அனைத்து இயக்கங்கள் கண்டனம்
மாட்டிறைச்சியை ஆதரித்த முகநூல் பதிவுக்காக கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழக செயலாளர் நா.வே. நிர்மல்குமார், காவல்துறையால் பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவு களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
காவல் துறையின் சிறப்பு பிரிவுகள் தொடர்ந்து மக்களுக்காய் களத்தில் நிற்கும் தோழர்களின் முகநூல் பதிவுகளைத் தொடர்ந்து கண் காணித்து வருகிறது. அந்த வகையில் கோவையில் ஜாதி, மத வெறியர்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டமக்களோடு களத்தில் நின்று போராடும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் நிர்மல் பதிவை பதிவிட்ட அன்றே காவல்துறை கண்காணித் திருக்கும்.
அதன் பிறகு ஜாதி ஆணவப் படுகொலைகளைத் தடுக்கத் தவறும் தமிழக அரசு, காவல் துறை ஆகியவற்றை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஆர்பாட்டம் நடத்த அனுமதி கேட்கப்பட்டது. 17.07.2019 அன்று ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்புக் கடிதம் கொடுத்த காவல்துறை அக்கடிதத்தில் நிர்மலின் முகநூல் பதிவையே காரணம் காட்டி யுள்ளது. மேலும் நிர்மல் தன் பதிவில் இந்துக்களை கொச்சைப்படுத்தியுள்ள தாக, இல்லாத ஒரு கருத்தை திணித்தது காவல் துறை. அதன் பிறகு 10 நாட்கள் கழித்து அப்பதிவினால் எந்த அசம்பாவிதமோ, சமூக அமைதியை குலைக்கும் சம்பவமோ நடக்காத நிலையில் தோழர் நிர்மல் அவர்களை திடீரென பிணையில் வெளிவர முடியாத சட்டப் பிரிவு 505/2 இன் படி வழக்கு பதிவு செய்து சனிக்கிழமை கைது செய்து சிறையில் அடைத் திருக்கிறது காவல் துறை.
கழகத் தோழர் கைது செய்யப் பட்டதை அறிந்த அனைத்துக் கட்சியினரும் கொதித்தெழுந்தனர். கைதைக் கண்டித்து கோவையில் அனைத்து இயக்கங்கள் சார்பில் த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில் அவசரமாக காந்திபுரம் பெரியார் படிப்பகத்தில் கூடினர்.
ஜூலை 31 அன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்தனர். கூட்டத்தில் பங்கேற்ற அமைப்புகள்:
தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, விசிக, திராவிடர் கழகம், சிபிஅய், சிபிஎம், திராவிடர் தமிழர் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முண்ணனி, தமிழ்தேசிய விடுதலை முண்ணனி, மே 17 இயக்கம், தமிழ்நாடு திராவிடர் கழகம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கம், நன்செய் பிரசுரம், புரட்சிகர இளைஞர் முண்ணனி, புரட்சிகர இளைஞர் கழகம்,தமிழர் கழகம், ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம், முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம், தமிழ்நாடு தேசிய இயக்கம், ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம், காட்டாறு, தோழர் அறக்கட்டளை, தமிழர் விடுதலைக் கட்சி, தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம், அம்பேத்கர் படிப்பகம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட அமைப்புகளிலிருந்து 60க்கும் மேற்பட்ட தோழர்கள் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்தனர். நிறைவாக தோழர் தியாகு (தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி) கருத்துரை வழங்கினார்.
505/2 என்கிற பிரிவு பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் படி பேசுவது, செயல்படுவது என்பதாகும். இவ்வழக்கு சற்றும் பொறுத்த மில்லாத பொய் வழக்கே ஆகும்.
இந்து இயக்கத்தை சார்ந்தவர்கள் வன்முறையை தூண்டும் வகையிலும், பெண்களை, காவல்துறையை, நீதி மன்றத்தை எவ்வளவு இழிவுபடுத்தி பேசினாலும் காவல் துறை கை கட்டி வேடிக்கை பார்க்கிறது.
எஸ்.வி.சேகர் எனும் பிஜேபி பார்ப்பனர் பத்திரிக்கையில் பணி புரியும் பெண்களை நடத்தை கெட்டவர்கள் என்றார்.
எச்.ராஜா எனும் பிஜேபி பார்ப்பனர் ஹைகோர்ட்டாவது மயிராவது என்றார். காவல்துறை உயர் அதிகாரியை பார்த்து நேருக்கு நேராக காவல்துறை ஊழல் துறை என்றும் உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும் என்றும் திமிராக பேசினார். அவரிடம் காவல் துறை அதிகாரி குழைந்து, நெளிந்து கெஞ்சுகிறார். (வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.)
சடகோபன் ராமானுஜ ஜீயர் என்பவர் பொதுக் கூட்டத்திலேயே சோடா பாட்டில் வீசுவேன், கல்லை வீசுவேன் என பேசினார். அவர் மீது ஒரு நடவடிக்கையும் இல்லை இது தான் காவல் துறை சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் நிலை.
ஆனால் கோவையில் யாரோ மணிகண்டன் என்பவர் புகார் அளித்ததாகக் கூறி ஒரு முகநூல் பதிவிற்காக 15 நாள்கள் கழித்து பொய் வழக்குப் போட்டு கழகத் தோழர்கள் மீது காவல் துறை பாய்கிறது என்றால் நடுநிலையோடு தான் காவல்துறை நடக்கிறதா என்று பொதுமக்கள் அய்யப்படுகிறார்கள்.
இது தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
காவல் துறைக்கு நீதிமன்றங்கள் அளித்துள்ள வழிகாட்டு நெறி முறைகள், உத்தரவுகள், தீர்ப்புகள் என்பனவற்றை சுட்டிக்காட்டி இனி சமூக அமைதிக்கு உண்மையிலேயே குந்தகம் விளைவிக்கும் காவி தீவிரவாதி களின் நடவடிக்கைகளை ஆதாரங் களுடன் புகார் அளிக்க வேண்டும் என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிவுறுத்தி உள்ளார். ஆதாரங் களுடன் அளிக்கப்படும் புகார்களுக்கு காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கு மானால் அரசுத்துறை, காவல் துறை மீதே வழக்குகளை தனியாக பதிவு செய்ய வேண்டி இருக்கும் என்றும் அறிக்கையில் குறிப்பிட் டுள்ளார். சிறை, வழக்குகள் பெரியார் தொண்டர்களை சோர்வடையச் செய்து விடும் என்று அரசோ, காவல் துறையோ நம்பினால் அவர்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும்.
கருப்புச் சட்டையை மாட்டிக் கொண்டு களத்தில் நிற்கும் பெரியார் தொண்டன் கொண்ட கொள்கைக் காக எதையும் சந்திக்கும் துணிவுடனும், எந்த இழப்பிற்கும் தயாராக வும் தான் நிற்பான் என அரசும், காவல் துறையும் தெரிந்து கொள்வது நல்லது, அதே சமயம் பொய் வழக்குகளை போடும் காவல்துறையை நீதிமன்றம் மூலம் அம்பலப்படுத்துவதும் அவசியம்.