ஜாதி-தீண்டாமைக்கு எதிரான இயக்கம் எழுச்சிப் பெற்று வருகிறது. திருவாரூரில் கழகத்தின் சார்பில் 5 ஆவது மண்டல மாநாடு எழுச்சியுடன் நடைபெற்றது.

‘எரியட்டும் மனுசாஸ்திரம்’ என்ற முழக்கத்துடன் “தமிழர் ஒற்றுமைக்கான” ஜாதி-தீண்டாமை ஒழிப்பு மாநாடு, திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 23.2.2013 சனி மாலை 6 மணி யளவில் திருவாரூர் கீழ வீதியில் சாதி ஒழிப்புப் போராளி மணல் மேடு வெள்ளைச்சாமி நினை வரங்கத்தில் கருத்துச் செறிவோடு நடைபெற்றது. புதுச்சேரி தலித் சுப்பையா குழுவினர் இசை நிகழ்ச்சியோடு மாநாடு தொடங்கியது. 7.30 மணி வரை ஒன்றரை மணி நேரம் தலித் சுப்பையா குழுவினர் சாழி ஒழிப்பு மற்றும் பெரியார், அம்பேத்கர், புலே -  சமுதாயப் புரட்சிகளை விளக்கும் எழுச்சிப் பாடல்களை பாடினர். கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு வரவேற்புரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருவாரூர் வடக்கு மாவட்ட செயலாளர் கோ.வி. தமிழழகன், தெற்கு மாவட்ட செயலாளர் என்.டி. இடிமுரசு, திராவிடர் விடுதலைக்கழக பேச்சாளர் ஜீவா, தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் அரங்க. குணசேகரன், கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் உரையைத் தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான ஆர்.நல்லக்கண்ணு மாநாட்டில் சிறப்புரை யாற்றினார்.

அவர் தனது உரையில், “தமிழ்நாட்டில் ஜாதியத்துக்கு எதிராகவும், சமூக நீதிக்காகவும், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தபோது,  தமிழ்நாட்டில் போராடி, அரசியல் சட்டத்தை முதன்முதலாக திருத்தம் செய்து, இடஒதுக்கீட்டு உரிமையைப் பெற்றுத் தந்தவர் பெரியார். கேரளாவின் வைக்கத் திலே தீண்டப்படாதவர்கள், பார்ப்பனர் வாழும் வீதிகளிலே நடப்பதற்கு தடை செய்யப்பட்ட போது, இங்கிருந்து வைக்கம்  சென்று போராடி, உரிமைகளை மீட்டுத் தந்தவர் பெரியார். பொது வுடைமை இயக்கத் தோழர் பா.இராமமூர்த்தியும் அப்போராட்டத்தில் பெரியாருடன் பங்கேற்றார். தீண்டாமை சட்டப்படி ஒழிக்கப்பட்டுள்ளது. அது கடைபிடிப்பது குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தலித் அல்லாதவர்கள் சாதியக் கூட்டணியை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசு உருவாக்கியிருப்பது, சட்டத்துக்கு எதிரான செயல்பாடு. பெரியார் இயக்கம் சுயமரியாதை இயக்கம். இந்த நாட்டில் உருவாக்கியுள்ள சமுதாய மாற்றங்களை தொடர்ந்து வேகமாக மேலும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய கடமை நமக்கெல்லாம் உண்டு. இதை பின்னோக்கி இழுத்துச் சென்று சமுதாயத்தில் ஜாதியின் பெயரால் வெறியையும் பிளவுகளையும் உருவாக்க முயல்வது மிகவும் ஆபத்தானது” என்றார் தோழர் நல்லக்கண்ணு.  தொடர்ந்து பேசுகையில், தமிழ் இலக்கியங்களிலே காதல் திருமணம் ஆதரிக்கப்பட் டுள்ளதை சுட்டிக்காட்டினார். “யாதும் ஊரே யாவரும் கேளீர்” என்று சமூக ஒற்றுமையை வலியுறுத்திய நமது சங்க இலக்கியம்,

“யானும் நீயும் எவ்வழி யறிதும்?

செம்புலப் பெயல்நீர்  போல

அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே”

- என்று நம் தமிழ் இலக்கியம் குறுந் தொகை பாடல் கூறுகிறது. “அதாவது என்னை நீயும், உன்னை நானும் இதற்கு முன் அறிந்தோம் இல்லை என்றாலும், நம்முடைய அன்புடைய நெஞ்சங்கள் நிலத்தில் நீர் கலப்பதுபோல ஒன்றாகக் கலந்து விட்டது” என்று கூறுகிறது அந்தப் பாடல்.

தமிழர் பண்பாடு - ஜாதியை ஏற்ற தில்லை; தமிழர் பண்பாடு பற்றிப் பேசுகிறவர்கள், ஜாதியை நியாயப் படுத்தலாமா? என்று கேட்டார், தோழர் நல்லக்கண்ணு.

மறைந்த பொதுவுடைமை இயக்கத் தலைவர் ஜீவானந்தம் அவர்களின் மகளுக்கு பெரியாரே மணமகனைத் தேர்வு செய்து ஜாதி மறுப்பு திருமணம் செய்ததையும், அந்த மண விழாவில் பெரியார், அண்ணா, மணலி கந்தசாமி உள்ளிட்ட தமிழ்நாட்டின் மூத்த தலைவர்கள் பங்கேற்று வாழ்த்தி யதையும் நினைவு கூர்ந்தார். பெண்ணுக்கு திருமண வயது 18 ஆகவும், ஆணுக்கு 21 ஆகவும் சட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதில் பெண் களுக்கு திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்றும், 18 வயது பக்குவப்படாத வயது என்றும் ராம தாசு கூறுகிறார். அதே 18 வயதுக்குரி யோருக்கு வாக்குரிமை வழங்கப்பட் டுள்ளதே. அதை இவர்கள் எதிர்க்காதது ஏன் என்ற கேள்வியை தோழர் நல்லக்கண்ணு எழுப்பினார்.

திருமணங்களை கட்டாயப் படுத்தி நடத்துவது எப்படி குற்ற மாகுமோ அதே போன்று கட்டாயப் படுத்தி தடுப்பதும் குற்றம்தான். ஜாதி மறுப்பு இன்றைய சமுதாயத்தின் தேவை. ஜாதி மறுப்பு திருமணங் களை ஆதரிக்க வேண்டும். “ஜாதித் தமிழன் பாதித் தமிழன்” என்று ஒரு கவிஞர் எழுதினார். அவன் முழுத் தமிழனாக முடியாது. தமிழ்நாட்டில் மீண்டும் தலைதூக்க முயற்சிக்கும் ஜாதி வெறியை முறியடிக்க பெரியார் இயக்கங்களும், பொதுவுடைமை இயக்கங்களும் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்ற வேண்டு கோளை முன் வைத்து தோழர் நல்லக் கண்ணு தனது உரையை இறுதி செய்தார்.

மாநாட்டுத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையாற்றினார். ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை எரித்தப் பெரி யாரின் ஜாதி ஒழிப்புப் போராட்ட வரலாறு, காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருக்கும்போதே ஜாதியைப் பாது காக்கும் மனுசாஸ்திரம், இராமா யணத்தை எரிக்க வேண்டும் என்று பெரியார் முழக்கமிட்டது; தாழ்த்தப் பட்ட மக்களுக்கு தனிக் கிணறு அமைப்பதை காங்கிரசலிருந்த போதே எதிர்த்து, அனைவரும் பயன் படுத்தும் பொதுக் கிணறு திறக்க வலி யுறுத்தியது; தாழ்த்தப்பட்டோரை தனிமைப்படுத்தி முன்னேற்றும்  திட் டங்களுக்காக காங்கிரஸ் கட்சி அனுப்பிய பெரும் தொகையை, தான் தலைவராக இருந்தபோது ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியது என்ற வரலாற்று நிகழ்வுகளை கழகத் தலைவர் சுட்டிக் காட்டினார்.

தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் தீர்மானங்களாக முன் வைத்துள்ள கோரிக்கைகளை விளக்கினார். ஜாதியற்ற திருமணத் தம்பதியினரின் வாரிசுகளுக்கு ஜாதி யற்றோர் ஒதுக்கீடு தாழ்த்தப்பட்ட மக்களுக்கான வீடுகளை ‘காலனி’, ‘சேரி’ என பிரித்து ஒதுக்காமல் பிற ஜாதியினர் வாழும் தெருக்களிலேயே கட்டிக் கொடுத்தல்; ஜாதி, மதம் கடந்த காதலர்களுக்கு பாதுகாப்பு வழங்க, காவல்துறையில் தனிப் பிரிவு, ஜாதிகளைக் குறிப்பிட்டு வெளியிடப் படும் திருமண வரன் தேடும் பத்திரிகை விளம்பரங்களுக்கு தடை போன்ற கோரிக்கைகளை எடுத்துக் காட்டி விளக்கினார்.

ஈரோடு மாநாட்டைத்  தொடர்ந்து ஜாதி-தீண்டாமைக்கு எதிராக சென்னை, சேலம், திண்டுக் கல்லில் மண்டல மாநாடுகளை நடத்திய கழகம், அய்ந்தாவதாக திருவாரூரில் நடத்திய மாநாடு இது.

Pin It