ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 2014 செப்டம்பரில் 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியபோது தமிழ்நாடு முழுதும் ஆளும் கட்சியினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். பேருந்துகள் தீ வைக்கப் பட்டன; கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறை அனுமதியின்றியே சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. காவல்துறை வேடிக்கை பார்த்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால், ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்ததை எதிர்த்து ஆந்திர பேருந்துகளை தாக்கிய தமிழ் உணர்வாளர்களை காவல்துறை கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தது.

கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் மோடி பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க, சேலம் வருமானவரித்துறை அலுவலக வாயிலில் ஒரு கோணிப்பையை மண்ணெண்ணெயில் மூழ்கச் செய்து வீசிய குற்றத்துக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களையும், தலைவர் கொளத்தூர் மணியையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து 7 மாதம் சிiயில் அடைத்தது, அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. இதே ஆட்சியில் தொலைக்காட்சி நிலையத்துக்கு ‘வெடிகுண்டு’ வைத்தவர்கள் மீதும், பெரியார் திடலுக்குள் வெடிகுண்டு ஆயுதங்களுடன் தாக்குதலுக்கு நுழைந்தவர்கள் மீதும் எந்த தடுப்புக் காவல் சட்டத்தையும் காவல்துறை பயன்படுத்தவில்லை. வெடிகுண்டு வீசுவதைவிட சாக்குப் பையை வீசியதுதான் குற்றம்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுக் கூட்டங்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கிறது காவல் துறை. 

‘இந்துக் கடவுளர்களை’ இழிவுபடுத்துவதாக காவல்துறையே குற்றம்சாட்டு கிறது.

கிணத்துக்கடவு கழகத் தோழர் நா.வே.நிர்மல்குமார், கழகத் தோழர் இந்துமதி ஆகியோரின் ஜாதி மறுப்பு - தாலி மறுப்பு மணவிழா, கிணத்துக்கடவு ஜாதி எதிர்ப்பு பரப்புரைக் கூட்டத்தில் மே 17இல் நடக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. பொதுக் கூட்ட மேடையில் திருமணம் நடத்த அனுமதிக்க முடியாது என்று தடைபோடுகிறார் பேரூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்.

“கடவுள் மறுப்பு, ஜாதி மறுப்பு, பகுத்தறிவுப் பிரச்சாரம் என்ற பெயரில் இந்து மதத்தின் கடவுள் நம்பிக்கைகள் மற்றும் இந்து மத நம்பிக்கை உள்ள பொது மக்களின் மனதை வேதனைப்படுத்தி அதனால், அவர்களின் பகையை வலியப் போய் உருவாக்குகிறார்” என்று தோழர் நிர்மல் குமார் மீது எழுத்துப்பூர்வமாக பழி சுமத்துகிறது. இந்த ஆணையாளர் அளித்துள்ள அனுமதி மறுப்புக்கான ஆணை.

இதையெல்லாம்விட பொதுக் கூட்டத்தில் நிர்மல்குமார்-இந்துமதி நடத்திக் கொள்ளவிருந்த திருமணம் பற்றி குறிப்பிடுகையில்,

“ஒரு தனிப்பட்ட நபரின் திருமண நிகழ்ச்சி, எப்பொழுதும், யாராலும் ஒரு பொதுவிடத்தில் வைத்து நடத்தப்பட்டதே இல்லை. அதற்கு இதுவரை யாரும் அனுமதி கேட்டதோ, அதற்கு இதுவரை காவல்துறை அனுமதி அளித்ததோ கிடையாது” என்று அந்த அதிகாரி ஆணையில் தெரிவித்திருப்பது தான் ஆணவத்தின் உச்சம்.

பொதுக் கூட்ட மேடைகளில் எத்தனையோ ஆயிரம் திருமணங்கள் இந்தத் தமிழ்நாட்டில் நடந்திருப்பது, இந்த அதிகாரிக்கு தெரியுமா? “இதுபோல் எப்போதும் நடந்ததே இல்லை” என்று வரலாற்று ஆய்வாளர்போல் தன்னைக் கருதிக் கொண்டு ஆணையில் குறிப்பிடுவது இவரது அறியாமையைத்தான் வெளிப்படுத்துகிறது. தோழர் நிர்மல்குமார், காவல்துறையிடம் அனுமதி கேட்டது, பொதுக் கூட்டத்துக்கே தவிர, அவரது திருமணத்துக்கு அல்ல என்பதை அவர் புரிந்து கொள்ளட்டும். இப்படியே போனால் திருமணத்துக்குகூட காவல்துறை அனுமதி கேட்கவேண்டும் என்று காவல்துறை ஆணை பிறப்பிக்கும் நிலை தமிழகத்தில் வந்துவிடும் போலிருக்கிறது.

இது தோழர் நிர்மல் குமாரை மிரட்டுவது அல்ல; தந்தை பெரியார் வாழ்நாள் முழுதும் பரப்பிய தத்துவத்துக்கு ஒரு காவல்துறை அதிகாரி இழைக்கும் அவமதிப்பு ஆகும். பார்ப்பனர் - ஆர்.எஸ்.எஸ்.காரர்களின் மேடைப் பேச்சுகளை அல்லது அவர்கள் ஏடுகளில் எழுதும் கட்டுரைகளை காவல்துறையின் ஆணைகளாகப் பிறப்பிக்கும் நிலைக்கு இந்த அதிகாரிகள் செயல்படுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது.

இந்திய அரசியல் சட்டம் கருத்துரிமை, பேச்சுரிமைகளை அடிப்படை உரிமைகளாக உறுதி செய்திருப்பதை மறந்துவிட வேண்டாம். இவர்கள் காவல்துறை அதிகாரிகளாக உயர்வதற்கு கல்வி உரிமையையும் உத்தியோக உரிமையையும் போராடி பெற்றுத் தந்தது - பெரியாரும் பெரியார் இயக்கமும்தான் என்பதை நினைவுபடுத்துகிறோம். எதற்கும் ஓர் எல்லை உண்டு!

Pin It