• ‘மனு சாஸ்திரம்’ இப்போது செத்துவிட்டது என்று கூறலாமா? முடியாது. இன்னும் மனு சாஸ்திரத்தின்படி ‘பிரம்மா’ முகத்தில் பிறந்ததாகக் கூறப்படும் “பிராமணன்” இருக்கிறான். ‘பிராமணன்’ என்ற வர்ணாஸ்ரம அடையாளத்தையே பார்ப்பனர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள். அய்யர், அய்யங்கார், சர்மா, சாஸ்திரி என்று ‘பிராமணர்’களுக்குள் ஜாதிகள் வந்து விட்டாலும், இப்போதும் அவர்கள் “பிராமணர்” என்றே அழைக்கப்படுகிறார்கள். இது மனு சாஸ்திரம் தானே!

• சத்திரிய, வைஸ்ய, சூத்திரப் பிரிவுகள் ஜாதிகளாகப் பிரிந்து போய் கிடக்கின்றன. ஒரு ஜாதி மற்றொரு ஜாதியிடம் திருமண முறை கூடாது என்று கொடிபிடித்து நிற்கிறது. ஆனால், பிளவுபட்டுக் கிடக்கும் இந்த ஜாதிகள், தங்களுக்கான வைதிகச் சடங்குகளை “பிராமணர்களே” நடத்த வேண்டும் என்று விரும்பி அழைக்கிறார்கள். - இது மனு சாஸ்திரம் தானே!

• சமுதாய மாற்றத்தில் ஒவ்வொரு வர்ணாஸ்ரமப் பிரிவுக்கும் ஒதுக்கப்பட்ட தொழில்கள் மாறிப் போய்விட்டன. வேதம் ஓதுவோர் அமைச்சர் பதவியையும் உயர் அதிகாரிகள் பதவியையும் ஏற்று, தொழிலால் ‘சத்திரியன்’ ஆனாலும், பிறப்பால் ‘பிராமணனாகவே’ காயத்திரி ஓதி, ‘உபநயனம்’ செய்து கொள்கிறான். - இது மனு சாஸ்திரம் தானே!

• தொழில்களை தேர்வு செய்வதில் எவ்வளவோ மாற்றங்கள் வந்துவிட்டன என்பது உண்மைதான். “பிராமணன்”, ‘ரீபோக்’, ‘பேட்டா’ செருப்புக் கடையில்கூட வேலை செய்கிறான். ஆனால், கடவுளிடம் நெருங்கவும், பூஜை செய்யவும் ஜனாதிபதியிலிருந்து பிரதமர், முதல்வர்கள் வரை மண்டியிடும் அர்ச்சகர் தொழிலில் மட்டும் ‘பிராமணன்’ மட்டும் தானே இன்று வரை நீடிக்கிறான். அதை விட்டுக் கொடுக்காமல், உச்சநீதிமன்றம் வரை போய் மனு போடுகிறான். அதே நேரத்தில் இழிவிலும் இழிவான மலம் எடுத்தல், சாக்கடை சுத்தம் செய்தல், ‘பிணம் புதைத்தல்’ போன்ற “தொழில்”களில் - இன்று வரை தீண்டப்படாதவன் தானே நீடிக்கிறான்? ‘மலம்’ எடுத்து வந்தவன் அர்ச்சகனாகவும் அர்ச்சகனாக இருந்தவன், சாக்கடை சுத்தம் செய்பவனாகவும் மாறும் காலம் தானே - ‘மனு சாஸ்திரம்’ ஒழிந்துவிட்ட காலம். இது மாறாமல் நீடிப்பதற்கு காரணம் என்ன? - மனு சாஸ்திரம் தானே!

• ஒரு சமூகத்துக்கு உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் அத்யாவசியமானது. உணவு உற்பத்தியில் நாற்று நடும் பார்ப்பானையோ, பார்ப்பனப் பெண்களையோ; உடை தயாரிப்பில் தறி போடும் நெசவு செய்யும் பார்ப்பானையோ, பார்ப்பனப் பெண்களையோ; வீடு கட்டுவதில், சித்தாளாக, மேஸ்திரியாக, கம்பி கட்டுவோராக - பார்ப்பானையோ, பார்ப்பனப் பெண்களையோ எங்கேயாவது பார்த்ததுண்டா? இந்த உடல் உழைப்புத் தொழிலில் ஏன் மாற்றங்கள் வரவில்லை? -மனு சாஸ்திரம் தானே!

• எழுதப் படிக்கத் தெரியாதவர்களில் நூற்றுக்கு நூறு சதவீதப் பேரும் ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’களாக இருப்பதும், பார்ப்பனர்களில் ஒருவன்கூட தற்குறியாக இல்லாமல் போனதும், ஏதோ தற்செயலாக நடந்த விபத்தா? இதற்கு காரணம் என்ன? சூத்திரனுக்கு கல்வியைத் தடை செய்தது மனு சாஸ்திரம் தானே!

• கோயிலுக்குப் போவதிலும், பக்தி வழிபாடுகளிலும், விரதங்களிலும் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருப்பவர்கள் பெண்களாக இருந்தாலும் கோயில் கருவறைக்குள் நுழைவதற்கும் வேத மந்திரங்களை ஓதுவதற்கும் பெண்களுக்கு இன்று வரை தடை நீடிப்பது ஏன்? குடியரசுத் தலைவராகக் கூட வரலாம்; ஆனால், கோயிலில் அர்ச்சகராக கடவுளை நெருங்க முடியாது என்று பெண்களைத் தடுத்து வைத்திருப்பது எது? - மனு சாஸ்திரம் தானே!

புரையோடி புற்று நோயாகி சமூகத்தை அரித்துக் கொண்டிருக்கும் இந்த மனு சாஸ்திர சிந்தனைகள் எரிக்கப்பட வேண்டுமா? வேண்டாமா?

சிந்தியுங்கள் தோழர்களே! 

Pin It