திருக்குறளின் ஆழமான உட்பொருளை ஆராய்ந்து பேராசிரியர் மருதமுத்து எழுதிய திருக்குறள் தமிழ்த் தேசிய அரசியல் நூல் அறிமுக விழா 13.6.2013 வியாழக்கிழமை மாலை 6 மணி யளவில் கும்பகோணம் பவளம் அரங்கத்தில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது.

விழாவிற்கு ஓய்வு பெற்ற ஆசிரியர் பனிமயமேரி ராஜ் தலைமையேற்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத் தார். இரா. ஆன்டனி அசோக் வரவேற்புரையாற்றிட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சாய் கிருஷ்ணன் தொடக்க உரையாற்றினார். பேராசிரியர் மருதமுத்துவின் தமிழ்த் தொண்டினை வாழ்த்தி, கும்பகோணம் வழக்கறிஞர் சங்கத் தலைவர் சங்கர், சமூக சிந்தனையாளர் ஜெயக்குமார், சி.பி.அய். நகரப் பொருளாளர் வழக்கறிஞர் ஜார்ஜ், தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி செயலாளர் வளவன், ஆசிரியர் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நூலின் சிறப்பான கருத்துக்களை ஆராய்ந்து குடந்தை மூத்த வழக்கறிஞர் கீதாலயன், நெய்வேலி தாய்த் தொண்டு மைய நிறுவனர் தாய், ராசி ஜெகதீஸ்வரன், மதிமுக மாநில தணிக்கை குழு உறுப்பினர் முருகன், விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

பேராசிரியர் மருதமுத்து, ‘திருக்குறள் தமிழ்த் தேசிய அரசியல்’ நூலினை அறிமுகப்படுத்தி, கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார்.

இறுதியாக நூலாசிரியர், பேராசிரியர் மருத முத்து ஏற்புரையாற்றினார். அவர் தனது உரையில் கூறியதாவது:

“திருக்குறள் தமிழ்த் தேசிய அரசியல் நூல் கடந்த மே தினம் அன்று இடிந்தகரையில் கூடங் குளம் அணுஉலை எதிர்ப்புப் போராளி உதயகுமார் தலைமையில் முதன்முறையாக வெளியிடப்பட்டது. அவர் தனது வாழ்த்துரையில், தமிழ் சமுதாயத்திற்கு தொண்டாற்றிட மிக சரியான நேரத்தில் மிக சரியான நூல் வெளி வந்திருக்கிறது என பாராட்டி, இந்த நூல் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் என கோரிக்கையை வைத்தார். மக்கள் மத்தியில் செல்ல வேண்டுமென்றால் ஒரு கொள்கை பிடிப்புள்ள இயக்கத்தின் மூலமாகத்தான் முடியும். அந்த வகையில் இந்த நூலினை கொளத்தூர் மணி யினை வைத்து வெளியிடுகிறேன். இந்தக் கருத்துக்கள் அவர் மூலமாக மக்கள் மத்தியில் சென்றடையும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. தந்தை பெரியாரிடம் நெருக்கமாக பழகுவதற்கு வாய்ப்பில்லாதவன் நான். அவரைப் பற்றி நிறைய நூல்கள் மூலம் புரிந்து வைத்திருக்கிறேன். அந்த புரிதல் அடிப்படையில், பெரியாருடைய எல்லா விதமான குணநலன்களுக்கும் ஒரு தொடர்ச்சியான கொள்கைகளை முன்னெடுக்கிற இயக்கமாக கொளத்தூர் மணி தலைமையிலான இயக்கம் தமிழகத்தில் இன்றைக்கு மிக சிறப்பாக செயல்படு கிறது.

இன்றைய காலகட்டத்திலும் பெரியாரும், அவர் கொள்கைகளும் தமிழகத்திற்கு மிகவும் தேவைப்படு கிறது. பெரியாரைப் பற்றி மக்களிடம் விளக்கு வதற்கு இன்றைக்கு அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அந்தப் பணிக்கு, பெரியார் கொள்கைகளை சரியான முறையில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதுதான் உண்மையான தொடக்கம் ஆகும். அந்தப் பணி யினை திராவிடர் விடுதலைக் கழகம் தொண்டுள்ளத் தோடு செய்து வருகிறது.

தமிழிலுள்ள வல்லமைகளை, பெருமைகளை பேசிப் பேசியே இன்றைக்கு தமிழ்நாடு பாழாய் போய்விட்டது. ஏனென்றால் பெரியார் சொன்ன பகுத்தறிவும், மான உணர்ச்சியும் ஒற்றுமையும் இன்றைக்கு கிடையாது. பெரியார் கருத்துக்களை நாம் நேர்மையோடு பரப்பாதது தமிழுக்கு நாம் செய்யும் இழுக்கு ஆகும். தமிழுக்கு பெருமை சேர்க்க வேண்டுமென்றால் தமிழ் மூலம் பகுத்தறிவை பெற வேண்டும். மானத்தை பெறவேண்டும். ஒற்றுமையை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் தமிழ் வளரும், தமிழனும் வாழ்வான்.

பெரியாரிடம் குறை காண்போர்

திருவள்ளுவர் தன் குறளில் தமிழ் தமிழ் என்று ஒரு வார்த்தைகூட சொன்னது கிடையாது. அவர் தனது குறள் மூலம் தமிழை, தமிழனை, இன்றும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார். எனவே, தமிழர்களே! தமிழ்தான் எல்லாம். தமிழ் தான் என் உயிர் மூச்சு என்று வெறுமையாக சொல்லிக் கொண் டிருக்காமல் பெரியார் எழுதிய புத்தகங்களை வாங்கிப் படியுங்கள். பெரியாரின் கருத்துக்களை உணர்ந்து செயல்படுங்கள். அப்போதுதான் தமிழ் வளரும். மானத் தமிழ் வளரும். மனிதநேயத் தமிழ் வளரும். எதற்கு இதை நான் சொல்கிறேன் என்றால், இப்போது சிலர் பெரியாரையே குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவரிடம் கொள்கைகளை கற்றுக் கொள்ள முதலில் கட்டுப்பாடு வேண்டும். நேர்மையாக சிந்திக்க வேண்டும். அதை விட்டுவிட்டு பெரியாரை குறை சொல்வது என்பது உலகத்தையே மாசுபடுத்துவதற்கு சமமானது.

ஆன்மிகத்தையெல்லாம் பார்க்க வேண்டாம். மருதாசல அடிகளாரைப்போல பாருங்கள். குன்றக் குடி அடிகளாரைப்போல பாருங்கள். அவர்கள் கடவுளை நம்பினார்கள். ஆனால், கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரைப் போற்றினார்கள். உங்களுக்கு ஏன் அந்த அணுகுமுறை வரவில்லை. பெரியாரைப் பற்றி நிறைய கற்றுக் கொள்ளுங்கள். கற்பதற்கு முடிவு இல்லை. பெரியாரைப் பற்றி முழுமையாக அறியாமல் அவரை குறை சொல்லுவதை முதலில் விட்டு தமிழனின் விடுதலையை நோக்கி பயணப்படுங்கள்.

தமிழர்கள் அனைவரும் ஒன்றுசேர வேண்டும் என்று சொல்கிறவர்களைப் பார்த்து நான் கேட்கிறேன். முதலில் உங்களிடம் ஒற்றுமை இல்லையே! அது ஏன் என்று என்றைக்காவது சிந்தித்தீர்களா? தமிழர்களுக்கு என ஒரு முன்னணி படை ஒன்று உருவாக வேண்டும். 7 கோடி தமிழனாக திடீரென்று ஒன்றாக முடியாது. 70 ஆயிரம் பேர், அல்லது ஒரு 7 ஆயிரம் பேர் உருவாக முடியாதா? கொளத்தூர் மணி ஒரு விடுதலைப் படையை உருவாக்கி பயிற்சிக் கொடுத்தார். அது ஒரு ஆயுதப்படை. ஆனால், இங்கு அப்படிப்பட்ட ஒரு கொள்கைப் படை உருவாகாமல் போனதற்கு என்ன காரணம் என இன்றைக்கு பெரியாரை குறை கூறுகிறவர்கள் ஒரு நாளாவது யோசித்துப் பார்த்தார்களா?

அந்த படை உருவாவதற்கு உங்களுக்கு இந்த நாட்டில் என்ன தத்துவங்கள் இல்லை. பெரியார் கொள்கை இருக்கிறது. தமிழர் வாழ்வியல் நூல் திருக்குறள் இருக்கிறது. நாம் ஏன் முயற்சிக்கவில்லை. குறைகள் மட்டுமே பெரிதாகக் கூறி உருப்படாமல் போய்க் கொண்டிருக்கிறோமே, சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பெரியாரை பொருத்தவரையில் அவருக்கு ஒன்று தெரியவில்லை என்றால் அதை உடனடியாக அறிவுணர்வோடு, நேர்மையோடு ஒத்துக் கொள்வார். ஏதேனும் ஒரு கருத்தை தவறாக சொல்லியிருந்தால் யாராவது அதை மாற்றி சொன்னால் அப்படியா? ஆதாரமிருக்கிறதா! எனக் கேட்டு உடனடியாக அதை மாற்றியும் கொள்வார். அவர்தான் பெரியார். மிகப் பெரிய பண்பாளர் ஆவார். ஆனால், அவரைப் பற்றிக் குறை சொல்லும் நம்மிடம் அத்தகைய அறிவு நாணயம் இருக்கிறதா? இல்லை. அத்தகைய உயர்ந்த பண்பு நலன்களை நாம் கடைபிடிக்கிறோமா? இல்லை. மாறாக, அவரை இழிவுபடுத்துவதில் முன்னிலையில் இருக்கிறோம்.

பெரியாரிடம் குறை இருக்கிறது என்று சொல்லி சொல்லியே, அதை யோக்கிய சிகாமணிகளாக விமர்சனம் செய்கிறோம் என்ற போர்வையில் அடியறுப்பு வேலையைத்தான் இன்றும் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். இது தமிழனின் கெட்ட குணம். இதில் நமக்கும், தமிழுக்கும் பெருமையில்லை. இதை நாம் முதலில் உணர வேண்டும். உடனே விமர்சனம் செய்பவர்கள் நாம் பக்குவமாக பெரியார் கொள்கைகளை மறு ஆய்வு செய்கிறேன் என்று சொல்லுவார்கள்.

நான் கேட்கிறேன், நீங்கள் யார் ஆய்வு செய்ய? தமிழ் இனம் மான உணர்வு பெற உரிமைகளை மீட்டெடுக்க, முதலில் நீங்கள் என்ன செய்தீர்கள்? அதை மட்டும் வசதியாக விட்டுவிட்டு விமர்சனம் மட்டும் செய்ய உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?

பெரியாரை நான் பார்த்தபோது எனக்கு மிகப் பெரிய பயம் வந்தது. காரணம், அவருடைய பேச்சுகள் மிகக் கடுமையாக இருக்கும். பகுத்தறிவை முன்னிறுத்தி அறிவு வானத்தில் சிறகடித்துப் பறந்தார். அவருடைய வார்த்தைகளில் நெருப்புப் பறக்கும். இருந்தாலும் அவருடைய ஒவ்வொரு சொல்லும் நிதானமாகவும், நேர்மையாகவும், அறிவு கூர்மையுடனும் இருக்கும்.

பெரியார் தமிழகத்தில் உறங்கிக் கிடந்த தமிழினத்தையே அடித்து எழுப்பினார். காரணம், அன்றைக்கு தமிழனின் தூக்கம் சாதாரண தூக்கமல்ல. அபின் அடித்தவன்போல, கஞ்சா குடித்தவன் போல அடிமைத்தனத்தில், பிற்போக்குக் கருத்துகளில், மூடத்தனங்களில் மூழ்கிக் கிடந்தான். அவனை அடித்து எழுப்பி மான உணர்வை ஊட்டியது பெரியாரின் கைத்தடி மட்டும் தான்.

ஆனால், இன்றைக்கு என்ன நிலைமை? மீண்டும் தமிழன் தன் பழைய நிலைக்கே போய்விட்டான். சாதிய வெறியை தூக்கிப் பிடித்து, மத போதையில் மூழ்கிக் கிடந்து, கீழே கொட்டிய நெல்லிக்காய் போல ஒற்றுமை இல்லாமல் பிரிந்து கிடக்கிறான். இவனை மீண்டும் எழுப்புவதற்கு நமக்கு இன்றும் பெரியார் தேவைப்படுகிறார். ஏனென்றால் பெரியார் ஒரு சகாப்தம். பெரியார் ஒரு இமயம். பெரியார் ஒரு காலத்தின் கட்டாயம் அவருடைய நெருப்பு வார்த்தைகள் தமிழன் மீண்டும் சொரணை பெற நமக்குத் தேவைப்படுகிறது.

அத்தகைய உணர்வுகளை தமிழகத்தில் மீண்டும் எழுப்ப முயற்சிக்காமல் பெரியாருக்கு மறு விளக்கம் தருகிறேன் என்று சொல்லி, அவருடைய மைய கருத்துக்களை, அவருடைய போராட்ட உத்திகளை, அவருடைய போர் திட்டங்களையெல்லாம் மாற்றி அமைத்து விடாதீர்கள்.

நல்லவர்களே சில பேர் இன்றைக்கும் அதைத் தான் செய்கிறார்கள். எனவே அருள்கூர்ந்து கேட்டுக் கொள்கிறேன், வரலாற்றின் உண்மையாக புரிந்து கொள்ளுங்கள். வரலாற்றின் திரிபுவாதங்களை செய்யாதீர்கள். பெரியார் கொள்கைகளை முன்னெடுத்து, தமிழர்களை ஒன்றுபடுத்துங்கள். ஏனென்றால், இன்றைக்கு நம் இனத்தின் எதிரிகள் வலுப்பெற்று வருகிறார்கள். அவர்களின் சதிகளை முறியடிக்க பெரியாரின் கருத்துகளையும், திருக்குறள் கருத்துகளையும் உங்கள் வாழ்வின் நெறிகளாகக் கொள்ளுங்கள். அதற்கான போராட்ட களங்களை அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள சூளுரைப்போம்” என்று உரையாற்றினார்.

செய்தி: மன்னை காளிதாசு

Pin It