12.12.2006 மாலை 5 மணியளவில் விழுப்புரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் இயக்கங்கள் பங்கேற்றக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கா.தமிழ்வேங்கை தலைமையேற்றார். இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் இரவிக்குமார், மக்கள் கல்வி இயக்கத்தின் பேராசிரியர் பிரபா. கல்விமணி, தமிழ்த் தேசப் பொது வுடைமைக் கட்சி சார்பில் ஆசிரியர் மு.கந்தசாமி, குழந்தைகள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் அந்தோணி குரூஸ், பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் சார்பில் சிறுவாலை மு.நாகராசன், மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் எழில். இளங்கோ, விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் துரை. விடுதலை முத்து, புதுச்சேரி சி.வள்ளுவன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் மு.யா.முஸ்தாக்கீன், மனித உரிமை இயக்கம் சார்பில் வழக்குரைஞர் லூசி, திண்டிவனம் வழக்குரைஞர் அ.இராச கணபதி ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. ஸ்ரீரங்கத்தில் அரசு அனுமதி பெற்று வைக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை திட்டமிட்ட சிலர் சேதப்படுத்தியதைத் தொடர்ந்து தன்னெழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மேற்படி சம்பவங்களால் ஏற்பட்ட சமூகப் பதற்றத்தைத் தணிக்க தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கவையே. ஆனால், தந்தை பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீதும், அதைத் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீதும் தமிழக அரசு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை ஏவுவது தேவையற்றது.

குற்றம் இழைத்தவர்களைத் தண்டிக்க இந்தியத் தண்டனைச் சட்டமே போதுமானதாக இருக்கும்போது, கருப்புச் சட்டம் என்றும் இதனை ரத்து செய்ய வேண்டுமென்றும் இந்திய அளவில் கண்டனத்திற்குள்ளாகி வரும் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை வரைமுறையில்லாமல் பயன்படுத்துவது தேவையற்றது என்பதைச் சுட்டிக் காட்டுகிறோம். எனவே இவர்கள் மீது பயன்படுத்தப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

2. காவல்துறை, துணை இராணுவப் படை, இராணுவம் உள்ளிட்ட துறைகளில் இஸ்லாமியர் உள்ளிட்ட சிறுபான்மையினர் போதுமான அளவில் இடம்பெறாத காரணத்தால் அவை பெரும்பான்மை மதத்திற்கு சார்பாக செயல்பட நேரிடுகிறது என்று நீதிபதி சச்சார் உள்பட பலர் சுட்டிக் காட்டியுள்ளனர். தமிழகக் காவல்துறையும் இதில் விதி விலக்கல்ல. இந்த சம்பவத்திலும்கூட ஈரோட்டில் இந்து முன்னணி நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதித்த காவல்துறை, தந்தை பெரியார் சிலை உடைக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்த 22 நபர்களை கைது செய்து சிறையிலடைத்துள்ளது. இத்தகைய மதச்சார்புப் போக்கை காவல்துறையிலிருந்து களைய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. மதச்சார்பின்மை நோக்கோடு செயல்படும் தமிழக அரசு இது குறித்து ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணைகளை சரியாக நடை முறைப்படுத்தும்படி அரசு அலுவலகங்களுக்கு உத்தரவிடவேண்டும்.

அரசு அலுவலகங்களில் சமயம் தொடர்பான படங்கள் மற்றும் சிலைகளை வைக்கக் கூடாதென அரசுக் குறிப்பாணை (எண்.7553/66-2 பொது - எம் நாள் 29.4.73) ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இதே விஷயத்தைப் பற்றி பேரறிஞர் அண்ணா அவர்கள் முதல்வராக இருந்தபோதே 29.4.1968-லும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த குறிப்பாணைகள் சரிவர அமுல்படுத்தப்படவில்லை என்பதை காவல் நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் உள்ள கடவுளர் படங்கள் மற்றும் வழிபாட்டுச் சிலைகள் எடுத்துக் காட்டுகின்றன.

தந்தை பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்புவதற்கு தனியாக ஒரு துறையையே உருவாக்குவோம் என்று அறிவித்துள்ள தமிழக முதல்வர் அவர்கள், மேலே கண்டுள்ள குறிப்பாணைகளை கறாராக நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Pin It