புதுடில்லியில் ஓடும் பேருந்தில் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டுள்ளது குறித்து நாடெங்கும் அதிர்வலைகள் எழுந்துள்ளன. கடுமையான சட்டங்கள் வேண்டும். பாலியல் குற்றங்களுக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்ற கருத்துகள் முன்மொழியப்படு கின்றன. அதேபோழ்தில் தூத்துக்குடி அருகே ஸ்ரீவைகுண்டம் கிளாக்குளம் கிராமத்தைச் சார்ந்த 12 வயது சிறுமி புனிதா கொடியவனால் பாலுறவு வன்முறைக்கு உள்ளாகி கொல்லப்பட்டார். சிதம்பரம் முட்லூர் அருகே சந்தியா என்ற பெண் தான் வேலை பார்த்த இடத்திலேயே மூன்று கொடியவர்களால் பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டார். பிரியா என்ற மாணவி விழுப்புரம் அருகே இதேபோல் கொல்லப் பட்டார். ஆனால், டெல்லியில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிடக் கூடாது என்ற ஊடக நெறிமுறைகள், இந்த தலித் பெண்களின் கொடூர கொலையில் பின்பற்றப்பட வில்லை. இவர்கள் பற்றிய படம் பெயர்களுடன் தமிழக ஏடுகள் வெளியிட்டன.

குற்றங்கள் - கொலைகளின் நகரமாகிவிட்ட டெல்லியில் கடந்த ஆண்டில் 300க்கும் மேற்பட்ட பாலுறவு வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்துக்கும் ‘மவுனம்’ காத்த ஊடகங்களும் போராட்டக் காரர்கள் ஓடும் பேருந்தில் நடந்த கொடூர வன்முறைக்கு மட்டும் வெடித்துக் கிளம்பியதோடு அய்.நா.பொதுச் செயலாளரையே கண்டனம் தெரிவிக்கச் செய்துள்ளன. பெண்களின் மீதான இந்த கொடூரங்களையும் வன்முறைகளையும் கடுமையான சட்டங்கள் வந்தால் மட்டும் ஒழித்து விட முடியாது. சட்டங்கள் வெற்றிகரமாக அமுலாக பெண்கள் பற்றிய சமூகத்தின் பார்வையும் குடும்பத்தின் பார்வையும் மாற்றப்படவேண்டும். பெண் என்றால் அவள் ஒரு அனுபவிக்கக்கூடிய போகப் பொருள்; ஆணுக்கு அடிமைப்பட்டவள் என்ற பார்வையை மாற்றியமைக்கக் கூடிய ஒரு புரட்சி வந்தாகவேண்டும்.
 
தூக்குத் தண்டனை குற்றங்களை தடுப்பதில்லை என்பது உறுதியாகிவிட்ட முடிவு. தூக்குத் தண்டனை அமுலிலுள்ள நாட்டில்தான் டெல்லிக் கொடூரங்களும் நடந்திருக்கிறன்றன என்பதை மறந்துவிடக் கூடாது. முதலில் பெண்களுக்கான உரிமைகளை அங்கீகரிக்க முன்வரவேண்டும். சட்ட மன்றம், நாடாளுமன்றங்களில் பெண்களுக்கான 33 சதவீத இடங்களை வழங்குவதைத் தடுக்கும் சாதி ஆணாதிக்க அரசியல்வாதிகளும்கூட பெண் களுக்கு எதிரான குற்றவாளிகள்தான்!

புதுவை மாநில ஆட்சி, பெண்கள் பாது காப்புக்கு அவர்கள் ‘கோட்’ அணிய வேண்டும்; செல்பேசி பயன்படுத்தக்கூடாது; பெண்களுக்கு தனிப் பேருந்துவிடவேண்டும் என்று திட்டம் தீட்டி பெண்களை ஒதுக்கி வைப்பது - பெண்கள் மீது சுமத்தப்படும் மற்றொரு உரிமை பறிப்பேயாகும்.  பெண்களை இழிவாகக் கருதக்கூடிய எந்த கருத்தும் அது மத நூலாக இருந்தாலும் மனு தர்மமாக இருந்தாலும் சட்ட விரோதமாக்கப்பட வேண்டும்.  வழிபாடுகளில் பெண்களைத் தனிமைப் படுத்தும் தீட்டுகள், சடங்குகள் சட்டவிரோத மானவையாக அறிவிக்கப்பட வேண்டும்.
 
இருபாலரும் இணைந்து படிக்கும் கல்விச் சாலைகள் வரவேண்டும். பாலியல் கல்வி பாடமாக்கப்பட வேண்டும். பெண்கள் உரிமையை வலியுறுத்தும் பாடத் திட்டங்கள் வரவேண்டும். பெண்-ஆண் சமத்துவம் அனைத்துத் துறைகளிலும் வரவேண்டும்.

பெரியார் கூறுகிறார்:

“பெண்களைக் கூண்டுக் கிளிகளைப்போல் வீட்டில் அடைத்து வைக்கத் தாய் தந்தையர் முயற்சிக்காதீர்கள்! தாராளமாகப் பழக விடுங்கள். பெண்களுக்கு 20 வயது வரை, கண்டிப்பாகத் திருமணம் செய்யாதீர்கள்.
 
குழந்தைகளின் உற்பத்திப் பீடமாயுள்ள பெண்கள் திருந்தினாலொழிய அவர்களிடமிருந்து உற்பத்தியாகும் குழந்தைகளும் திருந்திய குழந்தை களாயிருக்க முடியாது என்பதை மனத்தில் கொள்ளுங்கள். வளம் செய்யப்பட்ட மண்ணில் எப்படி நல்ல நெல்மணிகள் தோன்றுமோ, அது போலவே சீர்திருத்த மனம் படைத்த அறிவுள்ள பெண்களிடமிருந்துதான் சீர்திருத்த அறிவுள்ள செம்மல்கள் தோன்றக்கூடும் என்பதைத் தாய் மார்கள் உணர்ந்து, முதலில் தம்மைச் செம்மைப் படுத்திக் கொள்ளட்டும், கோயிலுக்குப் போய் அனாவசியமாய்க் குழவிக் கல்லுக்குத் தெண்டனிடு வதால் பயனில்லை என்பதை உணர்ந்து கொள்ளட் டும். வெறும் சமையல்காரிகளாகவும், கட்டிலறைப் போகப் பொருளாகவும், காட்சிப் பொருள்களாக வும் மட்டுமே இருப்பதில் பயனில்லை என்பதைப் பெண்கள் உணர்ந்து கொள்ளட்டும்!
 
நாம் விடுதலை அடைய வேண்டுமானால் பெண்கள் முதலில் மூடநம்பிக்கைகளிலிருந்து விடுதலை பெற வேண்டும். நாம் விதவைகளா யிருக்கத் தமது விதிப் பயன்தான் காரணம் என்பதை விதவைகள் விட்டொழிக்க வேண்டும். விதவைகளாயிருப்பவர்கள் சமூகத் தொண்டாற்ற முன்வரவேண்டும். நம் நாட்டுச் சரித்திரத்தில் பெண்களுக்கென்று தனி அத்தியாயம் எழுதப்படும் அளவுக்கு நீங்கள் விதவை(எதிர்ப்பு)ப் போராட்டத்தில் பெரும் பங்கு கொள்ள வேண்டும்.
 
அறிவுள்ள பெண்கள் சிலர் பதவி மோகங் கொண்டு அல்லலுறுகிறார்கள். சிலர் தம் புருஷர் களிடம் மாட்டிக் கொண்டு அல்லல்படுகிறார்கள்; விரைவில் இவற்றினின்று அறிவுள்ள பெண்கள் விடுதலை பெற்று, சமூகத் தொண்டாற்ற முன் வரவேண்டும். (‘விடுதலை’ .2.11.1948)

நம் வீட்டு நாய்களையே எடுத்துக் கொள்வோம். சில நாட்கள் விடாப்பிடியாகக் கட்டிப் போட்டு வைத்திருந்து பிறகு அவிழ்த்து விட்டால், காரணமின்றியே சந்தோஷத்தால் இங்கே ஓடும், அங்கே ஓடும்; குதிக்கும்; ஒரு நிமிஷங்கூடச் சும்மா இருக்காது. கட்டு ஒழிந்ததில் அதற்குள்ள ஆனந்தம் அவ்வளவு! இதுதான் இயற்கை. எனவே, நம் பெண்களை உலகத்தினின்றும் மறைத்து வைப்ப தும், அவர்களை உலக ஞானத்தை அடைய வெட்டாமல் தடுத்து வைப்பதும் மிக மிகக் கேடானதாகும். (‘விடுதலை’ 11.10.1948)
 
“ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி; ஓர் ஆணின் வீட்டுக்கு ஒரு காவல்காரி; ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை; ஓர் ஆணின் கண் அழகிற்கும், மனப் புளகாங்கிதத் திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல் பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்!” (‘வாழ்க்கைத் துணை நலம்’ நூலிலிருந்து. 1958)
 
“ஆணுக்குப் பெண் சரிநிகர் ஆகும்; அடிமை யில்லை. சோறு சமைத்துப் போட்டுச் சாப்பிடும் சோற்று ஆள் அல்ல  பெண்; சமமானவள்; நண்பனைப் போன்றவள் - வாழ்க்கைக்குத் துணைவி அவள். இருவருக்கும் உரிமை ஒன்றே. தகப்பன் சொத்தில் ஆணுக்குப் போலவே பெண்ணுக்கும் சரி பங்கு உண்டு. அவர்கள் பதவியும் வகிக்கலாம். அவர்களின் பதவிக் குறைக்கக் காரணம் அவர்களைப் பக்குவப்படுத்தாததுதான். அவர் களுக்கு நல்ல அறிவை யும், நல்ல பழக்க வழக்கங்களையும் அளிக்க வேண்டும். அன்னாரிடமிருந்து மூட நம்பிக்கையை அகற்ற வேண்டும். உதாரணமாக, பகவான் குழந்தைகளைக் கொடுக்க முடியும்; நிறுத்த முடியும். பகவானுக்கும் - குழந்தைக்கும் சம்பந்தமே யில்லை. எனவே, திட்டப்படி பிள்ளைகளைப் பெற்று நல்வாழ்வு வாழ வேண்டும். அதிகப் பிள்ளைகளால் அதிகத் தொல்லைதான். இதைப் புரிந்து கொள்வது முக்கியமானது. (‘வாழ்க்கைத் துணை நலம் நூல்’ 1958)”
 
“அன்றியும் ஆண்கள், பெண்களின் விடுதலைக்குப் பாடுபடுவதால் பெண்களின் அடிமைத்தனம் வளருவதுடன், பெண்கள் என்றும் விடுதலை பெற முடியாத கட்டுப்பாடுகள் பலப்பட்டுக் கொண்டு வருகின்றன. பெண்களுக்கு மதிப்புக் கொடுப்பதாகவும், பெண்கள் விடுதலைக் காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல. எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண் டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனர் அல்லாதவர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா? என்பதை யோசித்தால் இதன் உண்மை விளங்கும். அப்படி ஒருகால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகி விட்டாலும்கூட, ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்கவே கிடைக்காது என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்.” (‘குடிஅரசு’ 22.12.1929)

Pin It