சென்னையில், மே 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில், ‘அம்பேத்கர் சுடர்’ விருதைப் பெற்றுக் கொண்டு அவர் ஆற்றிய உரை:

(சென்ற இதழ் தொடர்ச்சி)

1960களிலும் 70களிலும் உங்கள் கட்சியின் முன்னோடியான ’தலித் பாந்தர்கள்’ மற்றும் நக்சலைட்டுகள் போன்ற எதிர்ப்பியக்கங்கள் நீதி பற்றி புரட்சி பற்றி பேசினார்கள். அவர்கள் நில சீர்திருத்தங்களைக் கோரினார்கள். உழுபவருக்கே நிலம் என்பது அவர்களது முழக்கமாயிருந்தது. இன்று நீதி என்னும் சிந்தனை நமது மனங்களிலிருந்து அழிக்கப்பட்டுவிட்டது அதற்கு பதில் மிக குறுகிய கருத்தாக்கமான மனித உரிமை வந்தமர்ந்திருக்கிறது.

கொஞ்ச நஞ்ச நில சீர்திருத்தங்களும் இப்போது திரும்பப் பெறப்படுகின்றன. மாவோயி°டுகள் போல அதி தீவிர புரட்சிக் குழுக்கள் கூட மக்களிடம் பெரும்பாலும் ஆதிவாசிகளிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நிலமும் தனியார் நிறுவனங்களுக்கு போய்விட கூடாது என்றே காடுகளில் போராட வேண்டியிருக் கிறது. இன்று தலித் மக்களில் 70 சதவிகிதம் பேர் நிலமற்றவர்களாக இருக்கிறார்கள். பஞ்சாப், பீகார், ஹரியானா, கேரளா போன்ற மாநிலங்களில் இது  90 சதவிகிதமாக இருக்கிறது. நிலமற்ற இலட்சக்கணக்கான இந்த மக்கள் இன்று நாட்டில் நடக்கும் முற்போக்கான தீவிர விவாதங்களில்கூட பங்கேற்க முடிவதில்லை.

பார்ப்பன-பனியா சுரண்டல் 

இன்று நமது நாட்டை தம் வசமாக்கியிருக்கும் நிறுவனங்கள் யாருக்கு சொந்தமானவை? நிலம் மட்டுமல்லாமல் காடுகள், மலைகள், ஆறுகள், நீர், மின்சார ஆற்றல் எல்லாம் அவர்களுக்கு சொந்தமாகி யிருக்கிறது. கோடீஸ்வர தொழிலதிபர்களான - முகேஷ் அம்பானி (ரிலையன்ஸ் நிறுவனம்), லக்ஷ்மி மிட்டல் (ஏர்செலார் மிட்டல்) திலீப் சங்கவி (சன் பார்சமிடிக்கல் குழுமம்), ரூயா சகோதரர்கள் (ரூயா குழுமம்) கே.எம். பிர்லா (ஆதித்யா பிர்லா குழுமம்), சாவித்ரி தேவி ஜிண்டால் (ஜிண்டால் குழுமம்), கௌதம் அதானி (அதானி குழுமம்) சுனில் மிட்டல் (பாரதி ஏர்டெல்) ஆகியோர்தான் துறைமுகங்களை, சுரங்கங்களை, எண்ணை வயல்களை, எரிவாயு வயல்களை, கப்பல் நிறுவனங்களை, மருத்துவ நிறுவனங்களை, தொலைபேசி நிறுவனங்களை, பெட்ரொகெமிக்கல் ஆலைகளை, அலுமினிய ஆலைகளை, செல்பேசி நிறுவனங்களை, தொலைக் காட்சிகளை, காய்கறிக் கடைகளை, பள்ளிக் கூடங்களை, சினிமா கம்பெனிகளை, °டெம் செல் முறைகளை, மின்சார அமைப்புகளை, சிறப்பு பொருளாதார நிறுவனங்களை சொந்தமாக வைத்து நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஒன்று பார்ப்பனர்களாகவோ அல்லது பனியாக்களாகவோ இருக்கிறார்கள்.

மிகக் குறைந்த அளவிலேயே இருக்கும் சிறு பான்மையினரான பார்ப்பனர்களும் பனியாக்களும் எப்படி தங்களது சலுகைகளை நிலைநிறுத்திக் கொள்கிறார்கள் என்கிற கேள்விக்கு மீண்டும் வருவோம். முரட்டுத்தனமாக அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

பெரும்பாலான பனியா குடும்ப நிறுவனங்கள் தான் இன்று பல ஊடக நிறுவனங்களுக்கு சொந்தக் காரர்களாகவும் அவற்றைக் கட்டுப்படுத்துபவர் களாகவும் இருக்கின்றன. எது செய்தி எது செய்தி யில்லை என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். ஊடகத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம், ஒரு தேசத்தின் சிந்தனையைக் கட்டுப்படுத்தி உருவாக்க வும் அவர்கள் முயற்சிக்கிறார்கள். நான்கு மிக முக்கியமான ஆங்கில நாளிதழ்களில் மூன்றை நடத்துவது வைசியர்கள்.

நான்காவது பார்ப்பன குடும்ப நிறுவனம். (டைம்ஸ் ஆஃப் இந்தியா, டைம்ஸ் நௌ போன்ற ஊடகங்களை நடத்தும் நிறுவனமான பெனட் கோல்மேன் நிறுவனம் ஒரு ஜெயின் குடும்பத்தால் (பனியா) நடத்தப்படுகிறது) இந்துஸ்தான் டைம்ஸை நடத்துவது பார்டியா (மார்வாரி பனியாக்கள்).

இந்தியன் எக்ஸ்பிரசை நடத்துவதும் மார்வாரி பனியாக்களான கோயங்கா. ‘தி இந்து’வை நடத்துவது பார்ப்பன குடும்ப நிறுவனம். இந்தியாவில் மிக அதிகமாக விற்பனை யாகும் ‘தைனிக் ஜாக்ரன்’ இந்தி நாளிதழை நடத்துவது (கிட்டத்தட்ட 55 மில்லியன் சர்க்குலேஷன்) கான்பூர் பனியாக்களான குப்தாக்கள். 17.5 மில்லியன் சர்குலேஷன் கொண்ட தைனிக் பாஸ்கர் என்கிற செல்வாக்கான ஊடகத்தை நடத்துவதும் அகர்வால்கள் என்கிற பனியாக்கள்தான். 27 முக்கியமான தேசிய மற்றும் பிராந்திய தொலைக் காட்சிகளில் அதிகாரம் செலுத்துமளவுக்கு பங்குகளை வைத்துக்கொண்டிருக்கிறது முகேஷ் அம்பானி என்கிற குஜராத்தி பனியா நடத்தும் ரிலையன்ஸ் நிர்வாகம். இந்தியாவின் மிகப் பெரிய தொலைக்காட்சி நிறுவனங்களில் ஒன்றான ‘ஸீ’ தொலைக்காட்சியை நடத்துவதும் சுபாஷ் சந்திரா என்கிற பனியா.

பெரும்பாலான ஊடகங்கள் பார்ப்பனர்கள், பனியாக்கள் அல்லது பிற செல்வாக்கான சாதிகளிலிருந்தே செய்தியாளர்களை பணிக்கு அமர்த்துவதாக தரவுகள் சொல்கின்றன. வெகுஜன ஊடகங்களில் பணிபுரியும் இஸ்லாமிய செய்தியாளர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். தலித்துகளும் ஆதிவாசிகளும் அந்த எல்லைக்குள்ளேயே இல்லை.

இடஒதுக்கீட்டின் கொள்கையை வேண்டு மென்றே திசைதிருப்பி, நீதித்துறை, அதிகார வர்க்கம், அறிவுத்துறை எல்லாவற்றிலும் இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டார்கள். தலித்துகள் மிக அதிக அளவில் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் இடம், அரசாங்க நகராட்சிகள்தாம். துடைப்பத்தைக் கையில் ஏந்தி பெருக்குபவர்களில் 90 சதவீதம் பேர், வால்மீகி சாதியைச் சேர்ந்தவர்கள். இந்த மிகப்பெரிய வல்லரசில்தான், இன்னமும் பதின்மூன்று லட்சம் பெண்கள் தங்களது தலைகளின் மீது மலக் கூடைகளை சுமந்து வாழ்க்கையை நடத்துகிறார்கள்.

திரைச்சீலைகளை விலக்குவோம்

ஜனநாயகமும் நவீன தாராள பொருளாதார சந்தையும் சாதியை நவீனமயப்படுத்தியிருப்பதோடு அல்லாமல் அதன் பிடியை மேலும் இறுக்கியிருக் கிறது. இருந்தாலும் இந்தியாவின் மிகச்சிறந்த அறிவுஜீவிகள், வரலாற்றாசிரியர்கள், வளர்ச்சிப் பற்றி ஆராயும் பொருளாதார நிபுணர்கள் மற்றும் எழுத்தாளர்கள் அவர்களுடைய எழுத்துகளிலும் ஆய்வுகளிலும் ஒன்று சாதியை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கிறார்கள் அல்லது குறைந்த அளவில் எழுதுகிறார்கள். இது பார்க்காமல் தவிர்ப்பது என்கிற பெரிய திட்டம். திரைச்சீலைகளை விலக்கி இந்த பெரிய ஜனநாயகத்தில் என்ன நடந்து கொண்டிருக் கிறது என்பதை உலகிற்கு காட்ட வேண்டியது நம் கடமை.

அடியில் தேங்கியிருக்கும் சாதி அமைப்பின் இரும்புப்பிடி குறித்து எப்போதாவது வெகுமக்கள் ஊடகங்களும் சிந்தனையாளர்களும் உரக்கப் பேசுகிறார்கள் என்றால் அதுவும் மிக வித்தியாசமான வகையில் என்றால் அது தேர்தல்காலகட்டத்தில்தான். அப்போதுதான் எல்லா அரசியல் கட்சிகளும் அதன் தலைவர்களும் தலித் மற்றும் இடைச்சாதிகளின் வாக்குகளுக்கு போட்டியிடுகிறார்கள். தேர்தல் முடிந்தவுடன் சாதி பிரச்னை மீண்டும் அறிவுலக முட்டாள்தனங்களுக்கு அடியில் போய் தேங்கிக் கொள்கிறது. அம்பேத்கர் சாதியை எதிர்த்ததால் இயல்பாகவே அவர் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிரானவர் என்று மிக சீரியசாக ஒரு வெகுஜன ஊடகவியலாளர் வாதிட்டு நான் கேட்டிருக்கிறேன்.

பொருளாதார ஊழல்கள் குறித்து பேசுவதும் அவற்றை பிரச்னையாக்குவதும் இப்போதெல்லாம் மிக நாகரீகமான ஒன்று. ஆனால் இந்தப் பிரச்னை குறித்து பெரும் கவலை கொள்ளும் பலர் அறிவுலக நேர்மையின்மை பற்றி கவலை கொள்வதில்லை. இந்த நாட்டில் பலர் தொடர்ந்து கடைபிடிக்கும் நினைத்துப் பார்க்க முடியாத தார்மீக ஊழல் பற்றி கவலைப்படுவதில்லை. நீதி, அடையாளம், சமூகம் பற்றி புத்தகங்களும் ஆய்வுகளும் எழுதும் மிகச்சிறந்த அறிவுஜீவிகளும் வரலாற்றாசிரியர்களும், மிகக் குரூரமான, ஒடுக்குமுறையை ஏவும் சமூகப் படிநிலையான சாதி என்கிற கேள்வியை முழுவதும் புறக்கணிக்கிறார்கள்.

அறிவுலக நேர்மையின்மை

வரலாற்றில் மிக மோசமான விந்தைகளில் ஒன்று என்னவென்றால் இந்த அறிவுலக நேர்மையின்மை தான். சாதி அமைப்பில் நம்பிக்கை கொண்ட, தொழிலாளர்களிடம், பெண்களிடம், ஆப்ரிக்க கறுப்பினத்தவரிடம் தொடர்ந்து மோசமாக நடந்து கொண்ட மோகன்தாஸ் காந்தியை உலகின் மிக உயர்ந்த மகானாகவும், ஏழைகளின் நண்பனாகவும், ஆப்ரிக்க அமெரிக்கர்களின்நாயகனாகவும், நெல்சன் மண்டேலா, மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் ஆகியோர்ஏற்றுக்கொண்ட தலைவராகவும் நமது தேசத்தின் தந்தையாகவும் மாற்றியிருக்கிறது. இப்படிப்பட்ட பொய்களின் மீது நமது நாட்டின் அடித்தளம் எழுப்பப்படுவதை நாம் அனுமதிக்க முடியாது.

பாபாசாகேப் அம்பேத்கருக்கு மட்டுமே அதிகாரத்தின் உச்சத்தில் இருந்த போதும் காந்தியை எதிர்க்கும்துணிவும் அறிவுத் திண்மையும் இருந்தது. ஒவ்வொரு பள்ளியிலும் கட்டாயப் பாடமாக்கப் பட்டிருக்க வேண்டிய அம்பேத்கர்-காந்தி விவாதம் மிகத் திறமையாக மழுங்கடிக்கப்பட்டுவிட்டது. இப்போது தாராள அறிவுஜீவிகளும் வரலாற்றிய லாளர்களும் அவர்கள் ஒருசேர பயணித்தவர்கள் என்றும் இடையிடையே நட்புரீதியான முரண்கள் இருந்தன என்றும் முன்னிறுத்த முனைகிறார்கள்.இது முழுக்க முழுக்க பொய். அம்பேத்கரின் மரபு இப்படி பொய்மைப்படுத்தப்படுவதை உடனடியாகத் தடுக்க வேண்டியது நமது அவசர கடமையாகும்.

எனது உரையை முடிக்கும் முன்பு நான் சொல்ல விரும்புவதெல்லாம், சாதிக்கு எதிரான இந்த போராட்டத்தை நாம் தொடர வேண்டுமெனில் பார்ப்பனீயத்துக்கும், முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்தியத்துக்கும் உள்ள தொடர்பை நாம் தொடர்ச்சியாகவும் அனுபவபூர்வமாகவும் நிறுவ வேண்டும். உலகெங்கிலும் அரசியல் கூட்டணிகளை உருவாக்க வேண்டும். வேறு எப்படி தென்னாப்பிரிக்காவில் நிற வெறுப்பு (பெயரளவிலாவது) முடிவுக்கு கொண்டு வரப் பட்டது? பாகுபாட்டின் மிக மோசமான வடிவத்தைப் பின்பற்றி வரும் இந்த சமூகத்தை முழுமையான வெறுப்புணர்வோடு உலகம் பார்க்க வேண்டும். இன்று இந்தியாவுக்கு வெளியே வாழும் பலருக்கு சாதி என்றால் என்னவென்று தெரியாது. அவர்களைப் பொறுத்தவரையில் அது இந்து மதத்தோடு, நாகரீகமான சைவ உணவுப் பழக்கத் தோடு, யோகாவோடு எல்லாவற்றுக்கும் மேலாக காந்தியிசத்தோடு புனிதமான தொடர்புடையது. சாதியை அழிக்கும் பணிக்கு நாம் ஒவ்வொருவரும் நமது திறமையையும் ஆற்றலையும் முழுமையாக அளிக்க வேண்டும்.

நமக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய சவால் அரசியல் ரீதியான ஒற்றுமையைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சாதிய வேறுபாடுகளை வலுப்படுத்திவிடாமல் எப்படி சாதியை எதிர்த்துப் போராடுவது என்பதுதான். இது மிகவும் சிக்கலான போராட்டம். தனிமைப்படுவதை ஊக்குவிக்கும், ஒற்றுமைக்கான சாத்தியங்களை உருக்குலைக்கும் சாதி எதிர்ப்புப் போராட்டத்தின் நோக்கத்தையே முறியடிக்கும் அதி தீவிர தோரணைகொண்ட நபர்களை நாம் பார்க்கலாம். இந்த போராட்டத்தில் உங்கள் நண்பர்கள் யார்? உங்கள் எதிரிகள் யார்? என்று கண்டடைவது மிக மிகக் கடினமான ஒரு விஷயம் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதைச் செய்ய வேண்டும். அதுதான் பாபாசாகேப் அம்பேத்கரின் மிகப்பெரிய ஆற்றல்களில் ஒன்று.

நாம் ஒரு இணைப்புச் சங்கிலியை உருவாக்கியாகவேண்டும். நிலங்களிலிருந்து, தொழிற்சாலைகளிலிருந்து, குடிசைப்பகுதிகளிலிருந்து, சிறு நகரங்களிலிருந்து, பள்ளி, பல்கலைக் கழகங் களிலிருந்து, பாடசாலைகளிலிருந்து, இலக்கியத் திலிருந்து சினிமாவி லிருந்து எழும் உடைக்க வியலாத சங்கிலியை நாம் உருவாக்க வேண்டும். விழிப்புணர்வு, புரிந் துணர்வு சோர் வடையாத செயல்பாடு என்னும் சங்கிலி அது.

(தமிழில்: கவிதா முரளீதரன்)

புரட்சிப் பெரியார் முழக்கம்”

ஆண்டுக்கட்டணம் ரூ.200

தொடர்புக்கு: ஆசிரியர், 29, பத்திரிகையாளர்

குடியிருப்பு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர்,

சென்னை-41.

Pin It