ஏதிலியாய் மறையும் உண்மை

சில விஷயங்களை விரிவாக உரையாடுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு நிகழ்வு காரணமாகிவிடுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வு அண்மையில் லீனா மணிமேகலையின் கவிதை குறித்து எழுந்த எதிப்புகளும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளும் கருத்துரிமை பற்றி பரவலாக பேசவும் எழுதவும் உரையாடவும் இடம் கொடுத்தது. 

இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து கருத்துரிமை பற்றி நமது எழுத்தாளர்களும் இதழாசிரியர்களும் தாம் இயங்கும் அல்லது சார்ந்த தளங்களில் எழுதிய கட்டுரைகளை, மொத்தமாக வேறொரு தளத்தில் வாசிக்கும்போது என்ன மாதிரியான கருத்துக்களை நமக்கு உணர்த்துகின்றன என்பதையும் உட்பிரதி என்ன சொல்கிறது என்பதை விவாதிக்கவும் இவ்விதழில் தொகுக்கப்பட்டுள்ளன.

******

சென்ற ஏப்ரல் 16 அன்று எழும்பூர் ‘இக்சா' மையத்தில் ‘கருத்துரிமைக்கான எழுத்தாளர்கள்' என்கிற தற்காலிக அமைப்பு ஒன்றின் சார்பாக நடத்தப்பட்ட கூட்டமொன்றில் ம.க.இ.க. வினர் மேற்கொண்ட வன்முறை குறித்து அறிந்திருப்பீர்கள். இவ்வமைப்பினர் ‘பினாமி'யாக நடத்தும் ‘வினவு' இணைய தளத்தில் இது குறித்து ஏராளமான பொய்கள் அடங்கிய வசவுக் கட்டுரைகள் குறைந்த பட்சம் இரண்டைக் காணலாம். அப்படியான ஒரு கலாட்டா நடைபெறப்போவது நாங்கள் அறிந்ததே. இப்படியான கூட்டம் குறித்து யோசித்தபோது இந்து மக்கள் கட்சி இப்படிச் செய்யலாம் என நினைத்தோம். அடுத்தடுத்த நாட்களில் ம.க.இ.க. அதைச் செய்யப் போகிறது என்கிற செய்தி எங்களுக்குக் கிடைத்தது.

கூட்டம் நடைபெறுவதற்கு முதல்நாள் இருமுறை எழும்பூர் காவல் நிலைய அதி காரிகள் என்னிடம் போனில் விசாரித்தனர். உங்களுக்கு எதிரிகள் யாரும் உண்டா என்று கேட்டார்கள். அப்போதுகூட ம.க.இ.க. வை ‘எதிரி' என நான் சொல்ல விரும்பவில்லை இந்து மக்கள் கட்சி வேண்டுமானால் எதிர்க்கலாம் என்றுதான் சொன்னேன். ‘நீங்கள் கமிஷனர் அலுவலகத்தில் தகவல் தெரிவித்துள்ளீர்களா?' என அடுத்துக் கேட்டனர். ‘அறைக் கூட்டங்களுக்கு நாங் கள் காவல்துறைக்குத் தகவல் தருவதில்லை' என்று சொன்னேன்.

கூட்டத்தன்று சிறிது பதட்டமாகத்தான் இருந்தேன். சுமார் 100 பேர் வந்திருந்தனர். அதில் 30 பேர் ம.க.இ.க.வினர். இ.ம.க. வினர் (அதாவது இந்து மக்கள் கட்சியினர்) யாரும் இல்லை. வினவு இணையத் தளத்தில் எழுதியிருந்தது போல முன் வரிசையில் அவர்களின் பெண்கள் அணியினர் வந்து அமர்ந்த போது எனக்குக் கொஞசம் உதைப்புத்தான். ஏனெனில் அதில் தலைமை தாங்கி வந்த பெண் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு நெருக்கம் எனக் காதோடு ஒருவர் வந்து என்னிடம் சொல்லிப் போனார். அ.தி.மு.க. பாரம்பரியப் பெண்கள் படை என்றால் அப்புறம் பயம் இருக்காதா என்ன?

கூட்டம் தொடங்கி நான் ஒரு ஐந்து நிமிடம் பேசி முடித்துக் கொண்டேன். மொத்தம் 25 பேர் பேச வேண்டி இருந்தது. உடனடியாக ம.க.இ.க கும்பலிலிருந்து ஒருவர் எழுந்து ‘கலாட்டா'வைத் துவங்கினார். ஆம். கலாட்டாதான். கேள்விகள் கேட்க வேண்டும் என்றார். ‘‘கேளுங்கள். ஆனால் கூட்டம் முடிந்தபின் கேள்வி அனுமதிப்பது தான் வழக்கம். எல்லோ ரும் பேசியபின் நீங்கள் கேட்கலாம்'' என்றேன். இப்போதே கேட்க வேண்டும். அப்போதுதான் கூட்டம் நடத்த அனுமதிப் போம் எனச் சத்தமிட்டனர். கூட வந்தவர்கள் எழுந்து என்னையும் அருகே இருந்த ராஜன்குறை, சுகுமாரன் ஆகியோரையும் நோக்கி ஓடி வந்தனர். சுபகுணராஜன், கே.ஏ. குணசேகரன், நடராஜன் உள்ளிட்ட பலரும் சமாதானம் செய்ய முயன்று தோற்றனர். இளம் எழுத்தாளர்கள் ம.க.இ.க.விற்கு எதிராக எதிர்க் குரல் எழுப்பினர். இந்த அமளிகளுக்கிடையில் ராஜன் குறை பேசினார். மீண்டும் பெரிய அளவில் அமளி. மேடை ஏறிய கரசேவகர், சுபகுணராஜனை 'கேள்வி கேட்கத்தான் விடுங்களேன்' என்றார். அனுமதித்தோம்.

கேள்வி என்பதற்குப் பதிலாக ஒரு பெரிய ‘லெக்சர்' அடிக்கத் தொடங்கினர். ஏற்கனவே அவர்கள் ஒரு துண்டறிக்கையையும் விநியோகித்திருந்தனர். அவர்கள் லீனாவை நோக்கி எழுப்பிய புரட்சிகரமான கேள்விகளில் ஒன்று: ‘‘சி.பி.ஐ, சி.பி.எம். ஆண்களில் எத்தனை பேருடைய குறியைப் பார்த்திருக்கிறீர்கள்?'' என்கிற ரீதியில் இருந்தது. இதனால் சீற்றமடைந்து லீனா ஓடி வந்தபோது இளம் கவிஞர்களும் நடுநிலையாளர்களும் அவரைத் தடுத்தனர். பிறகு ம.க.இ.க. ஆண், பெண் தொ(கு)ண்டர்கள் ஆளுக்காள் பேசினர். முழக்கமிட்டனர். இவற்றில் பல ஆபாச எல்லையைத் தொட்டது குறிப்பிடத்தக்கது. எல்லாம் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது, குழுமியிருந்த இளம் கவிஞர்களும் ‘‘ம.க.இ.க. பாசிஸ்டுகளே வெளியேறுங்கள்'' என பதிலுக்கு முழங்கினர். ‘‘இங்கே கருத்துரிமை கிடையாது என மார்க்ஸ் சொன்னால் போகிறோம்'' என்றார்கள். ‘‘இப்படியான வடிவில் நீங்கள் ‘கருத்துரிமை' கோருவதை அனுமதிக்க இயலாது'' என்றேன். திட்டிக் கொண்டும், முழக்கமிட்டுக் கொண்டும் வெளியேறினர். வந்திருந்த இளங்கவிஞர்கள் பதில் முழக்கமிட்டனர். .....

இது தொடர்பாகச் சில தகவல்களும் கேள்விகளும்.

முதலில் தகவல்கள் :

1. கூட்டத்திற்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் லீனா மணி மேகலையின் பிரச்சினைக்குரிய கவிதைகளுடன் உடன்பாடு கொண்டவர்கள் எனக் கூற முடியாது. கருத்து மாறுபட்ட சிலரும்கூட இப்படியான எதிர்வினைகள் கூடாது எனக் கருதி னர். முழுமையான ஜனநாயக உணர்வுடன் இந்த வகையான எதிர்வினைகளைக் கண்டிக்க உடன்பட்டனர்.

2. லீனாவின் செயற்பாடுகளில் கருத்துமாறுபட்ட ஒரு சிலர் கண்டனக் கூட்டத்தில் பங்கு பெற மறுத்தது உண்மையே. அவர்களை நான் வற்புறுத்தவும் இல்லை. எனினும் 50க்கும் மேற்பட்டோர் மனம் உவந்து இக்கண்டனக் கூட்டத்தில் பங்கேற்க முன்வந்தனர். லதா ராமகிருஷ்ணன் சொன்னது போல பலர் கவிதைகளுடன் உடன்பட்டே கருத்துரைத்தனர்,

3. இக்கவிதைகள் பற்றி இணையத் தளங்களில், குறிப்பாக ம.க.இ.க.வின் ‘வினவு'வில் எழுதப்பட்டது குறித்துக் கேள்விப் பட்ட போதெல்லாம் நான் அதைப் பெரிதுபடுத்தவில்லை. இ.ம.க. இதில் தலையிட்ட பின்னரே இன்னொரு குஜராத், கர்நாடகாவாக தமிழகமும் ஆகிவிடக்கூடாது என்கிற அடிப் படையில் நாங்கள் தலையிட முயற்சித்தோம். அந்த வகையில் இ.ம.க.வை குறி வைத்தே எமது துண்டறிக்கையும் எழுதப்பட் டது. இணையத் தளங்களிலும் இப்படியான தனிநபர் அவதூறு கள் (எ.டு. டக்ளஸ் தேவானந்தாவிடம் ஷோபாவும் லீனாவும் பணம் வாங்கினார்கள் ம.க.இ.க.வின் புரட்சிகர நேர்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. விரைவில் இதை நிறுவுவார்கள் என நம்புகிறேன்.)

செய்யப்படுவது குறித்து போகிற போக்கிலேயே ஒரு குறிப்பு அதில் இருந்தது. கூட்டத்தில் கலாட்டா செய்தவர்கள் இணையத் தளங்களில் ம.க.இ.க, வினவு முதலிய குறிச்சொற்கள் இருந்ததே எனத் திரும்பத் திரும்பக் கத்தினர். அதற்கும் கூட்ட ஏற்பாட்டாளர்களுக்கும் எந்தப் பொறுப்பும் கிடையாது. தொழில்நுட்ப ரீதியான இப்பிரச்சினையைப் புரிந்து கொள்ளாத வகையிலேயே ம.க.இ.க.வின் கரசேவகர்கள் தயாரிக்கப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி சில கேள்விகள்

1. தன்னைப் புரட்சிகர இயக்கம் என அழைத்துக் கொள்ளும் ஒரு இயக்கம் இப்படி ‘பினாமி' பெயரில் இணையத்தளம் நடத்துவதும் அதில் அப்பட்டமான பொய்களையும், அவதூறுகளையும், ஆபாசங்களையும் உண்மை போல் எழுதுவதும் என்ன நியாயம்? இவர்களே வெவ்வேறு பெயரில் பின்னூட்டங்கள் எழுதுவது, சாதி பற்றி எல்லாம் அவற்றில் பேசுவது இதெல்லாம் என்னவிதமான புரட்சிகரப் போர்த் தந்திரம்?

2. நாங்கள் எத்தனையோ கூட்டங்கள் நடத்தியிருக்கிறோம். ரொம்பவும் ‘சீரியசான' விவாதங்கள், பிரச்சினைகள் தொடர்பாக நாங்கள் கூட்டம் நடத்தும்போது ம.க.இ.க.வினர் வந்துள்ளனர். எடுத்துக்காட்டாக சென்ற மாதம் ‘நேபாள மாவோயி ஸ்டுகள் எதிர்கொள்ளும் சவால்கள்' என்கிற தலைப்பில் டெல்லியிலிருந்து கவுதம் நவ்லக்காவை வரவழைத்துக் கூட்டம் நடத்தினோம். அவருடன் பேச வேண்டுமென ம.க.இ.க. தலைமை எங்களிடம் அனுமதி கேட்டபோது 2 மணி நேரம் ஒதுக்கி, நாங்கள் வெளியே வந்து அவர்களைத் தனியாகப் பேச அனுமதித்தோம். பின்பு கூட்டத்திற்கும் வந்தனர். இப்படியான கூட்டங்களுக்கு அவர்களது தலைமையினர் மட்டுமே வருவது வழக்கம். குறிப்பாக மருதையன் எனப்படும் வல்ல பேசன், வீராச்சாமி எனச் சொல்லிக் கொள்ளும் ரங்கராஜன் ஆகியோர் இத்தகைய கூட்டங்களை ‘அட்டென்ட்' பண்ணுவார்கள். கரசேவகர்களை இங்கெல்லாம் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் கலாட்டா செய்கிற கூட்டங்களில் சேத்துப்பட்டு முதலான பகுதிகளிலிருந்து வரக்கூடிய அடித்தளத் தோழர்களே அனுப்பப்படுவர். பாபர் மசூதி இடிப்பிற்கும், விநாயகர் ஊர்வலங்களுக்கும் அடித்தள மக்களைக் கரசேவகர்களாகப் பயன்படுத்தும் உயர்சாதி இந்துத்துவத் தலைமைக்கும் ம.க.இ.க. தலைமைக்கும் என்ன வித்தியாசம்? இது என்ன வகையான புரட்சிகர வேலைப் பிரிவினை?

3. கூட்டங்களைக் குழப்பி நடத்தவிடாமல் செய்ய முயற்சிப்பது, அதன் மூலம் அரங்க உரிமையாளர்களை மிரட்டி இனி இதுபோன்ற கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கச் செய்வது, சங்கர ராம சுப்பிரமணியன் போன்ற கவிஞர்களின் வீடுகளுக்குச் சென்று அக்கம் பக்கத்தாரிடம் அவதூறு செய்து, பொய் சொல்லி வீட்டைக் காலி செய்யச் செய்வது, வன்முறையைத் தூண்டுவது, இளம் மனைவியையும் முதிய பெற்றோர்களையும் மிரட்டுவது இதெல்லாம் அரசு, காவல்துறை, உளவுத் துறை ஆகியோர் பயன்படுத்தும் தொழில் நுட்பங்களல்லவா? இப்போதே நீங்கள் இத்தகைய அரசு வடிவத்தை எடுத்தால், உண்மையிலேயே அரசு அதிகாரம் உங்கள் கையில் வரும்போது அது எப்படி இருக்கும்? புரட்சியின் பன்முகப் பரி மாணங்களையும் வெறும் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதாகச் சுருக்கிப் புரிந்துகொள்வதின் விளைவுகளில் இது ஒன்றா?

4. உங்க அக்கா, தங்கச்சி, பெண்டாட்டி, பிள்ளைகள், பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லோரிடமும் படித்துக் காட்ட முடியுமா? என்றொரு மாபெரும் ‘தர்க்கத்தை' ம.க.இ.க.வினர் முன் வைக்கின்றனர். அது சரி உங்களின் கொள்கைகள், எழுத்துக் கள், முழக்கங்கள் எல்லாம் இப்படி எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றுத்தான் வெளியிடப்படுகிறதா? அப்படி ஒப்புதல் அளிக் காவிட்டால் என்ன செய்வீர்கள்? உங்கள் மனைவிக்கோ, பக்கத்து வீட்டுக்காரனுக்கோ பிடிக்காவிட்டால் அந்தக் கொள் கைகளை விட்டுவிடுவீர்களா? எதை வெளிப்படுத்துவது, எதை வெளிப்படுத்தக்கூடாது என்பதற்கு இதுதான் அளவுகோலா?

5. கூட்டத்தில் கேள்வி என்ற பெயரில் கலாட்டா செய்வதுதான் கருத்துரிமை என்றால் உங்கள் கூட்டங்களில் இதை அனுமதிப் பீர்களா? உங்கள் கூட்டங்கள் எப்படி நடத்தப்படுகின்றன என் பதை ஒரு கணம் நினைத்துப் பாருங்கள். கேள்வி கேட்பதற்கு மட்டுமல்ல, இடையில் எழுந்து ஒண்ணுக்குப் போவதற்குங் கூட நீங்கள் அனுமதிப்பதில்லை. உங்களின் மகா அறுவை யான பேச்சுக்களைக் கேட்டு யாரேனும் அசந்து கண்ணயர்ந் தால் உங்கள் ம.க.இ.க. தடியர்கள் (அதாவது தடியுடன் கூடிய தொண்டர்கள்) அருகே வந்து உட்கார்ந்துள்ள நாற்காலியில் அடித்து அவரை எழுப்புவதில்லையா. உங்கள் கூட்டங்களில் கண்ணயரவும், ஒண்ணுக்கு இருக்கவும், எச்சில் துப்பவும் அனுமதிக்காத நீங்கள் எங்கள் கூட்டங்களில் வந்து கலாட்டா பண்ணி, ஆபாச வசனம் பேசி, வன்முறை விளைவிப்பதைக் கருத்து சுதந்திரம் என்றா சொல்கிறீர்கள்? உங்கள் பேச்சைக் கேட்பவர்கள் எல்லோரும் காதில் பூ வைத்த கரசேவகர்கள் என்றா நம்பிக்கொண்டிருக்கிறீர்கள்?

6. முப்பதாண்டுகளாக நீங்களும் இயக்கம் நடத்துகிறீர்கள். வரவர நீங்கள் தேய்ந்து போவதும், பழைய நிகழ்ச்சிகளைக் கூட இப்போது ஆண்டுதோறும் நடத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதும் கூட்டு நடவடிக்கைகளில் ஒதுங்கியும், ஒதுக்கியும் நீங்கள் செயல்படுத்துகிற பார்ப்பனியத்திற்காகக் கடுமையாக சக இயக்கங்களில் விமர்சிக்கப்படுவதையும் நீங்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?

7. உங்களுடைய தத்துவத்தின்படியே பார்த்தாலும் நாங்கள் ஒன்றும் உங்களின் பிரதான எதிரிகளல்ல. இந்தக் கவிதை போன்று ஒரு சில பிரச்சினைகளில் நாங்கள் உங்களுக்கு எதிரி களாக இருக்கலாம். ஆனால் சகல பரிமாணங்களிலும் உங் களுக்கு எதிரிகளாக உள்ள தி.மு.க., அ.தி.மு.க, ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. கட்சிகளின் கூட்டங்களில் சென்று தொடர்ந்து இப்படி கலாட்டா செய்யும் யோக்கியதையோ, அருகதையோ, நெஞ்சுரமோ உங்களுக்கு உண்டா?

8. ம.க.இ.க. அடிமட்டத் தோழர்களே! உங்களை நாங்கள் இப்போதும், எப்போதும் வெறுத்ததில்லை. இந்தக் கவிதை யின் மீது நீங்கள் கொண்ட கோபத்தைக் கூட நான் புரிந்து கொள்கிறேன். ஆனால் ஒரு கவிதையை எவ்வாறு வாசிப்பது, ஒரு கட்சி ஆவணத்தையும் கவிதையையும் ஒரே மாதிரி வாசிக்கலாமா என்பதெல்லாம் விரிவாகச் சிந்திக்க வேண்டிய பிரச்சினைகள். ஒரு எழுத்து வெளியிடப்பட்டபின் அதை யார் வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். எப்படி விமர்சிப்பது என்பதுதான் பிரச்சினை. உடனடியாகத் தனிப்பட்ட அவதூறு கள் செய்வது, அந்த டைரக்டருடன் படுத்தாள், டக்ளசிடம் பணம் வாங்கினான் எனக் கவிதையை எழுதியதற்காக கவிதை எழுதியவரை, அதுவும் ஒரு பெண்ணாயிருக்கும் பட்சத்தில் பாலியல் அவதூறுகள் செய்வதெல்லாம் என்ன நியாயம்? அன்று வந்திருந்த அந்த இளம் கவிஞர்களெல்லாம் நமது வர்க்க எதிரிகளா? குறைந்தபட்சம் இடதுசாரிச் சிந்தனைகளை வெறுப்பவர்கள் என்றேனும் அவர்களைச் சொல்ல முடியுமா? உங்கள் தலைவர்கள் எடுத்த முட்டாள்தனமான முடிவின் விளைவாக எழுதிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான இளம் எழுத்தாளர்களிடமிருந்து நீங்கள் அந்நியப்பட்டுப் போனதை யோசித்தீர்களா?

9. இதை எல்லாம் விட ஆபாசமாகப் பல ஆண் எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர். அப்போதெல்லாம் வராத கோபம் ஒரு பெண் எழுதும்போது மட்டும் ஏன் உங்கள் தலைமைக்கு வருகிறது? உங்களிடம் உறைந்து போயுள்ள ஒரு உயர்சாதி ஆணாதிக்க மனப்பான்மையை இது வெளிக்காட்டவில்லையா?

10. வினவு இணையத்தளத்தில் உங்கள் கட்டுரைகளை மீண்டும் ஒருமுறை அமைதியாகப் படித்துப் பாருங்கள். அதில் வெளிப்படுவது அடித்தள வர்க்கத்தின் கோபமா இல்லை, மேட்டிமை வர்க்கத்தின் மேற்சாதித் திமிரா?

(லும்பினி இணையதளம்)

Pin It