கீற்றில் தேட...

 

ஊழல், கொலை, அடிதடி பிரச்சினைகளில் சிக்கி, பத்திரிகைகளில் செய்தி வந்துவிட்டால், மூன்றாந்தர அரசியல்வாதிகள் என்ன செய்வார்கள் தெரியுமா? முதலில் நிருபரையோ, பத்திரிக்கை முதலாளியையோ விலை கொடுத்து வாங்கப் பார்ப்பார்கள். முடியவில்லையென்றால் மிரட்டுவார்கள்; அதற்கும் மசியவில்லையென்றால், ஆட்டோ அனுப்புவார்கள்; பத்திரிக்கையை முடக்கப் பார்ப்பார்கள். இந்த மூன்றாம்தர அரசியல்வாதிகளுக்கு சற்றும் குறைந்ததல்ல அ.மார்க்ஸ், ஷோபா சக்தி & குழாம்.

கீற்றில் யாரும் எழுதக்கூடாது என்று எழுத்தாளர்களிடமும், கீற்றில் உங்களது பத்திரிக்கைகளை வெளியிடாதீர்கள் என்று சிறுபத்திரிக்கை ஆசிரியர்களிடமும் பேசி வருகிறார்கள். எழுத்தாளர்களை அணிதிரட்ட ஒவ்வொருவரின் வீட்டுக்கதவையும் தட்டப் போவதாக லீனா மணிமேகலை சொல்கிறார். மினர்வா வேலை பார்க்கும் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு, அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்போவதாக பேசியிருக்கிறார்கள். இதன் நோக்கமென்ன? மினர்வாவை எழுத விடாமல் செய்ய வேண்டும் அல்லது வேலையை விட்டு தூக்க வேண்டும். இவர்கள்தான் கருத்துச் சுதந்திரத்திற்காக கூட்டம் நடத்தினார்கள். சிரிப்புதான் வருகிறது.

எப்படியாவது கீற்றினை முடக்க முடியுமா என்று தவிக்கிறார்கள்.  இந்தக் கூட்டத்திற்கு கீற்று மீது அப்படியென்ன விரோதம்?

கீற்று எல்லோருக்குமான பொதுவெளியாக கடந்த ஐந்தரை ஆண்டுகளாக இயங்கி வருகிறது. மாற்று அரசியல், மாற்று இலக்கியம் பேசுவோர் அனைவரும் அதை இலவசமாகப் பயன்படுத்தும் வகையில் வெளிப்படையாக செயல்பட்டு வருகிறது. அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா மற்றும் இவர்களுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் அனைவரது படைப்புகளும் கீற்றினில் வந்திருக்கின்றன. விடுதலைப் புலிகள், தமிழ்த் தேசியவாதிகள், தலித் அரசியல் அமைப்புகள், இலக்கியவாதிகள் என எல்லோரையும் விமர்சித்து இவர்கள் எழுதிய கட்டுரைகள் கீற்றில் வந்தபோது அந்தத் தளம் இவர்களுக்கு இனித்தது. இவர்கள் யாரையெல்லாம் விமர்சித்தார்களோ, அவர்களை எல்லாம் வேறு சில இயக்கத்தவர்கள் ஆதரித்து எழுதியபோதும் இவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருக்கவில்லை; தொடர்ந்து கீற்றில் எழுதி வந்தார்கள்.

இவர்களது அரசியல் விமர்சனங்களில் இருக்கும் பாரபட்சம், ஆதாரமற்ற பொய்கள், ஆணாதிக்கத்தனம் மிகுந்த கட்டுரைகள் தொடர்பாக கீற்றில் என்று எதிர்வினைகள் (http://www.keetru.com/index.php?option=com_aikeywords&key=புலி%20எதிர்ப்பு&Itemid=139) வர ஆரம்பித்ததோ அன்றிலிருந்து கீற்று இவர்களுக்கு கசக்க ஆரம்பித்தது.

shobasakthi_351கீற்றில் வெளிவரும் கருத்துகள் கீற்று ஆசிரியர் குழுவின் கருத்துக்களல்ல. அவை அந்தந்த படைப்பாளியின் கருத்துக்களே. எந்தவொரு கருத்துக்கும் எதிர்வினையாற்றிட கீற்றில் இடமளிக்கப்படுகிறது. அதேபோல்தான் அ.மார்க்ஸ், ஷோபா சக்தி, ஆதவன் தீட்சண்யா மீதான விமர்சனங்களுக்கும் அதற்கு பதிலளிக்க இவர்களுக்கும் கீற்றில் இடமளிக்கப்பட்டது. ஆனால் இவர்கள் யாரும் தங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் தர முன்வரவில்லை. மாறாக மூன்றாம்தர அரசியல்வாதிகளாக கீற்றின் மீது பாய்ந்தார்கள். இவர்களது பிரச்சினை இதுதான்: 'நாங்கள் புனிதர்கள்; எங்களை யாரும் விமர்சிக்கக்கூடாது; நாங்கள் ஊரில் உள்ளவர்களை எல்லாம் விமர்சிப்போம்'

முன்னெப்போதையும் விட கீற்றை முடக்கியே ஆக வேண்டும் என்று இப்போது இவர்கள் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதன் காரணம் என்னவென்றால், இவர்களது 'பரிசுத்த ஆவி' ஷோபா சக்தியின் முகம் கீற்றில் கிழிந்து தொங்கிக் கொண்டிருப்பதுதான்.

ஷோபா சக்தி பல ஆண்டுகளாக 'புலிகளின் தலைமை ஆதிக்கசாதியினரால் ஆனது' என சொல்லிவந்தது பொய் என்பது அம்பலமானது. விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் ஈழத்து மீனவர் சமூகமான கரையாளர் பிரிவைச் சேர்ந்தவர் என்பதையும், அந்த சமூகம் ஆதிக்க சாதி சமூகமல்ல என்பதையும் மினர்வா தனது கட்டுரையில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12472:2011-01-17-04-29-48&catid=1:articles&Itemid=264) குறிப்பிட்டிருந்தார். புலிகள் அமைப்பை விமர்சிக்கும் அகிலன் கதிர்காமர், சுசீந்திரன், ஷோபா சக்தி உள்ளிட்டவர்கள் ஆதிக்க சாதியினர்கள் என்பதும் அதில் வெளிச்சமானது. அக்கட்டுரைக்கு வந்த பின்னூட்டத்தில் வெள்ளாள சாதியைச் சேர்ந்த ஷோபா சக்தி இதுவரை தலித் வேஷம் கட்டி வந்ததும், 'அந்தோணியின் கதை' என்ற பேட்டியில் ஷோபாவும், கவின்மலரும் இணைந்து ‘ஷோபா ஒரு தலித்’ என்று பொருள்பட எழுதியதும் (http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html) அம்பலமானது.

அதுவரை ஷோபா சக்தியை தலித் என்றே நினைத்து வந்த பலர், கீற்றினைத் தொடர்பு கொண்டு, 'அவர் வெள்ளாள சாதியைச் சேர்ந்தவர் என்பது உண்மையா? அவர் தலித் இல்லையா?' என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். ஆனால் ஷோபா சக்தி எந்த ஒரு பதிலும் சொல்லாமல் மௌனம் சாதித்தார்.

கவின்மலர் மட்டும் 'ஷோபா வெள்ளாளர் என்பது தெரியாத விஷயமா என்ன?' என்று பேஸ்புக்கில் எழுதினார். தெரிந்திருந்தும் தலித் போல் அவர் காட்டியது ஏனோ?

பிரபாகரனைக் குறிப்பிடும்போது ஆதிக்கசாதியைச் சார்ந்தவர் என்று பொருள்கொள்ளும்படியாக 'வேலுப்பிள்ளை பிரபாகரன்' எனக் குறிப்பிட்டவர்கள், ஷோபாசக்தியின் சாதிப்பின்புலத்தை மறைத்தது ஏன் என்ற வாசகர்களின் கேள்விக்கும் இவர்களிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. அதோடு அந்தக் கேள்வியை ஷோபா சக்தியின் இணையத்தில் பின்னூட்டமாக வாசகர் ஒருவர் இட்டபோது, அதை வெளியிடாமல் ஷோபா சக்தி இருட்டடிப்பு செய்ததும் கீற்றில் பதிவானது.

அடுத்து, தமிழச்சி என்ற தோழரிடம் ஷோபா சக்தி தவறாக நடக்க முயன்று, அடி வாங்கியது தொடர்பாக மினர்வா பேஸ்புக்கில் எழுதியது கீற்றில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13010:2011-02-15-06-33-11&catid=1:articles&Itemid=264) வெளியானது. தொடக்கத்தில் இதற்கு ஆதாரமிருக்கிறதா, நிரூபிக்க முடியுமா என்று கேட்டார் ஷோபா சக்தி. தமிழச்சியே 'இது உண்மைதான்' என்று சொன்னபின்பு, ஷோபா அப்படியே பிளேட்டை மாற்றிப் போட்டார். 'தமிழச்சியை இரண்டாவது முறை சந்திக்கும்போது இருவருக்கும் மனம் ஒத்துப்போனதாகவும், மூன்றாவது சந்திப்பில் அது உடல் தொடர்பாக மாறியது' என்றும் சொன்னார். தமிழச்சி அதை மறுத்தார். ஷோபா தன்னிடம் தலித் என்று பொய் சொன்னது, பெரியாரியம் பேசியதால் அவருடன் நட்பாக இருந்தது, வேலை எதுவும் பார்க்காமல் ஷோபா அடிக்கடி வெளிநாடு சென்று வந்தது, சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் ரூபாய் கொடுத்தது, ஷோபாவுடன் நட்பில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள், பாலியல் சுதந்திரம் பேசி தன்னிடம் அத்துமீறி நடக்க முயன்று அடிவாங்கியது, இதை கடந்த மூன்று ஆண்டுகளாக இணையதளங்களில் எழுதி வந்தது என விரிவாக கீற்றில் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=13087:2011-02-19-01-17-42&catid=1:articles&Itemid=264) எழுதினார்.

மினர்வா, ஷோபா, தமிழச்சி மூவரும் எழுதியது கீற்றில் வெளிவந்தது. ஷோபாவின் நண்பர்களைத் தொந்தரவுக்குள்ளாக்கிய - இக்கட்டுரைகளிலும், பின்னூட்டங்களிலும் கேட்கப்பட்ட கேள்விகளை ஒரு தொகுப்பாக பார்த்தோமானால்...

1. ஷோபா சக்தி, தமிழச்சிக்கும் தனக்கும் இருந்த உறவு குறித்து இப்போதுதான் முதன்முறையாகப் பேசுவதாகக் கூறினார். அப்படியென்றால், ஷோபா சக்தி கூறுவது முன்னமே தங்களுக்குத் தெரியும் என்று அவரது நண்பர்கள் கூறுவது எப்படி? ஷோபா சக்தி சொல்லாமல் அவர்களுக்கு எப்படி தெரிந்திருக்க முடியும்?

2. ஷோபா சக்தி கூறுவதே உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஒரு பெண்ணின் அறியாமையையும், சந்தர்ப்ப சூழலையும் பயன்படுத்தி அவரை ஏமாற்றி நுகர்வதுதானே ஷோபா சக்தியின் நோக்கமாக இருந்திருக்கிறது. பெண்களை பாலியல் பண்டமாக நுகர்வதற்காகத்தான் பெண்ணியம் பேசுகிறாரா? பெண்களை ஏமாற்றிவிட்டு, அதை கம்பீரமாக தனது நண்பர்களிடம் சொல்லும் ஆண்களுக்கும் ஷோபா சக்திக்கும் என்ன வித்தியாசம்?

3. பிரான்ஸில் வேலை இல்லாதவர்களுக்கு ஆறேழு மாத காலம்தான் அரசு உதவித் தொகை கிடைக்கும் என்று சொல்கிறார்கள். ஷோபா அரசு தரும் உதவித் தொகையிலும், எச்சில் தட்டுகளைக் கழுவியும் வாழ்வதாக சொல்கிறார். ஷோபாவுக்கு மட்டும் ஆயுள் முழுவதும் அரசு உதவித் தொகை கிடைக்கிறது என்றால் அதன் பின்னணி என்ன? சொன்னால் மற்றவர்களும் பெறுவதற்கு உதவியாக இருக்கும்..

4. ஒருவேளை எச்சில் தட்டு கழுவுவதால் வரும் வருமானம் ஆண்டுக்கு நான்கு நாடுகளுக்கு சுற்றுலா செல்ல உதவுகிறதா? அப்படி செல்வதற்கு அந்த ஹோட்டலில் அத்தனை நாள் விடுப்பும் தரப்படுகிறதா? அதிகளவு பணமும், அதிகளவும் விடுப்பும் தரும் அந்த ஹோட்டல் எங்கே இருக்கிறது? அங்கே சேர்ந்தால் மற்றவர்களுக்கும் இதே சலுகை கிடைக்குமா?

5. நண்பர்கள் தருவதாக தமிழச்சியிடம் ஷோபா சொன்னது உண்மையென்றால், அந்த பவர்புல் நண்பர்கள் யார்? எவ்வளவுதான் நட்பு இருந்தாலும் நண்பர்கள் ஒரு முறை கொடுத்து உதவலாம். ஆயுளுக்கு கொடுத்து உதவும் அளவுக்கு அந்த நண்பர்கள் இருக்கிறார்கள் என்றால் அவர்கள் யார்? அவர்களின் வருமானப் பின்னணி என்ன?

6. ஷோபாவின் கஷ்டத்தைப் போக்க நண்பர்கள் உதவுவதாகவே வைத்துக் கொள்வோம். அந்த நண்பர்கள் சுகுணா திவாகருக்கு ஒரு லட்சம் கொடுப்பதற்குமா காசு தருகிறார்கள்?

7. சுகுணா திவாகருக்கு கொடுக்கப்பட்ட லட்ச ரூபாய் அவரது கஷ்டத்தைப் போக்குவதற்கா, இல்லை அவரது ஈழ எதிர்ப்பு அரசியலுக்கு கொடுக்கப்பட்ட ஊதியமா? கஷ்டத்தைப் போக்குவதற்குத்தான் என்றால், அதேபோல் கஷ்டப்படும் தலித் முரசு இதழுக்கு ஷோபா ஏதாவது நிதி வழங்கியிருக்கிறாரா? அவர்கள் பலமுறை நிதி வேண்டி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஷோபா தலித் அரசியலுக்காகவே வாழ்பவராயிற்றே... உதவியிருப்பார் அல்லவா?

8.வீட்டில் இருக்கும் பெண்ணிடம் கற்பையும், வெளியே இருக்கும் பெண்களிடம் பரத்தமையும் வற்புறுத்துவதுதான் இந்து ஆணாதிக்கம். பாலியல் விடுதிகளுக்குப் போகும், மூன்றாவது சந்திப்பிலேயே ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளத் தயாராகும் ஷோபா இந்துமத ஆணாதிக்க மனநிலையிலிருந்து எப்படி வேறுபடுகிறார்?

9. ஒரு பேச்சுக்கு ஷோபா சொல்வதே உண்மையென்று வைத்துக் கொள்வோம். கல்யாணமான ஒருவருடன் காதல் வரும்போது, 'உங்கள் கணவரை விவாகரத்து செய்துவிட்டு வாருங்கள். நாம் கல்யாணம் பண்ணியோ, பண்ணாமலோ சேர்ந்திருக்கலாம்' என்று சொல்வதுதானே முறை. அதுதானே தனிமனித அறம்! ஆனால், எப்போதுடா வாய்ப்பு கிடைக்கும் என்று அலையும் சராசரி ஆண் புத்திதானே ஷோபாவுக்கு இருந்திருக்கிறது!! இப்போது உங்களுடன் நட்பாக இருக்கும் பெண்களுடனும் இந்த எண்ணத்தில்தான் பழகுகிறீர்களா?

10. ஒருவர் இரண்டு மனைவியருடன் வாழ்வது ஆணாதிக்க சமூகத்தின் தொடர்ச்சிதானே! அ.மார்க்சும் அதையே செய்வது அவர் பேசும் பெண்ணியத்திற்கு எதிரானது அல்லவா?

கீற்றில் கேட்கப்பட்ட‌ இந்தக் கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல், ‘தனிநபர் அவதூறு’என்று கீற்று மீது பாய ஆரம்பித்தார்கள்.

காரல் மார்க்சுக்கு கள்ளத்தொடர்பு இருந்தது என்று இவர்கள் கட்டுரை எழுதினார்கள். இடதுசாரிகளை பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்தி, கவிதை எழுதினார்கள். சரி, இவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று மற்றவர்கள் எழுதினால் 'அய்யய்யோ தனிமனித அவதூறு' என்கிறார்கள். மார்க்சுக்கு வேலைக்காரப் பெண்ணுடன் தொடர்பு இருந்தது என்று எழுதுகிறவர்கள், அ.மார்க்சுக்கு இரண்டாவது மனைவி இருப்பது குறித்து எழுதினால் மட்டும் அலறுவது ஏன்? மார்க்சுக்கு ஒரு நியாயம், அ.மார்க்சுக்கு ஒரு நியாயமா?

ஊரில் இருப்பவர்களிடம் எல்லாம் அ.மார்க்ஸ் குழுவினர் கணக்கு கேட்கிறார்கள். PUCLக்கு காசு எங்கிருந்து வருகிறது, தமிழ்த்தேசியவாதிகள் புலிகளிடம் காசு வாங்குகிறார்கள், மனுஷ்யபுத்திரனின் காசை அருந்ததிராய் ஏமாற்றிவிட்டார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். சரி, லீனா மணிமேகலை அஜீவனின் பணத்தை ஏமாற்றியது தொடர்பாக இணையதளங்களில் பல முறை செய்தி வந்ததே (ஒரு இணைப்பு இங்கே: http://thesamnet.co.uk/?p=18553), அதைப் பற்றி இவர்கள் எழுதினார்களா? இல்லை அணில் சேமியாவில் கள்ளக்கணக்கு எழுதி பெரிய தொகையை சுகுணா திவாகர் அபேஸ் செய்ததாக வளர்மதி சொல்லியிருக்கிறாரே, அதைப் பற்றி ஏதாவது எழுதியிருக்கிறார்களா? மற்றவர்கள் மீது குற்றச்சாட்டு என்றால், எந்த ஒரு ஆதாரமுமின்றி பழி சொல்ல கிளம்பிவிடுவார்கள், நண்பர்கள் என்றால் அடக்கி வாசிப்பார்கள்.

ஷோபா சக்தி பிரான்சில் கோப்பை கழுவியும், அரசு உதவித்தொகை பெற்றும் வாழ்வதாகச் சொல்கிறார். பிரான்சில் வாழும் நண்பரிடம் விசாரித்தபோது, "அங்கு கோப்பை கழுவுதல் போன்ற உடலுழைப்புத் தொழிலாளருக்கான அடிப்படைச் சம்பளம் 1344 யூரோ ஆகும். இதில் பல்வேறு வரிகள் கழிக்கப்பட்டபின் கிடைக்கும் தொகை 1150 யூரோக்கள். இச் சம்பளம் ஒரு மனிதனின் அடிப்டைத் தேவையை ஓரளவு பூர்த்தி செய்யும். அதற்கு மேல் போதாது. இங்குள்ள அநேகமான இலங்கைத் தமிழர்கள் ஒருவேலை செய்வது குறைவு. எப்படியும் இரண்டு வேலை செய்வார்கள். அல்லது கூடுதலான மணித்தியாலங்கள் வேலை செய்வார்கள். அப்போதுதான் இவர்கள் தங்களின் கடன் மற்றும் உறவினர்களுக்கு உதவுதல் போன்றவற்றை செய்யமுடியும். ஷோபாசக்தி வேலை செய்வாராயின் இப் பணம் அவரின் மதுபாவனைக்கே போதாது. இங்கு ஒரு விஸ்கி வகை மதுபானத்தின் விலை 15 யூரோ. அவரது சகோதரி வீட்டில் தங்கியிருப்பதால், வாடகை பிரச்சினை இல்லையென்றாலும், மற்ற செலவுகளுக்கு இது போதாது. ஷோபா சக்தி கட்டற்ற குடியைப்போன்று கட்டற்ற பாலியல் சுதந்திரத்தைத்தேடி அலைபவர். அதற்கும் நிறைய செலவாகும். இங்கு கொட்டலில் ஒரு நாள் தங்குவதற்கு குறைந்த செலவு 60 யூரோக்கள் ஆகும்." என்று கூறினார்.

வேலையில்லாதவர்களுக்கு மட்டுமே அரசு உதவித் தொகை கிடைக்கும். அதுவும் கடந்த 22 மாதங்களில் குறைந்தது 6 மாதம் வேலை செய்திருந்தால் மட்டுமே, 7 மாதங்களுக்கான உதவித் தொகை கிடைக்கும். கோப்பை கழுவுவதற்கு 1344 யூரோ சம்பளம் வாங்கினார் என்றால், வேலையில்லாதபோது அதில் 75% அரசு உதவித் தொகையாக கிடைக்கும் (பார்க்க: http://www.easyexpat.com/en/paris/work/unemployment-benefits.htm).

எப்படியிருந்தாலும் இந்தப் பணம் அடிக்கடி வெளிநாட்டுப் பயணம் செய்வதற்கோ, தினமும் குடிப்பதற்கோ உதவாது. அப்படியென்றால் ஷோபா சக்திக்கு பணம் எங்கிருந்து வருகிறது? இதைக் கேட்பதில் என்ன தவறு?

இவர்கள் மற்றவர்களைப் பற்றி எப்படியெல்லாம் எழுதினார்களோ, அப்படியெல்லாம்தான் இவர்கள் மீது எதிர்வினைகள் வருகின்றன. அதற்கு பதில்சொல்ல முடியாமல் கீற்று மீது பாய்கிறார்கள். கீற்று ஓர் ஊடகம். ஜெயேந்திரன் மீது அனுராதா ரமணன் பாலியல் குற்றச்சாட்டை வைத்ததை எப்படி செய்தி ஊடகங்கள் வெளியிட்டனவோ, அதேபோல்தான் ஷோபா சக்தி மீதான தமிழச்சியின் குற்றச்சாட்டை கீற்று வெளியிட்டிருக்கிறது. ஆனானப்பட்ட அரசியல்வாதிகளையும், சாமியார்களையும் விமர்சிக்கும் உரிமை ஊடகங்களுக்கு இருக்கிறது என்றால், ஷோபா சக்தி, அ.மார்க்சை விமர்சிக்கும் உரிமை மட்டும் ஊடகங்களுக்குக் கிடையாதா? பொதுவாழ்வில் இருக்கும் எல்லோரும் விமர்சனத்துக்கு உட்பட்டவர்கள்தான். பொதுவாழ்க்கையில் ஒன்றாகவும், சொந்த வாழ்க்கையில் வேறாகவும் வாழ்பவர்கள் நிச்சயம் விமர்சிக்கப்படுவார்கள். இதில் எழுத்தாளர்கள் மட்டும் விதிவிலக்கு கேட்பது ஏன்?

தமிழச்சியின் கருத்தை மறுத்து ஷோபா சக்தி எழுதியதையும், அவரது நண்பர்கள் எழுதிய பின்னூட்டங்களையும் கீற்று வெளியிடத்தானே செய்தது?

தங்கள் மீது வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமாக எதிர்வினை ஆற்றினார்கள்? கீற்று முஸ்லிம்களுக்கு ஆதரவாக கூட்டம் நடத்தியபோது, அக்கூட்டத்தை நடக்கவிடாமல் செய்ய முயற்சித்தார்கள். கூட்டத்தில் பேச அழைக்கப்பட்டவர்களிடம் லீனா மணிமேகலை தொலைபேசியில் பேசியிருக்கிறார். கூட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது என்று வலியுறுத்தியிருக்கிறார். தோழர் ஒருவரிடம் ஏழு பேர் பேசியிருக்கிறார்கள். அதையும் மீறி அவர் கலந்து கொண்டார். சுப.வீரபாண்டியனிடம் லீனா மணிமேகலை பேசியதை அவர் கூட்ட மேடையிலேயே கூறினார். 'உங்கள் எல்லோரையும் விட என்னை விமர்சித்துதான் கீற்றில் அதிக கட்டுரைகள் வெளிவந்திருக்கின்றன. ஆனாலும் அவர்களிடம் எந்த உள்நோக்கமும் இல்லை என்பதால் நான் இங்கு பேச வந்திருக்கிறேன்' என்று சொன்னார். அதுதான் ஜனநாயகம். ஆனால் இவர்கள் கூட்டத்தை நிறுத்த முயற்சித்தார்கள். அது முடியாதபோது, கூட்டத்தில் நடந்த சிறு சலசலப்பைப் பெரிதாக்கி, கீற்று இணையதளம் முஸ்லிம்களுக்கு எதிரான தளம் என்று காட்ட முயற்சித்தார்கள். அதுவும் எப்படி? பிலால் முகமது என்ற பெயரில் சுகுணா திவாகர் எழுதினார். இத்தகைய அயோக்கியத்தனமான வேலையைச் செய்வது ஆர்.எஸ்.எஸ். பாணி அல்லவா? இதை பெரியாரிஸ்ட் என்று சொல்லிக்கொள்ளும் சுகுணா திவாகர் செய்தது ஏன்? 

அ.மார்க்ஸ் & ஷோபா சக்தி

கீற்று ஒரு நாளும் கருத்து சுதந்திரத்திற்கான வெளியை முடக்கியதில்லை. அதுதான் இவர்களுக்குப் பிரச்சினையே. இவர்களுக்கு கேள்வி மட்டுமே கேட்கத் தெரியும்; பதில் சொல்லத் தெரியாது. கீற்றில் இவர்கள் எழுதியபோது, நிறைய எதிர்க்கேள்விகள் வந்தன. அவற்றை கீற்றை பிரசுரித்தது. பதில் சொல்ல முடியாமல் தவித்தார்கள். கீற்றில் எழுதுவதை நிறுத்திவிட்டு, தனி இணையதளம் ஆரம்பித்தார்கள். அங்கு இப்போது தங்களுக்குத் தோதான பின்னூட்டங்களை மட்டும் வெளியிடுகிறார்கள்.

இவர்கள் நடத்தும் இணையதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு சிறிதளவு இடமேனும் இருக்கிறதா? இவர்களது கருத்துகளுக்கு மறுப்பு எழுதினால் வெளியிடுவதில்லை என்று பலர் இணையத்தில் புகார் சொல்லிவிட்டார்கள். கேட்டால், 'உங்களது கருத்தை உங்களது இடத்தில் பேசிக்கொள்ளுங்கள்' என்று ஏகடியம் பேசுகிறார்கள்.

ராஜன் குறை கீற்றில் இருக்கும் தனது கட்டுரைகளை நீக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார். இந்தக் கோரிக்கையை ராஜன்குறை அச்சில் வரும் ஒரு பத்திரிகையிடம் வைக்க முடியுமா? அது நடக்கக்கூடிய காரியமா? ஒரு பத்திரிகையோடு உங்களுக்கு முரண்பாடு வந்தால் அதில் எழுதுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். வெளியான கட்டுரையை நீக்கச் சொல்ல உங்களுக்கு உரிமை கிடையாது. அது எந்த ஜனநாயகத்திலும் சேராது. எந்த ஆதாயமும் இன்றி, எங்களது சொந்த உழைப்பை, பணத்தை செலவிட்டு ஐந்து ஆண்டுகள் நடத்தியிருக்கிறோம். கடந்த ஆண்டு நிதி நெருக்கடி ஏற்பட்டபோது, வாசகர்களிடம் யாசகம் கேட்டோம். இரண்டே கால் லட்சம் ரூபாய் சேர்ந்தது. அதில் இன்னும் ஒரு ஐம்பதாயிரம் பணத்தை எடுக்க முடியாமல், paypal நிறுவனத்தில் முடங்கியிருக்கிறது. இன்றும் வேலைக்கு ஆள் கிடைக்காமல் இரவெல்லாம் கண்விழித்துதான் கீற்றினை நடத்திவருகிறோம். இதில் ஏற்றப்பட்டிருக்கும் ஒவ்வொரு கட்டுரைக்கும் பின்னால் எங்களது உழைப்பு இருக்கிறது. நீஙகள் சொன்னவுடன் அதை நீக்க முடியாது. அப்படி நீக்கினால், ஏகப்பட்ட broken links ஏற்படும். Search engine-ல் கீற்று பின்தள்ளப்படும். அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

கீற்றிற்கு எதிராக கவின்மலர் மிகத் தீவிரமாக எழுதியும், பேசியும் வருகிறார். அனுமதியில்லாமல் அவரது பின்னூட்டத்தைப் போட்டுவிட்டோமாம்! பேஸ்புக், ட்விட்டர் இணையதளங்கள் சோஷியல் நெட்வொர்க் என்பதைத் தாண்டி, அவை ஒரு மாற்று ஊடகமாக வளர்ந்துவிட்டன. பல்வேறு விவாதங்கள் அங்கு நடைபெறுகின்றன. அப்படியான விவாதங்களில் கவின்மலர் பங்குகொண்டு, தான் யார் பக்கம் இருக்கிறார் என்பதை அடையாளப்படுத்துகிறார். அதனால்தான் இந்த விவாதங்களில் கருத்து தெரிவித்தவர்களின் பின்னூட்டங்களையும் கீற்றில் பதிந்தோம். யாருடைய கருத்தையாவது திரித்து வெளியிட்டோமா? Unparliamentary words மட்டும் நீக்கிவிட்டு முழுமையாக வெளியிட்டோம். கவின்மலரது கருத்தை முதன்முறை வெளியிடும்போது நட்பு கருதி அவரிடம் அனுமதி கேட்டிருந்தேன். ஆனால், அதன்பின்பு ஆனந்த விகடனில் யாருடைய அனுமதியும் பெறாமல், பேஸ்புக்கில் எழுதப்பட்டவற்றை போடுகிறார்கள் என்பதையும், அப்படி போடப்பட்டால் கவின்மலர் போன்றவர்கள் அதை அங்கீகரிப்பதையும் தெரிந்து கொள்ள நேர்ந்தது. அந்த வகையில்தான் அனுமதியில்லாமல் அவரது கருத்து கீற்றில் பதியப்பட்டது.

ஆனந்த விகடன் மீது பாயாத கவின்மலர், கீற்று மீது மட்டும் பாய்வது ஏன்? ஒருவேளை பாராட்டு வந்தால் மட்டும்தான் ஏற்றுக்கொள்வாரோ? மாற்றுக்கருத்துகள் வந்தால் அந்த இடத்தில் இருந்து பின்வாங்குவாரா? அவர் கருத்து சரியென்றால், எல்லா இடத்திலும் அதை உறுதியாக சொல்ல வேண்டியதுதானே!

நீண்ட காலமாக கீற்றில் பின்னூட்டம் இடுவதில்லை என்ற கவின்மலரின் விரதத்தைக் கெடுக்கும்விதமாக அவரது பின்னூட்டம் இடப்பட்டிருக்கிறது என்று அவர் சொல்லுவதும் பொய். இந்தப் பிரச்சினையெல்லாம் வெடிப்பதற்கு 25 நாட்கள் முன்புகூட அவர் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறார் (http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12614&joscclean=1#josc4932)

ஆதவன் தீட்சண்யா கீற்றில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல், தான் தலித் என்பதால் தன்னை விமர்சிக்கிறார்கள் என்று ஒரு கவிதை எழுதினார். தலித் அரசியலை மோசமான முறையில் சுயநலத்துக்கு ஆதவன் பயன்படுத்துவது குறித்து எந்தவிதப் புரிதலும் இல்லாமல், கவின்மலர் அந்தக் கவிதையை தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டார் (http://kavinmalar.blogspot.com/2010/04/blog-post_7135.html).

ஷோபா சக்தி ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர் என்பது தெரிந்திருந்தும், அவரை ஒரு தலித் போல் தனது வலைப்பக்கத்தில் சித்தரித்தார் (http://kavinmalar.blogspot.com/2010/11/blog-post.html) அது கீற்றில் அம்பலமானபோது அவரால் தாங்க முடியவில்லை. இப்போது, கீற்றில் தன்னைப் பற்றி கொச்சையாக எழுதிவிட்டார்கள் என்று சொல்கிறார். ஷோபா சக்தி மீது ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு வைக்கிறார். முதலில் அப்படி நடக்கவேயில்லை என்று சொன்ன ஷோபா சக்தி, பின்னர் பெண்களைக் கொச்சைப்படுத்துவதற்குப் பெரும்பாலான ஆண்கள் பயன்படுத்தும் 'அவள் ஒன்றும் பத்தினி இல்லை' என்ற ஆயுதத்தைப் பயன்படுத்தினார்.  ஆணாதிக்கம் மிகுந்த இந்தக் கருத்துக்கு உண்மையில் கவின்மலர் கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் ‘ஷோபா சக்தி கண்ணியமாக எழுதுகிறார்’ என்று எழுதி அவர் ஷோபா சக்தியை ஆதரித்தார். அதற்கு கடுமையான எதிர்ப்பு வந்தது. பாலியல் தொடர்பான குற்றச்சாட்டு என்பதால் வந்த பின்னூட்டங்களும் அதுதொடர்பாகவே இருந்தன.

கவின்மலர் என்ன செய்திருக்க வேண்டும்? ஒன்று எந்தக் கருத்தும் சொல்லாமல் அமைதியாக இருந்திருக்க வேண்டும். இல்லையென்றால், அவரது மனம் புண்படும்படியான கருத்துக்கள் குறித்து கீற்று ஆசிரியர் குழுவிற்கு தெரியப்படுத்தியிருக்க வேண்டும். கீற்றில் ஒவ்வொரு கட்டுரைக்குக் கீழேயும் இந்த அறிவிப்பு இருக்கிறது 'வெளியாகும் படைப்புகளில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அந்தந்த ஆசிரியரின் சொந்தக் கருத்துக்களே! நாகரிகமற்ற/பிழையான பின்னூட்டங்கள் குறித்து இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.க்குத் தெரியப்படுத்தினால், அவை நீக்கப்படும்.' ஆனால் இவை எதையும் செய்யாத கவின்மலர், இந்த சந்தர்ப்பத்தையும் கீற்றினைப் பழிக்க பயன்படுத்திக் கொண்டார்.

ஷோபா சக்தி இவ்வளவு மோசமாக அம்பலமாகிய பின்பும், ஆதவனும் கவின்மலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள். தமிழச்சி கூறியது அவதூறு என்கிறார்கள். உ.ரா.வரதராசன் மீது இதேபோன்ற குற்றச்சாட்டு வைக்கப்பட்டபோது, இப்போது பேசுவதுபோல் இவர்கள் பேசவில்லை. உ.ரா.வரதராசன் தற்கொலை செய்தபின்பும், அவர் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டை இவர்கள் மறுத்துப் பேசவில்லை. இருபது ஆண்டுகளுக்கு மேலாக இயக்கப்பணியில் இருந்த உ.ரா.வரதராசன் மீது வராத நம்பிக்கை, ஷோபா சக்தி மீது மட்டும் ஆதவனுக்கும், கவின்மலருக்கும் வந்தது எப்படி? உ.ரா.வரதராசனை விட ஷோபா சக்தி எந்த வகையில் உன்னதமானவர்?

ஷோபா சக்தி வெள்ளாளராகவோ, பார்ப்பனராகவோ இருப்பதில் பிரச்சினையில்லை. ஆனால், தலித்தாக வேஷம் போட்டு, ஒரு இயக்கத்திற்கு எதிராக தலித் அரசியலை முன்வைத்ததன் அரசியல் நோக்கம் என்ன? இது அப்ப‌ட்ட‌மாக‌ வெளிப்ப‌ட்ட‌ பின்பும், ஷோபாவை ஆத‌ரிப்ப‌துதான் ஆத‌வ‌னின் அர‌சிய‌ல் நேர்மையா?

பிரபாகரன் மீது ஆயிரம்தான் விமர்சனங்கள் இருந்தாலும், அவர் லட்சக்கணக்கான தமிழர்களால் தேசியத் தலைவர் என்று கொண்டாடப்படுபவர். அவரை புதுவிசையில் ‘அவன், இவன்’ என்று மரியாதைக்குறைவாகவே எழுதினார்கள். அதேபோல் இவர்களை எழுதினால் இன்னேரம் எத்தனை அக்கப்போர்களை உண்டாக்கி இருப்பார்கள்?

செருப்பு என்ற வார்த்தை கீற்று பின்னூட்டத்தில் பயன்படுத்தப்பட்டதற்காக கவின்மலர் இல்லாத பிரச்சினை எல்லாம் செய்தார். ஆனால், இவர் ஊரெல்லாம் ‘பாட்டாலும் ஜோட்டாலும் அடித்தே துவைப்பாம்’ என்ற ஆதவனின் பாடலை பாடுவார். நீங்க செஞ்சா சரி, மத்தவங்க செஞ்சா தப்பு! நல்லாருக்குப்பா உங்க நியாயம்.

ஒவ்வொருவர் எழுதுவது ஒவ்வொரு பாணியில் இருக்கும். சிலர் கடுமையாக எழுதுவார்கள், சிலர் மென்மையாக எழுதுவார்கள். அடிபட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலும், தார்மீகக் கோபம் உடையவர்களின் குரலும் எப்போதும் கடுமையாகத்தான் இருக்கும். அந்த வகையில்தான் ‘ரொம்ப crude ஆக எழுதுகிறார்’என்று சொல்லப்பட்ட ஆதவனின் படைப்புகளை கீற்று மனமுவந்து பிரசுரித்து வந்திருக்கிறது. அப்படித்தான் எழுத வேண்டும் என்பதுதான் இப்போதும் கீற்றின் நிலைப்பாடு. ஆனால் ஆதவனிடம் குறைகாணாத கவின்மலர், மற்றவர்கள் எழுதும் கருத்துக்களில் மட்டும் ‘இது அப்படி இருக்கிறது, இது இப்படி இருக்கிறது, அநாகரிகமாக எழுதுகிறார்கள், எனக்கு மனநிம்மதி போச்சு’என்று ஆயிரம் குறை காண்கிறார். என்ன புரிதலோ!!

கீற்று அவதூறு செய்கிறது என்று சொல்லி இவர்கள் யாரும் தப்பிக்க முடியாது. ஏனென்றால், அவதூறுக்கு இவர்கள் தரும் விளக்கத்தை வைத்துப் பார்த்தால், கீற்றினை விட விகடன், குமுதம் குழும இதழ்கள் பல மடங்கு அவதூறு செய்திருக்கின்றன. ஆனால் அதிலெல்லாம் எந்தத் தயக்கமுமின்றி இவர்கள் எழுதுகிறார்கள்.

அடுத்து, மினர்வாவின் கட்டுரைகளை வெளியிடுவதற்காக கீற்று நடத்தப்படுகிறது என்றும் அவதூறு பரப்பப்படுகிறது. இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் இருக்கும் கீற்று இணையதளத்தில் மினர்வாவின் கட்டுரைகள் மொத்தம் நான்கு மட்டுமே வெளியாகியுள்ளது. மாற்று அரசியல் பேசும் எல்லோருக்குமான இணையதளம் தான் கீற்று. இந்த 'எல்லோருக்கும்' என்பதில் மினர்வாவும் அடங்குவார். அவரது கட்டுரைகள் தொடர்ந்து கீற்றில் வெளிவரத்தான் செய்யும்.

கீற்று கொள்கைகளை முன்னிறுத்தி மட்டுமே இயங்குகிறது. நண்பர்கள் என்று எப்போதும் தயவு, தாட்சண்யம் பார்ப்பதில்லை. முன்னர் எழுதிய வரிகளை மீண்டும் நினைவூட்ட விரும்புகிறேன். எங்களுக்கு இசைவான கட்டுரைகளை மட்டுமே வெளியிடுவதற்கான தனிச்சொத்தாக கீற்றை நாங்கள் பாவிக்கவில்லை. கீற்றில் வரும் கட்டுரைகளில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்ற தப்பெண்ணமோ, மாற்றுக்கருத்தை வெளியிடாமல் இருட்டடிப்பு செய்யும் குறுகிய எண்ணமோ எங்களிடம் இல்லை. எந்தவொரு தனிநபரையும், அமைப்பையும் தாண்டி, கருத்தியல் இருக்கிறது என்பதில் எங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது.

இந்தத் தளத்தை அடிப்படைவாதிகள் யாரும் பயன்படுத்தாமல் தடுப்பதையும், தளத்திற்கான செலவுகளை ஈடுகட்டுவதையும், படைப்புகளை கூடியமட்டும் பிழைதிருத்தி வெளியிடுவதையும் மட்டுமே எங்கள் வேலையாகக் கருதுகிறோம். எல்லோரையும் திருப்திப்படுத்துவது எங்கள் வேலையுமல்ல; எல்லாருக்குமான இனிப்பும் எங்களிடம் இல்லை.

இன்று கீற்றினை விமர்சிப்பவர்கள் எல்லோரும் தனிநபர்களை முன்னிறுத்தி இயங்குகிறார்கள். இவர்கள் கொள்கைகளைப் பின்பற்றி செயல்படுபவர்கள் அல்ல; தஙகளது செயலை நியாயப்படுத்த கொள்கை பேசுகிறார்கள். ஆதாயம் தரும் நண்பர்களுக்காக எந்தக் கொள்கையையும் விடத்தயாராக இருக்கிறார்கள். அதனால்தான் வெகுசீக்கிரமே அம்பலப்பட்டுப் போகிறார்கள். பதில் சொல்ல முடியாமல் விழிக்கிறார்கள்; எதிர்க்குரலை அடக்க முயற்சிக்கிறார்கள். பெரியாரியம், பின்நவீனத்துவம் பேசியவர்களின் இன்றைய நிலையைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.

இவர்கள் பேசும் தலித், சிறுபான்மை அரசியலையும், இடதுசாரி அரசியலையும் கீற்று எந்த சமரசமுமின்றி தொடக்கநாள் முதலே செய்து வருகிறது. அதனால்தான் காலச்சுவடு, உயிர்மை பத்திரிக்கைகளை 'பார்ப்பன பத்திரிக்கைகள்' என்று விமர்சித்து ஓரங்கட்டியதுபோல் இவர்களால் கீற்று இணையதளத்தை ஓரங்கட்ட முடியவில்லை. கீற்றின் கொள்கை பலம்தான் இவர்களால் எதிர்கொள்ள முடியாத அரசியல் சவாலாக இருக்கிறது. அந்த எரிச்சலில்தான் மூன்றாம்தர அரசியல்வாதி மட்டத்திற்கு தங்களை தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள்.

இவர்கள் எழுதுகிற விஷய‌ங்கள் குறித்து விவாதிக்கவோ, பொதுமேடைக‌ளில் ப‌தில் சொல்ல‌வோ இவ‌ர்க‌ளுக்குத் துணிவிருக்கிற‌தா? இவர்களிடம் கேட்கப்பட்ட‌ கேள்விகளுக்கு அரசியல் கோட்பாட்டு ரீதியாக பதில் சொல்லியிருக்கிறார்களா? எல்லாக் கேள்விகளையும் தனிமனித பிரச்சினையாக மாற்றி திசை திருப்பும் வேலையைத்தானே இதுவரை செய்து வந்திருக்கிறார்கள்?

எந்த ஒரு அடிப்படை நேர்மையுமற்ற அ.மார்க்ஸ் குழுவினரின் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் கீற்று அடிபணியாது. எப்போதும்போல் தொடர்ந்து செயல்படும். இவர்கள் வழியிலேயே கீற்று இவர்களை எதிர்கொள்ளும்.

நண்பர்களை சொறிந்து கொடுப்பதற்காகவே கைகளில் பேனா வைத்திருக்கும் இவர்களுக்கு தேனம்மை லெட்சுமணின் இந்தக் கவிதையை அர்ப்பணிக்கிறேன்.

முகஸ்துதி

வரிசையில் வரலாம்..
கருத்து அல்லது
விமர்சனம் சொல்ல..
அது முகஸ்துதியை
ஒட்டி இருத்தல் நலம்..
 
என் சபைக்கு வந்து
பல்லாண்டு பாடிச்
சென்றால் உங்கள்
சபைக்கும் வருவேன்
புகழ்பாட பாணனாகவோ
கேளிக்கை வழங்கும்
நர்த்தகியாகவோ..
 
பரிசில் எதுவும்
தேவையில்லை
திரும்ப இந்த
சொறிதல்களை
எரிச்சல் வராமல்
வழங்க அனுமதியோடு.
 
சோப்பு, வெண்ணை
ஐஸ், காக்கா
கழுதை, கால்பிடித்தல்
போன்றவை உங்கள்
ஞாபகத்தில் வந்தால்
சுலபமாக வேறு
பரிமாணத்தில்
சுய விளக்கம்
கொடுத்து விடுங்கள்
 
யாருக்கு நேரமிருக்கப்
போகிறது ஒற்றுப் பார்த்திட..
எகிறிக் குதிப்பவர்க்கும்
ஏதாவது பட்டயம் கொடுத்து
பேச விடாமல்
வாயில் அடித்து விடலாம்.

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.