சூலை 31 அன்று அரியானா நூ மாவட்டத்தில் இசுலாமியர்கள் மீது இந்துத்துவ வெறியார்கள் தொடங்கிய தாக்குதல்கள் பக்கத்தில் உள்ள குருகிராமிற்குக் கொண்டு செல்லப்பட்டு, அடுத்த நாள் ஆகஸ்டு­01 அன்று நள்ளிரவில் செக்டார் 57-இல் உள்ள அஞ்சுமான் ஜாமா மசூதி யினுள் இருந்தவர்கள் தாக்கப்பட்டனர்; அந்த மசூதியில் இருந்த துணை இமாம் (26 அகவை) முகமது சாத் என்ற இளைஞர் கொல்லப்பட்டார்; அந்த மசூதி தீ வைத்து எரிக்கப் பட்டது. இவை தற்செயலாக நிகழ்ந்தவை தாமா? அல்லது திட்டம் வகுத்துச் செயல்படுத்தப்பட்டனவா? என்பதே எழுவினா.

ஈத் மற்றும் பக்ரா-ஈத் (பக்ரித்) ஆகிய இரு நாள் களிலும் இசுலாமியர்கள் அதிக எண்ணிக்கையினர் தொழுகையில் ஈடுபடுவதால் பள்ளிவாசலுக்கு (மசூதி) உள்ளே இடம் போதாமை காரணமாகப் பொது இடங்களில் தொழுகை நடத்துவது வழக்கம். அப்படிப் பொது இடத்தில் தொழுகை நடத்த குறிப்பிட்ட இடமே வேண்டும் என இசுலாமியர் வலியுறுத்துவதில்லை. இதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அரியானா மாநில அரசு 15 ஆண்டுகளுக்கு முன் குருகிராம், செக்டர் 57­இல் மசூதிக் கட்டிக் கொள்ள ஓரிடத்தை அளித்து அங்கு 3 அடுக்குக் கட்டடம் கட்டிக் கொள்ள இசைவு வழங்கியது.

மேற்படி மசூதிக் கட்டடம் கட்டி முடிக்கும் தருவாயில் ஆர்.எஸ்.எஸ்.-இன் துணை அமைப்பான விசுவ இந்து பரிசத் அரியானா நூ மாவட்டம் உள்ளடங்கிய பகுதியில் “பிரிஜ் மண்டல் யாத்திரை” என்று ஒரு நாள் யாத்திரையை 2021-இல் தொடங்கி ஆண்டு தோறும் நடத்தி வருகிறது.attack on ariyana muslimஅரியானாவில் நூ மாவட்டம் தில்லியில் இருந்து தெற்கில் 60 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்கு இசுலாமியர் 76.53 விழுக்காட்டினரும், இந்துகள் 23.09 விழுக்காட்டினரும் வாழ்கின்றனர். அரியானா மாநிலத்தில் ஏழ்மை 11.2 விழுக்காடு. ஆனால் நூ மாவட்டத்திலோ ஏழ்மை 40 விழுக்காடு. இது ஒன்றிய அரசின் நிதி ஆயோக் அளித்துள்ள புள்ளி விவரம். அரியானாவில் எழுத்தறிவு பெற்றோர் 69 விழுக் காட்டினர். நூ மாவட்டத்தில் எழுத்தறிவு பெற்றோர் 55 விழுக்காட்டினர். மேலும் வடமேற்கு இந்தியாவிலேயே நூ மாவட்டம் ஏழை மக்கள் மிகுதியாகவும் செறிவா கவும் மக்கள் வாழும் பகுதியாகும்.

இந்து நாள்காட்டிப்படி 5ஆம் மாதத்தில் அந்தப் பகுதியில் வாழும் இந்துகள் புனிதப் பயணங்கள் மேற்கொள்ளுவது நீண்டகால வழக்கமாகும். இசுலாமியர் மிகுதியாக வாழும் நூ உள்ளிட்ட பகுதிகள் வழியாகப் பயணம் செய்யும் இந்துகளை வரவேற்று வாழ்த்துக் கூறுவதும், உணவளித்து உபசரிப்பதும் சிலர் தங்குவதற்கு இடம் அளிப்பதும் இசுலாமியர்களுக்கு வழக்கமாகும். “பிரிஜ் சவுராசி கோஸ் பரிகிரமா” என்ற யாத்திரை பக்கத்தில் உள்ள உ.பி. மதுராவில் 30.7.2023-இல் தொடங்கி நூ மாவட்டத்தில் உள்ள நல்ஹார் சிவன் கோவிலில் வழிபட்டு, பயணம் தொடரும் வழியில் பல கோயில்களை வழிபட்டு 16.8.2023 வரை அப்பயணம் நீடிக்கும்.

அங்குக் கட்டடம் கட்டுவதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் அப்போது உள்ள நிலையே நீடிக்க வேண்டும் என இடைக்கால உத்தரவு அளித்தது. உச்சநீதிமன்றத்தில் 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கு 2 ஆண்டுகளுக்கு முன் 2021-இல் தள்ளுபடிச் செய்யப்பட்டது. வழக்கு 12 ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததன் காரண மாக மசூதிக் கட்டடம் கட்டுவதற்கான அனுமதி காலாவதியாகிவிட்டது. பூச்சு வேலை முதலான கட்டடப் பணிகளை நிறைவு செய்திட, கட்டுமானப் பணிக்கான அனுமதியின் காலநீட்டிப்பு அளிக்கக் கோரும் விண்ணப்பம் அரியானா மாநில அரசிடம் காத்திருப்பில் உள்ளது.

விசுவ இந்து பரிசத்தும் அதன் இளைஞர் பிரிவான பஜ்ரங் தள்ளும் 2021 முதல் “பிரிஜ் மண்டல் யாத்திரை” என்ற பெயரில் ஒரு நாள் பயணம் மேற்குறிப்பிட்ட பயணத்தின் போதே நடத்துகின்றனர். இந்த யாத்தி ரையை நூ மாவட்டத்தில் உள்ள நல்ஹார் சிவன் கோவிலில் தொடங்கி சிங்கரில் உள்ள மாதா மந்திர் மற்றும் பெரோஸ்கபூர் ஜிர்காவில் உள்ள மகாதேவ் சிவன் கோயில் வரை நடத்துகின்றனர்.

இந்த ஆண்டு பிரிஜ் மண்டல் யாத்திரையில் பஜ்ரங் தள் சார்பு அமைப்பான பசு பாதுகாப்புப் படை (கோ ரக்ஷா தள்)யைச் சேர்ந்த மோநு மனேசார் என்கிற மோகித் யாதவ் பங்கேற்க உள்ளதாக சமூக ஊடகங் களான வலையொளி (யூடியூப்) முதலானவற்றில் செய்தி பரப்பப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே அச்சத்தையும் அமைதியின்மையையும் உருவாக்கியது. ஏனெனில் இராஜஸ்த்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த நசீர் மற்றும் ஜுனைது ஆகிய இரண்டு இளைஞர்கள் பசுவைக் கடத்தியதாகக் கூறி, எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் குற்றஞ்சாட்டப்பட்டவன் தான் மோகித் யாதவ்.

சங்கிகளின் -இந்துத்துவ வெறியர்கள் யாத்திரை யின் பாதையைத் தெரிந்தெடுப்பதும் இசுலாமியர்கள் செறிவாக வாழும் பகுதிகள் ஊடாகச் செல்லும் போது அவர்களின் சினத்தைத் தூண்டும் பேச்சுமே நாட்டில் நடக்கும் வன்முறைகளுக்கு அடிப்படையாக அமை கின்றன. சூலை 31 அன்றும் நூ-வில் கேடியாமோட் என்ற இடத்தை யாத்திரைக் கடக்கும் போது பேசிய சினத்தைத் தூண்டும் பேச்சே வன்முறையை மூட்டியது. யாத்திரைச் சென்றவர்கள் கையில் வாள்களையும் ஆயுதங்களையும் எடுத்துச் சென்றனர். வாள்கள் மற்றும் ஆயுதங்களை யாத்திரையில் எடுத்துச் செல்ல காவல்துறையும் அரசும் அனுமதித்ததன் நோக்கம் என்ன?

இந்த வன்முறைத் தாக்குதல்களில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 88 பேர் காயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் என அரியானா மாநில அரசால் அடையாளப்படுத்தப்பட்ட இசுலாமி யர்களின் வீடுகளும் கடைகளும் என நூ மாவட்டத்திலும் குருகிராம் மாவட்டத்திலும் அரசு இடங்களை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டக் கட்டடங்கள் என இதுவரை 1208 கட்டடங்கள் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளன.

இதனால் பா.ச.க. ஆட்சியை அறிஞர்கள் “புல்டோசர் ராஜ்” எனப் பெயர் சூட்டி அழைக்கின்றனர்.

சங் பரிவாரங்களால் விளைவிக்கப்படும் அனைத்து வன்முறைகளும் திட்டமிட்டும் ஒரே தன்மையிலும் நிகழ்த்தப்படுவதைக் காணலாம்.

அறிவாளர்களும், எழுத்தாளர்களும், செயற்பாட்டா ளர்களுமான நரேந்திர தபோல்கர், 20.8.2023இலும் கோவிந்த் பன்சாரே 16.2.2015இலும் எம்.எம். கல்புர்கி 30.8.2015-இலும் கவுரிலங்கேஷ் 5.9.2017 இலும் என இந்த நால்வரும் ஒரே மாதிரியாகத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொலை செய்தவர்கள் எப்படித் தப்பிவிடுகிறார்கள்? கொல்வதற்கு ஆயுதம் அளித்தவர்கள் யார்? கொலை செய்திட வெறியூட்டியவர்கள் யார்? என்பதெல்லாம் கண்டுபிடிக்க முடியாத புதிர் அல்ல.

இதே முறையில்தான் சங் பரிவாரங்களால் தூண்டப்படும் வன்முறைகள் அனைத்தும் ஒரே மாதிரி, திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்படுகின்றன. சங் பரிவார பா.ச.க. மோடி ஆட்சியில் பெருகி வரும் வன்செயல்களுக்கு காரணம்தான் என்ன?

நரேந்திர மோடி கூறும் இரட்டை எஞ்சின் ஆட்சி முறையே தான் என்பதே விடையாகும்.

இந்துத்துவ அரச பயங்கரவாதத்தை முற்றாக வீழ்த்த பா.ச.க. மோடி ஆட்சி அதிகாரத்திலிருந்து அகற்றப்பட வேண்டும். சனாதன -இந்துத்துவ -பார்ப்பனிய பாசிச சித்தாந்தத்தை மக்களிடமிருந்து முற்றாகக் களையப்பட மக்கள் நாயகத்தில் நம்பிக்கையுள்ள முற்போக்கு இயக்கங்கள் வலிமையானப் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்துதல் வேண்டும்.

- சா.குப்பன்

Pin It