சூத்திரர்கள் ஆரியரல்லாத பூர்வகுடி இனத்தவராக இல்லையெனில் அவர்கள் யார்? இக்கேள்வியை இப்போது நாம் எதிர்கொள்ள வேண்டும். நான் முன்வைக்கப் போகும் கொள்கை நிலையை பின்வரும் மூன்று கருத்துக்கள் தெளிவுபடுத்தக்கூடும்:

ambedkar 2591) சூத்திரர்களும் ஆரியர்களே.

2) சூத்திரர்கள் சத்திரிய வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

3) பழங்கால ஆரிய சமுதாயத்தினரின் மிகச் சிறந்த சக்தி வாய்ந்த மன்னர்களில் சிலர் சூத்திரர்களாக இருந்தனர் என்பதால் சூத்திரர்களும் சத்திரியர்களின் ஒரு முக்கிய வர்க்கத்தினராக இருந்தனர்.

சூத்திரர்களின் தோற்றுவாய் சம்பந்தப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை ஒரு புரட்சிகரமான ஆய்வுக்கட்டுரையாக இல்லாவிடினும் திகைப்படையச் செய்யும் ஆய்வுக் கட்டுரையாக இருக்கும். இக்கருத்துக்கு ஆதரவாகப் போதுமான சான்றுகள் இருந்தபோதிலும்கூட பலர் இதை ஏற்றுக்கொள்ளமுடியாத அளவுக்கு இது திகைப்பூட்டக் கூடியதாகும். எனது கடமை சான்றுகளை எடுத்துவைப்பதேயாகும். அதன்மதிப்பை சீர்தூக்கிப் பார்க்கும் பொறுப்பை மக்களிடம் விட்டுவிடுகிறேன்.

இந்த ஆய்வுக்கட்டுரை ஆதாரமாகக் கொண்டுள்ள முக்கியச் சான்று மகாபாரதத்தின் இயல் 60இல் செய்யுள்வரிகள் 38-40 இல் வருகிறது. அது வருமாறு:

“பழங்காலத்தில் பைஜவனன் என்ற பெயர்கொண்ட சூத்திரன் ஒருவன், ஐந்தரக்னி என்றழைக்கப்பட்ட ஒரு விதியின்படி ஒரு நூறுஆயிரம் புராணபத்திரங்கலடங்கிய (தனது சொந்த பலிப்பொருளாக) தட்சிணையை வழங்கினான் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்”

இப்பத்தியில் அடங்கியுள்ள முக்கியக் கருத்துகள் மூன்றாகும்; 1.பைஜவனன் ஒரு சூத்திரன் என்பது, 2.இந்த சூத்திரனான பைஜவனன் வேள்விகளை நடத்தினான் என்பது, 3.அவனுக்காக பிராமணர்கள் வேள்விகளை நடத்திக் கொடுத்து, அவனிடமிருந்து தட்சிணைகளை ஏற்றுக் கொண்டார்கள் என்பது.

மேலே கூறப்பட்ட பத்தி திரு.ராயின் மகாபாரதப் பதிப்பிலிருந்து எடுக்கப்பட்டதாகும். முதலாவது விஷயம் என்னவெனில் இந்த வாசகம் துல்லியமானதுதானா அல்லது இதற்கு வேறு ஏதேனும் அர்த்தங்கள் உள்ளனவா என்பதேயாகும். தமது வாசகத்தின் நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை திரு.ராய் (சுக்தங்கர் நினைவுப் பதிப்பில் மேற்கோள் காட்டப்பட்டது – தொகுதி I பக். 43-44) கூறுவது இதுதான்:

“எனது பதிப்பைப் பொறுத்தவரை, புகழ்பெற்ற ஓர் ஆங்கிலேய கீழையியல் வல்லுநரின் உதவியுடன் சில கற்றறிந்த வங்காள பண்டிட்டுகளின் மேற்பார்வையில் கிட்டத்தட்ட நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் பிரசுரிக்கப்பட்ட வங்காளத்தின் ராயல் ஆசியாடிக் சொசைட்டியைக் கணிசமான அளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளது. இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் இருந்தும் (தெற்கு விதிவிலக்காக்கப்படவில்லை) சேகரிக்கப்பட்ட கையெழுத்துப்பிரதிகள் மிகக் கவனமாகப் பதிப்பிக்கப்பட்ட போதிலும் கூட நான் தற்பண்பின்றி சொசைட்டியின் பதிப்பைப் பின்பற்றவில்லை. இன்னும் அதிக கவனத்துடன் பதிப்பிக்கப்பட்ட பர்த்வான் மகாராஜாவின் வங்காளித் தன்மை கொண்ட வாசகத்துடன் இதை நான் கவனமாக ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கிட்டத்தட்ட 18 கையெழுத்துப்பிரதிகள் (தெற்கு விதி விலக்காக்கப்படவில்லை) பர்த்வான் பண்டிட்டுகளினால் மிகவும் கவனமாக ஒப்பிட்டுப்பார்க்கப்பட்டன. ஒவ்வொரு சுலோகத்தையும் உண்மையானது என்று அவர்கள் ஒப்புக்கொள்ளும்முன் மிகக் கவனமாக ஆராய்ந்தார்கள்.

விமர்சனத்துக்குரிய மகாபாரதப் பதிப்பில் ஆழ்ந்த புலமை கொண்ட ஆசிரியரான பேராசிரியர் சுக்தங்கர், மகாபாரதத்தின் பல பதிப்புகளை ஆய்வு செய்த பின்னர் பின்வருமாறு கூறிமுடித்தார். (சுக்தங்கர் நினைவுப் பதிப்பில் மேற்கோள் காட்டப்பட்டது – தொகுதி I பக். 131)

“தி எடியோ பிரின்செப்ஸ் (கல்கத்தா – 1856), கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்குப் பின்னர் மிகச் சிறந்த பதிப்பாக இருக்கிறது.”

திரு.ராயின் மகாபாரதத்தினுடைய நம்பகத்தன்மையில் ஐயமேதும் இருக்கமுடியாது என்றபோதிலும்கூட, சூத்திரர்களுடைய தோற்றுவாய் குறித்த இப்புதிய தத்துவத்திற்கு அடிப்படையாக ஆக்கப்பட்டுள்ள இந்த வாசகதிற்குப் பின்னர் எந்த இதர கையெழுத்துப் பிரதிகளின் ஆதரவு உள்ளது என்பதை அறிய விரும்புவதாக விமர்சகர்கள் கூறுவார்களேயானால் அது நியாயமற்றதாக இருக்கமுடியாது. இத்தகைய ஒரு விசாரணையை மேற்கொள்வதில் இரு கருத்துகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமாகும்: முதலாவது, (சுக்தங்கர் ஓபி.ஐடி.., பக்.14) எல்லா பதினெட்டு பருவங்களையும் உள்ளடக்கிய கையெழுத்துப் பிரதிகளின் முழுமையான தொகுதி என்ற அர்த்தத்தில் ஒரு மகாபாரதக் கையெழுத்துப்பிரதி என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு பருவமும் ஒரு தனிப்பட்ட யூனிட்டாகக் கருதப்படுகிறது, அதன்பயனாக வெவ்வேறு பருவங்களது பிரதிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் மாறுபடுவதைக் காணமுடிகிறது. அதன் விளைவாக, எந்த வாசகம் சரியானது என்பதைத் தீர்மானிப்பதற்கு ஓர் அடித்தளமாக எடுத்துக்கொள்ளப்படவேண்டிய கையெழுத்துப் பிரதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு பருவத்துடனும் வேறுபடுகிறது.

இரண்டாவதாக, (அதே நூல், பக். 9-42) மகாபாரதத்தின் வாசகம் இருவேறுபட்ட வடிவங்களில் வழங்கப்படுகிறது என்ற உண்மையின்பால் கவனம் ஈர்க்கப்படவேண்டும் என்ற கருத்தாகும். திருத்தப்பட்ட ஒரு வடக்கத்திய மற்றும் தெற்கத்திய பதிப்புகள், வாசகங்கள் ஆரியவர்த்தகம் மற்றும் தக்ஷிணபாதத்துக்கே உரியவையாகும்.

திருத்தப்பட்ட வடக்கத்திய மற்றும் தெற்கத்தியப் பதிப்புகளுக்கிடையில் உள்ள நியாயமான எண்ணிகையிலான கையெழுத்துப் பிரதிகளிலிருந்து ஒப்பீடு செய்யப்பட்டதை ஆதாரமாகக் கொண்ட கையெழுத்துப்பிரதியின் ஆதரவை ஆராய வேண்டியது அவசியம் என்பது தெளிவாகும். இக்கருத்துக்களை மனதில் கொண்டு, நாம் அக்கறை கொண்டுள்ள பல்வேறு கையெழுத்துப் பிரதிகளுடன் மகாபாரதம் சாந்தி பருவம் 60ஆவது இயல் 35ஆவது சுலோகத்தின் வாசகத்தை ஒப்பிட்டுப் பார்த்ததன் விபரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

1) ஷூத்ர பைஜவனோ நாம (K)s

2) ஷூத்ர பைலவனோ நாம (m/1:m/2)s

3) ஷூத்ர யைலனனோ நாம (M/3:M/4)s

4) ஷூத்ர யைஜனனோ நாம (F)

5) ஷூத்ரோபி யஜன நாம (L)

6) ஷூத்ர பவுன்ஜால்கா நாம (TC)S

7) ஷூத்தோ வைபவனோ நாம (G)N

8) புரா வைஜவனோ நாம (A,D/2)

9) புரா வைஜவனோ நாம (M)N

ஒன்பது கையெழுத்துப்பிரதிகளை ஒப்பீடு செய்ததில் கிடைத்த முடிவு இதுதான். வெவ்வேறு விதமான வாசிப்பு முறைகளைக் கொண்ட ஒன்பது கையெழுத்துப்பிரதிகளைக் கொண்டு ஒரு வாசகத்தை அமைக்க முடியுமா? மகாபாரதத்தின் வெவ்வேறு பருவங்களை விமர்சன ரீதியாகப் பதிப்பிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கையெழுத்துப்பிரதிகளின் எண்ணிக்கை ஒன்பதை விஞ்சுகின்றன என்பது உண்மைதான். மகாபாரதம் முழுவதன் வாசகத்தை அமைப்பதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட கையெழுத்துப் பிரதிகளின் குறைந்தபட்ச எண்ணிக்கை பத்துமட்டுமேயாகும். இந்த ஒன்பது கையெழுத்துப் பிரதிகள் இரு புவியியல் பிரிவுகளில் அடங்குகின்றன. வடக்கு மற்றும் தெற்கு எம்1, எம்2, எம்3, எம்4, மற்றும் டிசி தெற்கத்திய திருத்தப்பட்ட பதிப்பிற்கு உரியவையாகும். ஏ.எம்.ஜி.டி2 ஆகியவை வடக்கத்திய திருத்தப்பட்ட பதிப்பிற்கு உரியவையாகும். ஆகவே கையெழுத்துப்பிரதிகளின் தேர்வுகள் நிபுணர்கள் விதித்த இரு சோதனைகளைத் திருப்தி செய்கின்றன.

வாசிப்புமுறையை ஆய்வு செய்யும்போது தெரியவருவது வருமாறு:

1) பைஜவனன் விளக்கத்தில் வேறுபாடு உள்ளது;

2) பைஜவனன் பெயரில் வேறுபாடு உள்ளது;

3) ஒன்பது வாசகங்களில் ஆறுவாசகங்கள் அவனை ஷூத்ர என்று வர்ணிப்பதில் உடன்படுகின்றன. ஒரு வாசகம் அவனை ஷூத்தோ என்றும் இருவாசகங்கள் அவர் எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்பதைக் கூறுவதற்குப் பதிலாக அவன் வாழ்ந்த காலத்தைக் குறிக்கும் “புரா” என்ற சொல்லைப் பயன்படுத்துகின்றன.

4) பெயரைப் பொறுத்தவரை இந்த ஒன்பது கையெழுத்துப் பிரதிகளிடையே எந்த ஒற்றுமையும் இல்லை. ஒவ்வொன்றும் வித்தியாசமான வாசிப்புமுறையை வழங்குகின்றது.

இந்த முடிவைப் பார்க்கும்போது, எழும்கேள்வி, உண்மையான வாசகம் எது என்பதுதான். பெயர் சம்பந்தப்பட்ட வாசகங்களை முதலில் எடுத்துக் கொண்டோமானால் அர்த்தம் சம்பந்தமான பிரச்சினை உள்ள விஷயம் இது அல்ல என்பது தெளிவாகிறது. விளக்கம், பிழைநீக்கம் அல்லது இதரவாசிப்பு முறைகள் எவ்வாறு தோன்றியிருக்கக்கூடும் என்பதைக் கூறும் ஒரு வாசிப்பு முறைக்கு முக்கியத்துவம் வழங்குதல் போன்ற எந்தக்கேள்விகளையும் அது எழுப்பவில்லை. பிரச்சினை என்னவெனில் எது சரியான பெயர், எந்த வாசிப்புமுறை எழுதியவர்கள் புரிந்த வரிவடிவத் தவறுகளைக் கொண்டுள்ளது என்பதேயாகும். மிகச் சரியான வாசகம் பைஜவனன் என்பதில் ஐயமேதும் இல்லைபோல் தோன்றுகிறது. அது வடக்கு மற்றும் தெற்கத்திய திருத்தப்பட்ட பதிப்புகளினாலும் ஆதரிக்கப்படுகிறது. எண் 8 இல் வரக்கூடிய வைஜவனோவும் பைஜாவனோவும் ஒன்றேதான். மற்றவை எல்லாம் வெவ்வேறு வடிவங்களேயாகும். முதல் பிரதியை சரியானமுறையில் வாசிக்க முடியாமல் எழுத்தாளர்கள் அறியாமையினால் தமக்குத் தெரிந்த வழியில் வாசகத்தை அமைத்துக் கொண்டுள்ளனர்.

பைஜாவனின் வர்ணனையைப் பார்த்தோமானால் ஷூத்ராவிலிருந்து மாறிச் செல்வது திடீரென்று ஏற்பட்டதல்ல என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும். இது வேண்டுமென்றே செய்யப்பட்டதுபோல் தோன்றுகிறது. ஏன் இந்த மாற்றம் ஏற்பட்டது என்பதை அறுதியிட்டுக்கூறுவது கடினம். இரு விஷயங்கள் மிகத் தெளிவாகத் தோன்றுகின்றன. முதலாவதாக இந்த மாற்றம் மிகவும் இயற்கையானது போல் தோன்றுகிறது. இரண்டாவதாக, பைஜவனன் ஒரு சூத்திரன் என்ற முடிவுக்கு இந்த மாற்றம் முரண்பாடாக இல்லை. 30-40செய்யுள் வரிகளின் பின்புலம் மனதில் கொள்ளப்படுமானால் மேற்கூறப்பட்டமுடிவு தெளிவாகும். அவற்றிற்கு முன்பாக வரும் பின்வரும் செய்யுள் வரிகளிலிருந்து அப்பின்புலம் தெளிவாகும்:

“தனது எஜமானன் எத்தகைய துன்பத்தில் இருந்தாலும் அல்லது அத்துன்பத்தின் தன்மை எத்தகையதாக இருந்தாலும் சூத்திரன் ஒருபோதும் அவரைக் கைவிட்டுவிடக்கூடாது. எஜமானன் தனது செல்வத்தை இழந்துவிட்டால் சூத்திரனான வேலையாள் அவரை மிகுந்த உத்வேகத்துடன் ஆதரிக்கவேண்டும். ஒரு சூத்திரன் தனக்கென்று சொந்தமாக செல்வம் எதையும் கொண்டிருக்கக்கூடாது. அவன் எது வைத்திருந்தாலும் அது அவனுடைய எஜமானனுக்குச் சொந்தமானதாகும். வேள்விகள் செய்வது மூன்று வருணத்தினருக்கும் ஒரு கடமையாகக் கூறப்பட்டுள்ளது. ஓ பரதா! சூத்திரர்களுக்கும் அவ்வாறே ஆணையிடப்பட்டுள்ளது. ஆனாலும் ஒரு சூத்திரன் ஸ்வாஹா, ஸ்வாதா அல்லது வேறு இதர மந்திரங்களை உச்சரிக்கத் தகுதியானவன் அல்ல. இக்காரணத்திற்காக, சூத்திரன் வேதங்களை கூறப்பட்டுள்ள சூளுரைகளைக் கடைப்பிடிக்காமல் பாகயக்ஞங்கள் எனும் சிறிய வேள்விகளை நடத்தி தெய்வங்களை வழிபட வேண்டும். பூரண பத்ரம் என அழைக்கப்படும் வெகுமதி இத்தகைய வேள்விகளில் தட்சணையாக அளிக்கப்படுகிறது.”

முந்திய செய்யுள் வரிகளின் பின்புலத்தில் 38-40 வரையிலான செய்யுள் வரிகளை எடுத்துக்கொண்டால் அந்தப் பத்தி முழுவதுமே சூத்திரர் சம்பந்தப்பட்ட கருத்துக்களையே கூறுவது தெளிவாகிறது. பைஜவனனின் கதை ஒரு வெறும் எடுத்துக்காட்டேயாகும். இப்பின்புலத்தில் பைஜவனனுக்கு முன்னர் ‘சூத்திரர்’ என்ற சொல்லைத் திரும்பத் திரும்பக் கூறுவது தேவையற்றதாகும். இரு கையெழுத்துப்பிரதிகளிலும் பைஜவனனுக்கு முன்னர் சூத்திரா என்றசொல் வராததன் காரணத்தை இது விளக்குகிறது. சூத்திரன் என்ற சொல் இருக்க வேண்டிய இடத்தில் புரா என்ற சொல் பயன்படுத்தப் பட்டிருப்பதற்கான காரணத்தைப் பொறுத்தவரை, பைஜவனன் சம்பவம் மிகத் தொன்மையான காலத்தில் நிகழ்ந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.

ஆகவே அந்த எழுத்தாளர் இந்த உண்மையை மிகத் தெளிவாக விளக்கவேண்டும் என்று விரும்பியிருப்பது இயற்கையேயாகும். பைஜவனனை சூத்திரன் என்று விளக்குவதற்கான தேவை இல்லை என்று உணர்ந்திருந்த அந்த எழுத்தாளர் அப்பின்புலத்திலிருந்து அது தெளிவாக்கப்பட்டிருந்த காரணத்தினால் அதை வலியுறுத்துவது தேவை இல்லாததாக இருந்தது. மறுபுறத்தில், பைஜவனன் மிகத்தொன்மையான காலத்தில் வாழ்ந்தான் என்பதைத் தெரிந்து வைத்திருந்ததனாலும் அப்பின்புலத்தில் அந்த உண்மை மிகத்தெளிவாக கூறப்படவில்லை என்பதனாலும் புரா என்ற சொல்லைச்சேர்ப்பது பொருத்தமானது என்றும் அப்பின்புலம் சம்பந்தமாக அது தேவையற்றது என்பதனால் சூத்திரன் என்ற சொல்லைத் தவிர்ப்பது அவசியமென்றும் அந்த எழுத்தாளர் கருதியிருக்கக்கூடும்.

இந்த விளக்கம் நன்கு ஆதாரப்பட்டது என்றால் மகாபாரதத்தின் சாந்தி பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள இந்த நபர் பைஜவனன் என்றும் இந்த பைஜவனன் ஒரு சூத்திரனாக இருந்தான் என்றும் நிரூபிக்கப்பட்டதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

II

நமது அடுத்த பரிசீலனைக்கு உரிய பிரச்சினை பைஜவனனை அடையாளம் காட்டுவதாகும். யார் இந்த பைஜவனன்?

யஸ்கரின் நிருக்தத்தில் நமக்கு ஒரு குறிப்பைத் தருவதுபோல் தோன்றுகிறது. நிருக்தம் ii.24’இல் யஸ்கர் கூறுகிறார்: (லஷ்மண் ஸ்ரூப், நிகண்டும் நிருக்தமும் பக். 35-36)

“முனிவரான விசுவாமித்திரர் பைஜவனனின் மகனான சுதாசனின் புரோகிதராக இருந்தார். விசுவாமித்திரர் அனைவருக்கும் நண்பராக இருந்தார். அனைவரும் ஒன்றாக சென்றனர். சுதாசனன் தாராளமாக வாரி வழங்கும் வள்ளலாக இருந்தான். பிஜவனனின் மகன்தான் பைஜவனன். மேலும் பிஜவனன், அவனுடைய வேகம் பொறாமைப்படத்தக்கதாக இருந்தது, அவனுடைய நடை ஒப்பற்றதாக இருந்தது.”

யஸ்கரின் நிருக்தத்திலிருந்து நாம் இரு முக்கியமான உண்மைகளைப் பெறுகிறோம்:

  • பைஜவனன் என்றால் பிஜவனனின் மகன் என்று அர்த்தம்.
  • சுதாசன் பைஜவனனின் மகனாவான்.

யஸ்கரின் உதவியுடன் இக்கேள்விக்கு நம்மால் பதிலளிக்க முடிகிறது. மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் வரும் பத்தியில் குறிப்பிடப்படும் பைஜவனன் என்பதே பதிலாகும்.

அடுத்த கேள்வி என்னவெனில், யார் இந்த சுதாசன், அவனைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? பிராமண இலக்கியத்தைத் தேடிப் பார்த்ததில் சுதாசன் என்ற பெயர் கொண்ட மூன்று நபர்கள் இருந்ததை அறிகிறோம். ஒரு சுதாசன் ரிக்வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. அவனுடைய குடும்பத்தைப் பற்றிய விபரங்கள் ரிக் வேதத்தின் (வில்சனின் ரிக்வேதம், தொகுதி IV (புனா மறுபதிப்பு), பக்.146) பின்வரும் செய்யுள் பத்திகளில் வழங்கப்படுகின்றன:

1) ரிக்வேதம், VII 18.21. – “பல்லாயிரக்கணக்கான ராட்சசர்களை அழித்தவரான பராசரரும், வசிஷ்டரும், தங்களுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர்களான அவர்கள், ஒவ்வொரு வீட்டிலும் தங்களைப் பெருமைப்படுத்தியுள்ளனர். ஆகவே நற்செயல் புரிபவரே, அவர்களுடைய நட்பை உதாசீனப்படுத்தாதீர்கள். எனவே பக்திமான்களின் மீது வளமான நாட்கள் விடியலை ஏற்படுத்துவதாக.”

2) ரிக்வேதம் VII 18.22 – “பைஜவனனின் மகனும் தேவவதனின் பேரனுமான சுதாசனின் தாராளகுணத்தை இருநூறு பசுக்களையும், இரு மனைவியருடன் இரு ரதங்களையும் கொடையாகக் கொடுத்த தாராள குணத்தைப் பாராட்டும் போது, அந்த வெகுமதிகளுக்குத் தகுதியுடையவனான நான் ஓ, அக்னி, பலிபீடத்தில் ஊழியம் செய்யும் புரோகிதரைப் போல் உங்களை வலம் வருகிறேன்.”

3) ரிக்வேதம், VII 18.23 – “தங்கத்தாலான சேணங்களை அணிந்த நான்கு குதிரைகள் கடினமான சாலையில் சீராகச் செல்லுகின்றன. புவியெங்கும் கொண்டாடப்பட்ட பிஜவனனின் மகன் சுதாசன் எனக்கு வெகுமதிகள் அளித்தான். உணவையும் வாரிசுகளையும் பெறுவதற்கு ஒரு மகனை வழங்குவாயாக.”

4) ரிக்வேதம், VII 18.24 – “அவன் இந்திரனைப் போன்றவன் என்று கருதி ஏழுலகமும் சுதாசனைப் பாராட்டுகின்றன; அண்ட சராசரங்கள் முழுவதும் அவன் புகழ் பரவுகிறது; வரையா வள்ளன்மையுடைய அவன் ஒவ்வொரு தலைசிறந்த நபருக்கும் செல்வத்தை வாரிவழங்குகிறான். பாயும் நதிகள் அவனுக்காகப் போரில் யுதிமதியை அழித்துள்ளன.”

5) ரிக்வேதம், VII 18.25 – “சுதாசனின் தந்தையான நிவோதாசனுக்கு நீங்கள் செய்ததைப் போல இந்த அரசகுமாரனுக்கும் சடங்குகளின் தலைவர்களான மருத்துகள் சேவை புரிகின்றனர்; பிஜவனனின் பக்தியுள்ள மகனின் வேண்டுதல்களை நிறைவேற்றுங்கள், அவனுடைய ஆரோக்கியம் நலிந்துவிடாமல், அழிந்துவிடாமல் இருப்பதாக.”

இன்னும் இருவருடைய விபரங்கள் விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்படுகின்றன. ஒரு சுதாசன் சகரனின் வழித்தோன்றல் என்றமுறையில் இயல் IVஇல் குறிப்பிடப்படுகிறான். இந்த சுதாசனை சகரனுடன் தொடர்புபடுத்தும் மரபு வரிசை பின்வருமாறு: (வில்சனின் விஷ்ணு புராணம், பக். 377-380)

“கஷியபரின் புதல்வியான சுமதியும், ராஜா விதர்ப்பனின் புதல்வியான கேசினியும் சகரனின் இரு மனைவிகளாக இருந்தனர். வாரிசுகள் இல்லாத அந்த மன்னன் ஔர்வன் முனிவரின் உதவியை மிகவும் பக்தி சிரத்தையுடன் நாடினான். அந்த முனிவரும் பின்வரும் வரமளித்தார்: ஒரு மனைவி ஒரு மகனை ஈன்றெடுப்பாள், அவனே அவனது இனத்தை உயர்த்திப் பிடிப்பான். இன்னொரு மனைவி அறுபதாயிரம் புதல்வர்களை ஈன்றெடுப்பாள், இந்த வரங்களில் அந்த இரு மனைவிகளும் தங்களுக்கு வேண்டியதைத் தேர்வுசெய்து கொள்ளலாம் என்று அந்த முனிவர் கூறிவிட்டார். ஒரே ஒரு மகனை ஈன்றெடுக்க கேசினி தேர்வுசெய்தாள்; சுமதி அறுபதாயிரம் மகவுகளை ஈன்றெடுக்கும் வரத்தைத் தேர்வுசெய்தாள்; சிறிதுகாலத்திற்குப் பின்னர் கேசினி அசமஞ்சகன் என்ற மகனைப் பெற்றெடுத்தாள். அந்த இளவரசன் மூலமாக அந்த வம்சம் தழைத்தது; வினதாவின் மகளான சுமதி அறுபதாயிரம் புதல்வர்களை ஈன்றெடுத்தாள். அசமஞ்சகனின் மகன்தான் அனுசுமத்.

“அனுசுமத்தின் மகன்தான் திலீபன்; அவனுடைய மகன் பகீரதன். இவன்தான் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான். அதனால் தான் கங்கை பாகீரதி என்றழைக்கப்படுகிறாள். பகீரதனின் புதல்வன்தான் கருதன்; அவனுடைய மகன் நபகன்; அவனுடைய மகன் அம்பரீஷன்; அவனுடைய மகன் சிந்துத்விபன்; அவனுடைய மகன் ஆயுதஷ்வன்; அவனுடைய மகன் ரிதுபர்னன்; சூதாட்டத்தில் தேர்ந்தவனான நளன் அவனது நண்பன். ரிது பர்னனின் மகன் சர்வகாமன்; அவனுடைய மகன் சுதாசன். அவனுடைய மகன் சௌதாசன், அவனுக்கு மித்திரசகன் என்ற பெயரும் உண்டு.”

இயல் XIX இல் புருவின் வழித்தோன்றல் என்று மற்றுமொரு சுதாசன் குறிப்பிடப்படுகிறான். புருவுடன் சுதாசனைத் தொடர்புபடுத்தும் மரபுவழி பின்வருமாறு:

“புருவின் மகன் ஜனமேஜயன்; அவனுடைய மகன் பிராசின்னவாதன்; அவனுடைய மகன் பிரவீரன், அவனுடைய மகன் மனசியன்; அவனுடைய மகன் பாயதன்; அவனுடைய மகன் சுதும்னன்; அவனுடைய மகன் பஹூகவன்; அவனுடைய மகன் சமியாதி; அவனுடைய மகன் பமியாதி; அவனுடைய மகன் ரவுத்ரஷ்வன்; அவனுக்குப் பத்து புதல்வர்கள்: ரிதேயு,கக்ஷேயு, ஸ்தண்டிலேயு, கிரித்தேயு, ஜலேயு, ஸ்தலேயு, தானேயு, வனேயு மற்றும் விராதேயு. ரிதேயுவின் மகன் ரண்டினரன். அவனுடைய புதல்வர்கள் தன்சு, அப்ரிதரன் மற்றும் துருவன். இதில் இரண்டாமவரின் மகன் கண்ணுவன். அவனுடைய மகன் தான் மேதாதிதி. அவனுடைய வழித்தோன்றல்கள்தான் தகாண்வாயன பிராமணர்கள் ஆவர். தன்சுவின் மகன்தான் அனிலன் அவனுக்கு நான்கு புதல்வர்கள், அவர்களில் மூத்தவன்தான் துஷ்யந்தன். துஷ்யந்தனின் மகன்தான் சக்கரவர்த்தி பரதன்;

பரதனுக்கு வெவ்வேறு மனைவியர் மூலம் ஒன்பது புதல்வர்கள் பிறந்தனர். ஆனால் அவர்களனைவரையும் அவர்களது அன்னையர்களே கொன்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் யாரும் தன்னுடைய சாயலில் இல்லை என்று பரதன் கூறியதே காரணம். அப்பெண்கள், தங்களுடைய கணவன் தங்களை விட்டுப் பிரிந்துவிடுவாரோ என்று அஞ்சியதனாலேயே அவ்வாறு செய்தனர். தனக்கு புதல்வர்கள் பிறந்தும் பயனில்லாமல், போகவே பரதன் மருத்துகளுக்கு வேள்வி நடத்தினான். அவர்கள் அவனுக்கு ஊதத்தியின் மனைவி மமதையின் மூலம் பிரகஸ்பதியின் புதல்வனான பரத்வாஜனை வழங்கினர்,....

அவனுக்கு விததன் என்றும் பெயரிடப்பட்டது. பரதனின் புதல்வர்கள் பிறந்தும் பயனற்றுப்போனதைக் குறிக்கும் வகையில் அப்பெயர் இடப்பட்டது. விததனின் மகனான பவன் மனியு; அவனுக்குப் பல புதல்வர்கள் பிறந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் பிருஹத்க்ஷத்ரன், மகாவீர்யன், நரன் மற்றும் கர்க்கன், நரனின் மகன் சாங்கிரிதி; அவனுடைய புதல்வர்கள் ருசிகரதி, ரத்திதேவன், கர்க்கனின் மகன் சினி; அவர்களது வழித்தோன்றல்கள் கர்க்கியாக்கள் என்றும் சய்னியார்கள் என்றும் அழைக்கப்பட்டனர். பிறப்பால் சத்திரியர்களாக இருந்தபோதிலும் அவர்கள் பிராமணர்களாக மாறினர்.

மஹாவீர்யனின் மகன் உருக்ஷயன், அவனுக்கு மூன்று புதல்வர்கள், தீரய்யருனன்,புஷ்கரின் மற்றும் கபி. இவர்களில் கடைசி நபர் பிராமணனாக மாறினான். பிருஹத்க்ஷத்ரன் மகன் சுகோத்ரன், அவனுடைய மகன் ஹஸ்தின், ஹஸ்தினாபுரத்தைத் தோற்றுவித்தவன் இவனே. ஹஸ்தினின் மகன்கள் அஜமிதன், தீவிமிதன் மற்றும் புருமிதன். அஜிமிதனின் ஒரு மகன் கன்வன், அவனுடைய மகன் மேதாதிதி, அவனுடைய இன்னொரு மகன் பிரிஹதிசு. அவனுடைய மகன் பிரிஹத்துவசு. அவன் மகன் பிரிஹத்கர்மன். அவனுடைய மகன் ஜயத்ரதன். அவனுடைய மகன் விஷ்வஜித். அவனுடைய மகன் சேனஜித்.

அவனுடைய புதல்வர்கள் ருசிராசுவன், காசியன், திரிததனுஷ், வசாஹனு. ருசிராசுவனின் மகன் மேதாதிதி, அவனுடைய மகன் பிரிதுசேனன்; அவனுடைய மகன் பாரன்; அவனுடைய மகன் நீபன்; அவனுக்கு நூறு புதல்வர்கள். அவர்களில் முக்கியமானவனான சமரன் கம்பிலியாவின் மன்னனாக இருந்தான். சமரனுக்கு பாரன், சம்பரன், சதசுவன் என்ற மூன்று புதல்வர்கள். பாரனின் மகன் பிரிது. அவனுடைய மகன் சுக்ருதி; அவன் மகன் விபரத்திரன்; அவன் மகன் அனுஹன். அவன் வியாசரின் மகனான சுகரின் மகள் கிரித்வியை மணம் செய்து கொண்டான். அவள் பீமதத்தனை ஈன்றெடுத்தாள். அவனுடைய மகன் விஸ்வக்ஷேனன். அவனுடைய மகன் உதக்சேனன். அவனுடைய மகன் பால்லதன்.

திவிமிதன் மகன் யவீனரன்; அவனுடைய மகன் திரிதிமத்; அவனுடைய மகன் சத்தியதிருதி; அவனுடைய மகன் திரிதனேமி; அவனுடைய மகன் சுபர்ஷ்வன்; அவனுடைய மகன் சுமாதி; அவனுடைய மகன் சன்னதிமதி; அவனுடைய மகன் கிரிதரன்; அவனுக்கு ஹிரண்யநபகன் யோகாவின் தத்துவத்தைக் கற்றுத் தந்தான். அவன் இருபத்தி நான்கு சம்ஹிதைகளை (அல்லது சுருக்கப்பதிப்பை) தொகுத்தான். அது கிழக்கிந்திய பிராமணர்களுக்கானது. அவர்கள் சாம வேதம் கற்பவர்கள். கிரிதனின் மகன் உக்ரயுதன், அவனுடைய வல்லமையினால் க்ஷத்திரியர்களின் நிபா இனம் அழிக்கப்பட்டது. அவனுடைய மகன் க்ஷேம்யன்; அவனுடைய மகன் சுவிரன்; அவனுடைய மகன் நிரிபஞ்சயன். அவனுடைய மகன் பஹூரதன். இவர்கள் அனைவரும் பவுரவர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

அஜமிதனுக்கு நளினி என்ற மனைவி இருந்தாள். அவள் மூலமாக அவனுக்கு நிலன் என்ற மகன் பிறந்தான். அவனுடைய மகன் சந்தி. அவனுடைய மகன் சுசாந்தி. அவனுடைய மகன் புருஜனு. அவனுடைய மகன் சாக்சு. அவனுடைய மகன் ஹரியஷ்வன்; அவனுக்கு முத்கலன், சிரிஞ்சயன், பிரிஹதிஷூ, பிரிவீரன், காம்பிலியன் என்று ஐந்து புதல்வர்கள் இருந்தனர். அவர்களுடைய தந்தை கூறினார்: எனது இந்த ஐந்து புதல்வர்களும் நாடுகளைப் பாதுகாக்கவல்லவர்கள். ஆகவே அவர்கள் பாஞ்சாலர்கள் என்று அழைக்கப்பட்டனர். முட்கலனின் வழித்தோன்றல்கள்தான் மௌத்கல்லிய பிராமணர்கள்; அவனுக்கு இரு குழந்தைகள். இரட்டையர்கள். ஒரு மகன், ஒரு மகள், திவோதாசன், அகலிகை ஆகியோரே அவர்கள்.

திவோதாசனின் மகன் மித்ராயு; அவனுடைய மகன் சியவனன்; அவனுடைய மகன் சுதாசன், அவன் சகதேவன் என்றும் அழைக்கப்பட்டான்; அவனுடைய மகன் சோமாகன்; அவனுக்கு நூறு புதல்வர்கள், மூத்தவன் பெயர் ஜன்ட்டு, இளையவன் பெயர் பிரிஷதன். பிரிஷதனின் மகன் துருபதன். அவனுடைய மகன் திரிஷ்டத்யும்னன். அவனுடைய மகன் திரிஷ்டகேது.

அஜமிதனின் இன்னொரு பெயர் ரிக்ஷன்; அவனுடைய மகன் சம்வருணன்; அவனுடைய மகன் குரு; புனிதத்தலமான குருக்ஷேத்திரத்துக்குத் தனது பெயரை அவன் வழங்கினான்; அவனுடைய புதல்வர்கள் சுதனுஷ்; பசிக்ஷித் மற்றும் பலர்; சுதனுஷூவின் மகன் சுஹோத்ரன்; அவனுடைய மகன் சியவனன்; அவனுடைய மகன் கிரிதகன்; அவனுடைய மகன் உபரிசரவசு; அவனுடைய மகன் பிருகத்திரதன், பிரதியக்ரன், குஷம்பன், மாவெல்லன், மத்சியன் உள்ளிட்ட ஏழு குழந்தைகள். பிருகத்திரதனின் மகன் குசக்ரன்; அவனுடைய மகன் ரிஷபன்; அவனுடைய மகன் புஷ்பவத்; அவனுடைய மகன் சத்தியதிரிதன்; அவனுடைய மகன் சுதன்வன்; அவனுடைய மகன் ஜன்டு; பிருகத்திரனுக்கு இன்னொரு மகன் இருந்தான், இரு பகுதிகளாகப் பிறந்த அவனை ஜரா என்ற ஒரு சிநேகிதி ஓர் உருவமாக்கினாள் (சந்திதா) அவனுக்கு ஜரா சந்தன் என்று பெயரிடப்பட்டது. அவனுடைய மகன் சஹதேவன்; அவனுடைய மகன் சோமபி; அவனுடைய மகன் ஸ்ருதஸ்வரவாஸு; இவர்கள் மகாத நாட்டின் மன்னர்களாக இருந்தனர்;

மூன்று சுதாசன்களும் ஒருவரேதானா அல்லது வெவ்வேறான மூவரா என்ற பிரச்சினையைத் தீர்க்க வசதியாக அந்த மூவரின் உடனடி மூதாதையர் மரபு இணைப்பத்திகளில் கீழே கொடுக்கப்படுகிறது.

ரிக்வேதத்தில் நிலைமை விஷ்ணுபுராணத்தில் சுதாசன்
VII. 18.22 VII. 18.23 VII. 18.25 சாகரன் குடும்பத்தில் புரு குடும்பத்தில்

தேவவதன்

பிஜவனன்

 

சுதாசன்

பிஜவானன்

சுதாசன்

திவோதாசன்=

பிஜவனன்

 

சுதாசன்

ரிதுபர்னன்

சர்வகாமன்

 

சுதாசன்

சௌதாசன்=

மித்திரசகன்

பஹ்வஷ்வன்

திவோதாசன்

 

மித்ராயு

 

சியவனன்

 

சுதாசன்

 

சௌதாசன்

சோமகன்

இந்த அட்டவணையிலிருந்து இரு விஷயங்கள் தெளிவாகத் தெரியவருகின்றன. விஷ்ணுபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுதாசனனுக்கும் ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சுதாசனனுக்கும் எந்த விதமான சம்பந்தமுமில்லை என்பது முதலாவது கருத்து. இரண்டாவது மிகத் தெளிவான விஷயம் என்னவெனில் மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பைஜவனனை பழங்காலத்தில் வாழ்ந்த எவருடனேனும் சம்பந்தப்படுத்தலாம் எனில் அது பைஜவனன் என்று அழைக்கப்பட்ட, ரிக்வேதத்தில் குறிப்பிடப்பட்ட சுதாசனுடன் மட்டுமேயாகும். ஏனெனில் திவோதாசன்

(ரிக் வேதத்தில் இந்த சுதாசனின் மரபுவழியைப் பற்றிய சில சிரமங்கள் உணரப்படுகின்றன. திவோதாசனுடன் தேவவதனை அடையாளம் காட்டுவதன் மூலம் இதைச் சமாளிக்க முயலப்படுகிறது. செய்யுள்கள் 22, 23 மற்றும் 25ன் பல்வேறு வாசகங்களின் காரணமாக இச்சிரமம் தோன்றியுள்ளது. இச்செய்யுள்களை யாரும் முறையாகச் சேகரிக்கவில்லைபோல் தோன்றுகிறது.சித்ரவ சாஸ்திரியின் ரிக் வேதப் பதிப்பில் பிஜவனன் முழுமையாக இடம்பெறுகிறான். சத்வலேகரின் பதிப்பிலும் பைஜவனன் முழுமையாக இடம்பெறுகிறான். 22 மற்றும் 23ஆம் செய்யுளில் பைஜவனனையும் 25ல் பிஜவனனையும் வில்சன் இடம்பெறச் செய்திருக்கிறார். வில்சனின் வாசகம் துல்லியமானதுபோல் தோன்றுகிறது. யஸ்கர் கூட, தமது நிருக்தத்தில் பைஜவனன் இருந்துள்ளதாகத் தெரிவிக்கிறார். அதை அவர் விளக்கவும் முயல்கிறார். செய்யுள் 25ல் வில்சனின் வாசகம் சரியானதாக இருக்குமானால் எந்தச் சிரமமும் தோன்றாது. அப்போது பிஜவன, திவோதாசனின் மற்றுமொரு பெயராகவும், பைஜவனன் சுதாசனின் மற்றுமொரு பெயராகவும் தோன்றக்கூடும்.) என மற்றோரு பெயரில் அழைக்கப்பட்ட பிஜவனனின் மகன் அவனேயாவான்.

அதிருஷ்டவசமாக எனது முடிவும் பேராசிரியர் வெபரின் முடிவும் ஒரேமாதிரியானவையாக உள்ளது. எனது ஆய்வுக் கட்டுரை ஆதாரமாகக் கொண்டுள்ள மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் வரும் பத்தியின் மீது கருத்துக் கூறும் பேராசிரியர் வெபர் (முய்ர், தொகுதி I,பக்கம்.366.) குறிப்பிடுவதாவது,

“பைஜவனன், அதாவது தனது வேள்விகளுக்காக மிகவும் புகழ்பெற்று விளங்கிய, விசுவாமித்திரருக்குப் புரவலனாக இருந்ததாகவும் வசிஷ்டருக்கு எதிரியாக இருந்ததாகவும் ரிக் வேதத்தில் கூறப்பட்டிருப்பவனாகிய சுதாசன், ஒரு சூத்திரன் என்று பதியப் பெற்ற அற்புதமான பாரம்பரியம் இங்கு உள்ளது.”

பேராசிரியர் வெபர் துரதிருஷ்டவசமாக இப்பத்தியின் முக்கியத்துவத்தை முழுமையாக உணரவில்லை. இது வேறொரு விஷயம். அவரும்கூட, மகாபாரதத்தில் வரும் பைஜவனனும் ரிக் வேதத்தில் வரும் சுதாசனும் ஒருவரே என்று கருதுவதைக் காண்பது எனது நோக்கத்திற்குப் போதுமானது.

III

பைஜவனன் என்ற சுதாசனைப் பற்றி நமக்கு என்ன தெரியும்.

அவனைப் பற்றிய பின்வரும் விபரங்கள் நமக்குக் காணக்கிடைக்கின்றன:

1) சுதாசன் தாசனோ அல்லது ஆரியனோ அல்ல. தாசர்களும் ஆரியர்களும் அவனது எதிரிகளாக (ரிக் வேதம், VII, 83.1) இருந்தனர். ஆகவே அவன் ஒரு வேத கால ஆரியனாக இருந்தான் என்று இதற்கு அர்த்தமாகும்.

2) சுதாசனின் தந்தைதான் திவோதாசன். அவன் வத்ரியாஷ்வனின் (ரிக் வேதம், IX, 61.2 ) தத்துப்பிள்ளை போல் தோன்றுகிறது. திவோதாசன் ஓர் அரசனாவான். துர்வாசர்கள் மற்றும் யாதுக்கள் (ரிக் வேதம், VI, 61.1; VII, 19.8), ஷம்பாராக்கள் (ரிக் வேதம், I, 130.7), பரவாக்கள் மற்றும் கரஞ்சாக்கள் (ரிக் வேதம், I, 53.10) மற்றும் குங்குகள் (ரிக் வேதம், X, 48) ஆகியோருக்கு எதிராக அவன் பல போர்முனைகளில் சமர்புரிந்தான். துரியவனனுக்கும் திவோதாசன் மற்றும் அவனது கூட்டாளியான ஆயு மற்றும் குத்சனுக்கும் இடையில் ஒரு யுத்தம் நடைபெற்றது. அதில் துரியவனன் வெற்றிவாகை சூடினான். (ரிக் வேதம், I. 53, 8; VI. 18.13)

ஒரு சமயத்தில் குறிப்பாக துரியவனன் யுத்தத்தில் இந்திரன் அவனுக்கு எதிரியாக இருந்ததுபோல் தோன்றுகிறது. அவனுடைய புரோகிதன் பரத்வாஜன் (ரிக் வேதம், I, 116.18). அவனுக்கு திவோதாசன் பல வெகுமதிகளை வழங்கினான். (ரிக் வேதம், VI, 16.5) திவோதாசனுக்கு (ரிக் வேதம், VI, 18.13) எதிராக துரியவனனுடன் சேர்ந்து பரத்வாஜன் துரோகியின் பாத்திரத்தை வகித்ததாகத் தோன்றுகிறது.

சுதாசனின் தாயைப்பற்றி எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் சுதாசனின் மனைவியைப் பற்றி ஒரு குறிப்பு இருக்கிறது. அவனுடைய மனைவியின் பெயர் சுதேவி (ரிக் வேதம், I, 112.19) என்று கூறப்படுகிறது. அவளை சுதாசனுக்காக அச்சுவினிகள் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

3) சுதாசன் ஓர் அரசனாக இருந்தான். அவனது முடிசூட்டு விழாவை பிரம்மரிஷியான வசிஷ்டர் நடத்திவைத்தார்.

மகாபிஷேக விழாவை நடத்திய மன்னர்களின் பட்டியலையும் அதை நடத்திவைத்த புரோகிதர்களின் பட்டியலையும் ஐத்ரேய பிராமணம் வழங்குவது வருமாறு:

“மனுவின் மகனான சரியாதிக்கு இந்த விழாவுடன் பிருகுவின் மகனான சியவனன் முடிசூட்டினான். பின்னர், சரியாதி புவியெங்கும் சென்று வெற்றிவாகை சூடினான். அசுவமேதக் குதிரையையும் பலிக்கொடுத்தான். தேவர்களும் ஆச்சாரியரும் நடத்திய பலிசடங்கின் போதும் கலந்து கொண்டான்.”

“இந்த விழாவுடன் பர்வதனும் நாரதரும், அம்பஷ்தியனுக்கு முடிசூட்டினர். பின்னர் அம்பஷ்தியன் பூவுலகின் கடைக்கோடி வரை சென்று எல்லா இடங்களிலும் வெற்றிவாகை சூடினான். தனது அசுவமேதக் குதிரையையும் பலிகொடுத்தான்.”

“இந்த விழாவுடன் பர்வதனும் நாரதரும், உக்ரசேனனின் மகனான யுதாமஸ்ரௌஷ்டிக்கு முடிசூட்டினர். பின் யுதாமஸ் ரௌஷ்டி பூவுலகின் கடைக்கோடி வரை சென்று எல்லா இடங்களிலும் வெற்றிவாகை சூடினான். தனது அசுவமேதக் குதிரையையும் பலிகொடுத்தான்.”

“இத்தொடக்க விழாவுடன் புவனனின் மகனான விஷ்வகர்மனுக்கு கசியபர் முடிசூட்டினார். பின்னர் விஷ்வகர்மன் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்று எல்லா இடங்களிலும் வெற்றிவாகை சூடினாள். அசுவமேதக் குதிரையையும் பலி கொடுத்தான்.”

“பின்வரும் செய்யுளை விஸ்வகர்மனுக்காக இப்பூமி பாடியதாகக் கூறுகின்றனர்:

“எந்த மனிதனும் என்னை தானமாகக் கொடுக்க அனுமதிக்கப்படுவதில்லை (மார்டின் ஹாக், தொகுதி II, தொகுதி 523-524). ஓ, விஷ்வகர்மனே, நீ என்னை தானமாகக் கொடுத்துவிட்டபடியால் நான் நடுக்கடலில் குதிப்பேன். கசியபருக்கு நீ கொடுத்த வாக்குறுதி வீணாயிற்று ( மார்டின் ஹாக், தொகுதி II, தொகுதி 523-524).

இந்த விழாவுடன் பிஜவனனின் மகனான சுதாசனுக்கு வசிஷ்டர் முடிசூட்டினார். பின்னர் சுதாசன் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்று எல்லா இடங்களிலும் வெற்றிவாகை சூடினாள். அசுவமேதக் குதிரையையும் பலி கொடுத்தான்.”

“இந்த விழாவுடன் அவிக்ஷித்தின் மகனான மருத்தனுக்கு அங்கிராசனின் மகனான சம்வர்த்தன் முடிசூட்டினான். பின்னர் மருத்தன் உலகின் மூலைமுடுக்கெல்லாம் சென்று எல்லா இடங்களிலும் வெற்றிவாகை சூடினாள். அசுவமேதக் குதிரையையும் பலி கொடுத்தான்.”

இப்பட்டியலில் சுதாசனைப் பற்றியும் அவனுடைய முடிசூட்டு விழாவை வசிஷ்டர் நடத்தி வைத்ததைப் பற்றியும் சிறப்பாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ரிக் வேதத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, புகழ்பெற்ற தசரஞ்ணா யுத்தம் அல்லது பத்து மன்னர்களுடனான போரில் சுதாசன் வெற்றி வீரனாகத் திகழ்ந்தான். ரிக்வேதத்தின் ஏழாவது மண்டலத்தின் பல்வேறு சூக்தங்களில் இப்புகழ்பெற்ற போரைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

சூக்தம் 83 கூறுவதாவது:

i) “இந்திரா, வருணா, நீங்கள் இதுவரை தாக்கப்படாத பேதனை உங்களுடைய அழிவுகரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கி சுதாசனைப் பாதுகாத்தீர்கள்; போர்க்காலத்தில் இந்த திரித்சுசின் வேண்டுகோளுக்கு செவிமடுங்கள். அப்போதுதான் என்னுடைய ஊழியம் அவர்களுக்குப் பயனைப் பெற்றுத்தரும்.”

ii) “போர்க்களத்தில் செல்வம் சேர்ப்பதற்கும், பத்து ராஜாக்கள் தாக்கும்போது திரித்சுடன் சேர்த்து சுதாசனையும் நீங்கள் பாதுகாக்கவும் உங்களிருவரையும் (இந்திரனையும் வருணனையும்) சுதாசனும் திரித்சுகம் அழைக்கின்றனர்.”

iii) “சுதாசனையும் அவனுக்கு ஆதரவாக இருந்த இந்திரனையும் வருணனையும் எதிர்த்து ஒன்றுபட்ட அந்த பத்து மத நம்பிக்கையற்ற ராஜாக்களும் வெற்றிபெற முடியவில்லை; சடங்குகளை நடத்தியவர்களின் புகழாரங்களும், பலி பூஜையில் உணவளித்தவர்களின் வேண்டுதல்களும் பலனளித்தன. அவர்களுடைய பலி நிகழ்ச்சியில் கடவுளர்கள் பிரசன்னமாயிருந்தனர்.”

iv) “உங்களில் ஒருவர் போரில் பகைவர்களை அழிக்கிறார், மற்றொருவர் மத வழிபாடுகளைப் பாதுகாக்கிறார். எங்களுக்கு அனுகூலங்களை வாரிவழங்கும் உங்களைப் புகழுரைகளால் வழிபடுகிறோம்; இந்திரனே, வருணனே, எங்களுக்கு மகிழ்ச்சியைத் தாருங்கள்.”

சூக்தம் 33 கூறுவதாவது:

  • “அவமானப்பட்ட அவர்கள் உக்கிரமான இந்திரனை வெகுதொலைவிலிருந்து பானத்தைப் பெறுவதற்காக கொணர்ந்தனர். சுதாசனின் சோமபானத்தை அகப்பையில் எடுத்து இந்திரன் குடித்துக் கொண்டிருந்தான். வயதாவின் மகனான பஷதியும்னனின் பொங்கிக்கொண்டிருந்த சோமபானத்தை விட்டுவிட்டு விசிஷ்டர்களிடம் அவசரமாகச் சென்றான்.”
  • “இதே முறையில் அவர்களது உதவியுடன் சுதாசன் சிந்துநதியை எளிதில் கடந்தான். இதேமுறையில் அவர்கள் மூலமாக அவன் தனது எதிரிகளைக் கொன்று குவித்தான்; ஆகவே இதேமுறையில் உங்களுடைய பிரார்த்தனைகள் மூலமாக வசிஷ்டர்கள், பத்து மன்னர்களுடனான போரில் சுதாசனைக் காக்குமாறு இந்திரனை வேண்டினர்.”

“பத்து ராஜாக்களுடனான போரில், தாகத்தினால் அவதிப்பட்டுக் கொண்டு, மழை வரம்வேண்டி, திரித்சுசின் ஆதரவு பெற்று, வசிஷ்டர்கள் இந்திரனை சூரியன்போல் பிரகாசிக்கச் செய்தனர். தன்னைப் புகழ்ந்துபோற்றிய வசிஷ்டரின் புகழுரைகளை செவிமடுத்த இந்திரன் திரித்சுசுக்கு ஒரு பரந்த பிராந்தியத்தை வெகுமதியாக வழங்கினான்.”

சூக்தம் 19 கூறுவதாவது:

i) “துணிச்சல் மிக்க இந்திரனே, உன்னுடைய சக்தியை எல்லாம் பயன்படுத்தி நீ காணிக்கைகள் செலுத்துபவனான சுதாசனைப் பாதுகாத்தாய், இப்பூமியைக் கைவசப்படுத்துவதற்காக எதிரிகளுடனான போரில் புருக்குத்சாவின் மகனான திரசதஸ்யுவையும் புருவையும் நீ பாதுகாத்திருக்கிறாய்.”

ii) “கொடைவள்ளலும், காணிக்கை செலுத்துபவனுமான சுதாசனுக்கு நீ அளித்துவரும் உதவிகள் எல்லையற்றவை, ஓ இந்திரனே, அருளைப் பொழிபவனே, நான் உன்னுடைய ஆற்றல்மிக்க குதிரைகளுக்கு ஊழியம் செய்வேன். எங்களுடைய பிரார்த்தனைகள் பலசாலியாகிய உன்னைச் சென்றடைவதாக, உனக்குத்தான் பல சடங்குகள் செய்யப்படுகின்றன.”

ஏழாவது மண்டலத்தின் சூக்தம் கூறுவதாவது:

i) “வந்தனைக்குரிய இந்திரன் ஆழமான பருஷ்னி நதியை சுதாசன் கடந்து செல்லக்கூடியதாக ஆக்கினான்; வேள்வி நடத்துபவனைப் பற்றிய கடுமையான பழிச்சொற்களை நதிகளைப் பற்றிய தூஷணைகளாக மாற்றினான்.”

ii) “பலியில் விடாமுயற்சியுடன் முந்திக்கொண்டிருந்த துர்வாஷன் செல்வம்வேண்டி சுதாசனிடம் சென்றான்; ஆனால் எப்படி மீன்கள் நீருக்குள் முடங்கிக்கிடக்கின்றனவோ அப்படி பிருகுக்களும் துருகியுக்களும் பதுங்கியிருந்து அவர்களைத் தாக்கினர். இவ்வாறு எல்லா இடங்களுக்கும் சென்று கொண்டிருந்த இந்த இருவரில் சுதாசனின் நண்பனான இந்திரன் தனது நண்பனை மீட்டான்.”

iii) “யாரொருவர் படையல் படைக்கின்றாரோ, யாரொருவர் புனிதச் சொற்களை உச்சரிக்கின்றாரோ, யார் கழுவாயிலிருந்து விலகியிருக்கிறாரோ, யார் ஊதுகுழலைக் கையில் பிடிக்கின்றாரோ, பலிகள் மூலம் உலகிற்கு யார் மகிழ்ச்சியைக் கொணருகிறாரோ, அவர் கொள்ளையர்களிடமிருந்து ஆரியர்களின் கால்நடைகளைப் பெற்றுத்தந்த, எதிரிகளைக் கொன்றுகுவித்த இந்திரனைப் பெருமைப்படுத்துகின்றவர் ஆவார்”.

iv) “கெட்ட எண்ணம் கொண்டவர்களும் அற்பர்களுமான சுதாசனின் எதிரிகள் அடக்கமாகப் பாய்ந்து கொண்டிருந்த பருஷ்னி நதியைக் கடக்கும்போது அதனுடைய கரைகளை உடைத்துவிட்டனர்; ஆனால் தனது மேன்மையால் புவியெங்கும் சர்வவியாபகமாக நிறைந்திருக்கும் கடவுளும், சயமனாவின் மகனான காவியும் வீழ்ந்துபடும் பலியாளைப் போன்று மரண நித்திரையில் ஆழ்ந்திருக்கின்றனர்.”

v) “நீர் தனது வழக்கமான பாதையில் பருஷ்னி நதியில் சென்றது, அதற்கப்பால் அந்தநீர் எங்கும் அலையவில்லை; மன்னனின் வேகமான போக்கு எளிதில் சென்றடையக்கூடிய இடங்களுக்கெல்லாம் சென்றது, இந்திரனோ சோம்பிப் பேசித் திரியும் எதிரிகளையும் அவர்களின் எண்ணற்ற வழித்தோன்றல்களையும் சுதாசனுக்கு அடிமைகளாக்கினான்.”

vi) “பிரிஷ்னியால் அனுப்பப்பட்ட பலவண்ணக் கால்நடைகளில் சவாரிசெய்யும் மருத்துகள், தங்களது நண்பனான இந்திரனுடன் செய்துகொண்ட வாக்குறுதியை நினைவு கூர்ந்து, மேய்ச்சலிலிருந்து வரும் கால்நடைகளைப் போன்று வந்தனர். அவர்கள் மேய்ப்பன் இன்றிவிடப்பட்டபோது, மகிழ்ச்சியில் திளைத்த நியுத் புரவிகள் அவர்களை எதிரிகளிடமிருந்து விரைவில் பாதுகாத்துக் கொணர்ந்தன.”

vii) “ராஜாவுக்கு உதவுவதற்காக வீரனான இந்திரன் மருத்துகளை உருவாக்கினான், புகழடைய வேண்டும் என்று பேராசை கொண்டிருந்த அவர்கள் புருஷ்னி நதியின் இரு கரைகளிலும், பலிபீடத்தில் புனிதப் புல்லை எறியும் நல்ல தோற்றமுடைய பூசாரியைப் போன்று நூற்றி இருபது பேரைக் கொன்று குவித்தான்.”

vii) “இடிமின்னலைத் தாங்கியிருப்பவனாகிய நீஷூரதன், கவஷன், விருத்தன், பின்னர் துருஹியு ஆகியோரை நீரில் மூழ்கடித்தாய்; ஏனெனில் இந்திரனே, அவர்கள் உனக்காகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள். உன் புகழ்பாடுபவர்கள், உன்னுடைய நட்பை விரும்பி, அதைப் பெருமையாக நினைப்பவர்கள்.

viii) “தனது வலிமையைப் பயன்படுத்தி இந்திரன் அவர்களுடைய பலமிக்க நிலைகளனைத்தையும், அவர்களுடைய ஏழுவகையான நகரங்களையும் தரைமட்டமாக்கினான், அனுவின் மகனுடைய மாளிகையை திரித்சுவுக்கு அவன் கொடுத்துள்ளான். அதை ஈடுசெய்யும் விதமாக இந்திரனே, தவறாகப் பேசும் மனிதனை நாங்கள் போரில் வெற்றி கொள்ள அருள்வாயாக.”

ix) “அனுஸ், துருஷியுஸ் ஆகியோரின் போர்வீரர்கள், பக்திமானான சுதாசன் மீது பகைகொண்டு கால்நடைகளை அபகரிக்க விழைந்தனர். அதனால் அறுபத்து ஆறாயிரத்து அறுநூற்று அறுபது வீரர்கள் மடிந்தனர்; இந்திரனின் புகழார்ந்த செயல் இத்தகையவையாகும்.”

x) “பகையுணர்வு கொண்ட இந்த திரித்சுக்கள் அறியாமையினால் இந்திரனுடன் போட்டியிட்டு, மலையிலிருந்து கீழ்நோக்கிப்பாயும் நதிகளைப் போன்று வேகமாக நிர்மூலமாக்கப்பட்டு தலைதெறிக்க ஓடினர். தோல்வியுற்ற அவர்கள் தங்களுடைய உடைமைகலனைத்தையும் சுதாசனுக்கு விட்டுச் சென்றனர்.”

xi) “வீரானான சுதாசனின் பகையுணர்வு கொண்ட எதிரிகளை இந்திரன் இப்புவியெங்கும் சிதறி ஓடச்செய்தான். நைவேத்தியத்தை ஏற்றுக்கொள்பவனான மூத்த இந்திரன் இவன்; சீற்றம் கொண்ட எதிரியின் சீற்றத்தை இந்திரன் குழப்பமடையச் செய்தான். சுதாசனை எதிர்த்து முன்னேறி வந்த எதிரி புறமுதுகிட்டோடினான்.”

xii) “ஒரு மதிப்புவாய்ந்த நன்கொடையை ஓர் ஏழை வழங்கும்படி இந்திரன் செய்தான்; ஓர் ஆட்டைக்கொண்டு ஒரு வயதான சிங்கத்தைக் கொல்லச் செய்தான்; பலிபீடத் தூணின் கூம்புகளை ஓர் ஊசியைக் கொண்டு அறுத்தெறிந்தான்; எதிரியின் செல்வங்களனைத்தையும் சுதாசனுக்குக் கொடுத்தான்.”

xiii) “ஓ இந்திரன், உன்னுடைய எண்ணற்ற எதிரிகள் அடிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உன்னைப் போற்றுவோரைக் குற்றம்சாட்டும் கீழ்ப்படியாத பேதனை ஏதேனும் ஒரு சமயத்தில் நீ அடிமைப்படுத்து; ஓ இந்திரனே, அவனுக்கு எதிராக உன்னுடைய கூர்மையான இடியைச் செலுத்து.”

xiv) “போரில் பேதனை இந்திரன் கொன்றபோது யமுனை நதிக் கரையில் வாழுபவர்களும் திரித்சும் இந்திரனைப் புகழ்ந்து போற்றினர். போரில் கொல்லப்பட்ட குதிரைகளின் தலைகளை இந்திரனுக்குப் பலியாக அஜாஸ், ஷிக்ருஸ், யக்ஷர்கள் ஆகியோர் வழங்கினர்.”

xv) “ஓ இந்திரனே, உனது உதவிகள், பழையனவானாலும் புதியனவானாலும் உனது வெகுமதிகள் மீண்டும் மீண்டும் தோன்றும் விடியலைப்போன்று எண்ண முடியாதவையாகும்; மணியமனனின் மகனான தேவகனை நீ கொன்றாய். உனது சொந்த விருப்பப்படி பரந்த மலையிலிருந்து ஷம்பாரனை கீழே வீசி எறிந்தாய்.”

இப்போரில் சுதாசனை எதிர்த்துப் போட்டியிட்ட மன்னர்கள் வருமாறு: (இப்பட்டியல் சித்ரவ சாஸ்திரியின் பிரசின் சரித்திர கோஷ் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டது, பக்.624. இப்பெயர்களெல்லாம் மன்னர்களின் பெயர்கள்தானா என்பதில் ஒருமித்த கருத்து இல்லை. 13-16 எண்களில் வரும் பெயர்கள்புரோகிதர்களின் பெயர்கள் என்று சாயனாச்சாரியர் கூறுகிறார். 27-29 பற்றியும் ஐயப்பாடுகள் உள்ளன.) 1.ஷினியு, 2.துர்வாசன், 3.துருஹியு, 4.கவஷன், 5.புரு, 6.அனு, 7.பேதன், 8.ஷம்பாரனன், 9.வைகர்னன், 10.மற்றுமொரு வைகர்னன், 11.யது, 12.மத்சியன், 13.பக்தன், 14.பலனான், 15.அலீனன், 16.விஷானின், 17.அஜா, 18.ஷிவா, 19.ஷிக்ரு, 20.யக்ஷன், 21.யுதியமதி, 22.யத்வன், 23.தேவக மனியமனன், 24.சயமனாகா, 25.சுதுகன், 26.உச்சதன், 27.ஸ்ருதன், 28.விரித்தன், 29.மானியு, 30.பிருது.

அந்த யுத்தம் அதனுடைய பெயர் குறிப்பிடுவதை விடவும் மிகப் பெரிய யுத்தமாக இருந்திருக்கவேண்டும். இந்தோ-ஆரியர்களின் வரலாற்றில் அந்த யுத்தம் மிகப்பெரியதொரு சம்பவமாக இருந்திருக்க வேண்டும். வெற்றிவாகை சூடிய சுதாசன் தனது காலத்தின் மிகப் பெரிய வீரனாகத் திகழ்ந்தான் என்பதில் வியப்பேதும் இல்லை (ரிக் வேதத்தில் சுதாசனின் பெயர் 27 இடங்களில் வருகிறது. வேதகாலத்து மக்கள் மதிக்குமளவுக்கு அவன் மிகப்பெரிய வீரனாகத் திகழ்ந்திருக்கிறான்) என்ன காரணத்திற்காக இப்போர் நடைபெற்றது என்பது நமக்குத் தெரியாது. ரிக்வேதத்தில் (VII.83.7) சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன, சுதாசனை எதிர்த்து நின்ற மன்னர்கள் மத நம்பிக்கையற்றவர்கள் என்று விவரிக்கப்படுகின்றனர். இது ஒருவேளை மதம் சம்பந்தப்பட்ட யுத்தமாகவும் இருக்கக்கூடும் என்பதையே இது சுட்டிக்காட்டுகிறது.

IV. ரிக்வேதத்தில் பின்வரும் செய்யுள்கள் தங்களுடைய ரிஷிகளுக்காகக் கீழே குறிப்பிடப்பட்டுள்ள அரசர்கள் இயற்றியதாக சாயனாச் சாரியாரும், பாரம்பரியமும் பிரகடனம் செய்கின்றன:

“விதகாவ்யன் (அல்லது பரத்வாஜன்) X 9, சிந்துத்வீபன், அம்பரிஷன் மகன் (அல்லது துவஷ்த்ரியின் மகனான திரிசிராஸ்) X.75, பிரியமேதனின் மகனான சிந்துக்ஷித்; X.133, பிஜவனனின் மகனான சுதாசன்; X.134, யுவனாசாவின் மகனான மந்தாத்ரி; X.179, உசீனரனின் மகனான சிபி; திவோதாசனின் மகனும் காசி மன்னனுமான பிரதர்த்தன், ரோகிதசுவனின் மகனான, வாசுமனாஸ்; மற்றும் X.148 பிரிதி வைனியன் இயற்றியதாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.”

இப்பட்டியலில் சுதாசனின் பெயர் வேதச் செய்யுள்களை இயற்றுபவனாக இடம்பெற்றுள்ளதைக் காணமுடியும்.

V.9. சுதாசன் அசுவமேத யாகத்தை நடத்தினான். ரிக் வேதம், iii.53இல் இது சம்பந்தமான குறிப்பு உள்ளது:

“கடவுளர்களை உருவாக்குபவரான மாபெரும் ரிஷி, புனிதச் சடங்குகளை முன்னின்று நடத்திவைப்பவர்களைக் கண்காணிப்பவர், தெய்வங்களினால் கவரப்பட்டவர் ஆகிய விஷ்வாமித்திரர், சுதாசனுக்காக வேள்வி நடத்தித் தந்தபோது நீரோடைகளில் நீர் பாய்ந்து செல்வதையே நடத்து நிறுத்தினார்; குஷிகாசுடன் இந்திரனும் மகிழ்ச்சியடைந்தனர்.

“சுதாசனின் குதிரையான குஷிகாசை அணுகுங்கள், அவனை செயல்படத் தூண்டுங்கள், ராஜாவுக்காக செல்வங்களைப் பெற்றுத் தருவதற்கும் வெற்றி பெறுவதற்கும் அதனை அவிழ்த்துவிடுங்கள்; ஏனெனில் தேவர்களின் மன்னனான அவன் கிழக்கிலும், மேற்கிலும், வடக்கிலும் விருத்திரனை துவம்சம் செய்தான். ஆகவே பூமியின் மிகச்சிறந்த பிராந்தியங்களில் அவனை வழிபட சுதாசனை அனுமதியுங்கள்.

VI. பிராமணர்களுக்குத் தானம் செய்வதில் சுதாசன் புகழ்பெற்று விளங்கினான், அவனை அவர்கள் அதிதிக்வா, கொடை வள்ளல்களிலேயே முதன்மையானவன் என்று அழைத்தனர். ரிக் வேதத்தில் வரும் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகள் அவனுடைய கொடைகுணத்தைப் பிராமணர்கள் எவ்வாறு பாராட்டியுள்ளனர் என்பதைக் காட்டுகின்றன:

i.47.6.வாயுவேகத்தில் செல்லும் ஓ அச்சுவினிகளே, உங்களுடைய ரதத்தில் செல்வங்களைக் கொண்டிருக்கும் நீங்கள் சுதாசனுக்கு ஆதாரப் பொருட்களைக் கொணருங்கள். வானமெனும் மாகடலிலிருந்து, அல்லது வானத்திலிருந்து மிகவும் போற்றப்படும் செல்வங்களை எங்களுக்கு அனுப்புங்கள்.

i.63.7.“ஓ. இடிபோன்ற இந்திரனே, புருகுத்சனுக்காக ஏழு நகரங்களைப் போரில் நீ தகர்த்தெறிந்தாய். ஓ, மன்னவனே, சுதாசனுக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை கைப்பிடி புல்லைப் போன்று மிக எளிதில் தூக்கி எறிந்து, புருவுக்கு செல்வதையும் வழங்குவாயாக.”

i.112.19.    “ஓ அச்சுவினிகளே, சுதாசனுக்கு செய்த மகத்தான அந்த உதவிகளுடன் வருவீர்களாக.”

vii.19.13.   “ஓ உக்கிரமான இந்திரனே, உனக்குப் படையல்களை செலுத்திய சுதாசனை எல்லாவிதமான உதவிகளுடன் விரைந்து சென்று பாதுகாத்தாய். புருகுத்சனின் மகன் திரசதஸ்யுவையும் புருவையும் நாட்டைப் பிடிப்பதற்கான போரிலும், எதிரிகளை துவம்சம் செய்வதிலும் நீ பேணிக் காத்திருக்கிறாய்.”

vii.20.2.     “வலிமையில் சிறந்த இந்திரன் விருத்திரனைக் கொல்கிறான்; தன்னைப் புகழ்பவர்களை அந்த வீரன் பாதுகாக்கிறான்; சுதாசனுக்கு (தாராளமாக வாரிவழங்குபவனுக்கு – சாயனர்) அவன் தன்மனதில் இடமளிக்கிறான்; தன்னை வணங்குபவர்களுக்குத் திரும்பத் திரும்ப செல்வங்களை வாரி வழங்குகிறான்.”

vii.25.3.     “சுதாசனுக்கு நூற்றுக்கணக்கான உதவிகளும், ஓராயிரம் விரும்பத்தக்க வெகுமதிகளும், வளவாழ்வும் வந்தடையட்டும். கொலைகாரர்களின் ஆயுதங்கள் அழிந்துபடட்டும். எங்களுக்கு கீர்த்தியும் செல்வமும் வழங்குவாயாக.”

vii.32.10.   “சுதாசனின் ரதத்தை யாரும் எதிர்க்கவோ, தடுக்கவோ முடியாது. எவனொருவனை இந்திரனும், மருத்துகளும் பாதுகாக்கின்றனரோ, அவன் கால்நடைகள் நிரம்பிய புல்வெளியில் நடக்கிறான்.”

vii.53.3.     “ஓ வானமும் பூமியுமாக நீ சுதாசனுக்காகப் பல வெகுமதிகளையும் செல்வத்தையும் கொண்டிருக்கிறாய்.”

vii.60.8.     “அதிதி, மித்ரன், வருணன் ஆகியோர் சுதாசனுக்கு (அல்லது தாராளமான மனிதனுக்கு) பாதுகாப்பு வழங்குகின்றனர். அவனுக்குக் குழந்தைப் பேறுக்கான வரமளிக்கின்றனர். ஓ வலிமைமிக்க தேவதைகளே, கடவுளர்களுக்கு எதிராக நாங்கள் எந்தத் தவறும் செய்யாதிருப்போமாக. எங்களை எதிரிகளிடமிருந்து ஆரியமான் காப்பாராக. ஓ, வலிமைமிக்க கடவுளர்களே, சுதாசனுக்கு ஒருபரந்த இடத்தை வழங்குவீர்களாக.”

            ரிக் வேதம் என்ற அதிகாரப்பூர்வமான ஆதாரத்திலிருந்து திரட்டப்பட்டு மகாபாரதம் சாந்திபருவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பைஜவனனின் வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகள் இவையேயாகும். ரிக் வேதத்திலிருந்து அவனுடைய உண்மைப்பெயர் சுதாசன் என்றும் அவன் ஒரு க்ஷத்திரியன் என்றும் நாம் அறிகிறோம். அவன் க்ஷத்திரியனை விட மேலானவனாக இருந்தான். அவன் ஒரு மன்னனாக வலிமைகொண்ட மன்னனாக திகழ்ந்தான். இதற்காக, மகாபாரதம் ஒரு விபரத்தை சொல்லுகிறது. அதாவது அவன் ஒரு சூத்திரனாக இருந்தான் என்பதே அது. ஒரு சூத்திரனை ஆரியன் என்றும், ஒரு சூத்திரனை க்ஷத்திரியன் என்றும், ஒரு சூத்திரனை மன்னன் என்றும் கூறுவது விந்தையே!! இதைவிட வியப்புக்குரிய விஷயம் ஏதேனும் இருக்கமுடியுமா? இதைவிடக் கூடுதல் புரட்சிகரமானதாக வேறு ஏதேனும் இருக்க முடியுமா?

பின்வரும் மூன்று முக்கிய பிரச்சினைகளை விவாதிப்பதுடன் இந்த வாழ்க்கை வரலாற்று விபரங்களைத் தேடுவதை முடித்துக் கொள்ளலாம். சுதாசன் ஆரியனா? சுதாசன் ஆரியனெனில் அவன் எந்த இனக்குழுவை சேர்ந்தவன்? சுதாசன் ஒரு சூத்திரனெனில், சூத்திரன் என்ற சொல் எதைக் குறிக்கிறது?

இரண்டாவது கேள்வியிலிருந்து தொடங்குவது நல்லதாக இருக்கும். இப்பிரச்சினை குறித்து ஒரு முடிவுக்கு வருவதற்கு ரிக் வேதத்தில் வரும் சில குறிப்புகளிலிருந்து சற்று உதவி பெறுவது சாத்தியமாகும். ரிக்வேதம் பல இனக்குழுக்களைக் குறிப்பிடுகிறது. அவற்றில் மிக முக்கியமானவை திரித்சுக்கள், பரதர்கள், துர்வாசர்கள், துர்ஹியுக்கள், யதுக்கள், புருக்கள் மற்றும் அனுஸ்கள் ஆகியவை. ஆனால் ரிக்வேதத்தில் வரும் குறிப்புகளின்படி மூன்று இனக் குழுக்கள்தான் சுதாசனுடன் சம்பந்தப்பட்டவையாக உள்ளன. அவை திரித்சுஸ், புருக்கள் மற்றும் பரதர்கள். இந்த மூன்று இனக்குழுக்களுடன் நிறுத்திக் கொண்டு, முடிந்தால் இந்த மூன்றில் அவன் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவன் என்பதைக் கண்டறிய முயலுவோம். திரித்சுக்கள் சுதாசனுக்கு இடையிலான உறவை விளக்கும் ரிக்வேதத்தின் மிக முக்கியமான செய்யுள்கள். i.63.7; i.130.7; vii.18.15; vii.33.5; vii.33.6; vii.83.4.6 ஆகியவையாகும்.

            i.63.7. இல் திவோதாசன் புருக்களின் மன்னன் என்றும் i.130.7 இல் திவோதாசன் பவுர்வி அதாவது புருக்களைச் சேர்ந்தவன் என்றும் கூறப்படுகிறான்.

ரிக்வேதம் vii.18.15. மற்றும் vii.83.6. ஆகியவை சுதாசன் திரித்சு இனக்குழுவைச் சேர்ந்தவனல்ல என்று கூறுகிறான். திரித்சுவின் முகாமை சுதாசன் தாக்கினான் என்றும், திரித்சு ஓடி ஒளிந்தான் என்றும், அவர்களுடைய செல்வத்தை சுதாசன் தனதாக்கிக்கொண்டான் என்றும் கூறுகிறது. இரண்டாவது செய்யுள், பத்து மன்னர்களுக்கு எதிரான போரில் திரித்சுவும் சுதாசனும் ஓரணியில் இருந்ததாகவும் ஆனால் அவர்கள் தனித்தனியானவர்கள் என்றும் கூறுகிறது. ஆனால் vii.35.5. இலும் vii.83.4. இலும் சுதாசன் முழுமையாக திரித்சுக்களுடன் இணைத்துக் காட்டப்படுகிறான்; உண்மையில் முதலாவது செய்யுளில் சுதாசன் திரித்சுக்களின் மன்னனாக ஆகிறான்.

திரித்சுக்களுக்கும் பரதர்களுக்கும் இடையிலும், அவர்களுக்கும் சுதாசனுக்கும் இடையிலும் உள்ள தொடர்பு சம்பந்தமான இப்பிரச்சினை குறித்து நமக்கு அத்தாட்சியாக ரிக்வேதம் vii.33.6. மற்றும் v.16.4., 6, 19 ஆகியவை விளங்குகின்றன. முதலாவது செய்யுளின் கூற்றுப்படி திரித்சுக்களும் பரதர்களும் ஒரே இனக்குழுவினர்தான். இரண்டாவது செய்யுளின் கூற்றுப்படி சுதாசனின் தந்தையான திவோதாசன் பரதர்கள் இனக்குழுவைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது.

இக்குறிப்புகளிலிருந்து ஒரு விஷயம் நிச்சயமாகத் தெரியவருகிறது: அதாவது புருக்கள், திரித்சுக்கள், பரதர்கள் ஆகியோர் ஒரே இனக்குழுவின் வெவ்வேறு பிரிவினைச் சேர்ந்தவர்கள் அல்லது, அவர்கள் வெவ்வேறு இனப்பிரிவுகளாகச் சேர்ந்தவர்களாக இருந்து, காலப்போக்கில் ஒரே இனமக்களாக மாறினர். இது சாத்தியமானதே. ஒரே கேள்வி இதுதான்: அவர்கள் வெவ்வேறு இனக்குழுவினர் என்று வைத்துக்கொண்டாலும்கூட, சுதாசன் அசலில் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவன்? புருக்கள், திரித்சுக்கள் அல்லது பரதர்கள் இனத்தைச் சேர்ந்தவனா? தியோதாசனுடன் புருக்கள் மற்றும் பரதர்கள் இனக்குழுக்கள் கொண்டிருந்த தொடர்பைப் பார்க்கும்போது சுதாசன், புருக்கள் அல்லது பரத இனக்குழுக்களைச் சேர்ந்தவனாக இருந்திருக்க வேண்டும் என்று கருதுவது இயற்கையே என்று தோன்றுகிறது. ஆயினும் எந்த இனக்குழுவைச் சேர்ந்தவன் என்று அறுதியிட்டு கூறுவது கடினம்.

அவன் புரு இனத்தைச் சேர்ந்தவனா அல்லது பரதர்கள் இனத்தைச் சேர்ந்தவனா என்பது ஒருபுறமிருக்க, அவனுடைய தந்தை திவோதாசன் பரத இனத்தைச் சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. அடுத்த கேள்வி என்னவெனில் யார் இந்த பரதர்கள், அவர்கள் பெயரால்தான் இந்தியா பாரதபூமி அல்லது பரதர்கள் நாடு என்று வழங்கப்பட்டதா? இக்கேள்வி மிக முக்கியமானது, ஏனெனில் பெரும்பாலான மக்கள் உண்மை விபரங்களை அறியாதவர்களாக இருக்கின்றனர். பரதர்களைப் பற்றி பேசும்போது இந்துக்கள் தவுஷியந்தி பரதர்களையே மனதில் கொண்டிருக்கின்றனர். பரதர்கள் துஷ்யந்தன் மற்றும் சகுந்தலையின் வழித்தோன்றல்கள் என்றும் அவர்கள் போரில் ஈடுபட்டனர் என்றும் மகாபாரதம் கூறுகிறது. வேறு எந்த பரதர்களைப் பற்றியும் அவர்கள் அறிந்திருக்கவில்லை என்பது மட்டுமின்றி, இந்தியாவுக்கு தவுஷியந்தி பரதர்களின் பெயரால்தான் பாரதபூமி என்ற பெயர் வழங்கப்பட்டது என்றும் அவர்கள் கருதுகின்றனர்.

ஒருவருக்கொருவர் முற்றிலும் வேறுபட்ட இரு பரதர்கள் உள்ளனர். ஒரு இனக்குழுவைச் சேர்ந்த பரதர்கள் ரிக்வேதத்தில் குறிப்பிடப்படும் பரதர்களாவர். அவர்கள் மனுவின் வழிதோன்றல்கள், சுதாசன் அவர்களை சேர்ந்தவன். மற்றொரு இனக்குழுவை சேர்ந்த பரதர்கள்தான் தவுஷியந்தி பரதர்கள். இதில் முக்கியமானது என்னவெனில் இந்தியாவுக்குப் பாரதபூமி என்ற பெயர் வழங்கப்பட்டிருப்பது ரிக்வேதத்தின் பரதர்களைக் கொண்டுதானேயன்றி தவுஷியந்தி பரதர்களின் பெயரைக் கொண்டு அல்ல. பாகவத புராணத்திலிருந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்யுளிலிருந்து அது தெளிவாகிறது: ( மகாபாரதச்ச உபசம்ஹாரத்தில் வைத்தியா காட்டியுள்ள மேற்கோள், தொகுதி பக்கம். 200.)

“சுவாயம்புவின் மகனாகிய மனுவுக்கு பிரியவிரதன் என்ற மகன் இருந்தான்; அவனுடைய மகன் ஆக்கிநித்திரன்; அவனுடைய மகன் நாபி; அவனுடைய மகன் ரிஷபன்; அவனுக்கு நூறு புத்திரர்கள் பிறந்தனர். அனைவரும் வேதம் பயின்றனர்; அவர்களில் நாராயணனுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட [பரதன்தான் மூத்தவன், அவனுடைய பெயரால்தான் இந்த அற்புதமான நாடு பாரதம் என்றழைக்கபடுகிறது.”

            சூத்திரனான இந்த சுதாசன் எத்தகைய புகழ்பெற்ற மன்னர்களின் பரம்பரையில் வந்தவன் என்பது இது தெளிவுபடுத்துகிறது.

அடுத்தபடியாக நாம் கண்டறியவேண்டிய விஷயம் சுதாசன் ஆரிய இனத்தைச் சேர்ந்தவனா என்பதாகும். பரதர்கள் ஆரியர்கள் தாம். எனவே சுதாசனும் ஓர் ஆரியனாகத்தான் இருந்திருக்க வேண்டும். ரிக்வேதம் VII 18.7. இல் உள்ள குறிப்புகளைப் பார்க்கும் போது ஆரியர்களுடன் திரித்சுக்களுக்கு இருந்த தொடர்பு அவனுடைய ஆரிய மூலத்தின்மீது சில ஐயப்பாடுகளை ஏற்படுத்துவது போல் தோன்றுகிறது. ஆரியர்களின் பசுக்களை திரித்சுக்களிடமிருந்து இந்திரன் மீட்டதாகவும், திரித்சுக்களைக் கொன்றதாகவும் கூறுகிறது. அதன்மூலம் திரித்சுக்கள் ஆரியர்களின் எதிரிகளாக இருந்தனர் என்பதைக் காட்டுகிறது.

திரித்சுக்கள் ஆரியர்களல்லாதவர்களாகக் காட்டப்படுவதைக் கண்டு கிரிபித்ஸ் மிகவும் வருத்தப்படுகிறார். இதற்குக் காரணம் அச்செய்யுளை சொல்லுக்கு சொல் அப்படியே பெயர்த்ததாகும். இதைத் தவிர்ப்பதற்காக அவர் பசுக்கள் என்பதைத் தோழர்கள் என்று அர்த்தப்படுவதாகப் புரிந்து கொள்கிறார்.

(அவருடைய மொழிபெயர்ப்பு, “திரித்சுக்களிடம் ஆரியர்களின் தோழர்கள் வந்தனர். செல்வத்தின் மீதுள்ள ஆசையினாலும் வீரர்களின் போரில் அவர்களுக்கு தலைமை தாங்கவும்.”) ரிக்வேதத்தில் இருவகையான ஆரியர்களைப் பற்றிய கதை அடங்கியுள்ளது என்பதைக் கருதிப்பார்க்கும்போது இது தேவையற்றதாகும். அவர்கள் இனத்தாலும் மதத்தாலும் வேறுபட்டவர்களாகக் கூட இருந்திருக்கலாம். எது சரி என்பதைக் கூறுவது கடினம். இந்த உண்மையின் பின்புலத்திலிருந்து பார்க்கும்போது இந்த செய்யுள் அர்த்தப்படுத்துவதெல்லாம், அது எழுதப்பட்ட காலத்தில் திரித்சுக்கள் மதத்தால் ஆரியர்களாக மாறவில்லை என்பதேயாகும். இனத்தால் அவர்கள் ஆரியர்கள் அல்ல என்பதை அது அர்த்தப்படுத்தவில்லை. ஆகவே சுதாசனை ஒரு பரதனாகவோ அல்லது திரித்சுவாகவோ எடுத்துக்கொண்டாலும் கூட அவன் ஓர் ஆரியன் என்பது விவாதத்திற்கு அப்பாற்பட்டது என்பது தெளிவாகிறது.

இப்போது இறுதிக்கேள்வியைப் பார்ப்போம். ஆனாலும் இது எந்த வகையிலும் முக்கியத்துவத்தில் குறைந்ததல்ல. சூத்திரன் என்ற சொல் எதைக் குறிக்கிறது? சுதாசன் ஒரு சூத்திரனாக இருந்தான் என்ற இப்புதிய கண்டுபிடிப்பின் பின்புலத்தில் இச்சொல் இப்போது முற்றிலும் ஒரு புதிய வெளிச்சத்தில் இருப்பதைக் காண்கிறோம். இச்சொல் வெறும் அடிமைப்பட்டுக்கிடந்த, பூர்வகுடிவர்க்கத்தின் பெயர் என்று கூறிக் கொண்டிருந்த பழைய அறிஞர்களுக்கு இப்புதிய கண்டுபிடிப்பு ஆச்சரியமாக இருக்க வேண்டும். ஏனெனில் இதற்கு கடந்தகால ஆராய்ச்சியாளர்கள் ஒரு பதிலைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தனர்.

என்னைப் பொறுத்தவரை நானும் அதே நிலைமையில்தான் இருக்கிறேன். அதற்குக் காரணம் வேதகால ஆரியர்களின் சமூக அமைப்புமுறை இன்னமும் ஆராயப்பட வேண்டியுள்ளதேயாகும். பண்டைய சமுதாயங்கள் குழுக்களாக அமைக்கப்பட்டிருந்தன. அவர்கள் குழுக்களாகவே செயல்பட்டனர் என்பதை ஆய்வுகளிலிருந்து நாம் அறிகிறோம். அக்குழுக்கள் பல்வேறு வகைப்பட்டனவாக இருந்தன. சிறுகுழுக்கள், குலமுறைகள், குலமுறைப்பிரிவுகள், இனக்குழுக்கள் என்று இருந்தன. சில சந்தர்ப்பங்களில் சிறுகுழுக்களும், இன்னும் இதர சந்தர்ப்பங்களில் குலமுறைகளும் முக்கிய இடத்தை வகித்தன. சில இடங்களில் இனக்குழுக்கள் சிருகுழுக்களாகப் பிரிந்திருந்தன. இன்னும் சில இடங்களில் சிறு குழுக்களாக இல்லாமல் ஒரே இனக்குழுவாக இருந்தது.

சிறுகுழு என்பது ஒரே முன்னோரின் வழித்தொன்றல்களைக் கொண்டது. ஒரு பொதுவான ரத்தஉறவினர் என்ற உணர்வினால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டதாக இருந்தது. இக்குழுக்கள் அடிக்கடி பொதுவான சமூக மற்றும் திருவிழா சம்பந்தப்பட்ட அக்கறைகளினால் குலமுறைகள் அல்லது சோதர உணர்வு கொண்ட சிறுகுழுக்களின் பெரிய அமைப்பின் மூலமாக உறவு கொண்டவையாக மாறின.

இக்குலமுறைகளுக்கிடையிலான இப்பிணைப்பு நெருக்கமானதாகவோ நெருக்கமற்றதாகவோ இருந்திருக்கக் கூடும், அதாவது, இக்கூட்டு ஓர் இயல்பான, முன்னுரிமை கொண்ட நட்புணர்வை விடக் கூடுதலாக எதையும் அர்த்தப்படுத்தாதிருந்திருக்கக்கூடும். அனால் எந்தவிதமான உப பிரிவுகளும் இன்றி குலமுறைப்பிரிவுகள் ஏற்படக்கூடும். அதாவது ஒரு சிறுகுழு முழுவதும் இரு சிறுகுழுக்களாக, குலமுறைகளாக, குலமுறைப் பிரிவுகளாக அல்லது இனக்குழுக்களாக இருந்த போதிலும் அவையனைத்தும் ரத்தசம்பந்தமான உறவை ஆதாரமாகக் கொண்டிருந்தன.

இத்தகைய சமூக அமைப்பு வடிவங்கள் இருந்தன என்பதில் வேதகால ஆரியர்களுக்கு ஐயமேதும் இருக்கவில்லை. சொல் வழக்கிலிருந்து இது தெளிவாகிறது. பேராசிரியர் செனார்ட் சுட்டிக்காட்டியது போன்று: (“இந்தியாவில் சாதிகள்” எ மைல் செனார்ட் பக்.192)

“வெளியுறவு, சமூக வாழ்வு போன்ற விவரங்களில் வேதகாலச் செய்யுள்கள் நிச்சயமற்றவையாக உள்ளன. ஆரியமக்கள்தொகை பல இனக்குழுக்கள் அல்லது சிறிய மக்கள் பிரிவினராகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவர்கள் சிருகுழுவினராகப் பிரிக்கப்பட்டு ரத்தசம்பந்தமான பந்தங்களின் மூலம் பிணைக்கப்பட்டிருந்தனர். பதிலுக்கு அவர்கள் குடும்பங்களாக பிரிக்கப்பட்டிருந்தனர். இந்தவகையில் ரிக்வேதத்தில் சொல்வழக்கு ஓரளவுக்குத் தீர்மானகரமாக இல்லை.

ஆனால் பொதுவான உண்மை தெளிவாக இருக்கிறது. சாஜதா, அதாவது ‘ரத்த உறவுள்ளவர்’ அல்லது ஒரே இனத்தில் ‘ஒரே ஜாதிக்காரன்’ ஆகிய சொற்கள் அதர்வண வேதத்தில் ஒரு சிறு குழுவைச் சேர்ந்தவன் என்று அர்த்தப்படுத்துவது போல் தோன்றுகிறது. பரந்த முக்கியத்துவத்தைப் பெறுகின்ற ‘ஜனம்’ என்ற சொல் சிறு குழு என்பதற்கு இணையான அவெஸ்தி சொல்லான ஜாண்டு, ஜாதி என்ற சொல்லை நினைவு கூர்கிறது. விரா, வ்ரிஜனா, வ்ரதா ஆகிய சொற்கள் ஒரே சொல்லை அர்த்தப்படுத்துகிறது அல்லது சிறு குழு அல்லது இனக்குழுக்களின் உட்பிரிவுகளை அர்த்தப்படுத்துவதாகத் தோன்றுகிறது.

இச்செய்யுள்கள் குறிப்பிடும் சகாப்தங்களில் அப்போது வாழ்ந்த ஆரிய மக்கள்தொகை ஓர் இனக்குழுவின் பாரம்பரியங்களினாலும், கீழான, அல்லது அதேபோன்ற குழுவினரின் பாரம்பரியங்களினாலும் ஆதிக்கம் பெற்ற ஓர் அமைப்பில் ஆட்சியை நடத்தியது. இந்த அமைப்பு ஓரளவுக்கு நிலையற்றதாக இருந்தது என்பதை பல்வகைத்தான பெயர்கள் சுட்டிக்காட்டுகின்றன.”

இப்பெயர்களில் எது சிறு குழுவிற்கு, எது குலமுறைக்கு, எது இனக்குழுவுக்கு (ஆரிய இனக்குழுக்கள் என்று அழைக்கப்படுபவை அவற்றின் மாறிவரும் கூட்டணிகளிலிருந்து பார்க்கும்போது அவை குலமுறைகளாகத் தோன்றுகின்றன.) இணையானதாக இருக்கிறது என்பதைத் தீர்மானிக்கும் தகவல்கள் எதுவும் நம்மிடம் இல்லை. இது இவ்வாறு இருக்க, சூத்திரன் என்ற சொல் ஒரு சிறு குழுவை, ஒரு குலமரபை அல்லது இனக்குழுவைக் குறிக்கும் பெயரா என்று தீர்மானிப்பது கடினம். சதபத பிராமணத்திலிருந்து (i.1.4.12) ஒரு பகுதியைப் பற்றி பேராசிரியர் வெபர் கருத்து கூறும்போது, அதை மேற்கோள் காட்டுவது ஆர்வமூட்டுவதாக உள்ளது. வேள்வி செய்பவனை வேள்வியைத் தொடங்குமாறு அழைக்கும்போது பல்வேறு வகையான சொற்கள் பயன்படுத்தப்பட்டன என்று அது கூறுகிறது. அவன் பிராமணனாக இருந்தால் அவனை “வாருங்கள்” என்று அழைக்கவேண்டும். அவன் ஒரு க்ஷத்திரியனாக இருந்தால் அவனை ‘வேகமாக இங்கு வா’ என்றும், அவன் ஒரு வைசியனாக இருந்தால் ‘ இங்கு வேகமாக வா’ என்றும், அவன் ஒரு சூத்திரனாக இருந்தால் ‘இங்கு ஓடிவா’ என்றும் அழைக்க வேண்டும்.

பேராசிரியர் வெபர் கூறுகிறார்:

“இந்தப் பகுதி முழுவதும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். (இந்த ஏட்டின் முதலாவது தொகுதியில் பக்கம் 83ல் ரோத் கூறுவதற்கு மாறாக) அப்போது சூத்திரர்கள் ஆரியர்களின் புனித வேள்விகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். சூத்திரர்களுக்கு ஆரியர்களின் மொழியில் பேச முடியாவிட்டாலும் கூட அவர்களால் புரிந்துகொள்ள முடிந்தது என்பதை அப்பகுதி காட்டுகிறது. பின்னர் கூறிய விஷயம் நிச்சயமாகத் தேவையான பின்விளைவாக கருதப்பட முடியாது. ஆனாலும் கூட மற்றவர்களை விட முன்னதாக இந்தியாவில் குடியேறிய ஆரிய இனக்குழுதான் சூத்திரர்கள் என்று கருதக் கூடியவர்களின் கண்ணோட்டத்துடன் நான் உடன்படுகிறேன்.”

சூத்திரர்களும் ஆரியர்களே என்ற அவரது முடிவு நெத்தியடியாக விளங்குகிறது. ஐயப்பாட்டிற்குரிய ஒரே விஷயம் என்னவெனில் சூத்திரர்கள் என்பவர்கள் ஒரு தனிப்பட்ட இனக் குழுவினரா என்பதுதான். அவர்கள் ஆரியர்களாகவும் க்ஷத்திரியர்களாகவும் இருந்தனர் என்பது ஐயத்திற்கு அப்பாற்பட்டதாகும்.

(பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு 13 - இயல் 7)

Pin It