18.3.2013 அன்று கோவையில் நடந்த கழக மண்டல மாநாட்டில் உரையாற்றிய எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன், திராவிடர் விடுதலைக் கழகம், வரலாற்றில் முக்கிய சந்தர்ப் பத்தில் இந்த மாநாடுகளை நடத்தி வருகிறது என்று பாராட்டினார்.

மாநாட்டின் துண்டறிக்கையில், ‘தமிழர் ஒற்றுமைக்கான ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு’ என்று குறிப்பிட்டிருப்பதை சுட்டிக்காட்டிய அவர், அந்தத் தமிழர் ஒற்றுமையை இப்போது தமிழகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஈழத் தமிழர்களுக்காக ஒற்றைக் குரலாக தமிழர்கள் எழுந்து நிற்கிறார்கள் என்றார்.

தமிழர் அடையாளம் நீண்ட காலமாக சிதைக்கப்பட்டு, தமிழர்கள் உரிமையிழந்து நின்றார்கள். மாமல்லபுரத்தில் நடந்த சித்ரா பவுர்ணமியில் பேசிய காடுவெட்டி குரு, ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரின் கையை வெட்டுவோம் என்ற “கொள்கைப் பிரகடனத்தை” செய்தார். அடுத்த நாள் தொலைக் காட்சி ஒன்றில் நான் பேசியபோது, காடுவெட்டி குருவை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று பேசினேன். இவர்கள் தமிழகத்தின் வரலாற்றை பல நூற்றாண்டுகாலம் பின்னோக்கி இழுத்துச் செல்லத் துடிக்கிறார்கள். இந்த ஜாதிய வாதிகள், தமிழ் மற்றும் முற்போக்குவாதிகள் என்ற முகமூடிகளை அணிந்து கொண் டிருக்கிறார்கள். இவர்களை எதிர்த்துப் போராடி, உண்மை அடையாளத்தை அம்பலப்படுத்த இது தான் சரியான தருணம்.

ஜாதி மறுப்பு திருமணம் செய் வோர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதற்கு கவுரவக் கொலை என்று பெயர் சூட்டுகிறார்கள். ஊரில் ஜாதி பஞ்சாயத்து கூடி, சாதி மறுப்பு காதல் திருமணம் புரிந்தவர்களை பிரித்து வைக்கிறது. தங்கள் மீது திணிக்கப்பட்ட ஜாதி-தீண்டாமை ஒடுக்குமுறைகளை எதிர்த்து, தலித் மக்கள் குரல் கொடுக்கிறார்கள். தங்களுக்கான அரசியல் பின்புலம் உருவாகியுள்ள சூழலைப் பயன் படுத்தி துணிவுடன், அவர்கள் தட்டிக் கேட்கிறார்கள்.

அடங்கிக் கிடந்தவர்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கத் தொடங்கும்போது ஜாதி ஆதிக்க வாதிகள் அதைப் பொறுக்க முடியாமல் கலவரம் செய்கிறார்கள். பழிவாங்கும் அரசியலை நடத்து கிறார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக் காக ஜாதியின் அடிப்படையில் அமைப்பை உருவாக்கி, அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளுக்காக போராடியபோது அந்த ஜாதிய அரசியலை நான் அப்போது வர வேற்றேன். அந்த உரிமைகளுக்கான அடையாள அரசியல் திசை மாறி ஜாதி அரசியலாகிவிட்டது. அது வன்மத்தை கக்குகிறது.

இந்த ஜாதிய அரசியல் மேல்மட்ட - படித்த - நகர்ப்புற மனிதர்களிடமும் இருக்கிறது. அவர்கள் ஜாதி வெறுப் புடன் செயல்பட்டு, சமுதாயத்தை பின்னோக்கி இழுத்துச் செல் கிறார்கள். அந்த ஜாதி வெறி அரசியலை ஒவ்வொருவரும் முனைப்போடு முறியடிக்க வேண்டும் என்ற செய்தியைத்தான் இந்த மாநாடு பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

இந்த நியாயமான ஜாதி வெறி எதிர்ப்புக்கு நான் உங்களோடு இணைந்து நிற்பேன் என்றார் மனுஷ்யபுத்திரன். 

Pin It