பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து பா.ஜ.க. ஆட்சி வரை (2)

கூட்டாட்சித் தத்துவத்தைக் குலைத்து ஒற்றை ஆட்சியை நோக்கிச் செல்லும் ஆபத்துகள் அரங்கேறி வருகின்றன. சட்டத்தில் இடம் பெற்றுள்ள ‘ஒன்றியம்’ என்ற சொற்றொடரே மனுவாதிகளுக்கு கசக்கிறது. இந்தப் பின்னணியில் பிரிட்டிஷ் இந்தியா தொடங்கி மோடி ஆட்சி வரை நடந்த மாநில உரிமைகள் தொடர்பான சுருக்கமான வரலாற்றுப் பதிவே இக்கட்டுரை.

முந்தைய பகுதி: தமிழ்நாடு இழந்த உரிமைகள்: ஒரு சுருக்கமான வரலாறு (1)

Thomas Babington Macaulay‘சுதந்திர இந்தியா’ மாநிலங்கள் வருவாயையும் உரிமைகளைப் பறித்து வருகிறது. ஆனால் ‘பிரிட்டிஷ் இந்தியா’ மாநிலங்களுக்கு வருவாய் தரும் துறைகளை வழங்கியது. மோடியின் பார்ப்பன ‘இந்தியா’, மாநிலங்களையே ஒழித்து வருகிறது. பிரிட்டிஷ் இந்தியாவில் 1807இல் கவர்னர் ஜெனரலாக இருந்த லிட்டன் பிரபு மாகாணங்களுக்கு வருவாய் தரும் நில வரி, எக்ஸைஸ், முத்திரை ஸ்டாம்பு போன்ற வருவாய் தரும் துறைகளை ஒதுக்கியதைக் கடந்த தொடரில் பார்த்தோம்.

அதற்குப் பிறகு அடுத்த மாற்றம் வந்தது. மாகாண அரசுகள் துறைகளில் செலவிட்டதுபோக எஞ்சிய தொகையை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசிடம் ஒப்படைத்து விட வேண்டும். இதனால் சிக்கனமாக செலவிட்டு வருவாயிலிருந்து சேமித்த தொகையை மத்திய அரசு பறித்துக் கொள்வதிலிருந்து தப்பிக்க, மாகாண அரசுகள் 5 ஆண்டுகள் முடியும் காலத்தில் இறுதிப் பகுதியில் தொகை முழுவதையும் செலவிட்டன. இதனால் மத்திய-மாகாண அரசுகளுக் கிடையே மோதல்கள் உருவாயின.

இந்தப் பின்னணியில் இங்கிலாந்தில் இந்தியா வுக்கான அமைச்சராக வந்த மார்பி, மத்தியில் அதிகாரக் குவிப்பால் நிர்வாகம் முடங்கி நிற்பதை உணர்ந்து, அது குறித்து பரிசீலிக்க ஒரு ஆணையத்தை நியமித்தார். அதிகாரங்களைப் பரவலாக்குவது குறித்து ஆராய 1907இல் நியமிக்கப்பட்ட அந்த ஆணையத்தின் பெயர் ‘ராயல் கமிஷன்’. கீழ்க்கண்ட கருத்துகளை பரிந்துரையாக முன் வைத்தது அந்த ஆணையம்.

1) இந்தியா போன்ற ஒரு பெரிய துணைக் கண்டத்தை ஒற்றைத் தலைநகரத்திலிருந்து நிர்வகிக்க முடியாது.

2) ஒவ்வொரு மாகாணமும் தனித்தனி மொழி, பண்பாடு, பழக்கவழக்கம் கொண்டவையாகவும் ஒரே சீரான முன்னேற்றம் இல்லாமலும் இருக்கின்றன.

3) மக்களிடம் கூடுதல் பொறுப்புகளை ஒப்படைத்து - பொது விவகாரங்களில் அவர்களை ஈடுபடுத்த வேண்டும்

என்ற முக்கிய பரிந்துரைகளை வழங்கியது. பரிந்துரை செய்யப்பட்டு அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 1909இல் சில சீர்திருத்தங்கள் சட்டமாக்கப் பட்டன. அதற்குப் பெயர்தான் மிண்டோ மார்லி சீர்திருத்தம். (மிண்டோ - இந்தியாவின் வைஸ்ராய் (கவர்னர் ஜெனரல்). மார்லி இங்கிலாந்தில் இருந்த இந்தியாவுக்கான அமைச்சர்)

மாநிலங்களின் தனித்தன்மையை அங்கீகரித்தது பிரிட்டிஷ் ஆட்சி; தனித்தன்மையை ஒழித்து பார்ப்பன இந்தியாவாக்குகிறது, இந்துத்துவ ஒன்றிய ஆட்சி.

சரி; மிண்டோ மார்லி சீர்திருத்தங்கள் வழியாகக் கிடைத்த உரிமைகள் என்ன?

  • மாகாண சட்டமன்றங்களுக்கு இந்திய உறுப்பினர்களை தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கும் உரிமை முதன்முதலாகக் கிடைத்தது. (அப்போது நடந்த தேர்தலில் அனைவருக்கும் வாக்குரிமை இல்லை. நிலம் உள்ளோர், படித்தவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே வாக்குரிமை)
  • முதன்முதலாக இஸ்லாமியர்களுக்குத் தான் 25 சதவீத தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. முஸ்லீம் பிரதிநிதிகளை முஸ்லீம்கள் மட்டுமே வாக்களித்து தேர்ந்தெடுக்க தனித் தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்தியாவில் தனித் தொகுதி உரிமை முதலில் வழங்கப்பட்டதே இஸ்லாமியர் களுக்குத் தான். பிறகு சீக்கியர், பார்ப்பனரல்லாதார் (முகமதியர் அல்லாதார் என்பது பெயர்) ஆதி திராவிடர் தொகுதிகள் வந்தன.
  • ஆளுநர்களின் நிர்வாகக் குழு விரிவாக்கப்பட்டு இந்தியர்களுக்கும் இடமளிக்கப்பட்டது.

மாகாண சட்டசபையில் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய பிரதிநிதிகள் இடம் பெற்றதால் மத்திய அரசைத் தட்டிக் கேட்கும் துணிவைப் பெற்றனர். அதன் காரணமாக மாகாணங்கள் தன்னெழுச்சி உணர்வு பெற்றன.

இப்போது நாம் வாழும் நாட்டுக்கு ‘தமிழ்நாடு’ என்ற பெயர் முதல்வராக அண்ணா இருந்தபோது சட்ட ஏற்புடன் சூட்டிய நமக்கான அடையாளம். அப்போது சுதந்திரா கட்சியிலிருந்த இராஜகோபாலாச்சாரி, ‘தமிழ்நாடு’ என்ற பெயரை ‘தமிழ்நாட்’(Tamil Nad) என்றே பெயர் சூட்ட வேண்டும் என்று கோரிய போது அண்ணா ஏற்க மறுத்து விட்டார். ‘நாடு’ என்ற சொல் கட்டாயம் இடம் பெறுவதில் உறுதி காட்டினார். அதற்கு முன் ‘சென்னை மாநிலம்’ - அதற்கு முன் ‘சென்னை மாகாணம்’ அல்லது ‘சென்னை இராஜதானி’ என்ற பெயரையும், அதற்கு முன் ‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்ற பெயரையும் தாங்கி நின்றது. 1800களில் பெரும்பாலான ஆவணங்களில் ‘புனித ஜார்ஜ் கோட்டை மாகாணம்’ என்றே சென்னை மாகாணம் பதியப்பட்டிருக்கிறது. ஆம்; இன்று தலைமைச் செயலகம் இயங்கும் அதே இடம் தான். 1700 முதல் 75 ஆண்டுகாலம் இந்த புனித ஜார்ஜ் கோட்டையே ஆங்கிலேயர்களின் தலைநகரமாக இருந்தது. சென்னைக்குப் பிறகு தான் கல்கத்தா தலைநகரமானது. சென்னைக் கோட்டைக்குள் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்தான் அன்றைய ஆளுநர்களின் அலுவலகமும் வீடும். இங்கே 1910இல் சட்டமன்ற மண்டபம் கட்டப் பட்டது.

நன்றி கூறப்பட வேண்டிய 3 அதிகாரிகள்

இந்தியாவை சுரண்டுவதற்குவந்தவர்கள்தான் பிரிட்டிஷ்காரர் என்பது உண்மைதான். ஆனால் வெகு மக்களை சுரண்டிக் கொழுத்தப் பார்ப்பனர்களைவிட அவர்களிடம் மனிதாபிமானம் இருந்தது என்பதை மறுக்க முடியாது. இது குறித்து மூன்று பிரிட்டிஷ் அதிகாரிகளை நாம் நன்றியுடன் நினைவு கூர வேண்டும்.

மெக்காலே என்ற பிரிட்டிஷ் அதிகாரிதான் சட்டமன்றம் என்ற அமைப்பை உருவாக்க வேண்டும் என்று முதலில் சிந்தித்தவர். அவர் உருவாக்கித் தந்த ‘கரு’தான் சட்டமன்றம். கல்கத்தா- மாகாண தலைமை யகத்தில் கவர்னர் ஜெனரலாக பெண்டிங் இருந்த போது அவரது நிர்வாகக் குழுவில் சட்ட அறிஞர் என்ற அடிப்படையில் இடம் பெற்றவர்தான் மெக்காலே.

சென்னை-பம்பாய் மாகாணங்களின் அதிகாரங்களைப் பிடுங்கி கல்கத்தா மாகாண ஆட்சியிடம் சரணடைய வைக்கும் சட்டம் ஒன்று 1833இல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வந்தது. அந்தப் பிரச்சினையை பிரிட்டன் நாடாளுமன்றம் ஆய்வுக்கு எடுத்த போது அதை உரத்த குரலில் எதிர்த்தவர் தான் மெக்காலே.

“நம்மில் யாரும் எவ்வளவு பெரிய ஜனநாயக வாதியாக இருந்தாலும், எவரும் இந்தியருக்கு பிரதிநிதித்துவம் வழங்கக் கூடிய அரசாங்கத்தை தர மறுக்கிறோம்; இது நியாயமல்ல. இந்தியாவில் அந்த மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ஒரு அரசியல் அமைப்பை நாம் உருவாக்கித் தர வேண்டும்” என்று ஓங்கி ஒலித்தார். மெக்காலேவிடம் இந்த சிந்தனையை விதைத்தவர் ஜேம்ஸ் மில். அவர் இந்திய வரலாற்றை எழுதிய வரலாற்றாளர்.

“மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளைக் கொண்ட சட்டமன்றங்கள்தான் கொடுங்கோல் ஆட்சியிலிருந்து மக்களை விடுவிக்கும். அப்போதுதான் மக்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதியாகும்” என்றும், “ஒரு சுதந்திரமான ஆட்சியைக் கொடுக்காவிட்டாலும் குறைந்தது ஒரு நல்லாட்சியையாவது அமைத்திட வேண்டும்” என்று பிரிட்டிஷாரின் மனசாட்சியையே உலுக்கியவர் ஜேம்ஸ் மில். இந்த நியாயத்தின் குரல் தான் மெக்காலேயின் மனசாட்சியையும் திறக்க வைத்தது பிரிட்டிஷ் நாடாளுமன்றம்! சட்டமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டியதன் நியாயத்தை உணர்ந்தது. அதை செயல்படுத்த பிரிட்டிஷ் மன்னரின் தூதுவராக இந்தியாவுக்கு வந்தார் மெக்காலே. 1834ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10ஆம் நாள் சென்னை கடற்கரையில் வந்து இறங்கினார். அடுத்த 15 நாட்களிலேயே ஜூன் 25இல் சென்னை மாகாண அரசு உதயமானது. அதே நாளில் பம்பாய் மாகாண அரசும் அமைக்கப்பட்ட செய்தி சென்னை அரசிதழில் வெளியானது. அரசு, அரசமைப்பு, சட்டம், சட்டமன்றம் ஆகிய நான்கு கட்டமைப்பும் உருவாகக் காரணமாக இருந்தவர் மெக்காலே.

Charles Bradlaughபிரிட்டிஷ்காரன் இந்தியாவை மட்டும் உருவாக்க வில்லை; மாகாணங்களையும், சட்டசபைகளையும் கூட அவன்தான் உருவாக்கினான் என்பதை ‘சங்கிகள்’ புரிந்து கொள்ள வேண்டும்.

வேதம் படிப்பது ஒன்று மட்டுமே கல்வியாக இருந்த சமூகக் கொடுமையை ஒழித்து அனை வருக்குமான கல்வித் திட்டத்தை உருவாக்கியவரும் மெக்காலே தான். மனுசாஸ்திர அடிப்படையில் குற்றங்களுக்கான தண்டனை இருந்தது. அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட அநீதிகளுக்கு முற்று புள்ளி வைத்து அனைத்து பிரிவு மக்களுக்கான, பொது கிரிமினல் சட்டத்தையும் கொண்டு வந்தவர் மெக்காலே தான்! அதற்கு முன் மனுசாஸ்திர அடிப்படையில் பார்ப்பன புரோகிதர் ஆலோசனை பெற்று ‘சூத்திரருக்கு’ ஒரு தீர்ப்பும் ‘பிராமணனுக்கு’ ஒரு தீர்ப்புமே வழங்கப்பட்டு வந்தன.

வேதம் படிப்பதே கல்வி என்ற முறையை மாற்றி அனைவருக்கும் பொதுக் கல்வி முறையைக் கொண்டு வந்தவரும் மெக்காலேதான். ஆர்.எஸ்.எஸ். சங்கி களுக்கு ‘மெக்காலே’ என்ற பெயரையே வெறுப்பதற்கு முக்கியக் காரணம் இவை தான்.

மெக்காலே சட்டமன்றங்களை உருவாக்க வேண்டும் என்றார் என்றால், அப்படி அமைக்கப் படும் சட்டமன்றங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப் படும் பிரநிதிகள் வழியாகவே செயல்பட வேண்டும் என்று பிரிட்டன் நாடாளுமன்றத்தில் (காமன்ஸ் சபை) முதன்முதலாக சட்டம் கொண்டு வந்தவர் சார்லஸ் பிராட்லா என்ற பிரிட்டிஷ்காரர்தான். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கேள்வி கேட்கும் உரிமையும் வேண்டும் என்று சட்ட முன் வரைவுகளை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்தவரும் அவர்தான்.

பிராட்லா யார்? உலகப் புகழ் பெற்ற நாத்திகர். அவரது நாத்திகக் கருத்துகளைக் கேட்க அரங்கு கூட்டங்களுக்கு கட்டணம் செலுத்தி பார்வையாளர்கள் வந்தார்கள். பிரிட்டிஷ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பை கடவுளின் பெயரால் ஏற்கவேண்டும் என்ற விதியை ஏற்க மறுத்து, தேர்தலில் வெற்றி பெற்ற நிலையிலும் நாடாளுமன்றத்துக்குள் செல்ல மறுத்தார். ‘உளமாற உறுதி ஏற்கிறேன்’ என்றுதான் கூறுவேன்; நான் நம்பாத கடவுள் மீது உறுதி ஏற்க மாட்டேன் என்று கூறினார். நாடாளுமன்றம் ஏற்க மறுத்தது. அதற்காக நீதிமன்றம் பிராட்லாவுக்கு தண்டனை வழங்கியது. நாடாளுமன்ற பதவியையும் பறித்தது.

அதன் பின் தொடர்ந்து நடைபெற்ற 4 மறு தேர்தல்களிலும் பிராட்லாவே வெற்றி பெற்றார். குற்றக் கூண்டுக்கு வர மறுத்தார் பிராட்லா. வலுக்கட்டாயமாக சிறையில் அடைத்தனர். பிரச்சினை பேரரசியின் கவனத்துக்குப் போனது. அரசி, பிராட்லாவை விடுதலை செய்ய உத்தரவிட்டார். அதன் பிறகு விதிமுறைகளும் திருத்தப்பட்டன. கடவுள் பெயரால் உறுதி எடுக்க விரும்பாதவர்கள், உளமாற உறுதி ஏற்கலாம் என்ற உரிமை கிடைத்தது, பிராட்லா தொடர்ந்த வழக்கில்தான்! நாடாளுமன்றத்தின் முடிவுகளில் நீதிமன்றம் தலையிடாது என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பும் இந்த வழக்கின் மூலம் தான் கிடைத்தது. இன்று வரை நாடாளுமன்ற உரிமைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற நிலை நீடிக்கிறது. அந்த உரிமையைப் பெற்றுத் தந்தவர் பிராட்லா.

அந்த நாத்திக மரபின்படி தான் தி.மு.க. ‘உளமாற’ என்று இப்போதும் உறுதி ஏற்கிறது.

மற்றொரு ஆளுநர் சார்லஸ் டிரெவெல்சன் அவர் குறித்து அடுத்த இதழில் பார்ப்போம்.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்

Pin It