கருத்துச் சுதந்திரத்தைக் காக்க சென்னையில் சமீபத்தில் ஒரு கூட்டம் ம.க.இ.கவினர் நடத்திய ‘கலக'த்திற்கிடையில் நடந்தது. லீனா மணிமேகலையின் கவிதைகள் ஆபாசமாக இருப்பதாகவும், அவற்றைத் தடைசெய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியினர் சென்னை கமிஷனருக்குப் புகார் கொடுத்து, சில வாரங்களுக்குப் பிறகும் எந்த நடவடிக்கையை யும் போலீசார் மேற்கொள்ளாத நிலையில் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

பெண் கவிஞர்கள்மீது வன்மமான தாக்குதல்கள், குற்றச் சாட்டுகள் கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாக் கலைஞர்கள் சிலரும் திமுக கவிஞர்களும் தமிழ்ப் பண் பாட்டுப் படையின் முன்னணியினராகச் செயல்பட்டு, பெண் கவிஞர்களை ஆபாசமாகவும் கொச்சையாகவும் பேசியும் அச்சுறுத்தியும் வந்த கால கட்டத்தில் பெண் கவிஞர்களை அண்ணாசாலையில் எரிக்க வேண்டும், பாலியல் பஞ்சத்தில் வாழ்பவர்களே ‘ஆபாச'க் கவிதை எழுதுகின்றனர் என்பன போன்ற கூற்றுகள் வன்முறையைத் தூண்டக்கூடியவையாக வும் வக்கிரப்படுத்துபவையாகவும் இருந்த அக்கால கட்டத் தில் காலச்சுவடு ஒரு கூட்டம் நடத்தி தக்க எதிர்வினைகளை வெளிப்படுத்தியது.

இது நீங்கலாகவும் தீவிர இடதுசாரி இயக்கங்கள் ‘அத்துமீறும்' எழுத்தாளர்களைத் தனிப்பட்ட முறையில் உளவியல்ரீதியாகச் சித்திரவதை செய்த சம்பவங்களும் நடந்துள்ளன.

இப்போது இந்து மக்கள் கட்சியினர் பெண் கவிஞர்களை மிரட்டவில்லை. வக்கிரமாக இதுவரை அவர்களைப் பேசவு மில்லை. இணையத்தில் கொச்சைப்படுத்தவுமில்லை. சந்தடி சாக்கில் எல்லாப் பெண் எழுத்தாளர்களையும் சேர்த்து இழிவு படுத்தவும் இல்லை. இன்ன பிற நமது பண்பாட்டுப் படை யினரின் வழக்கமான சட்டவிரோதமான நடவடிக்கைகள் எதையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. லீனாவின் கவிதை கள் தங்களைப் புண்படுத்துவதாகக் கூறிச் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனரை அணுகியுள்ளனர். இந்து மக்கள் கட்சியினரின் பண்பாடு பற்றிய பழமைவாதக் கருத்துகளை மறுக்கும்போதே அவற்றை வெளியிட அவர் களுக்கு இருக்கும் உரிமையை நாம் அங்கீகரிக்க வேண்டும். பண்பாட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு போலீசார் பொருத்தமான அணியினர் அல்ல என்றபோதிலும் அவர்களி டம் புகார் அளிக்கும் உரிமை இ. ம. கட்சியினருக்கு இருப் பதை மறுக்க முடியாது. போலீசார் மேல்நடவடிக்கை எடுக்கா மல் மனுவைக் கிடப்பில் போட்டது விவேகமான முடிவு. இம்முடிவு சிலருக்கு ஏமாற்றம் அளித்திருப்பது வெளிப்படை. ஏமாற்றம் அடைந்தவர்கள் இந்துத்துவவாதிகள் மட்டுமல்ல.

கருத்துச் சுதந்திரம் என்பது முற்போக்கான கருத்துகளை வெளியிடும் சுதந்திரம் மட்டும் அல்ல. தாம் வெறுக்கும் கருத்துகளைப் பிறர் வெளியிடும் சுதந்திரத்திற்காகவும் போரா டுபவர்களே உண்மையான கருத்துச் சுதந்திரவாதிகள். சம காலத்தில் முற்போக்காக அல்லது பிற்போக்காகப் பார்க்கப் பட்ட கருத்து காலத்தின் ஓட்டத்தில் இடம்மாறி நின்றமைக் கும் பல உதாரணங்கள் உண்டு. சில காலம் முன்னர்வரை காந்தியை சனாதனி என்றெல்லாம் ஏசிக்கொண்டிருந்தவர்கள் இன்று அவரை மறுகண்டு பிடிப்பு செய்து அவர் ஏன் சனாதனி இல்லை என்று தங்களுக்குத் தாங்களே மறுப்பு எழுத வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பது ஒரு சமகால உதாரணம். மேலும் அவரவருக்கு உறுதியான பார்வைகள் இருக்கும் என்றபோதிலும் எது முற்போக்கு என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாரிடமும் இல்லை.

இந்தியச் சட்டவியல் கணிசமான கருத்துரிமையை நமக்கு வழங்குகிறது. பெருமளவிற்கு இவ்வுரிமை நடை முறையிலு மிருக்கிறது. தடைசெய்யப்பட்ட இயக்கங்களுக்கு ஆதரவாகக் கருத்துப் பிரச்சாரம் செய்யும் உரிமையை நமது நீதித் துறை வழங்கியுள்ளது. முதல்வருக்கு எதிராக அறம்பாடிய குறுந் தகடை ஒளிபரப்பும் உரிமை நீதிமன்றத்தால் நிலைநிறுத்தப் பட்டுள்ளது. ராஜீவ் காந்தி படுகொலையை நியாயப்படுத்தி இங்கே பேச முடிகிறது. காந்தியைச் சுட்டி, ‘எங்களை ஹரிஜன் என்று அழைக்க நீ யாரடா நாயே' என்று பாடப் பள்ளிச் சிறார்களுக்குக் கற்றுக்கொடுக்கும் என்.ஜி.ஓ.க்கள் இங்கு இயங்க முடிகிறது. இஸ்லாமியர்களை அரபிக்கடலில் போய்க் குதிக்கும்படி அறிவுறுத்த முடிகிறது. ராமாயணத்தைக் கொச்சை யாக விமர்சிக்க முடிகிறது. ராமர் கோயில் கட்டுவோம் என்று முழங்கவும் முடிகிறது. இன்னும் பல.

இந்தப் பின்னணியில் கருத்துச் சுதந்திரத்தின் எல்லைகளை மேலும் விரிவுபடுத்தும் பார்வை நமது ‘முற்போக்கு' அறிவு ஜீவிகளிடமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய சகிப்புத்தன்மை இந்தியச் சட்டவிய லிலும் மக்கள் வாழ் முறையிலும் நிறையவே உள்ளது. தமிழக அறிவு ஜீவிகளின் சகிப்பின்மையே இங்குக் கருத்துச் சுதந்திரம் எதிர்கொள்ளும் பெரும் சவால்.

அ.மார்க்ஸ் வழிகாட்டுதலில் கருத்துச் சுதந்திரத்திற்கான கூட்டம் நடத்துவது நரேந்திர மோடி வழிகாட்டுதலில் மதநல்லி ணக்கத்திற்காகக் கூட்டம் நடத்துவதை ஒத்தது. பண்பாட்டுத் தளத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரான குறியீடாகப் பார்க்கப்பட வேண்டியவர் அ.மார்க்ஸ். தான் வெறுக்கும் கருத்தை வெளியிட்டமைக்காகத் தமிழ் வெகுசன ஊடகத்தின் ஆசிரியராகப் பதவியேற்ற முதல் பெண்மணியான வாஸந்திக்கு அவ்விதழின் பக்கங்களை மலம் துடைத்து அனுப்பியவர். அதுபற்றிப் பல ஆண்டுகள் பெருமை பேசி வந்தவர். தான் வெறுக்கும் பார்வைகளுக்கு இடமளிக்கும் இதழ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்று எழுத்தாளர்களிடமும் எழுத் தாளர்களைப் புறக்கணிக்க வேண்டுமென்று இதழ்களிடமும் தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருபவர். தன்னோடு கருத்து வேறுபாடு கொள்பவர்களைக் கலப்பட மேற்கோள்கள், பொய்கள், அவதூறுகள் வழி எதிர்கொள்பவர். இன்றுவரை தனது அரங்குகளிலோ இதழ்களிலோ மாற்றுக் கருத்துக்கு ஊசிமுனை இடம் கூட வழங்காதவர். இவரது அவதூறுகளாலும் சகிப்பின்மையாலும் பாதிக்கப்பட்டவர் களின் பட்டியல் கோவை ஞானி, எஸ்.வி.ஆர், ஞாநி, சு.ரா., இ.பா., புதுமைப்பித்தன், மௌனி, ரவிக்குமார், ஆதிமூலம், ஆ.இரா. வேங்கடாசலபதி, எம்.ஏ. நுஃமான், அசோகமித்திரன் என நீளும் பட்டியல் கடந்த நூறாண்டுகளில் பல தளங்களில் தமிழுக்குப் பங்களித்தவர்களின் பட்டியலாகும்.

மேலும் தமிழ் ‘முற்போக்கு'ப் படையின் நிலைப்பாடுகள் பெருமளவிற்கு அடையாளம் மட்டுமே சார்ந்தவை. கருத்தி யல் அல்லது நிலைப்பாடு சார்ந்தவை அல்ல. எந்தக் கருத்தி யலை எதிர்க்கிறோம் என்பதைவிட யாரை எதிர்க்கிறோம் என்பதே இவர்களுக்கு முக்கியம். தீவிர இடதுசாரிகளும் இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் திராவிட இயக்கம் சார்ந் தோரும் தமிழகத்தில் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகச் செயல்பட்டபோதெல்லாம் திரளாத ‘முற்போக்கு' எதிர்ப்பு பூஞ்சையான, ஊடகக் கவனத்திற்காக ஏங்கிக்கொண்டிருக்கும் ஒரு இந்து அமைப்பிற்கு எதிராக இப்போது கிளம்பியிருக்கிறது.

தஸ்லீமா நஸ்ரீன் முதல் கடந்த ஆண்டு இங்குத் தாக்குதலுக்கு உள்ளான ஹெச்.ஜி. ரசூல்வரை படைப்பாளிகளின் படைப்பு/ கருத்துச் சுதந்திரம் பாதிக்கப்பட்டபோது மௌனியாக இருந்த அ. மார்க்ஸ் இப்போது ரௌத்திரம் பழகுவதும் கவனத்திற்குரி யது. அ. மார்க்ஸ் அல்ல பிரச்சினை. அவர் ஒரு துலக்கமான குறியீடு மட்டுமே. இவை ஒருவிதத்தில் தமிழக ‘முற்போக்கு'த் தளத்தின் பொதுப் பிரச்சினைகள். சமகாலத்தில் கருத்துச் சுதந் திரத்திற்கு எதிரான நடவடிக்கைகள் பல இங்கு பழமை வாதிகளாகவோ இந்துத்துவவாதிகளாகவோ மேற்கொள்ளப் பட்டவை அல்ல. மாறாக இடதுசாரி, திராவிட இயக்கச் சூழலி லிருந்து உருவானவையே. இந்துத்துவவாதிகளுக்கு இந்தியா வின் பிற பகுதிகளைப் போல இங்கும் வலுவான அடித்தளம் இருந்திருந்தால் அவர்களுடைய செயல்பாடுகள் கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானவையாக, இந்து மேலாண் மையையும் பழமைவாதத்தையும் ஆதரிப்பவையாகவும் இருக்குமென்ப தில் ஐயமில்லை. நம்முடைய பிரச்சினை இங்கே பல சமயங் களில் சிவசேனையும் பஜ்ரங்கதளமும் தாலிபானும் செய்ய வேண்டிய பணிகளைத் தமது பண்பாட்டுச் சகிப்பின்மையாலும் வன்முறை நடவடிக்கைகளாலும் நமது ‘முற்போக்கு' இயக் கங்கள் செம்மையாகவே செய்துமுடிக்கின் றன என்பதுதான்.

குஷ்புவுக்கு மறுக்கப்பட்ட கருத்துச் சுதந்திரம் இன்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் ஒரு முடிவுக்கு வந்துள்ளது. (குஷ்பு வுக்கு ஆதரவாகப் பேசிய சிலர் ஞாநி, என். ராம் போல பிராம ணர்கள் என்பதால் ‘மீண்டும் பார்ப்பன எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்க வேண்டியிருக்கும்' என்று கருணாநிதி வெளியிட்ட அறிக்கையை இங்கு நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும்.) கருணாநிதியை விமர்சிக்கும் ஞாநியின் உரிமைக்கு எதிராக அணி திரண்டு, ஊடகங்களில் அவரது மாற்றுக் கருத்துக்கான இடத்தை அழிக்க முயன்றவர்கள், அதில் ஓரளவு வெற்றியும் கண்டவர்கள், அடிப்படைவாதிகளோ பாசிஸ்டுகளோ அல்ல நமது கவிஞர்கள், மாற்றுக் கருத்தாளர்கள், கருத்துச் சுதந்திர வாதிகள் இன்ன பிற ‘முற்போக்கு'ச் சக்திகளும்தான் என்னும் உண்மையை நாம் நேர்மையாக எதிர்கொள்ள வேண்டும். இக்கால கட்டத்தில் உதிர்க்கப்பட்ட ‘‘கலைஞரை விமர்சிப் பது திராவிட இயக்கத்தை விமர்சிப்பது போன்றது'' என்ற சகிப்பின்மையின் இலக்கணமான வாக்கியம் அவசரநிலை காலத்தில் காங்கிரஸ் தலைவர் அப்துல் கபூரால் உதிர்க்கப் பட்ட ‘இந்திராவே இந்தியா, இந்தியாவே இந்திரா' என்னும் முழக்கத்துடன் ஒப்பிடப்பட வேண்டியதுகருணாநிதியின் காலில் விழும் அடிவருடிகளிடமிருந்து வெளிப்பட்டது அல்ல. இன்று கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக அணிதிரட்டும் அ.மார்க்ஸால் உதிர்க்கப்பட்ட தேன் துளி இது.

மாற்றுக் கருத்துகளையும் மாற்றுக் கருத்தாளர்களையும் எதிர்கொள்ள நமது ‘முற்போக்கு'ச் சக்திகள் மேற்கொள்ளும் வழிமுறைகளாக என் அனுபவத்தில் கண்டவை இவை.

1. மாற்றுக் கருத்தாளர்களைக் கூட்டம் கூட்டி அவதூறு செய்வது. அவர் வாழும் அறிவுச் சூழலிலிருந்து அவர்களை அன்னியப்படுத்துவது.

2. தொலைபேசி மூலம் அவதூறு செய்வது, வீடுதேடிச் சென்று மிரட்டுவது, பணியிடங்களில் பிரச்சினைபடுத்துவது.

3. மாற்றுக் கருத்துகள் வெளிப்படும் தளங்களை நோக்கி தீண் டாமைக் கொள்கையைக் கடைபிடிப்பது. தீண்டாமையைப் பிரச்சாரமாக மேற்கொண்டு பரப்புவது. இருட்டடிப்புச் செய்வது.

4. மாற்றுக் கருத்துகளைப் பதிவு செய்யும் இதழ்களை/ பதிப்பகங்களைத் தண்டிக்க, கட்டுப்படுத்தத் தமது நிறுவன பலத்தையும் ஊடக பலத்தையும் அவதூறுகள் மூலமாகவும் தடைகள் மூலமாகவும் பிரயோகிப்பது.

5. ‘குடி'யை முகாந்தரமாகக் கொண்டு மாற்றுக் கருத்துகளுக் கான அரங்குகளைக் குலைக்க முயல்வது.

சிறுபத்திரிகைக் கூட்டங்களில் புகுந்து கலாட்டா செய்வது, குடித்துவிட்டுக் கூச்சலிடுவது, வசைபாடுவது போன்ற நட வடிக்கைகளுக்குக் ‘கலகம்', ‘அனார்க்கிசம்' என்றெல்லாம் கருத்தியல் அடிப்படை வழங்கி, கௌரவித்து ஊக்குவித்த அ.மார்க்ஸ் முன்னின்று நடத்தும் கூட்டத்தில் அதுவும் கருத்துச் சுதந்திரத்திற்கான கூட்டத்தில் அவருக்கு எதிராகக் ‘கலகம்' பிரயோகிக்கப்பட்டதைக் கண்டு அவர் ரசித்திருக்க முடியாது. அ. மார்க்ஸ் தமிழ்ச் சூழலுக்கு ஊட்டிய அருமருந்து இப்போது அவருக்குப் புகட்டப்பட்டிருக்கிறது. திருவள்ளுவர் என் நினைவுக்கு வருகிறார்.

பெண்களுக்கான படைப்புச் சுதந்திரம், மாற்றுக் கருத்துகளுக் கான வெளி, சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்டவர் களுக்குமான உரிமைக்குரல் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் அதே விழுமியங்களின் அடிப்படையில் நாம் வெறுக்கக்கூடிய, பிற்போக்காளராகப் பார்க்கக்கூடியவர் களின், பெண்களுக்கும் சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப் பட்டவர்களுக்கும் எதிரான கருத்துகளுக்கான சுதந்திரமும் பாதுகாக்கப்பட வேண்டும். அக்கருத்துகள் மாற்றுக் கருத்து களாலும் ஆதாரபூர்வமான வாதங்களாலும் எதிர்கொள்ளப்பட வேண்டும்.

கருத்துச் சுதந்திரத்திற்கான போராட்டம் நமது சகிப்பின் மையை அழித்து, நாம் வெறுக்கும் கருத்துகளுக்கான இடத்தை அங்கீகரிப்பதிலிருந்தே தொடங்க வேண்டும். பெண் படைப்பாளிகள் தமது படைப்புச் சுதந்திரத்தை விடு தலைக்கான பயணத்தில் ‘ஆபாசம்' போன்ற வரையறை களைத் தகர்த்து பிரயோகிப்பதை அங்கீகரிப்போம். அதே நேரத்தில் நமது கருத்துச் சுதந்திரத்தைப் பிறர் மதிக்க வேண்டு மென்றால் நாம் கைக்கொள்ள வேண்டிய விழுமியங்களும் உண்டு. நமது கருத்தை ஆதாரபூர்வமாகப் பொய்மையின்றி, பொறுப்புணர்வுடன் வெளிப்படுத்துவது முக்கியம். கருத்துச் சுதந்திரம் அவதூறுகளுக்கான சுதந்திரம் அல்ல. அதேபோல நமது படைப்புச் சுதந்திரத்தையும் பரபரப்புக்காக, ஊடகக் கவனத்திற்காக, நாமே கொச்சைப்படுத்தாமல் இருப்பதும் அவசியம். எப்போதும் சுதந்திரத்துடன் சேர்ந்தே வரும் பொறுப்புணர்வைத் தட்டிக் கழித்துவிட்டு எந்தச் சுதந்திரத்தையும் தக்கவைத்துக்கொள்ள முடியாது.

காலச்சுவடு, மே 2010

Pin It