2021ஏப்ரல் 6ஆம் நாள் தமிழகச் சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேநாளில் புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்குவங்கம் மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.
08.08.1976-இல் தொடங்கப்பட்ட பெரியார் சம உரிமைக் கழகம், 13.03.1988-இல் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமை கட்சி என்று பெயர் மாற்றம் பெற்று இயங்கிவருகிறது. கட்சி தொடங்கப்பட்ட நாளிலேயே, “இது தேர்தலில் ஈடுபடாத ஓர் அரசியல் கட்சி” என்பதை நாம் துலாம்பரமாக அறிவித்தோம்.
ஏன்? எனில், இந்திய அரசு என்பது பார்ப்பனப் பனியாக்களுக்கும், பன்னாட்டு நிதி மூலதனத்திற்கும் ஏவலராகச் செயல்படும் அரசு என்பதை உணர்ந்தும், அதன் தொங்கு சதைதான் தமிழ்நாட்டு அரசும் மற்ற மாநில அரசுகளும் என்று தெளிவாக நம் உணர்ந்திருந்ததால்தான் அப்படி அறிவித்தோம். நிற்க.
இந்தியாவில் கொஞ்சம் கொஞ்சமாகக் கால் பதித்த ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி தன் நிருவாக வசதிக்காக சென்னை, பம்பாய், கல்கத்தா ஆகிய இடங்களை மையமாகக் கொண்டு மூன்று மாகாணங்களை உருவாக்கி ஆளுகை நடத்தியது.
1773-இல் தான் முதன்முதலாக நடுவண் அரசு என்ற ஒன்று இந்தியாவில் பிரித்தானியரால் உருவாக்கப்பட்டது. அந்த ஆண்டில்தான், இங்கிலாந்து நாடாளுமன்றம், ‘இந்தியா ஒழுங்குமுறைச் சட்டம்’ என்ற சட்டத்தை இயற்றியது. அதன்படி, கல்கத்தாவின் கவர்னர் இனி ‘கவர்னர் ஜெனரல்’ (தலைமை ஆளுநர்) என அழைக்கப்படுவார் என்று விதித்து சென்னையையும் பம்பாயையும் அவரின் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தது.
இந்தியாவுக்கான பிரித்தானிய அரசில், இந்தியா(துறை) அமைச்சராக இருந்த சாமுவேல் மாண்டேகுவும், இந்தியக் கவர்னர் ஜெனரலாக இருந்த செம்ஸ்ஃபோர்டும் 1919ஆம் ஆண்டு கொண்டுவந்த ‘மாண்டேகு-செம்ஸ்ஃபோர்டு’ பரிந்துரைப்படி முதன்முதலாக மாகாணங்கள் தங்கள் வரவு - செலவுத் திட்டங்களைத் தயாரித்துக்கொள்ள சட்டம் செய்யப்பட்டது.
இச் சட்டம்தான் சுதந்திர இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்துக்கு முன்னோடி. அச் சட்டத்தின்படி மாகாணங்களில் இரட்டை ஆட்சிமுறை உருவாக்கப்பட்டது.
இந்தியா பல மதங்களையும், பல் தேசிய இனங்களையும் பல நூறு மொழிகளையும் கொண்ட ஒரு துணைக்கண்டம். இந்திய தேசியக் காங்கிரசு 1885-இல் உருவாக்கப்பட்டது. அக்கட்சி 1929-இல் வரித்துக்கொண்ட குறிக்கோள் “வெள்ளையனிடமிருந்து விடுதலை பெறுவது” என்பதுதான்.
“யாருக்காக விடுதலை?” ( Swaraj for whom?) என்ற வினாவை, 1922-இல், காங்கிரசு மாநாட்டிலேயே எழுப்பினார், மாமேதை ம.சிங்காரவேலர். அதற்கு காந்தி, நேரு எவரும் தெளிவான விடை சொல்லவில்லை.“விடுதலைக்காக விடுதலை” என்றனர், அவ்வளவுதான்.
அந்த விடுதலை 14.08.1947 இரவு 12 மணிக்கு வந்தது. இந்தியாவே மகிழ்ச்சியோடு கொண்டாடியது. பெரியார் ஈ.வெ.ரா மட்டும் அந் நாளை - “ஆகத்து 15 துக்கநாள்!” என அறிவித்தார்.
தென்னிந்தியப் பார்ப்பனரல்லாதாருக்கான, ‘தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்’ என்கிற நீதிக்கட்சி, 1916 திசம்பரில் உருவாக்கப்பட்டது.
நீதிக்கட்சியின் நிறுவனர்களுள் ஒருவரான டாக்டர் டி.எம்.நாயர் 09.11.1917-இல், “கேரளம், கன்னடம், ஆந்திரம், தமிழ்ப் பிரதேசங்கள் அடங்கிய தென்னிந்தியா, இந்திய அரசிலிருந்து விலகி, நான்கு பிரதேசங்களும் சேர்ந்த கூட்டரசு ஏற்படவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே எங்கள் ‘தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம்’ ஏற்படுத்தப்பட்டது. அதற்காகவே பாடுபடப் போகிறது” என, ‘ஜஸ்டிஸ்’ ஆங்கில இதழில் அறிவித்தார்.
22.11.1925-இல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தமிழ் மாகாணக் காங்கிரசு மாநாட்டில், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கொள்கையை ஏற்காத காங்கிரசுக் கட்சியைக் கண்டித்து, எஸ்.இராமநாதன், என். தண்டபாணிப் பிள்ளை ஆகியோருடன் “சாதி ஒழிக! மதம் ஒழிக! கடவுள் ஒழிக! இவற்றைக் காப்பாற்றும் பார்ப்பான் ஒழிக! காங்கிரசு ஒழிக!, காந்தி ஒழிக!” என்று முழக்கமிட்டபடி காங்கிரசிலிருந்து வெளியேறினார், பெரியார் ஈ.வெ.ரா.
26.12.1926-இல், மதுரையில் நடைபெற்ற பார்ப்பனரல்லாதார் 10ஆவது மாகாண மாநாட்டில், பார்ப்பனரல்லாதார் சுயமரியாதை இயக்கம், பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் பெரு முயற்சியால் தோற்றுவிக்கப்பட்டது.
1925-இல்தான், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியும், இராஷ்டிரிய சுயம்சேவக் சங்கமும் (ஆர்எஸ்எஸ்) தோன்றின.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் குறிக்கோள், அன்றும் இன்றும், “இந்தியாவில் பொதுவுடைமை மலர வேண்டும்” என்பதே. அந்தச் சீரிய நோக்கம் கொண்ட அக் கட்சி இந்தியாவில் நிலவும் சாதியச் சமூக அமைப்புப் பற்றிக் கவலைப்படவே இல்லை. அதனால் அது, 1962-க் குப் பிறகு ஓங்கி வளரவே இல்லை. அது வருத்தத்துக்கும், ஆய்வுக்கும் உரியது.
1925-இல் தோற்றுவிக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், 30.01.1948 -இல் காந்தியார் கொல்லப்பட்ட பிறகு, 1948 பிப்ரவரியில் பூனாவில் கமுக்கமாகக் கூடி, “இந்தியாவில் கி.பி.2000-இல் இராமராஜ்யத்தை அமைக்கவேண்டும்” என்றும், அதற்காக, “எல்லா அரசியல் கட்சிகளிலும் அரசுத் துறைகளிலும் ஊடுருவ வேண்டும்” என்றும் தந்திரமாக முடிவு எடுத்தது.
அந்தக் கமுக்கக் கூட்டத்திற்கு, பார்ப்பனரின் மரியாதைக்குரியவராக விளங்கிய மகாத்மா சோதிராவ் புலேவின் பெயரன் சென்றிருந்தார். அவர்தான் இந்த உண்மையை வெளிப்படுத்தினார்.
காங்கிரசுக்குப் பணத்தை வாரிக்கொடுத்த டாட்டா, பிர்லா, பஜாஜ், டால்மியா முதலான இந்தியப் பழம்பெரும் முதலாளிகள்தான் ஆர்எஸ்எஸ்-க்கும் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். காங்கிரசுக்கு இணையாக ஆர்எஸ்எஸ் இயக்கமும் எல்லாத் தளங்களிலும் திட்டமிட்டு வளர்த்தெடுக்கப்பட்டது.
1946 முதல் 1967 வரை இந்தியாவைக் காங்கிரசு கட்சி இடையீடின்றி ஆண்டது. அது, இந்திய ஒன்றிய அரசைப் பார்ப்பனபனியா ஆதிக்கத்துக்கு வழிகோலும் வகையிலேயே ஆட்சிசெய்தது.
இந்திய வெகுமக்களுக்கு வேண்டுமென்றே கல்வி தராமல் செய்தது. காங்கிரசுக் கட்சியின் தவறான அணுகு முறையால் ஜம்மு-காஷ்மீர் மக்களின் தேசிய இன எழுச்சியை அடக்கி ஒடுக்குவதையே தலையாயப் பணியாக மேற்கொண்டது. நேருவினால் தன் வாரிசாக - இந்தியத் தேசியக் காங்கிரசின் தலைவியாக 1955-இல் ஆக்கப்பட்ட இந்திராகாந்தி, 1967-இல் பிரதமர் பதவிக்கு வந்தவுடன், தானடித்த மூப்பாக நடந்து கொண்டார்; மாநிலக் கட்சிகளை ஒடுக்கினார்.
1975-இல் நெருக்கடி நிலையைக் கொண்டுவந்து எதிர்க் கட்சிகளை ஒடுக்கினார். எதிர்கட்சித் தலைவர்களைச் சிறையில் அடைத்துக் கொடுமைப்படுத்தினார்.
அதே காலகட்டத்தில் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை அரசமைப்புச் சட்டத்தின் பொதுப்பட்டியலுக்கு மாற்றினார். நடுவண் அரசின் பொதுப்பட்டியலில் உள்ள உரிமைகள் நடுவண் அரசுக்கும் மாநில அரசுக்கும் உரிமை உடையது என்ற போதிலும் நடுவண் அரசின் கையே மேலோங்கும் நிலை ஏற்பட்டது.
தமிழ்நாட்டின் மருத்துவம் பொறியியல் போன்ற உயர் கல்வி நிறுவனங்களைத் தொடங்குவதற்கு நடுவண் அரசின் அனுமதி பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.
தமிழ் நாட்டு உயர் கல்வி நிறுவனங்களில் கூடுதலாக ஒரு மாணவரைச் சேர்க்கவேண்டும் என்றாலும் தில்லியில் அனுமதி பேறவேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தில் இரண்டு முதுநிலைப் படிப்புகளுக்கான சேர்க்கை இரத்துச் செய்யப்பட்டு, மாநில அரசின் இடஒதுக்கீடும் கைவிடப்பட்டு மீண்டும் நடுவண் அரசின் இடஒதுக்கீட்டு முறையில் சேர்க்கை நடைபெற ஆணை பிறப்பிக்கப் பட்டுள்ளதே இதற்குச் சான்று.
அதேபோல், ‘நீட்’ தேர்வை 2012ஆம் ஆண்டில் மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரசு அரசு கொண்டுவந்தது. 2013 ஆம் ஆண்டு நீட் தேர்வு நடத்த அறிவிப்பு வெளியிட்டது.
பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்த்தன. தமிழ்நாடு அரசும் எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. 18.07.2013 அன்று உச்சநீதிமன்றம் தடைவிதித்தது.
2014இல் மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு தனக்குச் சாதகமான நீதிபதிகளை பதவிக்கு அமர்த்தி, சீராய்வு மனுவைத் தாக்கல் செய்து, 11.04.2016-இல் நீட் தொடர்பான தடையை நீக்கி உத்தரவைப் பெற்றது.
நீட் தேர்வை நிரந்தரமாக்கவும் 19.11.2016இல் சட்டத்தை இயற்றிக்கொண்டது. 2017 முதல் நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. இதனால் தமிழக மாணவர்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டு வடநாட்டு மாணவர்கள் தமிழகக் கல்லுரிகளிலேயே ஆக்கிரமிப்புச் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
புதிய தேசியக் கல்விக் கொள்கை என்ற ஒன்றைக் கொண்டுவந்து இந்தி பேசாத மாநில மாணவர்களின் மீது இந்தி, சமற்கிருதம் வலிந்து திணிக்கப்படுகிறது. அனைத்திந்திய அளவில் 5ஆம் வகுப்பு முதல் தேர்வுகள் நடத்தி, பார்ப்பனரல்லாத கிராமப்புற மாணவர்களை வடிகட்டும் போக்கை நடுவண் அரசு திட்டமிட்டுச் செய்கிறது. பெரும் போராட்டங்கள் நடத்தி கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றினாலொழிய நாம் இவற்றிலிருந்து விடுபட முடியாது.
நடுவண் அரசுத் தேர்வு முகமை என்ற அமைப்பை ஏற்படுத்தி தமிழ்நாட்டில் இயங்கும் நடுவண் அரசின் அனைத்து துறைகளிலும் வடநாட்டினரைத் திணிக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது.
சரக்கு சேவை வரியைக் கொண்டுவந்து மாநில வரி வருவாயான வணிக வரியையும் நடுவண் அரசு பறித்துக் கொண்டது. மாநிலத்துக்கு உரிய பங்கையும் கொடுக்காமல் இழுத்தடிக்கிறது. மாநிலப் பட்டியலில் இருந்த வேளாண் துறையைத் தம் வயமாக்கிக் கொண்டு உழவர்களுக்கு எதிரான வேளாண் சட்டங்களை இயற்றி ஏழை உழவர்களை வஞ்சித்து பெருமுதாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. நிற்க.
தமிழ்நாட்டில் டாக்டர் டி.எம்.நாயரை அடுத்து, தந்தை பெரியார் 30.09.1945-இல் ‘தனிச் சுதந்தர நாடு’ என்கிற பிசிறற்ற கோரிக்கையை முன்வைத்தார். தென்இந்திய மாநிலங்கள் நான்கும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பின்னர், 01.11.1956 முதல் தி.நகரில், கடைசியாக உரை ஆற்றிய 19.12.1973 வரையில் தனிச் சுதந்தரத் தமிழ்நாடு வேண்டும் எனப் பிசிறின்றிக் கோரினார்.
தொடக்கத்தில் ‘திராவிட நாடு திராவிடருக்கே!’ என் பதில் தீவிரமாக இருந்த அறிஞர் சி.என்.அண்ணாத்துரை, 1963-இல் “திராவிட நாடு பிரிவினையைக் கைவிட்டோம். ஆனால், பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன” என்று மாநிலங்களவையில் பேசினார்.
அண்ணாவின் மறைவுக்குப் பின்னர், “மாநிலத்தில் சுயஆட்சி! மத்தியில் கூட்டாட்சி!” என முழக்கமிட்டார், கலைஞர் மு.கருணாநிதி. இதுபற்றி, தந்தை பெரியார், “இது பிய்ந்த செருப்புக்குப் பட்டுக்குஞ்சம் கட்டுவது போன்றது” என்று அப்போதே சொன்னார். அதை யாரும் காதில் போட்டுக் கொள்ளவில்லை.
1972-இல், அதிமுக எனத் தனிக்கட்சி கண்ட எம்ஜிஆர், 1977-இல் இருந்து 12 ஆண்டுகள் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஆட்சிசெலுத்தினார். அறிஞர் அண்ணாவும், கலைஞர் கருணாநிதியும், நடிகர் எம்ஜிஆரும் வளர்த்தெடுத்த திரைப்படக் கவர்ச்சிக்கு, தமிழ்நாட்டு இளைஞர்களும் தாய்மார்களும் ஆளாயினர்.
இதன்பிறகு மாறிமாறி ஆட்சிக்கு வந்த செயலலிதாவும் கருணாநிதியும் தமிழின உரிமைகளைக் காப்பதில் போதிய அக்கறை காட்டவில்லை.
செயலலிதா மறைவுக்குப் பிறகு பதவியேற்ற ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிச்சாமியும் பாஜக-மோடி அரசின் எல்லாச் செயல்களுக்கும், கொடுமையான சட்டங்களுக்கும் துணை நிற்கின்றனர். மேலும், ஐந்தாண்டு கால ஆட்சியில், தமிழக அரசின் கடன் சுமையை 5 லட்சத்து 70 ஆயிரம் கோடியாக அதிகப்படுத்திவிட்டனர்.
கடந்த ஓராண்டில் மட்டும் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது எடப்பாடி அரசு. மேலும், நடப்பு நிதியாண்டில் 84,686 கோடி ரூபாய் கடன் வாங்கவும் இலக்கு நிர்ணயித்திருக்கிறார் நிதியமைச்சர் ஓபிஎஸ்.
தமிழகத்திற்கு வழங்கும் பேரிடர் நிதியை போதுமான அளவில் தரவில்லை என்றும், பெட்ரோல் - டீசல் மீதான மேல்வரிக் கட்டணங்களில் தமிழக அரசின் பங்கைத் தரவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கான நிதியை விடுவிக்கவில்லை என்றும், உள்ளாட்சிகளுக்கான மானியத்தைக் குறைத்துவிட்டது என்றும் மத்திய பாஜக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை பட்ஜெட்டில் வைத்திருப்பதன் மூலம், பாஜக-வை ஆதரிக்கும் தமிழக அதிமுக அரசை மத்திய பாஜக அரசு ஏமாற்றுகிறது என வாக்குமூலம் தருகிறார் தமிழ்நாட்டு நிதியமைச்சர்.
கொரோனா பெருந்தொற்றுக்காலத்தில் மட்டும் உலகப் பணக்காரர்களில் 8ஆவது இடத்தில் உள்ள அம்பானியின் செல்வம் 24 விழுக்காடு அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் இந்தியாவின் கோடீசுவரர்கள் பட்டியலில் புதியதாக 40 பேர் இணைந்துள்ளார்கள். மறுபக்கம் இந்தியாவின் பொருளாதாரம் 7 விழுக்காடு கீழாகக் குறைந்துள்ளது என்கிறது ஆக்ஸ்ஃபாம் ஆய்வு.
இந்தியத் துணைக்கண்டம் ஏறக்குறைய 6000-க்கும் மேற்பட்ட உட்சாதிகளைச் கொண்ட வருண - சாதி பேத ஏற்றத் தாழ்வுகளைக் கொண்ட சமூக அமைப்பைக் கொண்டது. பல்வேறு மதப்பிரிவுகளைக் கொண்டது.
வேறுபட்ட பண்பாட்டுப் போக்குகளும் வேறுபட்ட மரபினரும் இங்கே உள்ளனர். இவ்வளவு வேறுபாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தி மக்கள் நாயக வளர்ச்சிப் போக்கில் கொண்டு செல்லும் சாத்தியம் இந்திய அரசுக்கோ அதை தாங்கிப் பிடிக்கும் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கோ உள்ளதா ?
மண்ணின் சுதந்திரம் என்ற பெயரில் மக்களின் சுதந்திரம் அல்லவா பறிக்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டப் பிரிவு 370 வழங்கிய ஜம்மு காஷ்மீர் மாநிலத் திற்கான சிறப்புரிமையை ஒரே நாளில் இந்திய ஒன்றிய அரசு பறித்துவிட்டதே! தமிழ்நாட்டு அரசு சட்டம் இயற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலோடு இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 9-ஆவது அட்டவணையில் சேர்க்கப்பட்ட 69 விழுக்காடு இடஒதுக்கீடு இன்று என்ன ஆனது?
சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்படும் 70 ஆண்டுகளில், பல மொழிவழித் தேசிய இனங்களுக்கான மய்ய நாடாளுமன்றம் என்ற ஒன்று விவாதமாக்கப்பட்டு புதிய அரசமைப்புச் சட்டம் வகுக்கப்பட்டிருக்க வேண்டாமா? இந்தியா ஒரு உண்மையான ஐக்கியக் குடியரசு ஒன்றியமாக மலர்வதற்கு வழிவகை செய்திருக்க வேண்டாமா?
அதிக வாக்கு அடிப்படையிலான தேர்வு என்பதற்கு பதில் பிரதிநிதித்துவ மக்கள் நாயகம் என்ற முறையில் மாறி அமைந்திருக்க வேண்டாமா?
தேசிய இனங்களின் உரிமைகளைப் பறிக்கின்ற, மொழி உரிமையை நசுக்குகின்ற, கல்வி பெறும் உரிமையை தடுக்கின்ற, மக்கள் நாயக உரிமைகளை மறுக்கின்ற வெகுமக்கள் விரோத முதன்மை எதிரியான இந்துத்துவ பாசிச பாஜக-வை முறியடிப்போம்.
இறைமை இல்லாத சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பது.மாநில உரிமைகளைப் பெற்றெடுக்கப் பயன்படாது.
இவ்வளவு ஈனத் தனங்களையும் காப்பாற்றும் இன்றைய அரசியல் அமைப்பைத் தூக்கி எறிய எந்த வாக்கு வேட்டைக் கட்சியும் உறுதிகூறி, அதற்காக உழைக்காதபோது, மக்களை ஏய்ப்பதற்காகவே தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
இத்தேர்தலில் பதிவாகிற ஒவ்வொரு வாக்கும் நாம் இந்தியத்தின் அடிமைக் குடிமகன் என்பதையே பறைசாற்றும். தமிழகத் தன்னுரிமை காண - இறையாண்மை கொண்ட அரசாக மாறிட இத் தேர்தலைப் புறக்கணிப்போம், வாருங்கள்!
- வே.ஆனைமுத்து