சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் திட்டமிட்டுள்ள 200 தொடர் தெருமுனைக் கூட்டங்களில் முதல் கூட்டம் ஜுலை 8 அன்று போரூரில் தொடங்கியது. கூட்டத்தில் பேசிய ‘புதிய சிந்தனையாளன்’ ஆசிரியர் வாலாசா வல்லவன் சனாதனம் குறித்து பல்வேறு கருத்துகளை ஆதரங்களுடன் எடுத்துரைத்தார். அவரது உரையில் இருந்து;

சனாதனம் என்றால் என்ன? அதை தெரிந்து கொண்டால் அதற்கு மாற்றாக திராவிடம் எப்படி இருந்தது என்பதை நாம் அறிந்து கொள்ள முடியும். இந்திய வரலாறு எப்படி எழுதப்பட்டிருக்கிறது. ரிக் வேதம் என்பது கிமு 1050 ஆண்டுகள் என்று சொல்கிறார்கள். அப்போது சமஸ்கிருதத்தில் எழுத்து கிடையாது, வழி வழியாக செவி வழியாக பரப்பப்பட்டு வந்தது. அதுதான் இந்து மதத்தின் பழைய நூல், ரிக் வேதம் என்பதுதான் இந்துக்களுக்கு முதன்மையான நூல். ஒவ்வொரு மதத்திற்கும் ஒரு நூல் இருக்கிறது, அது எல்லாம் கற்பனை தான். நபிகள் நாயகத்திற்கு எழுத படிக்க தெரியாது, அல்லா மேல இருந்து இறங்கினார், அவர் சொன்னார், அவரது சீடர்கள் எழுதினார்கள் என்று குர்ஆனைப் பற்றி இருக்கும். அதே போல் பைபிள், இயேசுநாதர் இறந்து 400 ஆண்டுகளுக்கு பிறகு தான் பைபிள் எழுதப்பட்டது. பின்நாளில் இருந்து வந்தவர்கள் தான் இதை உருவாக்குகிறார்கள். இதுபோல இந்து கடவுள்கள், தேவர்கள், ரிஷிகளால் பாடப்பட்ட பாடல்கள்.

வேதத்தில் என்ன சொல்லி இருக்கிறது, வேதத்தில் பத்தாவது அத்தியாயத்தில் தான் நான்கு வருணம் என்பது சொல்லப்பட்டிருக்கிறது. பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன் பிராமணன், தோளிலே பிறந்தவன் சத்ரியன், வயிற்றிலே பிறந்தவன் வைசியன், கால் பாதத்திலே பிறந்தவன் சூத்திரன் என்பது முதன் முதலாக கூறப்படுகிறது. பிறகு மனு சாஸ்திரம் இதைக் கூறுகிறது.brahmin and womanகுறைந்தபட்ச 1500 ஆண்டு வரலாற்றில் அண்ணல் அம்பேத்கருடைய ஆய்வுப்படி கிமு 182 இல் அதாவது அசோகன் இந்த நாட்டை ஆண்டான் என்பது அனைவருக்கும் தெரியும், அவன் புத்த மதத்தை சார்ந்தவன், புத்த மதத்தை பரப்பினான், அவனுடைய பேரன் பிரகத்திரன் என்பவன் அவையில் இருந்த படைத்தளபதி புஷியமித்ர சுங்கன் படை அணி வகுப்பின் போது கொன்று விடுகிறான், மன்னனை கொன்று விட்டு நானே அரசன் என்று முடி சூட்டிக் கொள்கிறான், அதுதான் சுங்க வம்சம். அவன் தான் முதன்முதலாக இந்த மனுநூலை தன்னுடைய ஆட்சி நூலாக இயற்றுகிறான்.

இந்த மனுவில் அப்படி என்னதான் சொல்லி இருக்கிறது, மனுதர்மத்தில் சண்டாளர்கள் ஊருக்குள் குடியிருக்கக் கூடாது, சண்டாளர்கள் என்றால் ஒடுக்கப்பட்ட பட்டியிலின மக்களைத் தான் குறிக்கப்பட்டார்கள் என்பதை அண்ணல் அம்பேத்கர் தனது ஆய்வு நூல்களில் எழுதி இருக்கிறார். இன்றைக்கு இந்தியா முழுவதும் ஊர் வேறு சேரி வேறாக இருக்கிறது, இதற்கு அடிப்படை காரணமாக இருந்தது மனுதர்மம். இந்த சனாதன தர்மம் என்பதின் அடிப்படை இந்த நான்கு வருணம், இந்த நான்கு வருணம் மட்டுமில்லாமல் ஐந்தாவது ஆக ஒரு வருணம் கிடையாது, அதாவது பஞ்சமன் என்று சொல்வார்கள், பஞ்சமன் என்றால் ஐந்து என்று பொருள், ஆனால் இந்து மதம் நான்கு வருணங்களை மட்டுமே ஏற்றுக் கொள்கிறது. அதனால் இவர்கள் வருணத்தர், பஞ்சமர்கள் அவர்ணத்தர், அதாவது வருணமற்றவர்கள். இந்து மதத்தின் மனுநூலை சட்ட நூலாக வைத்து ஆட்சி செய்த அரசர்களுடைய படை வலிமையினால் இவர்கள் ஊருக்கு வெளியே வெளியேற்றப்பட்டார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் பல்லவர்கள் ஆட்சி காலம் கிபி மூன்றாம் நூற்றாண்டில் தொடங்கி ஒன்பதாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. பல்லவர் ஆட்சி காலத்தில் தான் முதன் முதலில் ஆரியர்களுக்கு செல்வாக்கு ஏற்படுகிறது, மகாபாரத கதைகள் அப்பொழுதுதான் தமிழ்நாட்டில் பரப்பப்படுகின்றன, மகாபாரதத்தை படிப்பதற்கு பல்லவர்கள் நிலத்தை அளந்து விட்டதெல்லாம் கல்வெட்டுகளில் காணக் கிடக்கின்றது. இன்றைக்கு பல்லவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் மட்டும் தான் திரௌபதி அம்மன் கோயில்கள் இருக்கும், இப்படி அவர்கள் ஆரியப் பிரச்சாரத்தை ஊக்குவித்தார்கள். கற் கோயில்கள் என்பதை முதன் முதலில் பல்லவர்கள் தான் உருவாக்கினர், அதற்கு முன்பெல்லாம் தமிழ்நாட்டில் பெரிய கோயில்கள் எல்லாம் கிடையாது, அதன் பிறகு ராஜராஜ சோழன் தஞ்சை பெரிய கோயில் கட்டினார் என்பதெல்லாம் படித்திருக்கிறோம். தஞ்சை பெரிய கோயிலில் என்ன நடந்தது, வடநாட்டான் ஆதிக்கம் இராஜராஜ சோழன் காலத்தில் நிலைபெறுகிறது.

பீகார் பார்ப்பனன் தான் ராஜராஜ சோழனுக்கு தீட்சிதை கொடுத்தான் என்று கல்வெட்டு ஆதாரங்களில் இருக்கிறது. அண்ணாமலை பல்கலைக்கழகம் அதை வெளியிட்டு இருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் ஊர் வேறு, சேரி வேறு மட்டும் கிடையாது, சுடுகாடு ஒன்றாகக் கிடையாது, ஆதிதிராவிடர்களுக்கு தனி சுடுகாடு, ஊர் குடியானவர்களுக்கு தனி சுடுகாடு, பார்ப்பனர்களுக்கு தனி சுடுகாடு இப்படி மூன்று விதமான சுடுகாடுகள் எல்லா ஊரிலும் இருந்தன. ஆய்வாளர் பேராசிரியர் சதாசிவ பண்டாரத்தார் எழுதிய சோழ வரலாற்றில் ராஜராஜ சோழன் பறையர்களுக்கு தனியாக சுடுகாட்டிற்கு இடம் அளந்து விட்டார் என்பதை கல்வெட்டு ஆதாரங்களுடன் எடுத்துக் காட்டுகிறார். இப்போது பறை சுடுகாடு, ஊர் சுடுகாடு என்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டில் அரசர்களால் நடைமுறைப் படுத்தப்பட்டது. இதுதான் சனாதனம்.

நால் வர்ணம், நான் மேல் சாதி, நீ எனக்கு அடுத்த சாதி, நீ அதற்கும் கீழ் சாதி என்று மனுவில் சொல்லியிருக்கிறார். இந்த மேலே இருக்கிற மூன்று ஜாதிகளுக்கும் சூத்திரன் பணிவிடை செய்வதுதான் அவனுடைய கடமை, சூத்திரன் சொத்துக்களை சேர்த்து வைக்கக் கூடாது, அப்படி சேர்த்து வைத்திருந்தால் அதை பறிமுதல் செய்து கொள்ளலாம், இந்த பார்ப்பனர்களுக்காக சோழ மன்னர்கள் அளந்துவிட்ட நிலங்கள் ஏராளமானது. 4 வேதங்களை தெரிந்திருந்தால் சதுர்வேதி மங்கலம், 3 வேதங்களை தெரிந்திருந்தால் திரிவேதி மங்கலம், இப்படி ஏராளமான நிலங்களை ஆயிரக்கணக்கான ஏக்கர்களை பார்ப்பனர்களுக்கு கொடுத்து பார்ப்பனர்கள் சொல்படி ஆட்சியை சோழர்கள் முதல் அதன்பின் வருகிற எல்லா அரசர்களும் நடைமுறைப்படுத்தினார்கள்.

தேவதாசி முறை :

தேவதாசி முறை என்பது பல்லவர் ஆட்சி காலத்தில் தொடங்கி விட்டது, அதேபோல சதாசிவ பண்டாரத்தார் பிற்கால சோழர் சரித்திரத்தில் ராஜராஜ சோழன் ஆட்சியில் 400 தேவரடியார்கள் இருந்தார்கள், அந்த 400 தேவரடியார்களுக்கும் தனி வீதி இருந்தது. அந்த 400 தேவரடியார்களுக்கும் அரசர்கள் நிலங்களை அளந்து விட்டிருக்கிறான். அவர்களின் வேலை என்ன? பொட்டு கட்டிக் கொள்ள வேண்டும், திருமணம் செய்து கொள்ளக் கூடாது, கோயில்களில் திருவிழாக்களில் நடனம் ஆட வேண்டும், அதன் பிறகு பார்ப்பனர்களுக்கும் மேல் சாதிக்காரர்களுக்கும் அடிமை அரசியாக இருக்க வேண்டும். இப்படி ஒரு நிலை 1000 ஆண்டு காலமாக இந்த நாட்டில் இருந்தது.

சனாதனத்தின் பெயரால் கடவுளின் பெயரால் இப்படி மனுநீதியில் பெண்களுக்கு எட்டு வயதிற்குள் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி இருக்கிறது, இந்து மதம் எங்கே போகிறது என்ற நூலை அக்னி கோத்திரம் ராமானுஜ தாதாச்சாரியார் எழுதி இருக்கிறார். ஏன் எட்டு வயது வைக்கிறார்கள், எட்டு வயதுக்கு மேல் பருவமடைந்து விடுவார்கள், பருவம் அடைந்தால் உணர்ச்சி ஏற்படும், உணர்ச்சி ஏற்பட்டால் பார்க்கிற ஆண்களை நேசிக்க தோன்றும், இப்போது வர்ண கலப்பு ஏற்பட்டுவிடும், வர்ண கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதினால் தான் குழந்தைகளுக்கு எட்டு வயதில் திருமணம் செய்து வைக்க வேண்டும். அக்னி கோத்திர தாத்தாச்சாரியார் எழுதுகிறார். எனக்கு எழுதுவதற்கு கூசுகிறது, எழுதிய இந்த பேனாவை உடைத்து வீசி விடலாமா என்று தோன்றுகிறது ஏனென்றால் மனு அவ்வளவு மோசமான ஒரு தண்டனையை எங்களைப் பெற்ற பெற்றோர்களுக்கு எழுதுகிறான். எட்டு வயதிற்குள் உன்னுடைய பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கவில்லையானால் ஒவ்வொரு மாதம் அவளது மாதவிடாயை பிடித்து நீ குடிக்க வேண்டும், இதற்கு பயந்து கொண்டே அவர்கள் குழந்தை திருமணங்களை செய்து வைத்தார்கள். இதற்கு என்ன தீர்வு என்று கேட்டால் அதற்கு ஒரு பரிகாரத்தை மனுவில் எழுதி இருக்கிறார்கள், அப்படியானால் அந்தப் பெண்ணிற்கு திருமணம் நடைபெறுகின்ற வரை ஒவ்வொரு மாதமும் ஒரு பசு மாட்டை ஒரு ஏழை பிராமணனுக்கு கொடுக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடிய அடக்குமுறை இந்த நாட்டில் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வந்தது. இந்த முறை கிழக்கிந்திய கம்பெனியினரால் ஒழித்துக் கட்டப்பட்டது. அதன் பின் நீதிக்கட்சி ஆட்சியில் இதனை முழுமையாக ஒழித்துக் கட்டினார்கள்.

எல்லா நகரத்தையும், ஒவ்வொரு ஊர் அமைப்பு முறையும் எடுத்துக் கொள்ளுங்கள் நகரத்தின் மையத்தில் கோயில் இருக்கும், கோயிலைச் சுற்றி நான்கு பக்கமும் பார்ப்பனர்கள் வீதி இருக்கும், அதற்கு அடுத்தபடியாக செட்டியார்கள், முதலியார்கள் உள்ளிட்டோர் இருப்பார்கள், அதற்கு வெளியாக வணிகர்கள் இருப்பார்கள், அதற்கும் வெளியாக ஆதிதிராவிடர்கள் இருப்பார்கள். இது எல்லா பகுதிகளிலும் அரசர்களால் உருவாக்கப்பட்ட சாதிய ரீதியான அமைப்பு முறை.

கல்வி :

கல்வி என்பது இந்த நாட்டில் வேதக்கல்வி மட்டும் தான் இருந்தது. 1835இல் மெக்காலே இந்த நாட்டில் மெக்காலே கல்வித் திட்டத்தை அமல்படுத்துகிற வரை வேதக்கல்வி மட்டும் தான் இருந்தது. பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் கல்வி, மற்றவர்களுக்கெல்லாம் கல்வி கிடையாது, இந்த வேத கல்வி முறையை மாற்றி மெக்காலே வந்த பிறகு அனைவரும் கல்வி கற்க அளவிற்கு அதிகமாக நிதி ஒதுக்கப்படுகிறது, இஸ்லாமியர்கள் அவர்களுடைய கல்வி நிறுவனங்களான மதராசக்களுக்கு நிதி ஒதுக்கி விடுகிறார்கள், கிறிஸ்தவர்கள் அவர்களுடைய மிஷனரிகளுக்கு ஒதுக்கி விடுகிறார்கள், இந்துக்கள் அவர்களுடைய வேத பாடசாலைகளுக்கு ஒதுக்கி விடுகிறார்கள், ஆகவே இங்கு பொதுக் கல்வி முறை இல்லை, இங்கு பொது கல்வி முறையை உருவாக்க வேண்டும் என்று சொன்னவர்தான் மெக்காலே. 1835 இல் மெக்காலே கல்வி முறை வந்த பிறகு தான் நாம் கல்வி நிலையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டோம், சூத்திரர்கள் ஆகிய நமக்கு கல்வி அறிவு கிடைத்தது மட்டுமல்ல இன்று நாம் அறிவியல், பொறியியல், மருத்துவம், வரலாறு, புவியியல் இவையெல்லாம் படிக்கிறோம்.

ரிக் வேதம் அழிவு வேலைகளை நியாயப்படுத்துகிறது. அரக்கர்கள் (திராவிடர்கள்) கட்டிய மாளிகையை நீர்த்தொட்டிகளை அழிக்கும் சக்தியைக் கொடு என்று தேவர்கல் வேண்டுகிறார்கள். விருத்திரன் என்ற திராவிடனை இந்திரன் தண்டாயுதத்தால் கொல்ல வருகிறான், அப்போது விருத்தினனின் தாய் தாணு அதைத் தடுக்கிறாள் என்ற செய்தியும் ரிக் வேதத்தில் இடம்பெற்றுள்ளது.

பெரியார் 1949 இல் திருக்குறள் மாநாடு நடத்தும்போது ‘கீதையை விடு! குறளை எடு!’ என்று சொன்னார். திருக்குறளுக்கு தான் நாம் மரியாதை கொடுக்க வேண்டும், பகவத் கீதை நமக்கு எதிரான நூல், அண்ணல் அம்பேத்கர் 1944 செப்டம்பர் மாதம் சென்னைக்கு வந்தார், கன்னிமாரா ஹோட்டலில் விருந்துக்கு அழைத்தார்கள், கி.ஆ.பெ.விஸ்வநாதன், பாலசுப்பிரமணியம், ராஜன் உள்ளிட்டோர் அம்பேத்கருக்கு விருந்தளித்தனர். அங்கு அங்கு பேசும் போது ‘பகவத் கீதை பைத்தியக்காரனின் உளறல்’ என்று அம்பேத்கர் பேசினார். அவருக்கு நிறைய கண்டன கடிதங்கள் எழுதுகிறார்கள், கொலை செய்து விடுவேன் என்று கூட மிரட்டினார்கள் என்று அவருடைய தொகுப்பு நூல்களில் எழுதியிருக்கிறார். தமிழ்நாட்டில் தான் அவர் துணிச்சலாக பேசினார். ஏனென்றால் இங்கு பெரியார் இயக்கம் இருக்கின்றது, திராவிட இயக்கம் இருந்தது. வடநாட்டில் அப்படி பேசிவிட்டு உயிருடன் வீட்டிற்கு போக முடியாது, அவ்வளவு மோசமான பிற்போக்குத்தனமான ஊராக வடநாடு இருந்தது.

இங்கே எந்த சனாதானம் இருந்ததோ அதற்கு ஆப்படிக்க வேண்டும் என்பதற்காக 1920 இல் நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. அதுவரை ஊர் வேறு, சேரி வேறு என்று இருந்த ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு ஒரே வகுப்பறையில் ஒன்றாக உட்கார்ந்து பாடம் எடுக்க வேண்டும் என்று 1922 ல் பனகல் அரசர் உத்தரவு பிறப்பித்தார். திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் நாங்கள் ஆதிதிராவிடர்களை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறோம், ஆனால் தனி வகுப்பறை கட்டி வைக்கிறோம் என்று கேட்டார்கள். அதாவது மற்ற ஜாதிப் பிள்ளைகள் ஒரு வகுப்பறையிலும் ஆதிதிராவிடப் பிள்ளைகள் தனி வகுப்பறையிலும் இருப்பார்கள், இதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்ட பொழுது பனகல் அரசர் அப்படி முடியாது, ஒரே வகுப்பறையில் தான் படிக்க வேண்டும், ஒன்றாகத் தான் இருக்க வேண்டும் என்று 1922 இல் உத்தரவு போட்டார், இதுதான் திராவிடம்.

(தொடரும்)

- வாலாசா வல்லவன்