மனு சாஸ்திரப்படி ‘பிராமணர்கள்’ என்ற பிறவி ஆதிக்கத்தை அடை யாளப்படுத்தும் சின்னம் தான் ‘பூணூல்’.

‘பூணூல்’ அணிந்த பார்ப்பனர்கள் இரு பிறப்பாளர்களாம்! தங்களை ‘பிராமணர்’ என்று ‘பூணூல்’ வழியாக அடையாளப் படுத்தி, ஏனைய ‘சூத்திர’ மக்களை அடிமைகள்; விலைக்கு வாங்கப்பட்டவர்கள்; பிராமணர்களின் வைப்பாட்டி மக்கள் என்று அடையாளப்படுத்துகிறார்கள். மனு சா°திரமும் இதையே ஆணி அடித்ததுபோல் கூறுகிறது. இப்படி பெரும்பாலான மக்களை இழிவானவர்களாக சித்தரிக்கும் ‘பூணூல்’ அணிவதையே தடை செய்யப்பட் டிருக்க வேண்டும். அதுதான், இது ஜனநாயக நாடு என்பதற்கான அடையாளம். ஆனால், இந்த இழிவை ஏற்க மறுப்பவர்கள் இங்கே அடக்கு முறை சட்டங்களை சந்திக்க வேண்டி யிருக்கிறது.

இந்தப் ‘பூணூல்’ போடும் பார்ப்பன இறுமாப்பை மக்களிடம் தொடர்ந்து பரப்பி வருகிறது பெரியார் இயக்கம். அதற்காக எந்தப் பார்ப்பனர் பூணூ லையும் அறுத்ததில்லை.

இப்போது திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இராவணன், கோபி, திவாகர், பிரதீப், நந்தகுமார், பிரபாகரன் ஆகியோர் பார்ப்பனர் பூணூலை அறுத்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு உடன்பாடில்லை என்று ஏற்கெனவே விளக்கியிருக்கிறோம்.

உண்மையில் ‘பூணூலை’ அறுத்திருப்பார்களேயானால் அதற்குரிய சட்டப் பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குத் தொடரட்டும். ஆனால், ஒரு நூலை வெட்டியதற்காக, ஓராண்டு காலம் பிணையில் வெளிவர முடியாத குண்டர் சட்டத்தை ஏவியிருப்பது என்ன நியாயம்?

இந்திய தண்டனைச் சட்டம் என்று ஒன்று இருப்பதையே மறந்துவிட்டு, மனுசாஸ்திரப்படியே தண்டிக்க வேண்டும் என்று காவல்துறை கருதுகிறதா? அப்படியானால் நடப்பது ‘மனு தர்ம’ ஆட்சியா?

வெடிகுண்டு வைப்பவர்கள் மீதுகூட பாயாத குண்டர் சட்டங்கள் பூணூலை வெட்டியதற்காக பாய்கிறது என்றால், பார்ப்பனியம் எவ்வளவு செல்வாக்கோடு, அதிகாரத்தோடு கோலோச்சுகிறது என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். குண்டர் சட்டத்தை ஏவிய தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

Pin It