இந்திய குடியரசுத் தலைவருக்கு - தூக்குத் தண்டனையில் சிறையில் வாடும் பேரறிவாளனின் தந்தை ஞான சேகரன் (குயில்தாசன்) உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்; கடிதத்தின் விவரம்:

அய்யன்மீர், வணக்கம்.

எம் ஒரே மகன் பேரறிவாளன் 16 ஆண்டுகளாக, மறைந்த திரு. ராசீவ்காந்தி அவர்களின் கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டுத் தூக்குத் தண்டனை கைதியாகச் சிறையில் துயர்படுகிறான்.

எங்கள் ஒரே ஆண் வாரிசைப் பிரிந்து முதுமையும், நோயும், தனிமையும் சூழத்துயர்பட வாழுகிறோம். இது குறித்துப் பல கடிதங்கள் விண்ணப்பித்தும் அரசும், நிர்வாகமும் அமைதியாகக் காலங் கடத்துவது எம்மை அஞ்சச் செய்கிறது.

26 பேருக்கும் மரண தண்டனை என்று தீர்ப்பெழுதியதை அடிப்படையாகக் கொண்டு உச்சநீதிமன்றம் நால்வருக்குத் தூக்கு என்றும், 19 பேருக்கு விடுதலை என்றும் முடிவுசெய்தது. இவ்வழக்கு, தடா சட்டத்துக்குப் பொருந்தாது என்று கூறி விட்டு, அத்தடா சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல், மதம், இனம், சாதி, மரபணுக்களுடன் பெரியார் கொள்கைக்கு எதிரான உணர்வுகள் யாவும் கலந்து எவருக்காவது நாலு பேருக்கு தூக்குத் தண்டனை கொடுத்து வழக்கை நிறைவு செய்து கொள்ளப்பட்டது. தடா சட்டத்தால் உயர்நீதிமன்றத்தில் முறையிட வாய்ப்பளிக்கப்படவில்லை.

அரசியல் சார்பற்ற பெரியார்தம் கொள்கைத் தொண்டாற்றும் எம் குடும்பத்தை அழிப்பதன் மூலம் பெரியாரை ஒழிப்பதாக அற்ப மகிழ்ச்சி காணும் காழ்ப்புடையோர் சிலர் எம் மகனின் விடுதலைக்குத் தடையாக இருப்பாரோ என்று கருதுகிறோம்.

மற்றபடி, திரு.இராசீவ் காந்தி கொலைக்கும், எம்மகனுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதைக் குற்றச்சாட்டையும் தீர்ப்பையும் காய்த்தல் உவத்தல் இன்றி அமைதியாக ஆய்ந்து அறிந்தாலே விளங்கும்.

எம் மகனை விடுதலை செய்யப் பல தலைவர்களுக்கு மனிதநேய மனமுள்ளதை அறிவோம். அரசியல் எனும் விளையாட்டு அவர்களையும் அடக்கி விடுகிறதே என்று விக்கித்துப் போகிறோம்.

150 ஆம் ஆண்டு முதல் ‘சுதந்திர’ப் போர் நிறைவு நாளில் இரத்தம் சிந்தி உயிர் நீத்த அந்த வீரர்களின் தியாகத் திருவடிகளில் தூவும் மலராகத் தூக்குத் தண்டனையை நாட்டிலிருந்து நீக்கி அறத்தை நிலைநாட்டவும், எம் மகனை விடுதலை செய்யவும் வேண்டுகிறோம்.

ஒப்பம்/- குயில் தாசன்
கடிதத்தின் நகல்

பிரதமர், திருமதி சோனியாகாந்தி, முதல்வர் கலைஞர், மத்திய உள்துறை அமைச்சர், அரசயில் கட்சிகள் /இயக்கங்கள்/அமைப்புகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

Pin It