ஈரோட்டில் நடந்த மனுசாஸ்திர எரிப்புப் போராட்ட விளக்க மாநாட்டில் டிசம்பர் 23 அன்று நடைபெற்ற தடை போடும் சாஸ்திரங்களும் தடம் காட்டும் பெரியாரியமும் என்ற கருத்தரங்கிற்கு தலைமையேற்று பேராசிரியர் சரசுவதி நிகழ்த்திய உரை.
 
இந்த மனுதர்ம சாஸ்திரம் என்று சொல்லப் படுகிற இந்த அதர்ம சாஸ்திரம், ஒருநபரால் ஒரு குறிப்பிட்ட காலக்கட்டத்தில் எழுதப்பட்டதல்ல என்ற வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்கலாம். எப்படி ஒளவை என்ற பெயராலே தமிழ் நிலத்தில் பல ஒளவைகள் வாழ்ந்திருந்தார்களோ, அதைப் போல மனு என்ற பெயரிலே இந்த மண்ணிலே ஒரு ஒன்பது பேராவது இருந்திருக்கிறார்கள். கிட்ட தட்ட கி.மு மூன்றாம் நூற்றாண்டிற்கு பின், கி.பி. மூன்றாம் நூற்றாண்டிற்கு முன்னால் எழுதப்பட்ட அவர்களுடைய கருத்துக்களை ஒன்று திரட்டி, ‘மனுதர்மசாஸ்திரம்’ என்ற பெயரில் அதர்மங்களை கூட்டி தந்திருக்கிறார்கள். இந்த மனுவை நாம் எதிர்க்கிறோம் – சாஸ்திரங்களை எரிக்கிறோம் என்று சொன்னால், அந்த புத்தகத்தை எரிப்பது என்ற பொருள் அல்ல என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அந்த மனுசாஸ்திரங்களும், புராணங் களும், இதிகாசங்களும் என்னென்ன நச்சு விதைகளை - நஞ்சை, இந்த சமுதாயத்தினுடைய நாடி நரம்புகளிலும், இரத்த ஓட்டங்களிலும் கலந்துவிட்டிருக்கின்றனவோ, அந்த நச்சு விதைகளை - நஞ்சை, இந்த சமுதாயத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விலக்கிவிட்டு, புது இரத்தம் பாய்ச்சவேண்டும், அந்த புது இரத்தத்தில் எந்த விதமான சமூக துவேசமும் இருக்காது; எந்த விதமான ஏற்றத்தாழ்வுகளும் இருக்காது; எந்த விதமான மூடநம்பிக்கைகளுக்கும் அதில் இடம் இருக்காது; அது மதக் கலாச்சாரத்தை பின்பற்றாது. அது மனித உரிமை கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடுதான் நாம் இந்த மாநாட்டை நடத்திகொண்டிருக்கிறோம்.
 
அருமை நண்பர்களே ! பகுத்தறிவாளர்கள் அன்று முதல் இன்று வரை முழுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிற ஒரு சாஸ்திரம் இருக்கிறது என்றால் அது இந்த மனுதர்மசாஸ்திரம் தான். ஏனென்றால் இந்த மனுசாஸ்திரத்தால் யார் தொடர்ந்து பயன் பெற்றுக் கொண்டிருக் கிறார்களோ, அவர்கள் அவ்வளவு முக்கிய இடத்தை கொடுத்திருக்கிறார்கள். இந்து மதத்தை தாங்கிப் பிடிக்கிற தூண்களான வேதங்கள், உபநிசத்துக்கள், இராமாயணம் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள், இன்னும் பல புராணங்கள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் சொல்கின்றது, இருக்கின்ற பதினெட்டு ஸ்ருதிகளில், பதினேழு ஸ்ருதிகள் ஒன்றைச் சொன்னாலும், பதினெட்டாவதாக இருக்கின்ற மனுஸ்மிருதி என்ன சொல்கின்றதோ அதைத்தான் நாம் எடுத்துக்கொள்ளவேண்டும் என்று தெளிவாக அவர்கள் சொல்கின்றார்கள். ஏனென்றால் இந்த மனுஸ்மிருதி என்பது முழுக்க முழுக்க பார்ப்பனர்களுக்கு சாதகமான ஒரு ஸ்மிருதியாக இருக்கின்றது. மற்ற ஸ்மிருதிகள் வேறு வேறு கருத்துக்களை சில இடங்களில் சொன்னா லும் கூட, இது எந்த இடத்திலும் பார்ப்பன மேலாண்மையை – ஜாதிய  மேலாண்மையை - ஆணாதிக்க மேலாண்மையை நியாயப்படுத்துகின்ற ஒரு போக்கை மிகத் தெளிவாக மனுஸ்மிருதிதான் காட்டுகின்றது.
 
அருமைத் தோழர்களே! உலகம் கடவுளுக்கு கட்டுப்பட்டது; அந்த கடவுள் மந்திரங்களுக்கு கட்டுபட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்கு கட்டுப்பட்டவை. எனவே பிராமணன் தான் கடவுள். ஆக பிராமணனை கடவுளுக்கு ஒரு படி மேலானவனாக கருதி அவனை வழிபடவேண்டும் என்று இந்த சாஸ்திரம் சொல்லுகின்றது. பார்ப்பனன் தான் உலகத்தை படைத்தான் என்பதை மனுஸ்மிருதி மட்டுமல்ல கீதையும் சொல்கிறது, நால்வகை வர்ணங்களையும் நானே படைத்தேன் என்று. இவனால் படைக்கப்பட்ட இந்த சமுதாய அமைப்பில், படைக்கும் போதே மனிதர்களை வர்ணரீதியாக – ஜாதிரீதியாக கூறுபோட்டுவிட்டு, ஜாதிக்கொரு தொழில் என்று ஏற்படுத்திவிட்டு, பிறகு இன்னின்ன தொழில்களை செய்பவன் உயர்ந்தவன், இன்னின்ன தொழில்களை செய்பவன் தாழ்ந்தவன் என்று அடையாளப்படுத்திவிட்டு, அதனடிப்படையில் அவர்களை விலக்கிவைப்பது – தீண்டக்கூடாத ஜாதியாக்குவது - ஊருக்கு வெளியே வைப்பது என்றெல்லாம் மனிதத் தன்மையற்ற செயல்பாடுகளை தொடர்ந்து செய்துகொண்டிருப் பதற்கு இந்த மனுசாஸ்திரம் உள்ளிட்ட சாஸ்திரங் கள்தான் இவர்களுக்கு ஆதரவாக இருக்கின்றன.
 
சிலர் சொல்வார்கள் மனுவின் காலம் தான் முடிந்து விட்டதே, இறையாண்மையுள்ள அரசியல் அமைப்புச் சட்டமல்லவா ஆண்டு கொண்டிருக் கிறது. சட்டத்தின் முன் நாம் அனைவரும் சமம் என்று தானே அந்த அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது; ஏன் நீங்கள் மனுவையும், பார்ப்பனர் களையும் வம்படியாக இழுத்துக் கொண்டிருக் கிறீர்கள் என்று சிலர் கேட்கிறார்கள். அருமைத் தோழர்களே,  நம்மையெல்லாம் வழிநடத்திச் செல்வதாக கூறப்படுகிற, அரசமைப்பு சட்டத்தை புரட்சியாளர் அம்பேட்கர் எழுதியிருந்தாலும் கூட, அந்த அரசமைப்புச் சட்டத்தில் “ஹிந்து பர்ஸனல் லா” என்று சொல்கிறார்களே, அது எதனடிப்படை யில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றால், இந்த புராண, சாஸ்திர, இதிகாசங்களின் அடிப்படையில் தான் இந்த ஹிந்து பர்ஸனல் லா சட்டத்தில் ஏதேனும் சிக்கல்கள் வரும்போதெல்லாம் நீதி யரசர்கள் புராண, சாஸ்திர, இதிகாசங்களைத் தான் மீண்டும் மீண்டும் மேற்கோள் காட்டுகிறார்கள். எனவே தான் தோழர்களே இந்து மதத்தின் பெரு மகன்களாக பார்ப்பனர்களாலேயே தூக்கிப் பிடிக்கப்படும் விவேகானந்தர் போன்றவர்கள் சொன்னார்கள், பார்ப்பனர்களே, நீங்கள் இந்த சமுதாயத்தின் இரத்த ஓட்டத்தில் நஞ்சை கலந்து விட்டீர்கள்; அந்த நஞ்சை நீங்களே உறிஞ்சி எடுத்துவிடுங்கள் என்று - அவர்களை நோக்கி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

அப்படி தொடர்ந்து தீங்கு விளைவித்து கொண்டிருப்பதற்கு ஆதாரமாக இருக்கின்ற, இவைகளை அழித் தொழிக்கும் வேலையே ஒரு ஆக்கப்பணி தான். எரிக்க வேண்டும். எரிக்கவேண்டுமென்றால் நம்முடைய மக்களின் மனதிலிருந்து - சமுதாயத்தின் பொதுபுத்தியிலிருந்து - நம்முடைய சிந்தனைகளி லிருந்து - பின்பற்றிக் கொண்டிருக்கிற பழக்க வழக்கங்களிலிருந்து அவைகளை முற்றிலுமாக துடைத்து எறியவேண்டும், அவைகள் மீண்டும் தோன்றாவண்ணம் நாம் செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தான் அதனுடைய கருத்தாக இருக்கின்றது. அதனால் தான் பார்ப்பன பாரதிகூட சொன்னான், ஜாதிக்கொரு நீதி பேசுகின்ற இந்த சாத்திரங்களை, சாத்திரம் என்று சொல்லாதீர் சதி என்றே சொல்லுங்கள் என்று. சமூகத்தின் சரி பாதியாக இருக்கின்ற பெண் மக்களை, இந்த மனுசாஸ்திரம் எத்தகைய கேவலமான பார்வையால் பார்த்திருக்கின்றது; பெண்களை அது விலங்கினும் கீழாய் மதித்திருக் கின்றது; பெண்களுக்கு எந்த விதமான உரிமையும் இல்லாத அற்ப ஜந்துக்களாய், ஒரு பெண் என்பவள் வாங்கவும், விற்கவும் அடமானம் வைக்கவும் தகுதியான ஒரு பொருள் என்றே காட்டியிருக்கிறது.
 
அந்த அடிப்படையில்தான், இந்த ஜாதிய ஆணாதிக்க சமூகம் பெண்களை நடத்திக் கொண் டிருக்கிறது என்பதற்கு, அண்மையிலே நடந்த டெல்லி விவகாரத்திலிருந்து ஏராளமான உதாரணங்களை நாம் சொல்லமுடியும். அதேபோல தான் இந்த கெடுமதியாளர்கள் ஏற்படுத்திய ஜாதிய கட்டமைப்பை மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக் கின்ற நம்முடைய சூத்திரர்கள் – நம்முடைய தலித் சகோதரர்கள் சமுதாயத்தில் இருபத்தி ஐந்து விழுக்காடு கொண்ட இவர்களை, எந்த விதமான உரிமையும் கிடையாது. எந்த விதமான சலுகையும் கிடையாது அவர்கள் மனிதர்களே அல்ல.

மனித மேலாண்மை குணங்கள் அவர்களுக்குக் கிடையாது என்பதைப் போல மனிதர்களுக்குரிய அனைத்து உயர் நலன்களையும் மறுத்து அவர்களை மிகக் கேவலமாக நடத்தப்படுவதை ஜாதியின் பெயரால் நியாயப்படுத்திக் கொண்டிருக்கிற ஒரு போக்கு இது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறதே, அந்த போக்கு எங்கிருந்து வந்தது என்ற கேள்விக்கான பதிலை நீங்கள் தேடத் தொடங்கினால், நீங்கள் மனுவிடம் போய் நிற்பீர்கள். எனவே தான் இந்த மனுவை புதைப்பதன் மூலம் மனுஅநீதி சாஸ்திரம் சொல்லுகின்ற அந்த கருத்துக்களை வேரோடும் வேரடிமண்ணோடும் களைந்து எறிந்துவிட்டு அங்கே புதிய விதைகளைத் தூவவேண்டும். அந்த தூவப்படுகின்ற புதிய விதைகள் என்ன உள்ளடக் கத்தை கொண்டவைகளாக இருக்கவேண்டும் என்றால் அவைகள் மனித உரிமைகளை உள்ளடக்கமாக கொண்டிருக்கவேண்டும். சமத்து வத்தை உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும். மனித நேயத்தை உள்ளடக்கமாக கொண்டிருக்க வேண்டும். மனிதத்தை உள்ளடக்கமாக கொண் டிருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட உள்ளடக்கங் களைக் கொண்ட ஒரு விதை எந்த தத்துவத்தில் இருக்கின்றது யார் மொழிந்திருக்கிறார்கள் என்று கேட்டால் நமக்கு தெரிந்த வரையில் தந்தை பெரியார் அவர்கள் தான் இத்தகைய உள்ளடக் கத்தை கொண்ட விதையினை இந்த மண்ணிலே தூவியிருக்கிறார்கள். எனவே தான் மனுவை புதைக்கிறோம், மனுவை ஒழிக்கிறோம், ஒழிக்கப் பட்ட அந்த இடத்தில் எந்த நல்லதை நாம் வைக்கிறோம் என்றால், மதம்சார்ந்த கலாச்சாரத்தை ஒழித்துவிட்டு, மனித உரிமை கலாச்சாரத்தை நாம் அந்த இடத்திலே வைக்கிறோம் என்றால், அந்த மனித உரிமை கலாச்சாரத்தை இந்த தமிழ் மண்ணிலே தூக்கிப் பிடித்தவர் யார் அதற்கு வலுவூட்டியவர் யார் அதற்கு தெம்பு கொடுத்தவர் யார் என்று பார்த்தால் நம் கண்ணுக்கு தெரிந்த வரையில் தமிழ் மண்ணிலே தந்தை பெரியாரும், வடக்கே அண்ணல் அம்பேட்கரும், அங்கே ஜோதிபா புலே வும்.
 
வேதங்களும் சாஸ்திரங்களும் மிகத் தெளி வாகவே சொல்லுகின்றது. ஒரு மனித வாழ்க்கையை நான்கு நிலைகளாக அவர்கள் பிரிக்கிறார்கள் பிரம்மச்சரிய கிரகஸ்த வானப்பிரஸ்த சன்னியாச  என்று பிரிக்கிறது. மாணவ பருவம், குடும்பத்தை நடத்துகிற அந்த கிரகஸ்த பருவம், இந்த வாழ்க்கையின் நான்கு நிலைகளும், யாருக்கு மட்டும் என்பதை நீங்கள் யோசித்து பார்க்கவேண்டும். துவிஜாஸ் என்ற இரு பிறப்பாளர்கள் - இரு பிறப் பாளர்கள் என்றால், உபநயம் என்று கூறி ஒரு சடங்கை வைத்து பூணூலைப் போட்டுக் கொள் கிறார்கள் அல்லவா? அந்த உரிமை இரு பிறப்பாளர்களுக்கு மட்டுமே. வாழ்க்கையினுடைய இந்த நான்கு பருவங்களும் அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். துவிஜா என்ற நிலையே சூத்திரர்களுக்கு கிடையாது; அவர்கள் பூணூல் போட்டுக்கொள்ள முடியாது. எனவே அவர்களுக்கு மாணவப் பருவமோ, திருமண முறையோ, அல்லது வானப்பிரஸ்தமோ, சன்யாசமோ ஆக முடியாது. என்று எழுதி வைத்துக்கொண்டு அதனை நடைமுறை படுத்துகின்ற ஒரு தலைமையை உருவாக்கி,  இந்த மண்ணில் பெரும்பான்மையாக இருக்கின்ற சூத்திரர்கள் எப்படியெல்லாம் துன்பப் பட்டிருப்பார்கள், எப்படியெல்லாம் உரிமை மறுக்கப்பட்டிருப்பார்கள் என்பதை, நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். ஏன் சூத்திரர்களுக்கு கல்வியை மறுத்தாய் என்ற கேள்வியை கேட்கும் போது, அவர்கள் சொல்லுவார்கள் கல்வி என்பது அந்த காலத்தில் வேதம் உபநிசதம் போன்றவைகள் தான். அந்த வேதங்களும் உபநிசதங்களும், ஸ்ருதி, ஸ்மிருதி எல்லாமே சமஸ்கிருதங்கள். சமஸ்கிருதம் என்பது தேவபாசை, சமஸ்கிருதம் என்பது நீசர்கள் கேட்கக்கூடாது; அவர்கள் காதில் கேட்டால் அந்த மொழிக்கே தெய்வ குற்றமாகிவிடும்.
 
எனவே இந்த மொழியை அவர்கள் கற்கக்கூடாது, அவர்கள் காதிலே கேட்கக்கூடாது என்ற காரணத் தினாலேயேதான் சூத்திரர்களுக்கு கல்வியை முற்றிலுமாக அவர்கள் மறுத்தார்கள். சூத்திரர் களுக்கு மட்டுமல்ல இங்கே எடுத்துக் கூறியதைப் போல பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது என்றால் பெண்கள் பிறப்பாலேயே சூத்திரர்கள். அவர்கள் பாவயோனியில் பிறந்தவர்கள். ஆண் களெல்லாம் புன்னிய யோனியில் பிறக்கும் போது, பெண்கள் பாவ யோனியில் பிறந்தவர்கள். எனவே அவர்கள் சூத்திரர்களைவிட கேவலமானவர்கள் என்ற ஒரு நிலையை இந்த சாஸ்திரங்களும் புராணங்களும் எடுத்த காரணத்தினாலேயே இங்கு சூத்திரர்களின் நிலையும் பெண்களின் நிலையும் ஒன்றாகவே இருந்தது.

ஆக கல்வி மறுக்கப்பட்ட மிகப்பெரும்பான்மையான ஒரு இனத்திற்கு அந்த கல்வியினால் வருகின்ற அனைத்து நன்மைகளுமே, அனைத்து உரிமைகளுமே மறுக்கப்பட்டன என்பது மிக எதார்த்தமானதாகும், படித்தால்தான் வேலைக்குப் போகலாம், வேலைக்குப் போனால் தான் அரசு பதவிகளை வகிக்கலாம், அரசுப் பதவிகளை வகித்தால் தான் அதிகாரம் கிடைக்கும். அதிகாரம் கிடைத்தால் தான் நம்பிக்கை வரும். நம்பிக்கை இருந்தால் தான் வாழ்க்கையை சரியான தடத்திலே நடத்திசெல்ல முடியும் என்று இவைகள் எல்லாம் மறுக்கப்பட்ட நிலையில் ஒரு எண்பது சதவீத மக்களை (பெண்களையும், சூத்திரர்களையும் இணைத்து) தங்களது அடிமைகளாக வைத்துக் கொண்டு, அதற்கொரு நியாயம் கற்பித்து ஒரு பெரும் குற்றத்தை இந்துமத புராணங்களும், இந்து மத இதிகாசங்களும் மற்றவைகளும் செய்திருக் கின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
 
இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான், அது என்ன தேவ பாசை அது என்ன சாதாரண மக்களுக்கு தரக்கூடாது என்று இந்து மதத்தை எதிர்த்துத் தோன்றிய புத்தன், கேள்வி கேட்டான். நீ வேண்டுமானால் சமஸ்கிருதத்தை உன் தேவ பாசையாக வைத்துக்கொள், அதன் மூலம் நீ மக்களுக்கு கல்வியைக் கற்பிக்காவிட்டால் போ. ஆனால் நான் எனது மக்களுக்கு, எனது தாய் மொழி யில், மக்கள் மொழியில் நான் கல்வியை கற்பிப்பேன் என்று புத்தன் கிளம்பிய காரணத்தினாலேயே தான், இந்த பார்ப்பனர்கள், புத்தனை தங்களுடைய எதிரியாக பாவித்து, புத்தமதத்தை இந்த மண்ணி லிருந்து அழித்துவிட, பெரும்முயற்சி மேற் கொண்டு, ஓரளவு அதில் வெற்றியும் பெற்றார்கள் ஆக அறிவு தங்களுக்கு மட்டுமே சொந்தமாக இருக்கவேண்டும் அறிவு ஒரு அடிமை ஜாதிக்கு சொந்தமாகிவிட்டால், அந்த அடிமை ஜாதி கேள்வி கேட்கத் தொடங்கும் - கேள்வி கேட்கத் தொடங் கினால் நாம் பதில் சொல்லுகின்ற நிலையில் இல்லை என்கின்ற ஏமாற்று புத்தியின் காரணமாக இப்படிப்பட்ட ஒரு பெரிய தீங்கை நம்முடைய சமுதாயத்தின்மீது அவர்கள் ஏவிவிட்டிருக் கிறார்கள். எனவே அடிப்படைக் கல்வியை மறுப்பதன் மூலம் எப்படிப்பட்ட தீங்கை அவர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொண்டால் அந்த கல்வியின் தேவையை பற்றி மேடைதோறும் முழங்கிய பெரியாரினுடைய அந்த பயன் நமக்கு மிகத் தெளிவாகவே விளங்கும்.
 
இங்கு சுக்கு என்றும் மிளகு என்றும் வியாபாரம் செய்ய வந்த வெள்ளையன் இதைத் தெரிந்து  கொண்டதால்தான் இந்த மக்களோடு ஒரு நெருங்கிய உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ஒரு அரைகுறை ஆங்கிலத்தில் ஒரு கல்வியை கொடுத்தான். அவனுடைய நோக்கமெல் லாம் லண்டனிலிருந்து வெள்ளையர்களை வர வழைத்து தங்களுடைய பணிகளுக்கு வைத்துக் கொண்டால் அவர்களுக்கு கொடுக்கவேண்டிய சம்பளம் மிக அதிகமாக இருக்குமென்ற காரணத் தினால் இங்கு இருப்பவர்களுக்கு கொஞ்சம் கல்வி கொடுத்தால் நமக்கு இலாபகரமாக இருக்குமே என்று நினைத் தான். 1938 இல்  மெட்ரிகுலேசன் படித்தவர்களுக்கு  4800 பணியிடங்கள் காலியாக வுள்ளது. மெட்ரிகுலேசன் படித்தவர்கள் விண்ணப் பிக்கலாம் என்று அன்று ஆண்டு கொண்டிருந்த கவர்னர் ஜெனரல் ஒரு உத்தரவு பிறப்பித்து சூத்திரர் களையும் சேர்த்து வேலைக்கு எடுத்துக்கொள்ள முயன்ற போது அக்கிரகாரத்துப் பார்ப்பனர்கள் அதை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள்.

சூத்திரர்கள் வேலைக்கு வந்துவிட்டால் தங்களுக்கு ஆள்வோரிடம் உள்ள செல்வாக்கு போய்விடும்; தங்களுக்கு இருக்கிற  அதிகாரம் போய்விடும்; இந்த நாட்டில் உள்ள சமுதாய கட்டமைப்பே மாற்றம் பெற்றுவிடும் என்று இந்த பார்ப்பனர்கள் மிகக் கடுமையாக எதிர்த்த காரணத்தினாலேயே அன்று போட்ட அந்த உத்தரவு இரத்து செய்யப்பட்டது. இந்த வரலாறு இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் எழுதிய நூலிலே பதிவாகியிருக்கிறது. ஆக படித்துவர்கள் சூத்திரர்கள் வேலைக்கு வரலாம் என்ற ஒரு நிலை ஏற்பட்ட அன்று அந்த 4800 பேரும் வேலைக்கு வந்திருந்தால் இந்தியாவினுடைய சரித்திரமே பெருமளவிற்கு மாறியிருக்கும் என்று நான் சொல்லுவேன். அப்படி நாடி நரம்புகளி லெல்லாம் இந்த பார்ப்பனியத் தீயைப் பாய்ச்சிக் கொண்டிருக்கின்ற இந்த ஜாதி அமைப்பு சட்டங்களும் நீதிகளும் மண்ணோடு மண்ணாக புதைய வேண்டுமென்றால் நாம் செய்ய வேண்டிய இரண்டு காரியங்கள் இருக்கின்றன.
 
பார்ப்பனர்களின் கருத்தாக்கங்களை தனதாக்கிக் கொண்ட சூத்திரர்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்றும் தலித் மக்கள் மிக தாழ்ந்தவர்கள் என்றும் சூத்திரர்களிலேயே தங்களுக்குள் ஒரு பிரிவினரை இழிவுபடுத்துகிற நிலையை ஏவிவிட்டிருக்கிறார்கள் . இவர்கள் தங்களுடைய நிலையை எண்ணிப் பார்க்கவேண்டும். தாங்கள் யார்,  இந்துமதக் கலாச்சாரத்தில் எத்தகைய பங்கு கொடுக்கப்பட் டிருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ள வேண்டும். அதனால்தான் தந்தை பெரியார் அவர்கள் மிகத் தெளிவாக சொன்னார் - அவர்களின் பஞ்சமர் பட்டம் போகாமல் உன்னுடைய சூத்திரன் பட்டம் போகாது; அவனுக்காவது ஐந்தாமிடம் என்ற ஒரு தெளிவான இடம் இருக்கிறது. ஆனால் நீ யார்? பார்ப்பனர் களின் வைப்பாட்டி மகன் என்று கூறுகிறான். அதில் மிகப் பெருமை அடைகிறாயா என்று நெற்றியில் அறைந்ததைப்போல் கேட்டார்.

தஞ்சை வெண்மணியிலே என்ன கொடுமை நடந்தது என்று உங்களுக்கு தெரியும். ஒரு அரைப் படி நெல் அதிகமாக கேட்ட காரணத்தினாலேயே துள்ள - துடிக்க பெண்களும் குழந்தைகளும் சேர்த்து எரிக்கப்பட்டார்களே  -அந்த வழக்கு உச்சநீதி மன்றத்திற்குச் சென்றது; இவ்வளவு பேர் எரித்து கொள்ளப்பட்டதற்கு காரணமான கோபால கிருஷ்ண நாயுடு குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்ற காரணத்தால் விடுவிக்கப்பட்டார். அதற்கு அந்த நீதிபதி என்ன விளக்கம் கொடுத்தார் என்று உங்களுக்குத் தெரியுமா? கோபாலகிருஷ்ண நாயுடு பணக்காரர், அவருக்கு இரண்டு கார் இருக்கிறது, அவரே நடந்து போய் குடிசைக்கு தீ வைத்தார் என்பதை எங்களால் நம்பமுடியவில்லை, என்று சொல்லி விடுவித்தார்கள். ஆக நம்முடைய நீதிபதிகள் மனதில்கூட எப்படி இந்த மனுநீதி சொல்லுகின்ற நியதிகள் சென்றிருக்கின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
 
அண்மையிலே ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி பேசியிருக்கிறார் பெண்கள் இருக்கவேண்டிய இடம் வீடு, அவர்கள் தங்களுடைய வீட்டு வேலைகளையெல்லாம் முடித்துகொண்டுதான் பிறகு வேலைகளுக்கு செல்லவேண்டுமே தவிர, வீட்டைப் புறக்கணித்துவிட்டு வெளி வேலை களுக்கு செல்ல கூடாது என்று தன்னுடைய திருவாய் மலர்ந்திருக்கிறார் என்றால் பெண்கள் இருக்கவேண்டிய இடம் வீட்டிலே இருக்கவேண்டும், வெளியில் வரக்கூடாது என்று சாஸ்திரங்களும், ஸ்மிருதிகளும் சொல்லுகின்ற கருத்துக்களிலிருந்து இவர்களுடைய கருத்துக்கள் எந்த வகையிலே மாறுபட்டிருக்கின்றது என்று நான் கேட்கிறேன். எனவே தான் இந்த காலகட்டத்திலும் நாம் மனுவை பற்றி பேசவேண்டியிருக்கிறது சாஸ்திரங்களை பற்றி பேசவேண்டியிருக்கிறது புராண இதிகாச புளுகுமூட்டைகள் பற்றி பேச வேண்டியிருக்கிறது. ஏனென்றால் இவைகளெல் லாம் நம் சமுதாயத்தின் நாடி நரம்புகளில் நஞ்சைக் கலந்திருக்கின்றன. அந்த நஞ்சை எப்படி வெளியே எடுப்பது என்பதற்கான ஒரு தேவை தான் பெரியாரியம் என்று நாம் சொல்லுகிறோம்.

இந்த பெரியாரியம் என்ற மருந்து உள்ளே செல்ல செல்ல நஞ்சு வெளியேறிவிடும். நாடி நரம்புகளில் சுத்த இரத்தம் ஓடத் தொடங்கும். அந்த சுத்த இரத்தம் தான் மனிதனை மனிதனாக உணரச் செய்யும். மனிதனை ஜாதியாளனாகவோ, உத்தியோகஸ் தனாகவோ, பணக்காரனாகவோ, படித்த வனாகவோ உணர்வது என்பது இரண்டாவது இடம். மனிதனை மனிதனாக –- ஆறறிவுக்கு சொந்தக்காரனாக - அனைத்து உரிமைக்கும் சொந்தக்காரனாக - சமத்துவ வாழ்க்கை நடத்து வதற்கு உரிமை உள்ளவனாக உணரச்செய்ய வேண்டும் சக மனிதனைப் பற்றி புரிந்துகொள்ளாத ஒரு மனிதன் வாழ்ந்தால் என்ன - வீழ்ந்தால் என்ன?. சக மனிதனை புரிந்துகொள்ளாததற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனையையும் இந்த சாஸ் திரங்களும் மனுதர்மங்களும் செய்திருக்கின்றன.
 
எனவே தான் மனிதனை மனிதனாக நடத்துவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென்றால் முதலில் இவைகள் செலுத்தியிருக்கின்ற இந்த நஞ்சை விசத்தை, இந்த சமுதாயத்தின் பொது புத்தியில் இருந்து – ஒரு தனி மனிதனுடைய பொது புத்தியில் இருந்து வெளியேற்றுங்கள். அப்படி வெளியேற்றுவதற்கு பெரியாரியல் என்ற விசமுறிவு பயன்படும். எனவே இந்த விசமுறிவை பயன்படுத்தி நஞ்சை நீக்குங்கள் என்று குரல் கொடுத்து பெரியாரிய லாளர்கள் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். எனவே நம்முடைய அடிமை நிலைக்கும், நம்முடைய இழிந்த நிலைக்கும் காரணமாக அவன் மொழியைக் கையாண்டான், மூடநம்பிக்கையைக் கையாண்டான், பக்தியைக் கையாண்டான், கடவுள் என்ற ஒன்றை கற்பித்தான். மனித உரிமைகளை ஒரு சாராருக்கு அடியோடு மறுத்தான். இவைகளை கணக்கிலெடுத்துக் கொண்டு, அவன் எதையெதை மறுத்தானோ அதையெல்லாம் பெறுவோம்; அவன் எதையெதை கற்பித்தானோ அந்த கற்பிதத்தை மறப்போம் - மறக்க முயலுவோம். பெரியாரியத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வோம், அப்பொழுதான் உலகத்திலுள்ள மற்ற நாட்டிலுள்ள சுதந்திர மடைந்த மக்களைப் போல் நாமும் மானமும் அறிவும் உள்ள ஒரு சமுதாயமாக மலரமுடியும். அப்படி மலருவதற்கு நம்மால் முடிந்த அனைத்து வழிகளிலும் நம்மை ஈடுபடுத்திக் கொள்வோம் அதுதான் நம் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்க முடியும்.

Pin It