நீதித்துறை தொடர்பாக ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதா மீது உரையாற்றிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நீதித்துறையில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரின் ஆதிக்கமே மேலோங்கி இருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார். அவர் கூறும் அந்த குறிப்பிட்ட ஜாதி எது என்பது அனைவருக்கும் தெரியும் பழங்குடியின சமூகத்தினர், பட்டியலின பிரிவினர் மற்றும் பெண்களுக்கு உச்சநீதி மன்றத்தில் உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதோடு உச்சநீதிமன்ற வரலாற்றில் பட்டியலின பிரிவைச் சேர்ந்த 5 பேர் மட்டுமே இதுவரை நீதிபதியாக வர முடிந்திருக்கிறது என்பதை பற்றியும் அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

இது ஒரு புறமிருக்க உச்ச நீதிமன்றம் நாட்டின் அரசியல் சட்டம் கூட்டாட்சி மாநில உரிமைகள் தொடர்பான பல முக்கிய வழக்குகளை மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டு வைத்திருக்கிறது. இதனால் ஏற்கனவே ஒன்றிய ஆட்சி எடுத்த முடிவுகளை அப்படியே பின்பற்றி நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது. ‘இந்து’ ஆங்கில நாளேட்டில் கட்டுரை ஒன்று நீதிமன்றத்தின் காலதாமதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை பட்டியலிட்டு காட்டியுள்ளது.

2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி குடியரசுத் தலைவர் அவசர சட்டத்தின் வழியாக ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலங்களுக்கான மாநில அந்தஸ்தை யூனியன் பிரதேசங்களாக மாற்றம் செய்து உத்தரவிட்டார். இந்திய வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் முன் எப்போதும் நடந்தது இல்லை. இனி இந்த மாநிலங்களுக்கு மீண்டும் மாநில அந்தஸ்து கிடைக்கப் போவது இல்லை பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது என்று பொதுப் புத்தியில் அந்தக் கருத்தை உருவாக்கி வைத்து விட்டது. ஒன்றிய ஆட்சி மாநில உரிமைகளைப் பறித்து யூனியன் பிரதேசமாக மாற்ற அரசியல் சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்ற கேள்விகளோடு தொடரப்பட்ட வழக்கு அப்படியே விசாரிக்கப்படாமல் இரண்டரை ஆண்டு காலமாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதுவும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சி இல்லாத போது குடியரசுத் தலைவர் ஆட்சியில் இப்படி ஒரு நிலையை உருவாக்க முடியுமா? என்பது மிக முக்கியமான அரசியல் சட்டம் தொடர்பான ஒரு கேள்வியாகும்.

மற்றொன்று, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் வழியாக நன்கொடை தரலாம் என்று ஒன்றிய அரசின் முடிவுக்கு எதிரான வழக்கு. நன்கொடையை இரகசியமாக வழங்கலாம். எவர் கொடுத்தார் என்பது தேவையில்லை. அதிகாரத்தில் உள்ள ஆளுங்கட்சிக்கு தான் பெரும் தொகை கிடைக்கும். ஏனைய கட்சிகள் இதில் பாகுபடுத்தப்படுகின்றன. அடையாளம் தெரியாத நபர்களிடமிருந்து பெறப்பட்ட பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் கடந்த தேர்தலில் புரண்டது. மக்களிடம் இது குறித்து தெரிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இது தேர்தலில் நம்பகத்தன்மையை குலைக்கிறது. ஒரு குடிமகன் உண்மையை தெரிந்து கொள்ளும் உரிமையை தடுக்கிறது என்ற அடிப்படையில் தேர்தல் பத்திரத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு அய்ந்து ஆண்டுகளாக விசாரணைக்கு ஏற்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டிருக்கிறது. இதனால் தேர்தல் பத்திரம் முறைகேடுகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

2013ஆம் ஆண்டு கவுகாத்தி உயர்நீதிமன்றம் சிபிஐ என்ற புலனாய்வு அமைப்பு எந்த சட்டத்தின் கீழும் அமைக்கப்படவில்லை சட்ட அங்கீகாரம் இல்லாத அமைப்பு என்று தீர்ப்பளித்தது. அதற்கு அரசு தடை வாங்கியது 8 ஆண்டுகளாக இது குறித்து எந்த விசாரணையும் இல்லை. சட்ட அங்கீகாரம் இல்லாத சிபிஐ என்ற அமைப்பு முழுவீச்சுடன் எப்போதும் இயங்கிக் கொண்டே இருக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டம், சட்ட விரோத தடுப்புச் சட்டம் ஆகியவற்றை எதிர்த்து தொடரப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சட்ட உரிமை சார்ந்த வழக்குகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டன. கூட்டாட்சி தத்துவத்தைக் குலைத்து தன்னிச்சையான சட்ட விரோத முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய ஆட்சி இந்த கால தாமதத்தால் நீண்ட பயன் அடைந்து வருகிறது. அரசியல் சட்டம் உருவான போதே அரசியல் சட்டம் தொடர்பான வழக்குகளை ஒரு மாதத்திற்குள் நீதிமன்றங்கள் விசாரிக்க வேண்டும் என்ற கருத்துக்கள் பலராலும் முன்வைக்கப்பட்டன. ஆனால் சட்டத்தில் அது இடம் பெறவில்லை. இப்போது உச்ச நீதிமன்றத்தின் தாமதம் கூட்டாட்சி அமைப்புகளையும், சட்டம் வழங்கிய உரிமைகளையும் சீர்குலைப்போருக்கு உதவுவதாகவே அமைந்திருக்கிறது. ஒரே ஜாதி அதுவும் அறிவுக்கும் திறமைக்கும் பிறப்புரிமை கோரும் ஜாதி ஆதிக்கம் செலுத்துகிற ஒரு நீதிமன்றத்தில் இப்படித்தான் நீதிகளின் செயல்பாடு நடந்து கொண்டிருக்கிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It