பெண்கள் விடுதலையும் பெண்கள் மீதான ஒடுக்குமுறையும் சர்வதேசப் பெண்கள் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான்.
மார்ச் 8 என்றால் சர்வதேச மகளிர் தினம் என்று நாமனைவரும் அறிவோம். ஆனால் எதற்காக மார்ச் எட்டாம் தேதியைக் குறிப்பாக தேர்ந்தெடுத்தார்கள்?
சற்று வரலாறுகளில் பின்னோக்கித் தேடினால் வியப்பூட்டும் பல தகவல்கள் நமக்குக் கிடைக்கும். 1789 ஆம்ஆண்டு ஜூன் 14ம் தேதி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்று கோரிக்கைகளை முன் வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்! ஆணுக்கு நிகராகப் பெண்கள் இந்தச் சமுதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்றும், வேலைக்கேற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் பெண் அடிமைகளாக நடத்தப்படுவதி லிருந்து விடுதலை வேண்டும் என்று பெண்கள் கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர்! வாக்குரிமையைக் கேட்டு ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
அமெரிக்காவின் தொழிற் புரட்சி நகரம் நியூயோர்க், இங்கு நெசவுத் தொழிலில் பெருமளவு பெண்கள் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் பதினாறு மணி நேரம் வேலை செய்து மிகக் குறைவான ஊதியத்தைப் பெற்றனர். அந்த ஊதியத்தைப் பெறுவதற்குக் கூட நிர்வாகத்தில் உள்ளவர்களின் உடற் பசிக்கு இணங்கினால் தான் கிடைக்கும் என்ற நிலை இருந்தது. அதன் விளைவு 1910 இல் ஹேகனில் சர்வதேச பெண்கள் மாநாடு பொதுவடைமைத் தலைவர் கிளாரா ஜெட்கின் தலைமையில்கூடியது. அதன் தொடர்பாக சர்வதேச மகளிர் அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது.
இந்த அமைப்பின் சார்பில் 1911 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி ஜெர்மனி, ஆஸ்திரியா, ஜெர்மனியில் மகளிர் தொடங்கி வைத்த போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உலகெங்கும் மகளிர் தங்கள் பிரச்சினைகளுக்காகப் போராட வேண்டும்.
போராடினால் தான் உரிமைகளைப் பெற முடியும் என்று எண்ணத்தலைப்பட்டு போராடத் தொடங்கினர். அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்
வைத்துப் போராடி வருகின்றனர்! இப்போதும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளும் நாளும் நாளும் நடந்தேறி வந்து கொண்டுள்ளது. பெண்கள் தங்கள் உரிமையை தாய்வழி சமூகத்தின் வழி இழந்த பின் தங்கள் உரிமையை நிலைநாட்டத் தொடர்ந்து போராடி வருகிறார்கள்.
"ரோமாபுரி மன்னனின் பெண்கள் மீதான உரிமையை எதிர்த்த பெண்களின் போராட்டம் தொடங்கி, ஐரோப்பா குறிப்பாக பிரான்சு தேசத்தில் எழுந்த விடுதலை கோரிக்கையான சுதந்திரம், சகோதரத்துவம், சமத்துவம் என்ற பதாகையின் கீழ் பெண்கள் தங்கள் உரிமைக்காக போராடிய வரலாறு உண்டு.'' அதன் பின் உலக வரலாற்றை தங்கள் பக்கம்மாற்றிக் கொண்ட உழைக்கும் மக்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலையை உறுதிப் படுத்திய, மாமனிதர்கள் மார்க்சும் ஏங்கல்சும் வரலாற்றில் தோன்றிய பின் எழுந்த அரசியல் எழுச்சி பின் பெண்கள் தங்கள் விடுதலையை மூர்க்கமாக போராட்டத்தை நடத்தினார்கள்.
அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எழுந்த போராட்டங்கள், இப்போராட்டங்களின் முன்னணித் தலைவர்களாக கிளாரா செட்கின், ரோசா லக்சம்பர்க் விளங்கினார்கள். அவர்களின் போராட்டத்திற்கு அரசியல் ஆதரவு மற்றும் உற்ற தோழராகவும் இரசிய புரட்சியின் மாமேதை தோழர் லெனின் அவர்கள் விளங்கினார்கள்.
அதன் பின் மாவோவின் செஞ்சேனையிலும், வியட்நாமின் கோசிமின் படையிலும் தங்கள் விடுதலையை மேலும் மேலும் உறுதிப்படுத்திக் கொண்டு வந்துள்ளனர். அதன் பின் ஆப்பிரிக்க மற்றும் கீழை நாடுகளிலும் பெண்கள் தங்கள் தேசத்தில் நடைபெறும் போராட்டங்களில் தங்கள் விடுதலைக்கான அரசியல் முன் வைப்போடு போராட்டத்தில் பங்கு கொண்டனர்.
அதன்பின் அல்ஜீரியா விடுதலைப் போர் நவம்பர் 1, 1954 தேசிய விடுதலை முன்னணி அல்ஜீரியாவின் பல்வேறு பகுதிகளில் ஒரே நேரத்தில் தாக்குதலைத் தொடங்கி தனது போரைத் தொடங்கியது. இப்போராட் டத்தில் பெண்கள் வீரதீர பங்களிப்பு என்பது இன்றும் புரட்சி இயக்கங்களால் பேசப்படுகின்றன.
பிரெஞ்சு அரசாங்கத்தின் ராணுவக் கிடங்குகள், காவல் நிலையங்கள், பாதுகாப்பு முகாம்கள் தகவல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் அரசாங்கக் கட்டடங்கள் ஆகியவை தாக்குதலுக்கு இலக்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. சற்றும் எதிர்பாராத இந்த திட்டமிட்ட தாக்குதலால் பிரெஞ்சு அரசு அதிர்ந்தது.
முன்பே, தேசிய விடுதலை முன்னணியினர் தங்களது படைகள் மாணவர்கள், பெண்கள், தொழிலாளர் சங்கங்கள், மருத்துவர்கள், அலுவலர்கள் என பல்வேறு பிரிவுகளில் மக்களிடம் தன்னை வலுப்படுத்திக் கொண்டிருந்தது.
அல்ஜீரியாவின் தேசிய விடுதலைப் படையின் தலைவரான பிரான்ஸ்வா பனான், தேசிய விடுதலைப் படையின் இந்த அதிரடி கொரில்லா தாக்குதல் எந்த வகையில் நியாயமானது என்பதை அறிவார்ந்த ரீதியாக தெளிவாக உணர்ந்து அதற்கான சித்தாந்தங்களை உருவாக்கி உலக அரங்கில் போராட்டத்திற்கு ஒரு மதிப்பீட்டை உருவாக்கித் தந்திருந்தார். போராட் டத்தின் முதல் வேலையாக பெண்களை இணைத்தது பிரான்ஸவா பனானின் பங்கு முக்கியமானது.
அவ்விடுதலைப் போராட்டத்தில் பிரெஞ்சு இராணுவம் போராளிகளின் வீட்டுப் பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். இதனால், போர் இரண்டு பக்கங்களிலும் அதிக அளவிலான வெறியை மென்மேலும் மூட்டியது. பிரெஞ்சு அரசாங்கத்தின் வன்முறை நடவடிக்கைகள் காரணமாக போராளியின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி தேசிய விடுதலை முன்னணிப் படை மேலும் வலுப்பெற்றதே ஒழிய,பயமேற்படவில்லை. அல்ஜீரிய விடுதலைப் போரையும் போராளிகளையும் எகிப்து உள்ளிட்ட இதர முஸ்லீம் நாடுகளின் அரசுகள் அங்கீகரிக்கத் தொடங்கியது. பிரெஞ்சு அரசும் கடுமையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல் ""செப்டம்பர் 30, 1956 அன்று மூன்று பெண்கள் நகரத்தின் வெவ்வேறு இடங்களில் சக்தி வாய்ந்த வெடி குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
இப் பெண்கள் போராட்டத்தில் கலந்துக் கொள்வதை அடிப்படை இசுலாமிய வாதிகள் கடுமையாக எதிர்த்தனர். ஆனாலும் பெண்கள் பெருந்திரளாக அப்போராட் டத்தில் கலந்து கொண்டனர். பிரான்ஸவா பனான் அவர்கள் பெண் விடுதலை குறித்துதெளிவான பார்வை இருந்ததால் பெண்கள் மீதான பாலியல் ஆதிக்கத்தையும் பழமைவாதி களையும் கடுமையாக எதிர்த்துப் போராடினர்.
பெண்கள் மீதான பாலியல் ஒடுக்குமுறை பின் தொடர்ந்து வருகின்றன. நவீன காலத்தில் அதன் வடிவங்களை மாற்றி மாற்றி பின் தொடர்கின்றன. பெண் உடல் மீதான தந்தையின் ஆதிக்கம் தொடங்கி, கணவன் மகன் வரை தொடர்கின்றன. பெண்களின் உடல் அரசியல் என்ற எழுத்துகளும் போராட்டங் களும் முன்னுக்கு வந்துள்ள நிலையிலும் பெண்கள்
மீது வன்முறைத் தாக்குதல் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இன்று படித்த பெண்கள் ஆண்களுக்கு மேலாக ஊதியம் ஈட்டும் நிலையிலும் அவர்கள் மீதான ஒடுக்குமுறைகள் நீண்டு கொண்டு இருக்கிறது என்பதும் அதை மாற்றுவதற்கு சமூகஅளவில் பல்வேறு தளங்களிலும் போராட்ட இயக்கங்களிலும் முன் முயற்சிகள் எடுத்தலும் தொடரும் ஆதிக்கங்கள் நம்மை மீண்டும் மீண்டும் பெண்களுக்கான அரசியலை முறையாக முன் வைத்து போராட வேண்டிய நிலையில்தான் உள்ளோம். பழமை மீதும் தொன்மங்களின் மீதும் நம்பிக்கை வைத்தும் போராடும் இயக்கங்களில் பெண்கள் மீதான பார்வைகள் இயல்பான சமூக பார்வையில் இருந்து விலகி நிற்க முடியவில்லை என்பதுதான் உண்மை.
பெண்கள் உடல் மீதான அரசியல் இன்று முன்னுக்கு வந்துள்ள நிலையில், கற்பு குறித்தும் பாலியல் விடுதலை குறித்து தவறான கருத்துக்களை பெண்கள் மீதும் பெண் எழுத்தாளர்கள் மீதும் வசைபாடுவதில் இந்து சனதானவாதிகளும், முற்போக்கு முகங்களும் அதில் ஒளிந்து கொள்கின்றனர். இதை பல்வேறு பெண் எழுத்தாளர்கள், பெண்படைப்பாளி சல்மாவின் வலியும் பெண்களின் துயரத்தையும் இக்கவிதையில் பார்க்க முடியும்.
குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்திய இரவுகளில்
பழகிய நிர்வாணத்திற்கிடையில்
அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்
என் அழகின் களங்கமின்மையை
பெருத்த உடலும்
பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும் ரொம்பவும்தான் அருவெறுப்பூட்டுவதாய்ச் சொல்கிறாய்
இன்றும் இனியும்
எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்
நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்
புதையுண்டிருக்கும் என் குரல்
தனக்குள்ளாகவே முனகிக் கொண்டிருக்கும். உண்மைதான்
என் உடலைப் போலல்ல
உன்னுடையது
பறைசாற்றிக் கொள்வதில்
வெளிப்படையாக இருப்பதில் இதற்கு முன்னும்கூட
உன் குழந்தைகள் வேறு எங்கோ
யார் யாருக்கோ பிறந்திருக்கலாம் உன்னிடம் தடயங்களில்லை என்பதால்
நீ பெருமை கொள்ளலாம்
நான் என்ன செய்ய?
என் நசிவைப் போலத்தான் இந்தப் பிரசவக் கோடுகளும் எளிதில் செப்பனிட முடிவதில்லை
வெட்டி ஒட்டிவிடஇவ்வுடல் காகிதமில்லை. உன்னைக் காட்டிலும்
மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது
இயற்கை எனக்கு உன்னிலிருந்துதானே தொடங்கிற்று எனது தோல்வியின் முதலாவது நிலை
முதல் ஜாமத்தைக் காட்டிலும் விபரீதமானது
கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்
சுவரோவியத்தில் அமைதியாக அமர்ந்திருந்த புலி இவ்விரண்டாம் ஜாமத்தில்தான் என் தலைமாட்டிலமர்ந்து
உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
சல்மா பெண்களுக்கு சமூகம் இழைத்துள்ள கொடுமை
ஒரு புறம் என்றால், இயற்கையும் சேர்ந்து பெண்களுக்கு எதிராக உள்ளது என்பதை நமக்கு உணர்த்துகிறது இக்கவிதை.
தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களில் பெண்களின் பங்களிப்பு என்பது மிக மிகக் குறைவு என்பதற்கான காரணிகளை ஆய்ந்து கடக்க வேண்டியவைகள் நிரம்பவே உள்ளன. "தமிழ் தொன்மம் தமிழர் கற்பு, தமிழர் பெருமை'' இவைகளுக்கு இடம் கொடுக்குமா?என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. ஆனாலும் தமிழ் தொன்மம், தமிழர் கற்பு, தமிழர் பெருமைகளை கடந்துதான் பெண்களின் விடுதலையை உரிமையை நாம் உறுதிப்படுத்த வேண்டும். அதுவே நமது பணி ஈழப் போராட்டத்தில் முன்கள போராளியாகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி ஆயுத குழுக்களின் குண்டுக்கு மரணம் எய்திய சிவரமணியின் கவிதை நினைவுக்கு வருகிறது. ஆம் தோழர்களே! பெண்கள் விடுதலைக்கு அணியமாவோம். விடுதலை என்ற பெரும் நெருப்பை ஆதிக்க வாதிகளுக்கும், அடிமைச் சிந்தனையாளர்க்கும் புரிய வைப்போம்.
பெண் விடுதலையன்றி சமூகம் விடுதலைப் பெறாது என்பதை...
தோழர்களே விலங்குகளுக்கெல்லாம் விலங்கொன்றைச் செய்தபின்நாங்கள் பெறுவோம் விடுதலை ஒன்றை!
செங்கல்பட்டு பூந்தமல்லி ஈழத் தமிழர் அகதிகள் முகாம்களை மூடக் கோரி ஆர்ப்பாட்டம்
தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் கடந்த 12.02.2011 சனிக்கிழமை, சென்னையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஐயா பழ. நெடுமாறன், மல்லை சத்யா, பாவேந்தன், தமிழ்நேயன், தடா ரஹீம், சிவபெருமான், வேலுமணி, செந்தமிழ்க் குமரன், சி.அ. மணிகண்டன், பா.புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு கண்டன முழக்க மிட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு வழக்குரைஞர் ந. கண்ணன் வரவேற்புரையாற்ற, தோழர் இளங் கோவன் தலைமை ஏற்றார். கண்டன ஆர்ப்பாட் டத்தில் ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டனர்