மதவெறி கோழைகளின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான கவுரி லங்கேஷ் (இராவணன்) வீரமரணத்துக்கு திராவிடர் விடுதலைக் கழகம் - வீரவணக்கம் செலுத்துகிறது. அவரது எதிர்நீச்சல் வரலாறு குறித்த ஒரு தொகுப்பு.
“கோழையே உன்னிடம் தோட்டாக்கள்; என்னிடம் அழியா வார்த்தைகள்”
• பத்திரிகையாளரும் சமூகப் போராளியுமான 55 வயது கவுரி லங்கேஷ் - மதவெறியர்களால் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட நாள் செப்டம்பர் 5 - இரவு 7.45க்கும் 8 மணிக்கும் இடையில். காரிலிருந்து இல்லம் திரும்பியபோது காரை நிறுத்துவதற்காக முன் கதவை திறக்க முயற்சித்தபோது மோட்டார் பைக்கில் வந்த 3 பேரில் இருவர் அவரது மார்பு, வயிறு, கழுத்தில் நேருக்கு நேராக சுட்டு வீழ்த்தி பிணமாக்கி விட்டனர்.
• கவுரியின் தந்தை லங்கேஷ் அவர்களும் ஒரு பத்திரிகையாளர், எழுத்தாளர், மதவாத சக்திகளுக்கு எதிரான முற்போக்கு சிந்தனையாளர். அவர் நடத்தி வந்த ‘லங்கேஷ் பத்திரிகா’ என்ற கன்னட இதழை கவுரி தொடர்ந்து நடத்தினார். ‘லங்கேஷ் பத்திரிகா’, ‘டேபிளாய்டு’ என்ற வடிவத்தில் (‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வடிவத்தைப்போல்) வார ஏடாக வெளி வந்தது.
• லங்கேஷ் என்ற கன்னடச் சொல், திராவிட மாவீரன் இராவணனைக் குறிப்பதாகும்.
• இளமையில் மருத்துவர் படிப்பு, கவுரியின் கனவாக இருந்தது. ஆனால் புதுடில்லியில் உள்ள இந்திய தகவல் தொடர்புக் கல்விக்கான நிறுவனத்தில் படித்தார்.
• ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் அதன் பெங்களூர் பதிப்பில் 1980ஆம் ஆண்டு சில காலம் பணியாற்றினார். அதிலிருந்து விலகி, ‘சண்டே’ ஆங்கில வார ஏடு உள்ளிட்ட முன்னணி பத்திரிகையில் பணியாற்றினார். பிறகு தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றின் டெல்லிப் பிரிவுக்கு தலைமைப் பொறுப்பில் இருந்தார். பார்ப்பனப் பன்னாட்டு ஆதிக்கம் நிறைந்த இந்த ஊடகங்கள் அவரது கொள்கை உணர்வுக்குத் தடையாக இருந்ததால் அதிக ஊதியம் தரும் பதவிகளை உதறி எறிந்து விட்டு, தந்தை நடத்திய கன்னட பத்திரிகையை கன்னட மொழியில் நடத்தினார்.
• அரசு விளம்பரங்கள், கார்ப்பரேட் விளம்பரங்கள் ஏற்பது இல்லை என்ற கொள்கை முடிவு எடுத்தார். சமரசமின்றி துணிவோடு மதவெறி சக்திகளை தோலுரித்ததால் மதவெறி சக்திகளின் எதிர்ப்புகளை சந்தித்தார்.
• குடும்பத்துக்குள் சகோதரர் இந்திரஜித்திடம் (இவர் திரைப்படத் துறையில் பணியாற்றுகிறார்) கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தந்தை நடத்திய பத்திரிகை உரிமையை இந்திரஜித்திடம் ஒப்படைத்து விட்டு, 2005ஆம் ஆண்டு முதல் ‘கவுரி லங்கேஷ் பத்திரிகா’ என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கி நடத்தினார்.
• பத்திரிகையைத் தவிர, தந்தை நடத்திய பதிப்பகத் துறை வழியாக நூல்களை வெளியிட்டு வந்தார்.
• 2016இல் பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ் ஜோஷிக்கு எதிராக அவர் கடுமையான கட்டுரையை எழுதியதால் பார்ப்பனர் ஜோஷி நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். ஹீபால்லி நீதிமன்றம், கவுரிக்கு 6 மாத சிறைத் தண்டனையும் ரூ.15,000 அபராதமும் விதித்தது. கைது செய்யப்பட்ட கவுரி, வழக்கை மேல் முறையீடு செய்து பிணையில் வெளி வந்தார். அடக்குமுறைக்கு அவர் அஞ்சவில்லை.
• மார்க்சிய லெனினிய அறிஞரும் நக்சல்பாரியுமான சாஜ்தேத் ரஞ்சன் தலைமறைவாக இருந்தபோது அவரைச் சந்தித்து, அவரது பேட்டியை தனது ஏட்டில் வெளியிட்டார். ரஞ்சன் பெங்களூருவை நோக்கி வந்தபோது போலீஸ் அவரை சுட்டுக் கொன்றது. ரஞ்சன் சடலம் வைக்கப்பட்ட இடத்துக்கு விரைந்தார் கவுரி. காவல்துறை விதித்த கெடுபிடி கட்டுப்பாடுகளை எதிர்த்து காவல் துறையுடன் போராடினார். உடல் எரியூட்டு இடம் வரை சென்று காவல்துறை உயர் அதிகாரிகளின் மனித விரோதப் போக்கை போலி என்கவுண்டரை எதிர்த்து நேருக்கு நேர் வாதம் செய்தார்.
• ஆயுதம் தாங்கிப் போராடும் குழுக்களிடம் நேரில் விவாதித்து, அரசின் நல்லெண்ணத் தூதராக செயல்பட்டு, அவர்களை சமூகப் போராட்டக் களத்துக்குக் கொண்டு வந்தவர் கவுரி. ‘கோமு சவுத்தார்தா வேதிகா’ என்ற அமைப்பு, அடிப்படை மதவாத எதிர்ப்பாளர்கள், பகுத்தறிவாளர்கள், ஜாதி எதிர்ப்பாளர்களை அணி திரட்டும் மய்ய அமைப்பாக உருவெடுத்தது. மதவெறிக் கலவரங்கள் உருவாக்கக்கூடிய பகுதிகளுக்குச் சென்று மக்களிடையே மதவாதத்துக்கு எதிராக விழிப்புணர்வூட்டும் கடமையாற்றியது இந்த அமைப்பு.
• கடந்த மார்ச் மாதம் யோகேஷ் மாஸ்டர் என்ற முற்போக்கு எழுத்தாளர் எழுதிய ‘துந்தி’ என்ற கன்னட நாவலுக்கு இந்துத்துவ சக்திகளிட மிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. கவுரி ஏற்பாடு செய்த ஒரு புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சி ‘தேவநாகரே’ என்ற இடத்தில் நடந்தது. அவ்விழாவுக்கு சிறப்பு விருந்தினராக யோகேஷ் மாஸ்டரை அழைத்தார் கவுரி. மதவெறியர்கள் மாஸ்டர் முகத்தில் கருப்பு மையை வீசி அவமதித்தனர். இந்துத்துவவாதிகளை எதிர்த்து நின்றார் கவுரி. யோகேஷ் நாவலை உறுதியாக ஆதரித்தார். அதற்காக இந்துத்துவ சக்திகள் கவுரி மீது கடும் ஆத்திரமடைந்தன.
• “இந்து அமைப்பில் உள்ள ஜாதி அமைப்பை தொடர்ந்து எதிர்ப்பேன்; மதவாதத்துக்கு எதிராகத் தொடர்ந்து முழங்குவேன்” என்று கூறி வந்த கவுரி - குஜராத்தில் மோடி முதல்வராக இருந்தபோது நடத்திய இஸ்லாமிய இனப்படு கொலைகளை ஆதாரங்களுடன் அம்பலப் படுத்தி, ‘ராணா அய்யூப்’ எழுதிய ‘குஜராத் கோப்புகள்’நூலை, கன்னடத்தில் மொழி பெயர்த்தவர்.
• கவுரியின் தந்தை லங்கேஷ், பார்ப்பனியத்தையும் பார்ப்பன மடங்களையும் எதிர்த்து கவிதை நாடகங்கள் வழியாக சமுதாய சீர்திருத்தக் கருத்துகளை பரப்பியவர்.
• பெங்களூருவில் பெரும்பாலான இளம் பத்திரிகையாளர்களின் நேசிப்புக்கும் ஈர்ப்புக்கும் உரியவர் கவுரி. பத்திரிகை மன்றத்தில் அவர் நுழைந்தால் திரும்பி காரில் ஏறும் வரை இளையோர் கூட்டம் அவரை சூழ்ந்து நிற்கும்.
• பசுமை வேட்டை என்ற பெயரில் நக்சலைட்டுகள் அழிக்கப்பட்டபோது அப்பாவி மலை வாழ் மக்கள் காவல்துறையால் வேட்டையாடப் பட்டனர். கெடுபிடிகளை மீறி அப்பகுதிக்குச் சென்று நக்சல்பாரிகளை பேட்டி கண்டு காவல்துறை அடக்குமுறையை அம்பலப்படுத்திய தோடு கருநாடக அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி நக்சலைட் மறுவாழ்வு திட்டத்தை உருவாக்கினார். அதற்குப் பிறகு தான் மேற்கு தொடர்ச்சி மலையில் தோட்டாக்கள் வெடிக்கும் சத்தம் ஓய்ந்தது.
• பார்ப்பன புரோகிதர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலை மீது படுத்து ‘அங்கப் பிரதட்சம்’ செய்தால் நோய் நீங்கும் என்ற பார்ப்பன சடங்கு, அந்தரத்தில் முதுகில் அலகு குத்தி தொங்குவது, நிர்வாண பூஜை, நரபலி போன்ற வைதீக மூட நம்பிக்கை சடங்குகளுக்கு எதிராக மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர கர்நாடக அரசிடம் வலியுறுத்தினார். (அரசு கொண்டு வந்த மசோதா எதிர்கட்சிகள் எதிர்ப்பால் முடங்கியிருக்கிறது) எந்த நேரத்திலும் முதல்வர் சித்தராமய்யாவை சந்திக்கும் உரிமையைப் பெற்றிருந்தார். பார்ப்பன எச்சில் இலை மீது உருளும் சடங்கை முதல்வர் சித்தராமய்யா தடை செய்தார். பார்ப்பனர்கள் நீதிமன்றம் போனார்கள். நீதிமன்றம் தடையை உறுதி செய்தது.
• சில மாதங்களுக்கு முன், ‘தனது காரின் மீது காக்கை உட்கார்ந்ததால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்று நம்பி முதலமைச்சர் காரை மாற்றிவிட்டார்’ என்று ஊடகங்களில் செய்தி பரவியது. அடுத்த நாளே சித்தராமய்யா வீட்டுக்குச் சென்று “மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வருவதாகக் கூறும் நீங்களே இப்படி செய்யலாமா” என்றுநேரில் கேட்டார். சித்தராமய்யா அப்படி காரை மாற்றவில்லை, அது புரளி என மறுத்தார். “சித்தராமய்யா அப்படியெல்லாம் காரை மாற்றவில்லை; காரணம் அவர் எடியூரப்பா இல்லை” என்று கட்டுரை எழுதினார், கவுரி.
• தபோல்கர், கன்சாரே, கல்புர்கி சுட்டுக் கொல்லப் பட்ட போதும் சரி; கன்னட எழுத்தாளர் யு.ஆர்.அனந்தமூர்த்தி கொலை மிரட்டலுக்கு உள்ளானபோதும் ‘மாதொரு பாதகன்’ நாவலுக்காக ஜாதி வெறியர்கள் பெருமாள் முருகனை மன்னிப்பு கேட்க வைத்தபோதும் வெகுண்டெழுந்து குரல் கொடுத்தவர் கவுரி.
• பிறப்பால் ஒரு கன்னடராக இருந்தாலும் காவிரி உரிமைப் பிரச்சினையில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது கன்னட அமைப்புகளைக் கண்டித்து தொலைக்காட்சி அலைவரிசைகளில் பேசினார். நடிகர் பிரகாஷ் ராஜூக்கு எதிராக கன்னட ஊடகங்கள் கொந்தளித்தபோது பிரகாஷ் ராஜ் பக்கம் நின்றார். (கவுரி மரணமடைந்த சேதி கேட்டு விரைந்த நடிகர் பிரகாஷ்ராஜ், இறுதி ஊர்வலம் வரை உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது)
• உருவ வழிபாடு, வேத வழிபாடு எதிர்ப்பை உள்ளடக்கி, ஜாதி, மதம், பெண்ணடிமைக்கு எதிராக கருநாடகாவில் 12ஆம் நூற்றாண்டில் எழுச்சி பெற்ற ஒரே முற்போக்கு இயக்கம் பசவண்ணரின் லிங்காயத்து நெறி இந்து மதத்தை முற்றிலும் நிராகரித்ததோடு ஜாதியையும் புறந்தள்ளியது. பார்ப்பனர், தலித் உள்ளிட்ட பல்வேறு ஜாதிப் பிரிவினர் லிங்காயத்தில் இணைந்து தங்களுக்குள் ஜாதி கடந்த திருமண உறவுகளை உருவாக்கிக் கொண்டனர். பார்ப்பனியம் லிங்காயத்தையும் சீரணித்து விழுங்கியது. அண்மையில் ‘லிங்காயத்துகள்’ நாங்கள் இந்துக்கள் அல்ல என்று அறிவித்தனர். அதை ஆதரித்து கட்டுரைகளை எழுதினார் கவுரி லங்கேஷ்.
• இந்துத்துவ பார்ப்பனியத்துக்கு எதிராக வெடித்துக் கிளம்பிய டெல்லி ‘ஜெ.என்.யூ’ பல்கலைக் கழக மாணவர் கன்யாகுமார், குஜராத் உனா போராட்ட ஒருங்கிணைப்பாளர் ஜிக்னேஷ் மேவானி, ஜேய்பீம் ஆர்மி சந்திரசேகர் ஆகியோரை, தனது சொந்த மகன்களாக அங்கீகரித்தார். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை முன்னெடுக்கும் ‘ஜெய் பீம்’ முழக்கமே இந்தியாவை மீட்டெடுக்கும் என முழங்கிக் கொண்டே இருந்தார்.
“காந்தியைப் போல், கல்புர்கியைப்போல் என்னைக் கொன்றாலும் எனது பணியை நிறுத்த மாட்டேன்; நாளை நடக்கக் கூடியது இன்றே நடக்கட்டும்! இங்கே யாரைக் கண்டு அச்சம்?” என்ற பசவண்ணனின் வசனத்தை அடிக்கடி கூறுவார்.
“கோழையே, உன்னிடம் தோட்டாக்கள்
என்னிடம் அழியா வார்த்தைகள்
எதற்கும் அஞ்ச மாட்டேன்
நான் கவுரி லங்கேஷ்”
- இது அண்மைக்காலமாக கூட்டங்களில் கவுரி லங்கேஷ் முன் வைத்த முழக்கம்.
தமிழ்நாட்டுச் சூழலில் பெரியாரியப் போராளி என்று அடையாளப்படுத்தும் அனைத்துத் தகுதி களுக்கும் உரியவர் கவுரி லங்கேஷ்.
வர்ணாஸ்ரம மதவாதத்தை எதிர்த்த வீராங்கனை வரலாறாகி நிற்கிறார்! வீரவணக்கம்!