பிரிட்டிஷ் ஆட்சி - காங்கிரஸ் ஆட்சி காலங்களில் தமிழர் உரிமைகள் பறிக்கப்பட்ட வரலாறுகளைத் தொடர்ந்து இத்தொடரில் - அதைவிட மோசமாக பா.ஜ.க. ஆட்சியின் ‘இருண்டகால’ வரலாற்றை சுருக்கமாகப் பார்ப்போம்.

“தேசியம் – பெரும்பான்மை - மதச்சார்பின்மை” என்ற சொல்லாடல் வழியாக சங்பரிவாரங்கள் திணித்து வைத்துள்ள நச்சு சிந்தனைகளின் அடிப்படையில் அதன் எதேச்சாதிகார அதிகாரப் பறிப்புகள் தொடருகின்றன. அவற்றை சுருக்கமாகப் பட்டியலிடுவோம்.

modi and amit shahதிட்டக்குழு - நிதிஅயோக்காக மாற்றப்பட்டது

இந்தியாவில் சுதந்திரத்துக்குப் பிறகு பன்முகத் தன்மை கொண்ட மாநிலங்களுக்கு அதற்கேற்ற திட்டங்களை உருவாக்கவும் அது குறித்து சுதந்திரமான விவாதங்கள் உரையாடல்களுக்கு வழி வகுக்கும் திட்டக்குழு உருவாக்கப்பட்டது. பல்வேறு துறைகளைச் சார்ந்த நிபுணர்கள் இதில் இடம் பெற்றிருந்தனர். அரசின் தலையீடு இல்லாத சுயேட்சை அமைப்பாக செயல்பட்டு வந்தது (திட்டக்குழு மாநிலங்களிடையே பாகுபாடு காட்டும் அமைப்பு என்ற விமர்சனமும் உண்டு). ஆனால், மோடி பிரதமர் பதவியேற்று 2014ஆம் ஆண்டு அவரது ‘முதல் சுதந்திர நாள்’ உரையில் திட்டக்குழு என்பதே ஒழிக்கப்பட்டு, அதற்கு பதிலாக ‘இந்தியாவை மாற்றியமைக்கும் தேசிய நிறுவனம்’ (National Institution for Transforming Inida (NITI)) - என்ற அமைப்பை உருவாக்கப் போவதாக அறிவித்தார். துறைசார் நிபுணர்கள் ஓரம் கட்டப்பட்டு, அதற்கு பதிலாக அரசு அதிகாரவர்க்க நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. நாட்டின் பிரச்சினைகளை ஆராயக் கூடியவர்கள் அதில் இடம் பெறவில்லை. பொருளாதார ஆய்வுகளோ புள்ளி விவரங்களோ திரட்டப்படவில்லை. சுகாதாரம் - விவசாயம் - வேலை வாய்ப்புகள் குறித்து திட்டமிடக்கூடிய நிபுணத்துவம் இல்லாத அமைப்பாக அது முடங்கிப் போனது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் அரசுக்கும் இடைத் தரகராக செயல்படும் அமைப்பாகியது.

தேர்தல் ஆணையம் சீர்குலைவு

தேர்தல் ஆணையம் - அரசியல் சட்டத்தின் கீழ் தன்னாட்சியுடன் செயல்படுவதற்காக உருவான அமைப்பு - பா.ஜ.க. ஆட்சியின் ‘கைபொம்மையாக’ மாறிக் கிடக்கிறது. ஆளும் பா.ஜ.க.வின் விருப்பு வெறுப்புக்கேற்ப தேர்தல்களை நடத்தி வருகிறது இந்த அமைப்பு. இதற்கு ஏராளமான சான்றுகளை பட்டியலிட முடியும். பா.ஜ.க. ஆட்சியின் நலனுக்காகவே 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை ஏழு கட்டங்களாகப் பிரித்து நடத்தியது.

• 2017ஆம் ஆண்டு குஜராத்-ஹிமாச்சலப் பிரதேச மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்த போது தேர்தல் தேதி அறிவிப்புகளில் ஆணையம் பா.ஜ.க.வின் நலனுக்காக முறைகேடாக செயல் பட்டது. இரண்டு மாநிலங்களுக்கும் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரே தேதி தான் என்றாலும், குஜராத் தேர்தலை அறிவிக்காமல், இமாச்சலப் பிரதேச தேர்தல் தேதியை மட்டும் அறிவித்தார்கள். குஜராத் மாநில அரசு வாக்காளர்களிடம் ஓட்டு வாங்க சில புதிய திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்பதற்காகவே முறைகேடாக இந்த கால அவகாசம் தரப்பட்டது.

• 2018 ஜனவரியில் தேர்தல் ஆணையத்தின் தலைவராக இருந்தவர் ஜோதி. டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டமன்ற உறுப் பினர்களை பதவி நீக்கம் செய்து அறிவித்தார். வருமானம் வரக் கூடிய பதவிகளை வகித்தார்கள் என்பது குற்றச்சாட்டு. இது குறித்து அந்த சட்டமன்ற உறுப்பினர்களிடையே எந்த விளக்கமும் கேட்காமலேயே தேர்தல் ஆணையம் பதவியைப் பறித்தது என்பதுதான் இதில் முக்கியமானது. பாதிக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்கள். தேர்தல் ஆணையம் பதவிப் பறிப்பு உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. தீர்ப்புக்குப் பிறகு, ஆம் ஆத்மி கட்சியின் 20 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியை உறுதி செய்யாமல் பா.ஜ.க. ஆட்சிக்கு சாதகமாக வேண்டுமென்றே ஒரு ஆண்டு காலம் வரை இதில் எந்த முடிவையும் எடுக்காமல் கிடப்பில் போட்டது தேர்தல் ஆணையம்.

• தமிழ்நாட்டில் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.இ.அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ். அணி, சசிகலா அணிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தியது. முதலமைச்சர் பதவியில் தன்னைத் தொடர சசிகலா அனுமதிக்காமல், அவரே முதல்வர் பதவியைப் பறித்துக் கொண்டார் என்பதே ஓ.பன்னீர் செல்வத்தின் ஆத்திரம். சகிகலா முதல்வராக தேர்வு செய்யப்பட்டாலும் பதவி ஏற்க முடியவில்லை. சொத்துக் குவிப்பு மோசடி வழக்கில் அவருக்கு சிறைத் தண்டனை உறுதி யானது. எடப்பாடி பழனிச்சாமியை சசிகலா முதல்வராக்கினார். தி.மு.க. நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தது. ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 11 பேர் சொந்தக் கட்சிக்கு எதிராக வாக்களித்தனர். நியாயமாக கட்சிமாறல் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் நடவடிக்கை எடுக்க வில்லை. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அவரது தலைமையை மாற்ற வேண்டும் என்று ஆளுநரிடம் புகார் தந்த 18 எம்.எல்.ஏ.க்கள் பதவியைப் பறித்து உத்தரவிட்டார் சபாநாயகர். இந்தத் தேர்தலை உடனே நடத்தாமல் காலம் தாழ்த்தி, அ.இ.அ.தி.மு.க. ஆட்சிக் கவிழாமல் பா.ஜ.க. ஆணைக்கேற்ப செயல்பட்டது தேர்தல் ஆணையம். வேறு வழியில்லாமல் இப்போது நாடாளுமன்றத் தேர்தலோடு 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் ஆணையம் தேர்தல் அறிவித்திருக்க வேண்டும். ஆனால் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு மட்டுமே அறிவித்தது. 3 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் வழக்கு இருப்பதாக சமாதானம் கூறியது. 21 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்று விட்டால் அ.இ.அ.தி.மு.க. மெஜாரிட்டிக்கு நெருக்கடி வந்துவிடும் என்பதால் அதில் 3 தொகுதிகளை பாதுகாப்பாக தேர்தல் நடத்தாமல் ஒதுக்கி வைப்பதே தேர்தல் ஆணையத்தின் நோக்கம். இப்போது சென்னை உயர்நீதிமன்றமும் உச்சநீதி மன்றமும் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி தேர்தலைத் தள்ளிப் போடுவது சரியான காரணம் அல்ல. ஏற்கனவே வழக்கு நிலுவையில் உள்ள தொகுதிகளில் தேர்தல் நடந்திருக்கின்றன என்பதை சுட்டிக்காட்டி யிருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது.

• ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தபோது மூன்று இடைத் தேர்தல்கள் நடந்தன. அதில் ஒன்று திருப்பரங்குன்றம் இடைத் தேர்தல். அ.இ.அ.தி.மு.க. வேட்பாளருக்கு அவர் கட்சி வேட்பாளர் என்று சான்றளித்து ஜெயலலிதா கட்சியின் பொதுச் செயலாளர் என்ற முறையில் வேட்புமனுவில் கையொப்பமிட வேண்டும் என்பது தேர்தல் விதி. ஜெயலலிதாவால் கையொப்பமிட முடியவில்லை; விண்ணப்பப் படிவத்தில் அவரது கை நாட்டுப் பெற்றுள்ளதாகக் கூறி, கட்சி சார்பில் சமர்ப்பித்தார்கள். அது ஜெயலலிதாவின் கைவிரல் ரேகை தானா என்பதை முறையாக உறுதிப்படுத்தாமல் சமர்ப்பித்த விண்ணப்பத்தை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இது மோசடி (fraud) என்று தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் ஆணையம் எந்த பதிலும் கூறாமல் வாய்மூடி நிற்கிறது.

• ஊழல் ஒழிப்புக்கான ‘லோக்பால்’ அமைப்புக்கு தலைவரை நியமிக்கக் கோரி உச்சநீதிமன்றம் தொடர்ந்து வலியுறுத்தியபோது அதைக் கண்டுகொள்ளாத பிரதமர் மோடி, தேர்தல் தேதி அறிவிப்புக்குப் பிறகு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவரை (பிளாக்கி சந்திர கோஷ்) இப்பதவிக்கு நியமித்து ஊழல் ஒழிப்புக்கு தமது ஆட்சி தயாராக இருப்பதாக வாக்காளர்களுக்கு உணர்த்த விரும்பினார். தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரான இந்த முறைகேட்டை தேர்தல் ஆணையமும் ஒத்துக் கொண்டது. இவை சில உதாரணங்கள் மட்டுமே.

சி.பி.அய். நம்பகத் தன்மை குலைப்பு

5 ஆண்டு மோடி ஆட்சியில் சீர்குலைக்கப்பட்ட மற்றொரு அமைப்பு சி.பி.அய். என்ற மத்திய புலனாய்வுத் துறை. மத்திய கண்காணிப்பு ஆணையம் என்ற சுயேட்சை அதிகாரம் கொண்ட அமைப்பின் கண்காணிப்பில் செயல்படும் புலனாய்வுத் துறை சி.பி.அய்.

ஊழல் ஆட்சியான காங்கிரசை வீழ்த்த வேண்டும் என்று கூறி ஆட்சிக்கு வந்தார் மோடி. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் சி.பி.அய். இயக்குனராக நியமிக்கப்பட்ட ரஞ்சித் சின்கா என்பவரை மட்டும் அப்படியே பதவியில் தொடர அனுமதித்தது மோடி ஆட்சி. ரஞ்சித் சின்கா, பல ஊழல் வழக்குகளின் விசாரணையில் முறைகேடாக தலையிட்டவர் என்ற குற்றச்சாட்டுக்குள்ளான ஒரு அதிகாரி. உச்சநீதி மன்றமே இந்த அதிகாரியின் முறைகேடுகளைக் கண்டித்த நிலையிலும் அவர் பதவிக் காலம் முடியும் வரை பதவியில் தொடர அனுமதித்தது மோடி ஆட்சி. அதற்குக் காரணம் என்ன தெரியுமா? இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய குற்ற வாளியான அமீத்ஷாவை தனது ஜூனியர் அதிகாரிகளின் கருத்துகளைப் புறந்தள்ளிவிட்டு அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாமல் காப்பாற்றியவர் என்பதால்தான். அதற்கு மோடி ஆட்சி தந்த வெகுமதிதான் பதவி நீடிப்பு.

ரஞ்சித் சின்கா பதவி ஓய்வுக்குப் பிறகு இயக்குனர் பதவிக்கு வந்த அனில் குமார் சின்காவும் அமீத் ஷாவைக் காப்பாற்றும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டார். 2014 டிசம்பர் மாதம் விசாரணை நீதிமன்றம் அமீத்ஷாவை விடுவித்ததை எதிர்த்து சி.பி.அய். மேல்முறையீட்டுக்குச் சென்றிருக்க வேண்டும். அப்படி செய்யாமல் அமீத் ஷாவை காப்பாற்றினார் அனில் குமார் சின்கா.

பல்வேறு வங்கிகளில் கடன் வாங்கி, பல ஆயிரம் கோடி மோசடி செய்த விஜய் மல்லையா தேடப்படும் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் 2015இல் அவர் பாதுகாப்பாக இலண்டனுக்கு தப்பி செல்ல உதவியது சி.பி.அய்.

• 2016ஆம் ஆண்டு பி.கே. பன்சால் என்ற மூத்த அதிகாரி (60), அவரது மகன் யோகேஷ் (31) இருவரும் கிழக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்கள். பன்சால் கார்ப்பரேட் கம்பெனிகள் தொடர்பான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் பிரிவுக்கு தலைமை இயக்குநராக இருந்தவர். ஒரு ஊழல் வழக்கு விசாரணையில் தாம் ஈடுபட்டிருந்தபோது சி.பி.அய். தன்னை அவமதித்து சித்திரவதை செய்தது என்றும், அதன் காரணமாகவே தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்தார். அதற்கு முன்பே தனது கணவருக்கு சி.பி.அய். தரும் அவமானங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரது மனைவி சத்யபாலா, மகள் நேகா இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.

• குஜராத்தில் 2002இல் மோடி முதல்வராக இருந்தபோது இஸ்லாமியர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்ட இனப் படுகொலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் போராடியவர் சமூகப் போராளி டீஸ்தா செதால் வாட் அதற்காக 2015ஆம் ஆண்டு 16 பேர் அடங்கிய சி.பி.அய். குழு வெளிநாட்டுப் பணம் அவருக்கு வருவதாகக் கூறி மும்பையில் அவரது வீட்டுக்குள் சோதனை நடத்தியது; தொடர்ந்து அவரை அலைக் கழித்தது.

• அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் இரண்டாவது காலகட்ட ஆட்சி காலத்தில் இமாச்சல பிரதேச முதல்வராக இருந்தவர் வீரேந்திரா சிங். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகக் கூறி அவரது டெல்லி வீட்டில் சி.பி.அய். சோதனை நடத்தியது. சோதனை நடத்திய நாள் அவரது வீட்டில் மகளுக்குத் திருமணம் நடந்த நாள்.

அனில்குமார் சின்காவின் பதவிக் காலம் 2016 டிசம்பரில் முடிவடையும் நிலையில் இயக்குனர் பதவிக்கு வர வேண்டியவர் அடுத்த நிலையில் இருந்த ஆர்.கே. தத்தா. அவர் தங்களது முறைகேடுகளுக்கு ஒத்துழைக்க மாட்டார் என்று கருதிய மோடி ஆட்சி, அவரை உள்துறை அமைச்சகத்துக்கு இடமாற்றம் செய்தது. மூத்த அதிகாரி இடமாற்றம் செய்யப் பட்டதால், கூடுதல் இயக்குனராக இருந்த நாகேஷ் அஸ்தானா என்பவர் தற்காலிக இயக்குநராக நியமிக்கப்பட்டார். சி.பி.அய். இயக்குநர்களை தேர்வு செய்வதற்கு உயர்மட்டக் குழு ஒன்று இருக்கிறது. அதில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் இடம் பெற்றிருப்பார்கள். இயல்பாக இயக்குனராக வேண்டிய ஆர்.கே. தத்தா, நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான வழக்கை விசாரித்து வந்தவர் என்பதோடு உச்சநீதிமன்றம் இந்த விசாரணையில் தொடர்புடைய அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. ஆனாலும் நியாயமான விசாரணையை நடத்தி வந்த அந்த அதிகாரியை உச்சநீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல் அவர் சி.பி.அய். தலைமைப் பொறுப்புக்கு வந்து விடாமல் தடுக்க இடமாற்றம் செய்தார்கள். 2017 பிப்ரவரியில் அவர் ஓய்வு பெற்றார். அவரைத் தொடர்ந்து அசோக் குமார் வர்மா என்ற இயக்குனரை உயர்மட்டக் குழு நியமித்தது.

இந்த நியமனத்தை விரும்பாத மோடி, குஜராத்தைச் சார்ந்த அஸ்தனா என்பவரை மத்திய கண்காணிப்பு வாரியத்தின் வழியாக சிறப்பு இயக்குனராக நியமித்தார். இவர் ஏற்கனவே ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் என்பதால் இயக்குனர் வர்மா, சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்ட அஸ்தனாவின் நியமனத்தை எதிர்த்தார். வர்மா மீது எதிர் ஊழல் குற்றச்சாட்டை அஸ்தனா சுமத்தவே சி.பி.அய். அமைப்பு சந்தி சிரித்தது. ஒரு நள்ளிரவில் மோடி ஆட்சி இருவரையும் நீக்கி நாகேஸ்வரராவ் என்பவரை இடைக்கால இயக்குநராக நியமித்தது. (இயக்குநர் பதவி என்றால் மட்டுமே உயர்மட்டக் குழு நியமிக்க முடியும்; இடைக்கால இயக்குநரை அரசே நியமிக்கலாம்) பிரச்சினை உச்சநீதிமன்றம் போனது. வர்மா முறையான இயக்குநர் என்று அறிவித்த உச்சநீதிமன்றம் அதற்கு அடையாளமாக ஒரு நாள் மட்டும் அவர் இயக்குநராக இருக்கலாம் என்று கூறவே, அவர் தன்மானத்தோடு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்து விட்டார். சி.பி.அய். என்ற அமைப்பை இப்படியெல்லாம் தனது சொந்த நலனுக்கு பந்தாடியது மோடி ஆட்சி.

இப்போது, இராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநில ஆட்சிகள், தங்கள் அனுமதியின்றி சி.பி.அய். விசாரணைக்கு தடை போட்டுள்ளன.

(தொடரும்)

- விடுதலை இராசேந்திரன்