முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்தபோது அய்.நா.வில் அதன் செயலாளராக இருக்கும் பான்-கி-மூன் ஆலோசகரான இந்திய மலையாள அதிகாரி விஜய் நம்பியார், அய்.நாவின் மனித நேய உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்ஸ் ஆகியோர் திட்டமிட்டு அய்.நா. தலையீட்டை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதற்கு பான்-கி-மூனும் மவுன சாட்சியாகிவிட்டார். விஜய் நம்பியார் இனப்படுகொலையைத் தடுக்காத நிலையில் அவரது உடன் பிறந்த அண்ணன் சதீஷ் நம்பியார், இலங்கை இராணுவத்துக்கு கொழுத்த சம்பளத்தில் ஆலோசகராக இருந்து தமிழினப் படுகொலைக்கு ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்.

அய்.நா.வின் இந்த சட்டவிரோத துரோக செயல்பாடுகள் இப்போது அம்பலமாகி யுள்ளன. அய்.நா.வின் மற்றொரு அதிகாரியான சார்லஸ் பெட்ரி தலைமையிலான குழு, இது குறித்து அய்.நா. அமைப்புக்குள்ளேயே ஆய்வு செய்து, அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. அந்த இரகசிய அறிக்கை இப்போது இணைய தளங்கள் வழியாக வெளியே வந்துள்ளது. அதிர்ச்சியூட்டும் அந்த அறிக்கையின் முக்கிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன:

மனித நேய உதவிகளாக போர் முனையில் சிக்கியிருந்த தமிழர்களுக்கு உணவு, மருந்து பொருட்களை 10 நாட்களுக்கு ஒரு முறை 18 ஆயிரம் மெட்ரிக் டன் பொருட்கள் அனுப்பப்பட வேண்டும். ஆனால், 2009 ஜனவரி 15 ஆம் தேதிக்குப் பின்பு எந்தவித உதவிப் பொருட்களையும் ஐ.நா. அனுப்பவில்லை என்பது மட்டுமல்ல, அதற்கான எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை.

ஜனவரி 15 ஆம் தேதி அன்று இலங்கை இராணு வத்திடம் ஒப்புதல் பெற்ற பிறகே உதவிப் பொருட்கள் போர் பகுதிக்கு  அனுப்பப்படுகிறது. இந்த உதவிப் பொருட்களுக்கான வண்டிகள் 16 ஆம் தேதியே திரும்பும் என்கிற உத்திரவாதத்துடன் சென்றன. ஆனால், உறுதியை மீறி இலங்கை அரசு தாக்குதலை 16 ஆம் தேதியே தீவிரப்படுத்தியது. இதன் காரணமாக இந்த அய்.நா. உதவிக்  குழு முல்லைத் தீவு பகுதியிலேயே இரண்டு வாரங் களுக்கு மேலாக முடங்க நேர்ந்தது. அப்போது போர் தீவிரமாக நடந்தது. (மருத்துவமனைகளைத் தாக்குவது, ஐ.நா. பணியாட்கள் இருக்கும் பகுதியைத் தாக்குவது,  பொது மக்கள் குழுமி யிருக்கும் பகுதிகளைத் தாக்குவது போன்றவை நடந்தன). தாக்குதலால் கொலை செய்யப்பட்ட தமிழர்களின் கணக்கெடுப்புகளை கொழும்புவி லுள்ள உயர் அதிகாரிகளுக்கு முல்லைத் தீவில் சிக்கிக் கொண்ட அய்.நா. பணியாளர்கள் குறுஞ் செய்தி வழியாக அனுப்புகிறார்கள். அய்.நா. கண்டு கொள்ளவில்லை.

அதன் பின்னர், இந்தக் குழுவில் இருந்து இருவர் கொழும்புவிற்கு தப்பிச் சென்று அங்குள்ள ஐ.நா. அலுவலகத்தில் களத் தகவலை பகிர்கிறார்கள். அவ்வாறு பகிரும்போது, போரில் கொல்லப்படும் தமிழர்களின் இறப்பினைக் கணக்கெடுக்கும் வேலை ஐ.நா. அலுவலகத்தில் நடக்காததைக் கவனித்து, அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, இவர்களது கள தகவல் அடிப்படையில் இறப்பு தகவல்கள் அதற்குப் பிறகுதான்  தொகுக்கப்படு கின்றன. இது 2009 பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் நிகழ்ந்தது. மூன்றாவது வாரத்தில் அதிர்ச்சிக்குரிய அளவில் தமிழர்கள் போர்க் களத்தில் கொல்லப்பட்டு இறக்கிறார்கள்.

மார்ச் 2009, முதல் வாரத்தில் இந்தத் தகவலை அறிந்த ஜெனிவா ஐ.நா.வின் உலக தலைமைச் செயலகம் உடனடியாக அரசியல் குழுவிலிருந்து உயர் அதிகாரியை அனுப்புகிறது. அவர் கொழும்புவில் களநிலையை அறிந்ததும் “நாம் உடனடியாக நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்த வில்லை. எனில் நாமும் குற்றவாளிகளாவோம்” என்று பதிவு செய்கிறார். தொகுக்கப்பட்ட தகவலை எடுத்துக் கொண்டு மார்ச் 9 இல் ஐ.நா. தலைமை அலுவலகம் செல்கிறார்.

இதற்கிடையே போரில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அய்.நா. மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம் பிள்ளை அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். அதிர்ச்சி அடைந்த விஜய் நம்பியார் அதை எதிர்த்து, அவசர அவசரமாக அன்றைய தினமே, ஐ.நா.வின் மனித உரிமை ஆணையத்திற்கு ஒரு விரிவான மின்னஞ்சலை அனுப்புகிறார். அந்த மின்னஞ்சலில், “இலங்கையில் கொல்லப்பட்டவர் களின் எண்ணிக்கையை நம்மால் உறுதி செய்ய முடியாது; எனவே வெளியிட வேண்டியதில்லை” என பதிகிறார். மேலும், “ஒரு வேளை நீங்கள் அவ்வாறு எண்ணிக்கையை வெளியிட விரும் பினால் அவற்றினை நீர்த்துப் போகச் செய்து வெளி யிடுமாறு” குறிப்பிடுகிறார். அந்த மின்னஞ்சல் மேலும் இரண்டு முக்கிய செய்திகளைக் காட்டு கிறது. ‘இலங்கை அரசன் மீது போர்க் குற்றம், மனித குலத்திற்கு எதிரான குற்றத்தினை நாம் இப்போது வைக்க முடியாது. அவ்வாறு செய்தால் இலங்கை அரசின் விரோதத்தினை நாம் சம்பாதிக்க வேண்டி வரும்; அது நமக்கு நல்லதல்ல” என்கிறார். இது மட்டுமல்லாமல் குற்றச்சாட்டுகளில் இலங்கையை யும், விடுதலைப் புலிகளையும் ஒன்றாகவே நாம் பாவிக்க (குற்றம் சாட்ட) வேண்டும்” எனச் சொல்கிறார். பின் இதே உள்ளர்த்தம் உள்ள மின்னஞ்சல் பிற துறைகளில் இருந்தும், குறிப்பாக மனித நேய உதவிகளுக்கான அதிகாரி ஜான் ஹோல்ம்ஸ்மிடமிருந்தும் அனுப்பப்பட்டு, இறுதி யில் மார்ச் 12-13 ஆம் தேதி மனித உரிமை ஆணையத்தின் அறிக்கைகளை நீர்த்துப் போகச் செய்து, விடுதலைப் புலிகளை கடுமையாக குற்றம் சாட்டி வெளியிடப்படுகின்றன. இனப்படுகொலை நடத்தி வரும் இலங்கை அரசு காப்பாற்றப்படுகிறது.

இந்த மார்ச் 12-13 ஆம் தேதி அறிக்கை தான் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதன் தொடர்பாக வெளியிடப்பட்ட இறுதி அறிக்கை யாக அமைகிறது. அதுவும் புலிகளை குற்றம் சாட்டிய இந்த அறிக்கையை இலங்கையில் இருந்த ஐ.நா.வின் களப்பணியாளர்கள்கூட ஏற்காமல் விமர்சனம் செய்கிறார்கள்.

இந்த வேலையை விஜய் நம்பியார் செய்தபோது, கிட்டதட்ட 45 நாட்களுக்கும் மேலாக உணவும், மருந்தும் இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் போர் முற்றுகைப் பகுதியில் பிணமாகி விட்டனர் என்பதை சார்லஸ் பெட்றி பதிவு செய்கிறார்.

இவ்வாறு இலங்கை அரசால் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதைப் பற்றிய முழுமையான தகவல்கள் சர்வதேச சமூகத்திற்குக் கிடைக்காம லிருக்கும் வேலையை விஜய் நம்பியார் செய்கிறார். மேலும் புலிகளைக் குற்றஞ்சாட்டுவதன் மூலமாக ‘புலிகள் ஒடுக்கப்பட வேண்டியவர்கள், பயங்கர வாதிகள். எனவே, இது பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ என்று உலகிற்கு அறியச் செய் கிறார். இதன் மூலமாக இலங்கை அரசானது சர்வ தேச சமூகத்தின் முன் நியாயமாக்கப்படுவதுடன், இனப் படுகொலைக்கான உதவிகள் அந்த அரசிற்குக் கிடைக்கிறது.

மனித நேய உதவிப் பொருட்களான உணவு, மருந்துப் பொருட்களை அனுப்ப தடை செய்யப் பட்டதை உலகின்  கவனத்திற்குக் கொண்டு செல்வதைத் தடுக்க மறைமுகமாக விஜய் நம்பியார் உதவியிருக்கிறார். மருந்தும், உணவும் போரின் கருவிகளாக பயன்படுத்தப்படுவதை ஐ.நா.வின் சாசனம் போர்க்குற்றமாகவே சித்தரிக்கிறது. இதை ஐ.நா.வின் உயர் அதிகாரிகளான விஜய் நம்பியாரும், ஜான் ஹோல்ம்ஸ்சும் செய்து முடிக்கிறார்கள். அவர்கள் இலங்கை அரசை நாம் விரோதித்தால் அவர்கள் மனித நேய உதவிகளை செய்ய நம்மை அனுமதிக்க மாட்டார்கள் என்கிற வாதத்தினை முன் வைத்தார்கள். இதுகூட பொய்யான வாதம்.

15 ஜனவரி 2009-க்குப் பிறகு எந்த ஒரு மனித நேய உதவியும் ஐ.நா. போரின் இறுதிக் காலம் வரை கொண்டு சேர்க்கவில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இது மட்டுல்ல, விஜய் நம்பியாரின் இந்த மின்னஞ்சல் மேலும் ஒரு விஷயத்தினை அம்பல மாக்குகிறது. அதாவது 12 மார்ச் 2009 அன்றே ஐ.நா.வின் முக்கிய குழுக்களில் ஒன்றான மனித உரிமைக் குழு ‘இலங்கை செய்தது போர்க் குற்றம்’ என்றும், ‘மனித குலத்திற்கு எதிரான குற்றம்’ என்றும் முடிவுக்கு வருகிறது. அவ்வாறு அறிவிப் பதற்கான ஆதாரங்களை அது பரிசீலித்த பிறகே அந்த முடிவுக்கு வருகிறது. இந்த ஆதாரங்கள் களப் பணியாளர்களிடமிருந்து பெறப்பட்டவையே. ஐ.நா. அலுவலர்கள் 15 ஜனவரி 2009 இல் களமுனை யில் இருந்து அனுப்பிய செய்திகளின் அடிப்படை யில்தான் இது சாத்தியமாயிற்று. மனித நேய உதவிகளைச் செய்யும் குழுவிற்கு சர்வதேச மனித உரிமை சட்டங்களை மீறி செயல்படுகிறோம் என்பது தெரிந்தே இருக்கும்.  ஆனால், இவ்வாறு முதல் தகவலாக நேரடியாகப் பெறப்பட்ட தகவலை உறுதி செய்ய முடியாத தகவலாக ஜான் ஹோல்ம்ஸ் சும், விஜய் நம்பியாரும் கருதுகிறார்கள். அய்.நா. பணியாளர்கள் தந்த தகவல் அறிக்கையாக வரும் போது, அதன் முக்கியப் பகுதிகளை ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் மறைத்தே வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு கறுப்பு மையிட்டு மறைக்கப்பட்ட பகுதிகளை உடைத்து பார்த்தபோதுதான் இந்த துரோகங்கள் அம்பலமாயின.

இதன் பிறகு ஏப்ரல் 2009 இல் ஐ.நா.வின் தலைமை அலுவலகத்தில் இருந்து ஐ.நா.விற்கான துணைக் கோள் உதவியுடன் பெறப்பட்ட தகவலை அடிப்படையாகக் கொண்டு அங்கு பெருமள விலான சேதங்கள் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டு இருப்பதாகவும், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகள் தாக்கப்பட்டு இருப்பதாகவும், செய்திகள் வெளியிடப்பட்டு இலங்கை அரசினைக் கண்டித்து அறிக்கை வெளியிடப்பட்டது. அதுவும் எப்பொழு தும் போல புலிகளையும் குற்றம் சாட்டியே வெளி யிடப்பட்டது. ஆனாலும், ஜான் ஹோல்ம்ஸை அழைத்து, இலங்கை அரசு, கடுமையாக கண்டித்த தோடு, அந்த செய்தி உண்மைக்கு மாறான, உறுதிப் படுத்தப்படாத தகவல் என மறுப்பு வெளியிடச் சொல்லி நெருக்குகிறது. அதையேற்று இலங்கை அரசிற்கு மின்னஞ்சலை அனுப்புகிறார் அந்த அதிகாரி. அந்த மின்னஞ்சலை துணைக்கோள் செய்தி அறிக்கைக்கான மறுப்பு செய்தியாக இலங்கை வெளியிடுகிறது. பான்-கி-மூனின் செய்தித் தொடர்பாளர் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, மக்கள் இறப்பினைப் பற்றிய கேள்விக்கு ‘உடல்களை எண்ணுவது எங்களது பணியல்ல’ என்று கூறி விட்டார்.

ஐ.நா.வின் முக்கிய நிறுவனங்களான மனித உரிமை அமைப்பு இவ்வாறு அமைதியாக்கப் பட்டது. அய்.நா. பாதுகாப்புக் குழுவின் தலைவராக இருப்பவர் தக்காசு என்ற ஜப்பான் நாட்டுக்காரர். இவர் இலங்கைக்கு ஆதரவாகவும் விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும் அறிக்கை தயாரித்து, பாதுகாப்புக் கவுன்சிலில் இலங்கை அரசு குறித்து விவாதம் வராமல் தடுத்து விட்டார். போர் முடியும் காலம் வரையில் ஐ.நா.வின் பொதுச் சபையோ, பாதுகாப்பு கவுன்சிலோ கூட்டப்படாமல் தடுத் தனர். பான்-கி-மூன் இதை மவுனமாக அங்கீகரித் தார். ஐ.நா.வின் மற்ற நிறுவனங்களும் இவர்களின் உதவியோடு செயலிழக்கச் செய்யப் பட்டன.

ஐ.நா.வின் இனப்படுகொலை தடுப்பு ஆலோசகர் நேரடியாக கள ஆய்வு செய்து, ஐ.நா.வின் தலைமை செயலாளரான பான்-கி-மூனிற்கு செய்தி அனுப்பி, இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இவருக்கும் ஐ.நா.வின் மனித நேய, மனித உரிமைச் சட்டங்களை அமுல் செய்யும், உறுதிபடுத்தும் அதிகாரம் உண்டு. இவர் மே 15 ஆம் தேதி, 2009 இல் ஒரு குறிப்பினை மட்டும் அனுப்பு கிறார். அதில் இனப்படுகொலை நிகழ்வதற்கான வாய்ப்பிருப்பதாக குறிப்பிடுகிறார். ஆனால், அவர் ஜான் ஹோல்ம்ஸ், விஜய் நம்பியார் முன் வைத்த ‘இலங்கை அரசுடன் ஒத்துழைத்து செயல்படுவது’ என்பதற்கேற்ப முடிவெடுத்ததாக பெட்ரி தனது அறிக்கையில் குறிப்பிடுகிறார். ஆக, இனப்படு கொலையை தடுத்து நிறுத்தும் அமைப்பும் செயல் இழக்கச் செய்யப்படுகிறது. இதன் மூலமாக இலங்கை அரசுக்கு இனப்படுகொலை செய்வதற் கான முழு சுதந்திரமும் அளிக்கப்பட்டது.

இது மட்டுமல்லாமல் போர் மற்றும் சிக்கல் நிறைந்த பகுதிகளில் பாதிக்கப்படும் குழந்தை களைப் பாதுகாக்கும் ஐ.நா.வின் தலைமை அதிகாரிக்கான செயலாளர் தமது தகவல் அறிக்கையைப் போர் முடிந்து பல வாரங்கள் கழித்தே அய்.நா.வுக்கு அனுப்புகிறார். அய்.நா.வின் சட்டவிதிகளின்படி போர் நடந்த பகுதிக்குச் சென்று குழந்தைகளை தனிமைப்படுத்தி காப்பாற்ற வேண்டிய அதிகாரமும், கடமையும் இவருக்கு உண்டு. எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் குழந்தைகள் கொல்லப்படும் வரை காத்திருந்திருக் கிறார். 2009 பிப்ரவரியிலேயே இறந்தவர்களில் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என ஐ.நா.வின் இலங்கைக் குழு கணக்கிடுகிறது. ஆக, ஐ.நா.வின் அனைத்து நிறுவனங்களும் செயல் படுவதை மூன்று முக்கிய அதிகாரிகள் தடுக்கிறார்கள் அல்லது அதனை இலங்கைக்கு ஆதரவாக மாற்றுகிறார்கள்.

இவ்வளவுக்குப் பிறகு, இலங்கையின் பிரச்சினையை மேற்பார்வையிடவும், கையாளவும் விஜய் நம்பியார் கொழும்புக்கு அனுப்பப்படுகிறார். இவர் மே 14 ஆம் தேதி கொழும்பு வந்தடைகிறார். மே 15 ஆம் தேதிக்குப் பின்பு முள்ளி வாய்க்காலில் சிக்குண்ட மக்களையும், இலங்கை இராணுவத் திடம் சரணடையும் புலிகளின் அரசியல் தலைவர் களையும், பொது மக்களையும், போராளிகளையும், சர்வதேச சட்டங்களின்படி இலங்கை அரசு நடத்து வதையும், அதை மேற்பார்வையிட்டு உறுதி செய் வதுமே அவரது முதன்மைப் பணியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இவர் முள்ளிவாய்க்காலுக்கு செல்வதற்கு இலங்கை அரசிடம் சடங்குக்காக அனுமதி கேட்கிறார். இலங்கை அரசு அனுமதி மறுக்கிறது. வெள்ளைக் கொடியுடன் வருபவர்களைக் காப்பாற்றுவதாக இலங்கை அரசு இவரிடம் உறுதி கூறுகிறது. ஆனால், உறுதியை மீறி வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை ஈவிரக்க மின்றி இராணுவம் சுட்டுத் தள்ளியது. விஜய் நம்பியார் இது பற்றி கவலைப்படவில்லை; கண்டிக்கவும் இல்லை. பின்பு பத்திரிகையாளர் சந்திப்பில் ஏன் முள்ளிவாய்க்காலுக்குச் செல்ல வில்லை எனும் போது “கொழும்புவிற்கு வெளியே தட்பவெப்பம் சரியாயில்லை” என்று அலட்சியமாக பதிலளித்தார்.

இனப் படுகொலையை தடுக்க அனுப்பப்பட்ட அய்.நா. அதிகாரி விஜய் நம்பியார், அதைத் தடுக்காமல் வெள்ளைக் கொடியுடன் வந்தவர்களை சர்வதேச சட்டங்களுக்கு எதிராக பிணமாக்க மறைமுகமாக உதவினார். அவரின் உடன் பிறந்த மூத்த சகோதரர் சதீஷ் நம்பியார் என்பவரே இந்த இனப்படுகொலைக்கான போரில் இலங்கை இராணுவத்தின் ஆலோசகராக செயல்பட்டவர். மேலும் ஐ.நா.வானது நடைமுறையில் எந்த ஒரு போர் நிகழ்ந்த பகுதிக்கும் அதன் அண்டை நாட்டினைச் சேர்ந்தவரை அனுப்புவது கிடையாது. ஆனால், இலங்கை விஷயத்தில் விதிகளுக்கு மாறாக இந்தியாவைச் சார்ந்த மலையாளியை அனுப்பியது.

மே 17, 18, 2009 இல் இனப்படுகொலை முடியும் வரை பான்-கி-மூன் இலங்கைக்கு வரவே இல்லை. போரின் இறுதி நாளில் வெள்ளைக் கொடியுடன் வந்த விடுதலைப் புலிகளின் தலைவர்களும், அவர்களின் குடும்பங்களும் கொலை செய்யப் பட்டதும், பெருந்திரளாக மக்கள் படுகொலை செய்யப்பட்டதும் சர்வதேச ஊடகங்களில் வெளி யானபோதுகூட இவர் இலங்கைக்கு வரவில்லை. ஆனால், போர் வெற்றி விழாவில் கலந்து கொள்ளவே அவர் இலங்கையில் இறங்குகிறார் என ஐ.நா.வின் அதிகாரிகளே கூறுகிறார்கள். போர் ஆரம்பித்த காலத்திலிருந்தே இறுதி வரை புலிகளின் மீதே குற்றச்சாட்டினை ஐ.நா. வைத்தது. ஐ.நா.வினுடைய இலங்கைக்கான பணியாளர் குழுவினர் இதை உண்மைக்கு மாறானது என்று எதிர்த்திருக்கிறார்கள் என்பதை அறிக்கை பதிவு செய்திருக்கிறது. இலங்கை அரசு மீதான எந்தவித குற்றச்சாட்டினையும், ஆதாரங்கள் இருந்த போதிலும் ஐ.நா. வெளியிடவில்லை. மனித நேய உதவிகளை குண்டு வீச்சினால் தடுத்த போதும்கூட இலங்கை அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படவில்லை என்று அய்.நா. பணி யாளர்கள் வெளிப்படையாக குற்றம்சாட்டியுள்ளனர்.

போர் முடிந்த பிறகு ஐ.நா.வின் 99 ஆவது விதியின்படி இலங்கை மீது விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நா.வின் சட்ட நிபுணர் குழு கோரிக்கை வைக்கிறது. ஆனால், ஐ.நா.வின் விசாரணையை பான்-கி-மூன் மறுக்கிறார். 2010 ஜனவரி வரை (அதாவது ராஜபக்சே மீண்டும் அதிபராகும் வரை அய்.நா. விசாரணைக்கு இலங்கை அனுமதிக்கவில்லை)  மார்ச் 2010 இல் தான் ஒரு விசாரணைக் குழுவினை பான்-கி-மூன் அமைக்கிறார். இந்த விசாரணைக் குழுவும் இலங்கைக்குள் செல்லாமலேயே அறிக்கை தயாரிக்கிறது. இலங்கைக்குள் அய்.நா. குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதை ஐ.நா. கண்டிக்கவே இல்லை.

இதுபோன்ற எண்ணற்ற ஆதாரங்களோடு ஐ.நா.வின் உயர் அதிகாரிகளின் செயல்பாடுகள் ஐ.நா.வின் உள்ளக அறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. மாறாக இந்த உண்மைகளை மூடி மறைக்கவே முயற்சிகள் நடக்கின்றன. இது தொடர்பாக, மேலும் பி.பி.சி. போன்ற முன்னணி ஊடகங்கள் இந்த உண்மைகளைத் திரிக்கின்றன; துரோகத்துக்கு துணை நின்ற ஜான் ஹோல்ம்ஸ் என்கிற அதிகாரியை அழைத்தே பி.பி.சி. கருத்துக் களை பதியச் செய்தது. இந்திய ஊடகங்களும் இதை வெளியிடாமல் மௌனம் காக்கின்றன.

இந்த நிலை ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் தமிழீழ கோரிக்கையைப் பின்னுக்குத் தள்ளி ‘மறு சீரமைப்பு நல்லிணக்கம், வாழ்வுரிமை’ என்கிற சமூக நல கோரிக்கையை முன்னுக்குத் தள்ளும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 2012 ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஐ.நா.வின் மறுசீரமைப் பிற்கான தலைவர் ஜான் ஜிங், இலங்கை அரசானது உலகிலேயே மறுசீரமைப்பிற்கு முன் மாதிரியாகத் திகழ்கிறது என புகழ்கிறார். இதுபோல பல புகழாரங்கள், அங்கீகாரங்களை ஐ.நா. உயர் அதிகாரிகள் இலங்கைக்கு தொடர்ச்சியாக வழங்குகிறார்கள்.

மற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட வேண்டும். சித்தார்ஜ் சட்டர்ஜி என்கிற இந்தியா வின் முன்னாள் இராணுவ அதிகாரி இலங்கைக்கு அனுப் பப்பட்ட “அமைதிப் படை”யில் இருந்தவர். பாரசூட் மூலமாக யாழ் பல்கலைக் கழக வளாகத் திற்குள் புலிகளைத் தாக்க அனுப்பப்பட்டவர்களில் ஒருவர். அப்படி பாராசூட்டில் பல்கலைக்கழகத் துக்குள் குதித்து, தாக்குதல் நடத்த வந்தபோது விடுதலைப் புலிகள் திருப்பி சுட்டனர். அவருடன் வந்தவர்கள் அனைவரும் கொல்லப்பட, இவர் மட்டும் தப்பிச் செல்கிறார். அன்றிலிருந்து இன்று வரை இவர் புலிகளுக்கும், தமிழீழத்திற்கும், தமிழர் களுக்கும் எதிராக தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். இவர் தற்போது ஐ.நா.விற்கான பணியாளராக இருக்கிறார் என்பது மட்டுமல்ல, இவர் பான்-கி-மூன் இரண்டா வது மகளை மணம் புரிந்து இருக்கிறார். சதீஷ் நம்பியார், சித்தார்ஜ் சாட்டர்ஜி போன்றோரை நெருங்கிய உறவினராக வைத்து இருக்கும் ஐ.நா.வின் உயர் அதிகாரிகள் தமிழீழப் படுகொலையில் பங்கெடுத்து இருப்பது ஆச்சரியமில்லை.

சர்வதேச விசாரணையை பான்-கி-மூன் தடுத்ததன் மூலமாக ஐ.நா.வில் தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பினை நடக்க விடாமல் தடுத்துள்ளார்.

இந்த மறைக்கப்பட்ட நீதியை மீட்டெடுக்க வேண்டியது தமிழரின் கடமையாகும். சர்வதேச விசாணையையும், ஐ.நா.வில் பொது வாக்கெடுப் பினையும் தடுத்து நிறுத்திய இந்த அதிகாரிகளும், அதன் பின் உள்ள இந்திய அதிகாரிகளையும் விசாரித்து தண்டிக்கப்பட்டேயாக வேண்டும்.

Pin It