“கணவன் துராசாரமுள்ளவனாக” (ஒழுக்கக்கேடுகள் உள்ளவனாக) இருந்தாலும் அன்னிய ஸ்திரீலோலனாக (வேறு பெண்களோடு செக்ஸ் வைத்துக் கொள்ள துடிப்பவன்) இருந்தாலும், பதிவிரதைகளான பெண் என்பவள், அந்தக் கணவனை தெய்வத்தைப்போல் வணங்க வேண்டும்.” (மனு சாஸ்திரம், அத்.5, சுலோகம் 154)

- ‘மனு சாஸ்திரம்’ கட்டமைத்த இந்த சிந்தனைதான் இப்போதும் சமூகத்தின் மனநிலையாக படிந்து கிடக்கிறது.

• மனைவியைக் கொடுமைப்படுத்தும் கணவன்; வேறு பெண்களோடு குடும்பம் நடத்தும் கணவன்; இவர்களோடு ஒரு பெண் சேர்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை. விவாகரத்துப் பெறலாம் என்று சட்டம் கூறுகிறது. ஆனால், சட்டம் வழங்கியுள்ள உரிமைகளைப் பயன்படுத்தி, விவாகரத்துப் பெற்ற பெண்ணை சமூகம் நேர்மைக்கு, தன்மானத்துக்குப் போராடிய பெண்ணாக வாழ்த்துகிறதா? இல்லை. “புருஷனோடு வாழத் தெரியாதவள்; அனுசரித்துப் போகத் தெரியாத அடங்காப் பிடாரி; வாழாவெட்டி; புருஷனையே தூக்கிப் போட்டுவிட்டு வந்தவள்; எப்படி ஒழுக்கமாக இருப்பாள்?” - என்றுதான் குடும்பமும் அவளைச் சுற்றியிருக்கும் சமூகமும் பேசுகிறது. சட்டம் விவகாரத்து உரிமையை வழங்கினாலும், அதைப் பயன்படுத்துவோரை சமூகம் எள்ளி நகையாடி, அவமதிப்பதற்கு சட்டத்தை மீறிய மற்றொரு எழுதப்படாத சட்டம், சமூகத்தின் விதியாக இருக்கிறது.

அது என்ன? அதுதான் நாம் மேலே எடுத்துக்காட்டியுள்ள காலங்காலமாக மூளையில் திணிக்கப்பட்டுள்ள “மனு சாஸ்திரம்”.

“பெண்கள் குழந்தைகளாக இருக்கும்போது தகப்பனாரின் கட்டுப்பாட்டிலும் திருமணமான பிறகு கணவனின் கட்டுப்பாட்டிலும் கணவன் இறந்த பிறகு, பிள்ளைகளின் கட்டுப்பாட்டிலும் இருக்க வேண்டுமே தவிர, பெண்கள், தாங்கள் விரும்புகிறபடி (சுயமாக சிந்தித்து) ஒரு போதும் இருக்கக் கூடாது.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 5, சுலோகம் 148.)

• ஒரு பெண் தனது சுய சிந்தனையோடு தன் விருப்பத்தின்படி பிறப்பு முதல், இறப்பு வரை வாழ்வதற்கான உரிமையை மறுக்கிறது மனு சாஸ்திரம். ஆனால், அரசியல் சட்டம் ஒரு பெண்ணுக்குள்ள உரிமையை குடி மக்களுக்கான உரிமையாக ஆண்களுக்குள்ள சமமான உரிமைகளாக உறுதி செய்கிறது. ஆனால், சட்டம் வழங்கும் இந்த உரிமையை சமூகம் ஏற்கிறதா? இல்லை; இல்லவே இல்லை. பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையையே பெண் ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறாள். பெண் விரும்பியவனை திருமணம் செய்ய வேண்டும் என்றால், ஜாதி, அந்தஸ்துகளைக் காரணம் காட்டி, குடும்பம் அனுமதிக்க மறுக்கிறது. குடும்பத்தை மீறி திருமணம் செய்து கொண்டால், குடும்பத்தை விட்டு ஒதுக்கப்படுகிறாள். பெண்ணோ அல்லது காதலனோ கொலை செய்யப்படுகிறார்கள். பெண்ணுக்கு குடும்ப சொத்தில் உரிமை கிடையாது என்று பெற்றோர்கள் மறுத்து வருகிறார்கள். நன்றாக கவனியுங்கள்; ஒரு பெண்ணுக்கு சுயமாக சிந்திக்க, செயல்பட சட்டப்படி உரிமை உண்டு. ஆனால், அந்த சட்டங்களை சமூகம் மதிக்கத் தயாராக இல்லை. பெற்றோர், கணவர், மகன், கட்டுப் பாட்டில் அவர்கள் கட்டளைகளை ஏற்பதுதான் ஒரு ‘சிறந்த பெண்’ணின் அடையாளமாக குடும்பம், ஜாதி சமூக உறவுகள் பார்க்கின்றன. ஏன்? மேலே குறிப்பிட்ட பெண் தன்னிச்சையாக செயல்படவே கூடாது என்கிற மனு சாஸ்திர புத்தி தானே?

“எந்த ஒரு பெண்ணுடனும் அவர் தாய், தங்கையாக இருந்தாலும் அவர்களுடன் தனியாக ஆண்கள் ஒன்றாக உட்காரக் கூடாது.” (மனு சாஸ்திரம் 2வது அத்தியாயம் 215 வது சுலோகம்).

• இப்படி தங்கை, தாயையே சந்தேகிக்கச் சொல்லும் மனு சாஸ்திரம், ஒருவனின் மனைவி, வேறு ஒருவரிடமும் உடலுறவு கொள்ளலாம் என்று கூறுகிறது.

“ஒருவனின் மனைவியிடத்தில் மனைவி இல்லாத ஒருவன் உறவுகொண்டு குழந்தையை உண்டு பண்ணலாம்.” (மனு சாஸ்திரம் அத்தியாயம் 9, சுலோகம் 52)

“ஆண் பிள்ளை இல்லாமல், ஒரு குலம் நசிந்து போனால், அப்போது அந்தப் பெண், தன் கணவர், மாமனார் முதலியோரின் உத்தரவு பெற்றுக் கொண்டு, தன் மைத்துனர் அல்லது தன் கணவனுக்கு ஏழு தலைமுறைக்குட்பட்ட பங்காளி களுடன் புணர்ந்து ஒரே ஒரு பிள்ளையை பெற்றுக் கொள்ள வேண்டும்.” (மனு அத்தியாயம் 9; சாஸ்திரம் 59)

- இப்படி பெண்ணை, பிள்ளைகளைப் பெற்றுத் தருவதற்கு வாரிசுகளை உற்பத்தி செய்வதற்கான ஒரு எந்திரம் என்ற அந்தஸ்தை மட்டுமே மனு சாஸ்திரம் வழங்குகிறது. அது மட்டுமல்ல, விபச்சாரத்தையும் அந்தப் பெண் விரும்பாமலே மனு சாஸ்திரம் அவள் மீது திணிக்கிறது.

இவையெல்லாமுமே இந்தியாவின் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை. குற்றங்களாக அறிவிக்கப்பட்டவை. ஆனால், சமூகம், ‘சொந்த பந்தங்கள்’ பெண்களை எப்படிப் பார்க்கிறது?

குழந்தையைப் பெற வேண்டியது பெண்; அந்தக் குழந்தையைப் பெற்றுக் கொள்வதா வேண்டாமா என்று தீர்மானிக்க வேண்டியதில் கணவன் மனைவி இருவருக்குமே உரிமை உண்டு. ஆனால், சமூகம் இதில் மனைவியின் விருப்பத்தை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. கணவன் விருப்பத்தையே கட்டளையாக ஏற்க வேண்டும் என்கிறது.

பெண்ணின் கடமை “பிள்ளை”களை அதாவது, ஆண் குழந்தைகளைப் பெற வேண்டும் என்றே மனு சாஸ்திரம் கட்டளையிடுகிறது. பெண் குழந்தைகள் பிறந்தது என்றாலே குடும்பம் அந்தப் பெண்ணை பழித் தூற்றுகிறது. விஞ்ஞானமோ குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தீர்மானிப்பது. ஆணின் ‘குரோமோசம்’ தான் என்று கூறுகிறது. ஆனால், குடும்பம் பெண்கள் மீதுதான் குற்றம் சுமத்துகிறது. பெண் குழந்தையை கருவிலேயே அழித்துவிடும் ‘பெண் சிசுக் கொலை’யை சட்டம் குற்றம் என்கிறது. ஆனால், தமிழ் நாட்டிலேயே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஏன்?

பெண்கள் என்றாலே இழிவானவர்கள் என்று ‘மனு சாஸ்திரம்’ சிந்தனையில் திணித்து வைத்துள்ள நச்சுகள் தானே! சட்டங்கள் பல வந்தாலும் பெண்களை ‘மனு சாஸ்திரம்’ வழியாகவே இந்த ஜாதிய சமூகமும் குடும்பமும் பார்க்கிற சிந்தனை மாற்றப்பட வேண்டுமா? இல்லையா? இதை எதிர்த்து மக்களிடையே ஒரு மாற்றுச் சிந்தனையை - மனமாற்றத்தை உருவாக்க வேண்டுமா இல்லையா? அதற்கு மனு சாஸ்திர பார்ப்பனிய சிந்தனைகள் அகற்றப்பட வேண்டுமா? வேண்டாமா?

அதற்குத்தான் ஏப்.14 மனு சாஸ்திர எரிப்புப் போராட்டம்! தன்மானமுள்ள இழிவுகளை எதிர்க்கும் பெண்களும், ஆண்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க அழைக்கிறோம்! வாருங்கள், தோழர்களே! ஒன்று கூடி மனு சாஸ்திரத்தை எரிப்போம்!

Pin It