நமது சுயமரியாதை இயக்கம் தோன்றிய பிறகு, மதத்தின் பேராலும், அரசியலின் பேராலும் பாமர மக்களை ஏமாற்றி வயிறு பிழைத்து வந்த பலருக்குக் கஷ்டமாகி விட்டது. பாமர மக்கள் கொஞ்சம் கண்விழித்துப் பகுத்தறிவு பெற்றுவிட்டமையால் அவர்களைச் சுலபமாக ஏமாற்ற முடியாமல் போய்விட்டது. ஆகையால், இவ்வியக்கத்தின் மூலம் தங்கள் பிழைப்பிற்குப் பாதகம் உண்டான கூட்டத்தார் அனைவரும் நமது இயக்கத்தை மறைமுகமாகவும், சில சமயங்களிலும் வெளிப்படையாகவும் எதிர்த்து வருகின்றனர். இவர்கள் எவ்வளவு தான் எதிர்த்தாலும் இவ்வெதிர்ப்பினால் நமது இயக்கத் தின் ஒரு உரோமங்கூட அசைக்கப் படவில்லை என்பதை நாம் பல தடவை களில் எடுத்துக்காட்டியிருக்கின்றோம். இதற்கு மாறாக இவ்வியக்கம் ஒவ் வொரு நாளும் தேச மக்களின் மனத்தைக் கவர்ந்து வேரூன்றி வருகிற தென்பதை நாம் எடுத்துக் கூறுவது மிகையேயாகும்.

மதத்திற்காக மிகவும் பரிந்து பேசி, நமது இயக்கத்தை எதிர்க்கும் கூட்டத்தார் யார்? அவர்கள் செய்கையென்ன? அவர்கள் நமது இயக்கத்தின் கொள்கைகளை எதிர்ப்பதன் நோக்கமென்ன என்னும் விஷயங்களைச் சிறிது ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு இவ்வியக்கத்தின் பெருமையும் இதை எதிர்ப்ப வர்களின் சிறுமையும் விளங்காமற் போகாது. ஆகையால் அவ்விஷயமாகக் கொஞ்சம் கூற விரும்புகின்றோம்.

இன்று நமது இயக்கத்தைப் பற்றி மறைமுகமாகவும், சில சமயங்களில் வெளிப்படையாகவும் எதிர்த்துப் பிரசாரம் பண்ணிக் கொண்டிருப்பவர்களில் முதன்மையாக இருப்பவர்கள் கீழ்க்காணும் கூட்டத்தினரே யாவார்கள். அவர்கள் அரசியல்வாதிகள், பண்டிதர்கள், புரோகிதர்கள், கோயில் தரும கர்த்தாக்கள், மடத்தலைவர்கள் முதலியவர்கள்.,periyar and maniammai 558இவர்களில் முதலில் அரசியல்வாதிகளை எடுத்துக் கொள்ளுவோம். நமது இயக்கந் தோன்றிய நாள் முதல், நாம் அரசியல்வாதிகளின் புரட்டுக் களையும், சூழ்ச்சிகளையும் வெட்ட வெளிச்சமாக்கி வருகிறோம். “சுயராஜ்யம்” என்பதும், “சத்தியாக்கிரகம்” என்பதும் ஆகிய வார்த்தை களெல்லாம் பாமர மக்களை ஏமாற்றி ஓட்டுப் பறிப்பதற்காகக் கூறும் தந்திர வார்த்தைகள் என்று கூறி வருகிறோம். மக்களுக்குள் உள்ள வித்தியாசங்கள் ஒழிவதற்கு முன், ஜாதியினாலும், மதத்தினாலும் மனிதனை மனிதன் அடிமையாகவும், மிருகங்கள் போலவும் நடத்துகின்ற நிலை மாறுவதற்குமுன் இந்நிலைமையைக் கொஞ்சங் கூட மாற்றுவதற்கு முயற்சியும் செய்யாமல் “சுயராஜ்யத்”திற்குப் பாடுபடுகிறோம் என்று கூறுவது சுத்த அயோக்கியத் தனத்தைத்தவிர வேறல்ல என்றே கூறி வருகிறோம். ஆகையால் அரசியலை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் கூட்டத்தார் நமது இயக்கத்தை எதிர்ப்பதும், இதைப்பற்றித் தப்புப் பிரசாரம் பண்ணுவதும் இயல்பேயாம். இவ்வாறு செய்வதன் நோக்கம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப்பில் மண் விழுகிறது என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்பதை அறியலாம்.

இரண்டாவது பண்டிதக் கூட்டத்தார், ஏன் நமது இயக்கத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள் எதிர்க்கிறார்கள்; என்று பார்ப்போம். நாம் குறிப்பிடும் பண்டிதர்ககள் என்பவர்கள், புராணங்களையும், இராமாயணப் பாரதக் கதைகளையும், வேதங்களையும், ஆகமங்களையும், ஸ்மிருதிகளை படித்துவிட்டு மூளை மழுங்கி, சொந்த மூளை அதாவது ஆராய்ச்சி அறிவு கொஞ்சங்கூட இல்லாமல், தாங்கள் படித்த புத்தகங்களில் சொல்லப் பட்டவைகள் தான் உண்மை அவைகளின் படி நடப்பதுதான் ஒழுங்கு அவைகளை மீறி நடந்தாலோ, அல்லது அவைகளை நம்பாவிட்டாலோ, “பாவம்” “நரகம்” முதலியவைகள் சம்பவித்துவிடும் என்று நம்பிக் கொண்டிருப்பவர் களேயாவார்கள். இப்படிப்பட்டவர்கள் யாராயிருந்தாலும் அவர்களை யெல்லாம் நாம் “பண்டிதர்கள்” என்று குறிப்பிடுகின்றோம். இப்பண்டிதர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர்களுடைய வயிற்றுப் பிழைப்பாகும். அவர்கள் புராணப் பிரசங்கம் செய்வதன் மூலமும், வருணாச்சிரம தருமப்பிரசங்கம் செய்வதன் மூலமும் புராணக் கதைகளை வசனங்களாகவும், பாட்டுக் களாகவும் எழுதிப் புத்தகங்களாக அச்சிட்டு விற்பனை செய்வதன் மூலமும் ஜனங்களிடம் காசு பறித்து வந்தார்கள். சுயமரியாதை இயக்கப் பிரசாரத்தால் பொய்ப் புராணங்களுக்கும், அர்த்தமற்ற வருணாச்சிரம தர்மங்களுக்கும் ஆட்டங் கண்டு விட்டபடியால், இவைகளை வயிற்றுப் பிழைப்பாக வைத்துக் கொண்டிருந்த “பண்டிதர்கள்” பிழைப்புக்கும், கௌரவத்திற்கும் ஆபத்து ஏற்பட்டுவிட்டது. ஆகையால் இக் கூட்டத்தார் இவ்வியக்கத்திற்கு விரோதமாக இருப்பது ஆச்சரியமல்ல.

இனி மூன்றாவதாகப் புரோகிதர்களை எடுத்துக்கொள்வோம். புரோகிதர்கள் என்பவர்கள் மதத்தின் பெயரைச் சொல்லி, பல சடங்குகளைப் பாமர மக்களின் தலையிற் சுமத்தி, அவைகளின் மூலம் பொருள் பறித்து ஜீவனம் பண்ணும் சோம்பேரிக் கூட்டத்தாரே யாவார்கள், இக்கூட்டத்தாரின் கையிலேயே உலக மக்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகவும் சிக்கித் துன்புற்று அடிமையாகக்கிடந்து வந்தனர். ஒவ்வொரு நாட்டிலும் தோன்றிய சீர்திருத்தவாதிகள் எல்லோரும் முதலில் புரோகிதர்களின் ஏமாற்றல்களை ஒழிக்கவே முயன்றிருக்கின்றனர். இம்முயற்சி காரணமாகப் பல தேசங்களில் புரோகிதர்களின் ஆதிக்கங்கள் அழிந்து விட்டன. ஆனால் நமது நாட்டில் மாத்திரம் இன்னும் புரோகித ஆதிக்கம், அழியவேயில்லை, நமது நாட்டில் இந்தப் புரோகித ஆதிக்கம் இந்து மதத்திலும், கிறிஸ்துவ மதத்திலும், முஸ்லீம் மார்க்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆகையால் நமது இயக்கம் ஆரம்பமுதலே புரோகிதத்தையும் புரோகிதர்களையும் பலமாகக் கண்டித்து அவர்களின் சூழ்ச்சிகளை வெளிப்படுத்தி வருகிறது. இதன் பயனாக, இந்துக்களில் அனேகர் இப்பொழுது புரோகிதத்தை ஒழித்தும் புரோகிதர்களை பகிஷ்கரித்தும் தங்கள் காரியங்களை நடத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்; முஸ்லீம்களிலும் முல்லாக்களின் ஆதிக்கத்தையும், அவர்களால் ஏற்படுத்தப்பட்ட “பஞ்சா” வணக்கம், சமாதி வணக்கம் “கூடு” எடுத்தல் முதலிய மார்க்கத்திற்கு விரோதமான காரியங்களையும் ஒழிக்க வேண்டும் என்ற கிளர்ச்சி ஏற்பட்டு வருகின்றது. முற்றும் புரோகிதர்களின் ஆதிக்கத்திலேயே இருந்து வருகின்ற “ரோமன் கத்தோலிக்க கிறிஸ்துவமத” த்திலும் பல இடங்களில் புரோகிதர்களைப் பகிஷ்கரிக்கும் வேலை ஆரம்பித்து விட்டது. இதனால் ரோமன் கத்தோலிக்கப் பாதிரிகள், அவர்கள் கூட்டங்களிலும், மாதா கோயில்களிலும், சுயமரியாதை இயக்கத்தைத் தாக்கிப் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இவ்வாறு புரோகிதர்களின் சோம்பேரிப் பிழைப்புக்கு ஆபத்து ஏற்பட்ட காரணத்தினாலேயே அவர்கள் நமது இயக்கத்தை எதிர்த்துப் பேசப் புறப்பட்டிருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை.

இனி நான்காவதாகப் புத்தக வியாபாரிகளில் சிலர் நம்மை ஏன் எதிர்க்கிறார்கள்? என்று பார்ப்போம். இவர்கள் புராணக்கதைகளாகிய, பெரிய புராணம், திருவிளையாடல் முதலியவைகளையும், தேவாரம், திருவாசம், நாலாயிரப் பிரபந்தம் முதலிய புத்தகங்களையும் அச்சிட்டும் பாடப்புத்த கங்களாக எழுதி வெளியிட்டும் ஒரு ரூபாய் புத்தகத்தை ஐந்து ரூபாய் விலை வைத்து விற்றும் பணம் சம்பாதிக்கின்றவர்கள். இந்த புராணப் புத்தக வியாபாரிகள் சைவத்தை வளர்ப்பதாகவும் வைணவத்தை வளர்ப்பதாகவும், தமிழை வளர்ப்பதாகவும் கூறிப் பணம் சம்பாதிப்பவர்கள். நமது இயக்கம் தோன்றியபின் இத்தகைய புத்தகங்களின் மதிப்பும் விற்பனையும் குறைந்து விட்டதால், இவர்கள் வியாபாரமும் குறைந்து விட்டது. ஆகையால் இந்தப் புராணப் புத்தக விளம்பர வியாபாரக் கூட்டத்தார் நம்மைப் பற்றி தப்புப் பிரசாரம் பண்ணுவதில் ஒன்றும் ஆச்சரியமில்லை.

அடுத்தபடி ஐந்தாவதாக நம்மை எதிர்க்கும் பத்திரிகைக்காரர்கள் யார் என்பதைப் பார்ப்போம். “சமய போதனை” “சன்மார்க்க போதனை” “நல் லொழுக்க போதனை” என்னும் பெயர்களால் சைவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும், வைணவமதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும், கிறிஸ்துவ மதப் பிரசாரம் பண்ணும் பத்திராசிரியர்களும் இன்னும் தேசியப் பத்திரிகை என்று பெயர் வைத்துக் கொண்டு மருந்து வியாபாரங்களும், புராணப் புஸ்தக வியாபாரங்களும் செய்யும் “கேட்லாக்” பத்திரிகைக் காரர்ளும் நம்மை எதிர்க்கிறார்கள். இவர்கள் எதிர்ப்பதற்குக் காரணம் அவர் களுடைய வயிற்றுப் பிழைப்பு போகிறதே என்பதைத் தவிர வேறு என்ன வாயிருக்க முடியும் என்றுதான் கேட்கிறோம்.

இனி ஆறாவதாகக் கோயில் தருமகர்த்தாக்கள் ஏன் நம்மை எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால் அதன் உண்மையும் விளங்காமல் போகாது. நமது இயக்கப் பிரசாரம் காரணமாக வரவர கோயில்களுக்குப் போகும் ஜனங்களும் குறைந்து வருகிறார்கள். கோயில் உண்டிகளில் விழும் பணமும் குறைந்து வருகிறது. அன்றியும் நாம் கோயில்களின் சொத்துக்களையெல்லாம் பறிமுதல் செய்து அவைகளை கல்வி, கைத்தொழில், சுகாதாரம் முதலியவைகளுக்குச் செலவு செய்யவேண்டுமென்று கூறி வருகிறோம். இவ்வாறாகி விட்டால், பரம்பரை யாகக் கோயில்களுக்குத் தருமகர்த்தாக்களாக இருந்து கொண்டு அவைகளின் செல்வங்களை அனுபவித்துவரும் கூட்டத்தாரின் சுக வாழ் விற்கு ஆபத்து ஏற்பட்டு விடுமல்லவா? ஆகையால் தான் இக்கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு விரோதமாக இருந்து வருகின்றார்கள்.

இனி அடுத்தபடி ஏழாவதாக மடாதிபதிகள் நமது இயக்கத்தை எதிர்ப்பதற்குக் காரணம் என்ன என்று பார்ப்போம். இந்தக்கூட்டத்தார், ஏராளமான சொத்துக்களை வைத்துக் கொண்டு அவைகளை நாட்டு மக்களின் நன்மைக்காக ஒரு சிறிதும் பயன்படுத்தாமல் தங்கள் சுக வாழ்வுக்கே செலவு செய்து கொண்டு வருகிறார்கள். ஆனால் இவர்களுடைய சொத்துக்களோ தேச மக்களுடைய சொத்துக்கள் என்பதில் ஐயமில்லை. அன்றியும் இவர்கள் “மடாதிபதிகள்” என்று பெயர் வைத்துக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றிக் கொண்டிருப்பதற்குக் காரணம் மதமேயாகும். ஆகையினால் மதத்தையும் அழிக்க வேண்டும் மதத்தின் பேரால் வீணாகச் செலவழித்து வரும் மடாதிபதிகளின் சொத்துக்கள் போன்றவைகளையெல்லாம் தேச நன்மைக்குப் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறோம். இதனால் இந்த மடங்களின் கூட்டத்தார் நமது இயக்கத்திற்கு எதிராக இருந்து வருகின்றார்கள்.

இனி எட்டாவதாக நாடகக்காரர்களை எடுத்துக் கொள்வோம். மற்ற நாடுகளில் உள்ள நாடகக்காரர்களோ சிறந்த படிப்பாளிகளாகவும், தேசத்தை சீர்திருத்த வேண்டும் என்னும் எண்ணமுடையவர்களாகவும் இருந்து வருகிறார்கள், இதற்குத் தகுந்தபடி பாமர மக்களின் மனத்தில் பகுத்தறிவு உணர்ச்சியை ஊட்டத் தகுந்த சிறந்த நாடகங்களை நடத்தி வருகின்றார்கள். ஆனால் நமது நாட்டு நாடகக்காரர்களில் பெரும்பாலானவர்கள் வெறும் வயிற்றுப் பிழைப்பையே குறியாகக் கொண்டவர்களாதலால் இவர்கள் பாமர மக்களின் அறியாமையை இன்னும் வளர்க்கக் கூடிய மத சம்பந்தமான புராணங்களையே நாடகங்களாக நடத்தி வருகிறார்கள். நமது இயக்கம் பரவு வதன் காரணமாக, இந்தப் புராணப் பிழைப்பு நாடகக் காரர்களுக்கு வருவாயும் குறைய ஆரம்பித்து வருகிறது. ஆதலால், இவர்கள் ஆயிரக்கணக்கான ரூபாய்களுக்குச் “சீன்”களும், நாடகம் நடத்தும் போதெல்லாம் அதிகப் பணத்தைச் செலவு செய்து விளம்பரமும் செய்ய வேண்டியிருக்கிறது. அப்படியும் சரியானபடி பணம் வசூல் ஆவதில்லை. ஆகையால் இவர்களும் இப்பொழுது நம்மை எதிர்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதிலும், அதிகமாக நமது இயக்கத்தை மறைமுகமாகத் தாக்கும் நாடகக்காரர்கள் பார்ப்பனர்களே என்பதை நாம் கூற வேண்டியதில்லை. ஏன் எனில், மதத்தினால் பாமர மக்களை ஏமாற்றி வருபவர்கள் பார்ப்பனக் கூட்டத்தார் அல்லவா? ஆகை யால் நாடகக் காரர்கள் நமது இயக்கத்திற்கு எதிரான பிரசாரம் பண்ண ஆரம்பித்திருப்பதும் ஆச்சரியமில்லை.

இனி இவ்வாறு மதத்திற்கும், வருணாச்சிரம தருமத்திற்கும் புராணங்களுக்கும் பரிந்து பேசி, நம்மை எதிர்க்க மேற்கூறிய அரசியல்வாதிகள் பண்டிதர்கள் புரோகிதர்கள் முதலான கூட்டத்தார்க்கு அக்கரை உண்டாகக் காரணமென்ன என்பதைப் பற்றி வாசகர்களே தெரிந்து கொண்டிருக்கலாம். இக்கூட்டத்தார்கள் அனைவரும் மதத்தின் பெயராலும் வருணாச்சிரம தருமத்தின் பெயராலும், புராணங்களின் பெயராலும், வயிறு வளர்க்கின்றவர்கள். இவைகளைக் கொண்டு ஏழை மக்களின் செல்வத்தைக் கொள்ளை யடிக்கின்றவர்கள். ஆகையால் தான் இவற்றைத் தடுக்கும் நம்மைப் பற்றித் தப்புப் பிரசாரம் செய்துகொண்டுவருகிறார்கள் என்பதில் ஐயமில்லை.

ஆகையால் இனியும் இக்கூட்டத்தாரின் வார்த்தைகளுக்கு ஏமாறாமல் சுயமரியாதையைக் காப்பாற்றிக் கொள்ளும்படி பாமர மக்களுக்கு உதவி செய்வது தான் நமது கடமையாகும். அரசியல்வாதிகளின் பேச்சையும், புராணப் பிரசங்கிகளின் பேச்சையும் புரோகிதர்களின் பேச்சையும் நம்பி தாம் சம்பாதிக்கும் பொருளை இவர்கள் கையிற் கொடுத்து விட்டு தரித்திரமாகவும் அடிமையாகவும் வாழ வேண்டாம் எனப் பாமர மக்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டியதே சுயமரியாதைத் தோழர்களின் கடமையாகும். மதத்திற்கு “வக்காலத்து வாங்கிப்” பேசுபவர்களின் பேச்சை கேட்டு யாரும் ஏமாறப் போவதில்லையென்றும் இவர்களால் சுயமரியாதை இயக்கம் அழிந்துவிடப் போவதில்லையென்றும் எச்சரிக்கை செய்வதுடன், இக்கூட்டத்தாரையும் மதத்தின் பெயரால் பாமர மக்களை ஏமாற்றுந் தொழிலை மேற்கொள்ளாமல் வேறு கௌரவமான தொழிலை செய்து ஜீவிக்குமாறு வேண்டுகிறோம்.

(குடி அரசு - தலையங்கம் - 04.09.1932)