தேடப்படும் நபரின் பெயர்: ராஜேந்திர பாலாஜி

அடையாளம்:          நெற்றி முழுதும் விபூதி-குங்குமம்; கைகளில் கலர் கலராகக் கயிறுகள்; கழுத்தில் பக்தியை பறைசாற்றும் சாமிக் கயிறு

உடை: காவி சட்டை

தொழில்: முன்னாள்அமைச்சர்

சமூக சேவை: வேலை வாங்கித் தருவதாக பல கோடி வசூல் செய்தல்

கொள்கை: கோட்சே காந்தியை சுட்டார் என்றெல்லாம் பேசக் கூடாது. கோட்சே தியாகி; கோட்சேவை அவமதிப்பது இந்து மதத்தை அவமதிப்பதாகும் என்று பேசுவார்.

‘மோடி - எங்கள் டாடி’ என்று அவ்வப்போது சொந்தம் கொண் டாடுவார்.

பெரியார் - அண்ணா கொள்கைகள் எனக்குப் பிடிக்காது; நான் ‘இந்து’. ‘இந்து’ கடவுள்களை குறை கூறுகிறவனை விட மாட்டேன் என்பார்.

உருமாற்றம்: கடைசியாக தனது வெள்ளைச் சட்டையைக் கழற்றிவிட்டு காவிச் சட்டை அணிந்தார். தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் வெள்ளை சட்டைக்கு மாறினார்.

பா.ஜ.க.வின் ‘தீயாக சீலர்’ எச். ராஜாவின் தீவிர விசுவாசி; தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் டெல்லிக்குப் போய் முகாமடித்து பா.ஜ.க.வில் சேர கடும் முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், ‘யாத்திரை’ வெற்றி பெறவில்லை.

லுக் அவுட்: 5 தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடைசியாக அவருடன் பேசியவர்களை காவல்துறை நெருங்கி விட்டது.

எங்கே பாலாஜி என்று கேட்டால், ‘தெரியாதுன்னு சொல்லிடு; அடிச்சுக்கூட கேட்பாங்க; அப்பவும் தெரியாதுன்னு சொல்லிடு’ என்று வடிவேலு பாணியில் சீடர்களுக்கு உத்தரவுகளைப் போட்டுக் கொண்டிருப்பதாகக் கேள்வி.

கோரிக்கை: ‘ஒரு நல்ல ‘இந்து’ உண்மையான கடவுள் நம்பிக்கைக் கொண்டவர்கள் (உம்.: எச். ராஜா, அண்ணாமலை போல) இந்து சனாதன தர்மத்தைக் காப்பாற்ற முன் வரவேண்டும். அந்த அடிப்படையில் ‘ஜி’யிடம் கீழ்க்கண்ட கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்று தாழ்மையுடன் விண்ணப்பிக்கிறோம்.

“ஸ்ரீ ராஜேந்திர பாலாஜி, ஜீ! நீங்கள் பழுத்த ஆன்மீகத் தோற்றத்துடன் பவனி வந்தீர்கள்; ‘இந்து’ எதிர்ப்பாளர்களுக்கு பதிலடி தந்தீர்கள்; எனக்கு பெரியார்-அண்ணா கொள்கைகள் எல்லாம் தெரியாது என்று கூறி ‘இந்து சனாதனத்துக்கு’ கிளுகிளுப்பு ஊட்டினீர்கள். நாங்கள் பூரித்தோம்; கொண்டாடினோம்.

அப்படிப்பட்ட ‘உத்தமரான’, ‘இந்து சனாதன தர்ம’ விசுவாசியான நீங்கள், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருப்பது, எங்கள் மனதைப் புண்படுத்துகிறது. இலட்சோபலட்சம் ‘இந்து’க்கள் புண்பட்டுக் கிடக்கிறார்கள். இதுதான் கடவுள், மத, பக்தி யோக்கியதையா என்று கேள்வி கேட்கிறார்கள்.

நீங்கள் ஒரு அமைச்சர். அரசியல் சட்டத்தை மதிப்பதாக உறுதியேற்று பதவிக்கு வந்தவர். இப்போது தேடப்படும் ‘கிரிமினலாக’ ஓடி ஓடிப் பதுங்குவது நியாயமா? நேர்மையா? இதுதான் நமது இந்து சனாதனமா?

நிச்சயமாக உங்கள் விபூதி - குங்குமம் - தாயத்துக் கயிறு - நீங்கள் வணங்கும் இறைவன் - எதுவும் உங்களைக் காப்பாற்ற முன்வரப் போவதே இல்லை. உச்சநீதிமன்றமும் உங்கள் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து விட்டால், அப்புறம் உங்கள் கதை அம்போ தான்!

கடவுளிடம் சரணாகதி அடைவதே நமது இந்து தர்ம சனாதம் என்பது உண்மைதான். அதை பிறகு நாம் எல்லோரும் சேர்ந்து பேசி இந்த பெரியாரின் நாத்திகக் கூட்டத்துக்கு பதிலடி கொடுப்போம். அதற்கு முன் காவல்துறையிடம் சரணடைந்து விடுங்கள்.”

இந்து - சனாதனத்தின் மான மரியாதையைக் காப்பாற்றுங்கள் - எங்கள் மானம் கப்பல் ஏறுகிறது.

- இப்படி ஒரு கோரிக்கையை ‘ஜி’யிடம் வைக்க வேண்டும் என்பதே வேண்டுகோள்!

‘கண்டா வரச் சொல்லுங்க’ என்ற கர்ணன் படப் பாடலை சற்று மாற்றிப் பாட வேண்டும் போலிருக்கு! “கண்டா விட்டுடாதீங்க; கண்டிப்பா கட்டிப் போடுங்க.”                                                  

- கோடங்குடி மாரிமுத்து

Pin It