரைகளையும் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ளார். சிறுகதைகளையும் கவிதைகளையும் தமிழாக்கம் செய்துள்ளார். மனித உரிமை இயக்கத்தில் களப் பணி ஆற்றியவர். பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் பெரியார் உயர் ஆய்வு மையத்தின் தலைவராகப் பணிபுரிந்தவர். The Communist Manifesto என்னும் புகழ்பெற்ற நூலை ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ என்னும் தலைப்பில் தமிழாக்கம் செய்திருக்கிறார். வ.கீதாவுடன் இணைந்து மார்க்சியம், பெரியாரியம் சார்ந்த முக்கியமான நூல்களை எழுதியுள்ளார்.

Pin It