விபுலானந்த அடிகள் என்ற அறிஞர் தமிழ் ஈழத்தின் மட்டக்களப்பைச் சேர்ந்தவர். தமிழிலும் பல்வேறு மொழிகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர். 1922 ஆம் ஆண்டு முதல் சென்னையில் இராமகிருஷ்ண மிஷன்  மயிலாப்பூர் மடத்தில் பணியாற்றியவர். இராமகிருஷ்ண மிஷன் நடத்திய ‘$ராமகிருஷ்ண விஜயம்’ என்ற தமிழ் மாத இதழுக்கும், ஏநனயவேய முநளயசை என்ற ஆங்கில இதழுக்கும் ஆசிரியராக இருந்தவர். மதுரைத் தமிழ்ச்சங்கம் நடத்திய பண்டிதர் தேர்வில் தேர்வாளராகவும், தமிழ்ச்சங்க வெளியீடான ‘செந்தமிழ்’ இதழின் கட்டுரையாள ராகவும் இருந்தார். 1924 க்குப் பிறகு இலங்கை திரும்பி, அங்கு இராமகிருஷ்ண மிஷன் மேற்கொள்ளும் கல்விப் பணிகளை ஒருங்கமைத்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1931 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தின் முதல் தமிழ்ப் பேராசிரியராகப் பணி ஏற்றார். இசை சம்பந்தமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு ‘யாழ்நூல்’ என்ற நூலை எழுதினார். இராமகிருஷ்ண மிஷன் இமயமலைப் பகுதியில் உள்ள ‘அல்மோரா’ என்ற ஊரிலிருந்து வெளியிடும்  'பிரபுத்த பாரதம்' என்ற இதழின் ஆசிரியராக இருந்தார். 1943 ஆம் ஆண்டில், இலங்கையில் பல்கலைக்கழகம் இயங்கத் தொடங்கிய போது தமிழ்த் துறையின் முதலாவது பேராசிரியராகப் பணி ஏற்றார்.

ஒரு தலைசிறந்த தமிழ் அறிஞராகவும், இந்து மதத்தின் மிகப்பெரும் மதப் பிரச்சார நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாளராகவும் திகழ்ந்த விபுலானந்த அடிகளின் கட்டுரையைத் தோழர் பெரியார், தாம் நடத்திய ‘பகுத்தறிவு’ இதழில் மிக விரிவாக வெளியிட்டுள்ளார். ஆங்கிலத்தை எப்படி அணுகுவது என்பதில் அவரது வரிகளுக்கும் பெரியாரின் வரிகளுக்கும் வேறுபாடே பார்க்க முடியவில்லை. (கட்டுரையின் முடிவில் நமக்குச் சில மாறுபட்ட கருத்து உள்ளது 1936 ஆம் ஆண்டு நவம்பர் மாத இதழில் வெளியான அந்த அறிஞரின் கட்டுரையிலிருந்து சில பக்கங்களை மட்டும் வழங்குகிறோம்.

english book 600இங்கிலீஷூம் தேச பாஷைகளும்

நம் நாட்டில் பேசப்படும் பாஷைகள் எல்லாம் இங்கிலீஷ் பாஷையின் சம்பந்தத்தால் அதிக விருத்தியடைந்தன. சமஸ்கிருதம் அரபி பாஷைகளின் சம்பந்தத்தால் அடைந்ததை விட அதிகமான பிரயோஜனத்தைத் தேச பாஷைகள் இங்கிலீஷ் சம்பந்தத்தால் அடைந்துள்ளன என்பது மிகையாகாது.

தேச பாஷைகளின் சொற்றொகுதி (Vocobulary) பெரிதும் விரிவடைந்திருப்பது ஒன்று. சிறப்பாக அரசியல், விஞ்ஞானம், வியாபாரம், கைத்தொழில் துறைகளில்தான் இங்கிலீஷ் பாஷையின் கூட்டுறவால் விளைந்த பயன் நன்கு தெரியும்.

உதாரணமாக, தேச பாஷைகளில் பிரசுரிக்கப் படும் எந்த ஒரு தினசரிப் பத்திரிக்கையை எடுத்துக் கொண்டாலும் இங்கிலீஷிலிருந்து நாம் எடுத்தாளும் வார்த்தைகள் எவ்வளவென்பதும், அவ் வார்த்தைகள் குறிக்கும் கருத்துக்களை மொழி பெயர்ப்பு வார்த்தைகளால் தெரிவிப்பது எவ்வளவு கஷ்டமானது என்பதும் காணலாம். உதாரணத்திற்குச் சில பதங்களை (தினமும் வழக்கத்தில் உள்ளவற்றை) கீழே தருகிறோம்.

அரசியற் சொற்கள்: காங்கிரஸ், வொர்க்கிங் கமிட்டி; பார்லி மெண்டரி கமிட்டி; சேர்மென்; டெபுடி; பிரசிடண்டு; அசெம்பிளி; கெளன்சில்; வோட் ; போல்; ஆர்டர்; கமிஷன்; ஜஸ்டிஸ்; etc

கலைச்சொற்கள்: ரேடியோ; புரோகிராம்; டெலிபோன் ப்ராட்காஸ்ட்; செட்; ரிகார்டு etc.

வியாபாரச் சொற்கள்: ஹார்பர்; ஸ்டீமர்; மார்க்கட்; பீஸ் (ஜவுளி) ஆவரேஜ்; சிமிட்டி;பேல்; லாட்; ஸ்பெஷல்; கண்டிராக்ட் etc

கைத்தொழில் சம்மந்தமானவைகள்: லேபர்; யூனியன்; போனஸ்; சிம்னி’ இன்ஜின்; பவர்; மானேஜர்; டிரைவர் etc

மேற்கண்ட சொற்களில் சிலவற்றிற்குத் தேச பாஷைகளில் சொற்கள் தேடிப் பிடிக்கக் கூடுமென்றாலும், இங்கிலீஷ் சொற்கள் தெரிவிக்கும் உணர்ச்சிகளை, மொழிபெயர்ப்பு வார்த்தைகள் உண்டாக்குவது சாத்தியமில்லை. மேற்படி சொற்களைப் போன்ற நூற்றுக்கணக்கான சொற்களைத் தினந்தோறும் தேசபாஷைப் பத்திரிக்கைகள் உபபோகித்து வருகின்றன.

பாஷை நடையில் மாறுதல்

சொற்பெருக்கம் மட்டும் அன்றிப் பாஷை நடையிலும் இலக்கிய அமைப்பிலும் தேச பாஷைகள், இங்கிலீஷின் சம்மந்தத்தால் பெரிய மாறுதல்களையடைந்து வருகின்றன. உதாரண மாகத் தமிழில் 100 வருஷங்களுக்கு முன், வசன நடையில் நூல்களே இருக்கவில்லை. ஒன்றிரண்டு இருந்தாலும், அவைகள் செய்யுள் நூல்களின் உரை நூல்களாகவும் வியாக்கியானங்களாகவும் இருந்தன. இவைகளும், படிப்போர் பல்லை உடைக்கும் கடின நடையில் எழுதப்பட்டிருந்தன. அரும்பெருங் கருத்துக்களைச் செய்யுளிற் போலவே, வசனத்திலும் அமைத்து இலக்கியங்கள் எழுதலாம் என்றுதேச பாஷைப் பண்டிதர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

வசன நூல்களின் மூலம்தான், பாமர ஜனங்கள் அறிவுபெற முடியும் என்பதையும் சமீப காலம் வரை ஒப்புக்கொள்ளவில்லை. வழக்கத்தில் இல்லாத வார்த்தைகளைக் கொண்டு கருத்துக்களை எவ்வளவுக்கெவ்வளவு மறைத்து எழுத முடியுமோ, அவ்வளவுக் கவ்வளவு நூலின் மதிப்பு உயர்வதாகப் பண்டிதர்கள் எண்ணினர். இந்தக் கொள்கை மாறி, வெள்ளைச் சொற்களால் எல்லாருக்கும்  எளிதில் விளங்கும்படி எழுதுவதுதான் சிறந்த நடையென்று ஒப்புக்கொள்ளப் பட்டதும், இங்கிலீஸ் பாஷையின் இலக்கியப் போக்கையும், நடையையும் பின் பற்றியேயாகும்.  

இலக்கியப் பொருளிலும் மாறுதல்

நமது தேச பாஷைகளில் உள்ள இலக்கியங்களின் பொருளும், சமீப காலம்வரை மதம், கடவுள், பக்தி முதலிய ஒன்றிரண்டு துறைகளிலேயே சுழன்று தேங்கிக் கிடந்தது. கீழ்நாட்டு இலக்கியங்களில் 100க்கு 99, மத சம்மந்தமானவை களாகவேயிருந்தன.

இயற்கைப் பொருள்களைப் பற்றியும், ஜன சமூக வாழ்க்கைக் காட்சிகளை உள்ளபடி சித்தரித்தலையும், விஞ்ஞான சம்மந்தமான ஆராய்ச்சிகளையும், பல்வேறு கலைகளின் வளர்ச்சியைப் பற்றியும் இலக்கியங்கள் எழுதப்பட ஆரம்பித்திருப்பதும் இங்கிலீஸ் இலக்கியங்களைப் பின்பற்றியேயாம். மேற்கூறிய மூன்று வகைகளிலும் தேசபாஷைகள், இங்கிலீஷின் கூட்டுறவால் நன்மையடைந்திருப்பதாகச் சொல்லலாம்.

இங்கிலீஷே இரண்டாவது பாஷை.

நம்முடைய உள்ளக் கருத்தைப் பிறருக்குத் தெரிவிப்பதற்கும், பிறர் கருத்துக்களை நாம் அறிந்து கொள்வதற்கும் பாஷை உதவுகிறது. நம்முடைய மனத்தில் எழும் உணர்ச்சிகளைத் தங்கு தடையின்றித் தாராளமாய் வெளியிடுவதற்கு நாம் பிறந்தது முதல் இலக்கியப் பயிற்சிக்கும் கவிதை யின்பத்திற்கும் ஒருவரது தாய் மொழியே சிறந்த சாதனமாகும்.

ஆனால், பாஷை ஜனங்களுடன் கூட்டுறவு கொண்டு ராஜீய வியாபார சம்பந்தப்பட்ட உலக விவகாரங்களில் ஈடுபடுவதற்கு, நம்முடைய தாய் மொழி பயன்படுவதில்லை. இரண்டாவது பாஷையைக் கற்க வேண்டி வருகிறது. இந்த இரண்டாவது பாஷையானது, உலகில் உள்ள பெரும் பாலானவர்களுக்குப் பொதுவானதும் நாகரீக வளர்ச்சிக்குத் துணையாக இருப்பதும், இலக்கியப் சிறப்பு வாய்ந்ததும் ஆக இருத்தல் அவசியம்.

இந்த வகையில் பார்க்கும் போது நம் நாட்டின் தற்கால நிலைமைக்கும், உலக நிலைமைக்கும் பொருத்தமான பொதுப்பாஷை இங்கிலீஷேயாகும். இங்கிலீஷையே நாம் இரண்டாவது பாஷையாகக் கற்பது பயன் தரும்.

இங்கிலீஷீக்கு மதிப்புக் குறையவில்லை.

தேசிய இயக்கத்தில் தீவிரமாய் ஈடுபட்டுள்ள சிலருக்கு, இங்கிலீஷ் பாஷையிடத்தில் உள்ள வெறுப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கிலீஷ்காரரிடத்தில் உள்ள துவேஷமும், சுதேச பாஷையிடத்துள்ள பிரேமையும், இங்கிலீஷ் பாஷையின் சிறப்பையும், அதனால் ஏற்பட்ட நன்மைகளையும் மறைத்து விடுகின்றன.

ஆயினும் ஹிந்திப் பைத்தியம் பிடித்த தேசபக்தர்கள்கூடத் தங்கள் மக்களுக்கு இங்கிலீஷ் கல்வி கற்பிக்காமல் நிறுத்திவிடவில்லை. காலேஜ்களிலும், உயர்தர பாடசாலைகளிலும் இடத்திற்கு மும்முரமான போட்டி இருந்து வருகிறது. இங்கிலீஷ் கல்வி கற்று அதன் மூலம் பெருமையடைந்த ஒரு கூட்டம், தங்கள் பிள்ளை குட்டிகளுக்கு வீட்டில் பேசுவதுகூட இங்கிலீஷில் பழக்கி, இங்கிலீஷ் பாடசாலைகளுக்கு அனுப்பிக் கொண்டு, மேடைகளில் வந்து, ஹிந்தியை எல்லாரும் கற்றுக் கொள்ளுங்கள் என்று பிரசாரம் செய்வ தென்றால், அது ஏமாற்றுப் பிரசாரம் அல்லவா என்று கேட்கின்றோம். இவர்கள் பேச்சை நம்பி இங்கிலீஷை வெறுத்துக் கற்காமல் விடுவது முட்டாள்தனம் அல்லவா என்றும் கேட்கின்றோம்.

ஆயினும் சாமான்ய ஜனங்கள் இவர்கள் பேச்சை ஏற்றுக்கொள்ளவில்லை. இள வயதில் இங்கிலீஷ் கற்கும் பாக்கியம் பெறாதவர்கள், வயதுவந்த ஏதோவொரு தொழிலை நடத்தி வருகிறபோதுகூடச் சிறிதாவது இங்கிலீஷ் எப்படியாவது படித்துக்கொள்ளவேண்டும் என்று பெருமுயற்சி செய்கிறார்கள். சாமான்ய ஜனங்களிடத்தில் வளர்ந்துள்ள இந்த இங்கிலீஷ் பாஷா விருப்பத்தை அறிந்து, புஸ்தக வியாபாரிகள் “ஆங்கிலபோனி “யென்றும் “ஆங்கில ஆசான்” என்றும் “இங்கிலீஷ் ஸ்வயபோதினி” என்றும் தமிழ்மூலம் இங்கிலீஷ் கற்பிக்கும் புஸ்தகங்களை வெளியிட்டு, இரண்டு ரூபாய், மூன்று ரூபாய் விலை போட்டுப் பதினாயிரக்கணக்கான பிரதிகளை வருஷா வருஷம் விற்று வருகிறார்கள். இதிலிருந்து, இங்கிலீஷ் பாஷைக்குள்ள மதிப்பு அதன் பிரயோஜனத்திற்குத் தகுந்தபடி வளர்ந்து வருகிறது தெரியக் கூடும்.

உலக இலக்கியங்களின் பொக்கிஷம்

கவி ரவீந்திரநாத் தாகூர் வங்காளியில் பல சிறந்த நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் அவரை உலகம் மதிக்கச் செய்தது, அவருடைய நூல்களின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்புக்களே. தாகூரின் கவித் திறமையை நாம் (தமிழர்) அறிந்ததும், அவர் நூல்களின் இங்கிலீஷ் மொழிபெயர்ப்புகளின் மூலமேயாகும். ஆனால் தாகூரின் சொந்த மொழிகளைப் படித்து இன்புற வேண்டுபவர்கள் வங்காளி பாஷையைப் படிக்கட்டும்.

அதுபோல, துளசிதாஸர் இராமயணத்தை கிரந்தகர்த்தாவின் சொந்த வார்த்தைகளில் படித்து இன்பம் பெற விரும்புபவர்கள் ஹிந்தி கற்றுக்கொள்ளட்டும். உமாரின் ரூபாயத்தைப் பாரசீக பாஷையில் படிக்க விரும்புபவர், பாரசீக பாஷை கற்கட்டும்; கத்தேயின் “பாஸ்ட் ((Goethe's faust)) என்னும் உலகிற் சிறந்த காவியத்தை ஜெர்மன் பாஷயில் படிக்க விரும்புவர் ஜெர்மன் பாஷை கற்றுக் கொள்ளட்டும்; ஹோமரின் இலியத்தை கிரேக்க பாஷை கற்றுப் படிப்பவர் படிக்கட்டும்;

ஆனால் உலகின் பல பாஷைகளில் உள்ள சிறந்த இலக்கியங்களை, அவ்வப் பாஷைகளைக் கற்றுப் படிப்பது எந்த ஒருதனி நபருக்கும் சாத்தியமான காரியம் அல்ல. உலக இலக்கியங்களில் பொறுக்கு மணிகள் போன்றுள்ள சிலவற்றைக்கூட, நம் நாட்டு பாஷைகளில் மொழிபெயர்த்து விடுவதும் உடனே கைகூடும் காரியமல்ல. ஆனால், ஒருவன் இங்கிலீஷ் பாஷை ஒன்றைக் கற்றுக் கொள்வதன் மூலம், உலக இலக்கியப் பொக்கிஷத் திற்குத் திறவுகோலைப் பெற்று விடுகிறான். உலகத்தின் சிறந்த நூல்கள் எல்லாவற்றையும் வாசிக்க வசதியடைந்து விடுகிறான்.

ஹிந்திக்கு ஆட்சேபணை

இந்தியாவில் சுமார் 9 கோடி மக்களுக்கு ஹிந்தி தாய் பாஷையாக இருப்பது உண்மை. ஆனால் மீதி 26 கோடி மக்களும் ஹிந்தியைக் கற்றுக்கொள்வ தென்பது என்றும் முடியாத காரியம். எங்கும், சமூகத்தின் ஒரு சிலர்தான் தாய் பாஷையுடன் இரண்டாவது பாஷை கற்க முடியும்.

இப்போது இந்தியா முழுவதிலும் இங்லீஷ் பாஷை பொதுப் பாஷையாக இருந்து வருகிறது. ஹிந்தி பேசப்படும், ஐக்கியமாகாணம், பீகார் மாகாணங்களிலும் இங்கிலீஷ்தான் பொதுப் பாஷையாக விருக்கிறது. இங்கிலீஷ், இந்தியர்கள் ஒருவருக்கும் தாய் பாஷையாக இல்லாத காரணத்தால், இங்கிலீஷ் கற்பதில் எந்த ஒரு சமூகத்திற்கோ, ஒரு மாகாணத்திற்கோ விசேஷ செளகரியம் அல்லது சலுகையிருக்க இடமில்லை. இங்கிலீஷ் கற்பதில் உள்ள செளகரியமும், கஷ்டமும், எல்லாச் சமூகங்களுக்கும், எல்லா மாகாணங் களுக்கும் ஒரே தன்மையில் இருப்பதால், யாருக்கும் ஆட்சேபிக்க இடமில்லை.

ஆனால் ஹிந்தியைப் பொது பாஷையாக ஏற்படுத்துவதில், ஹிந்தி வழங்கும் மாகாண வாசிகளுக்கும், ஹிந்தியைத் தாய் பாஷையாகவுள்ள சமூகங்களுக்கும், விசேஷ செளகரியங்களும், சலுகைகளும் ஏற்பட்டுவிடும். இதுபற்றி மற்ற மாகாணவாசிகளும், மற்ற சமூகங்களும் பொறாமைப் படுவதும் நியாயமாகும். ஹிந்தியைத் தாய் மொழியாகக் கொள்ளதவர்களுக்கு, இங்கிலீஷைவிட ஹிந்தி அந்நியமான பாஷை யாகவே இருக்கிறது. ஆகையால், ஹிந்தி பேசாத ஜனங்கள் ஹிந்தியைப் பொதுப் பாஷையாக்க உடன்பட மாட்டார்கள். மற்ற பாஷைகள் சம்மதிக்கா.

ஹிந்தியும் மகம்மதியரும்

பேச்சு வடிவத்தில், ஹிந்திக்கும், இந்துஸ்தானிக்கும் ஓரளவு ஒற்றுமை இருப்பதிலிருந்து, மகம்மதியர் ஹிந்தியை ஒப்புக்கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பது தப்பு. அரபி, பாரசீகச் சொற்கள் மிகுதியும் கலந்த இந்துஸ்தானியைப் பேசும் மகம்மதியர் சம்ஸ்கிருதச் சொற்கள் மலிந்த ஹிந்தியைப் பேச்சு வழக்கிற்கூடத் தங்கள் மொழியாக ஒப்புக்கொள்வதில்லை.

வரிவடிவத்தில், ஹிந்தியின் தேவ நாகரி லிபியை, மகம்மதியர் என்றும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. இந்துஸ்தானியும் சிறிது ஹிந்தியும் கலந்த கிராமிய பாஷையாக வட இந்தியர்களில் பெரும்பாலார் பேசிவரும் ஹிந்தி - இந்துஸ்தானி பாஷைக்கு, தேவ நாகரி லிபியும், இந்துஸ்தானி லிபியும் இல்லாமல்,ரோமன் லிபியை (இங்கிலீஷ் எழுத்து) ஏற்படுத்தினால், ஒருவேளை வட இந்தியாவுக்கு, ஹிந்தியும் இந்துஸ்தானியும் கலந்த இந்த கிராமிய பாஷை பொது மொழியாகக்கூடும். இந்த நிலைமையில், திராவிட தேசத்தவர்கள், சமஸ்கிருதச் சார்பில்முளைத்த, தேவ நாகரி லிபியில் வரையப்படும் இலக்கிய ஹிந்தியைப் பொதுப் பாஷையாக ஏற்பது எப்படி முடியும்?

காலநிலை

விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக, உலகம் நாளுக்கு நாள் சிறியதாகி வருகிறது. காலம், தூரம் ஆகிய இரண்டு தடைகளும் தகர்க்கப்பட்டு வருகின்றன. உலகின் பற்பல நாடுகளும் விரைவில் இணைக்கப் படுகின்றன. பரந்த கடல்களையும், உயர்ந்த மலைகளையும், தாண்டி, மனிதன் குரல் உலகின் ஒரு கோடியிலிருந்து மற்ற கோடிக்குக் கேட்கிறது. ரேடியோ, கிராமபோன், டாக்கி, டெலிவிஷன் முதலிய சாதனங்கள், எழுத்துப் படிப்பின் அவசியத்தைக் குறைத்து எல்லா விஷயங்களையும் கேட்டுத் தெரிந்து கொள்ளும் படிச் செய்துவிட்டன. மேற்கண்ட நவீன சாதனங்களின் முழுப்பிரயோஜனத்தையும் நாம் அடையவேண்டுமானால், நாகரீக உலகத்தில் செல்வாக்குப் பெற்றுள்ள இங்கிலீஷ்பாஷையை நாம் அறிந்து கொண்டால்தான் பயன் உண்டு.

நியூயார்க்கிலிருந்து டெலிபோனில் பேசுவதையும், இலண்டனிலிருந்து ரேடியோவில் சொல்வதையும், பாரிசிலிருந்து பிராட்காஸ்ட் செய்வதையும், இங்கிலீஷும் ஹிந்தியும் தெரிந்த துவிபாஷிகளைக் கொண்டு முதலில் ஹிந்தியில் மொழி பெயர்த்துப் பின் நம் தாய் பாஷைகளில் மொழி பெயர்த்துத் தெரிந்துகொள்ள வேண்டிய நிலைமை விரும்பத்தக்கதாவென்பதைத் தமிழர்கள் யோசிக்கவேண்டும்.

இங்கிலீஷைப் புறக்கணித்து, ஹிந்தியைப் பொதுமொழியாக நாம் ஒப்புக்கொள்வோ மானால், நாகரீக உலகத்துடன் நேரடியாகச் சம்பந்தம் வைத்துக்கொள்வது சாத்தியமில்லாமற் போகும். ஹிந்தி மூலமாகவே வெளியுலகச் சம்பந்தம் வைத்துக்கொள்ள முடியுமா என்பதையும் யோசித்தறியும்படிக் கேட்கிறோம்.

உலகப்போக்கு

சுமார் 3000 பாஷைகள் வழங்குகிற உலகம் முழுவதற்கும் ஒரு பொதுப் பாஷையை ஏற்படுத்த வேண்டுமென்று, நாகரீகம் பெற்ற ஜனங்கள் பலரும் முயற்சித்து வருகிறார்கள். “எஸ்பிராண்டோ“ (Esperanto) என்ற ஒரு பாஷை உலகப் பொதுப் பாஷையாக தற்காலம் இருந்து வருகிறது. ஆனால் இப்பாஷை பெருவாரியான மக்களால் பயிலப் படுவதில்லை. இதற்குப் பதில், செல்வாக்குள்ள மேல்நாட்டுப் பாஷைகளில் ஒன்றே உலகப் பொதுப்பாஷையாக ஏற்படும் என்று அறிவாளிகள் அபிப்பிராயப்படுகின்றனர்.

இங்கிலீஷ், பிரஞ்சு அல்லது ருஷியன் ஆகிய மூன்றில் ஒரு பாஷை, உலகப் பொதுப்பாஷையாகக் கூடும் என்று எச்.ஜி.வெல்ஸ் சொல்லுகிறார். உலகத்தில் மொத்தம் சுமார் 180 கோடி ஜனங்கள் இருக்கின்றனர். இவர்களில் 18 கோடிப் பெயர் இங்கிலீஷூம், 10 கோடி பெயர் ருஷிய பாஷையும், 7  கோடி பெயர் பிரஞ்சு பாஷையும் பேசுவதாகக் கணக்கு. தற்காலம் ஐரோப்பாவில் சர்வதேசக் கூட்ட நடவடிக்கைகள் பெரும்பாலும் பிரஞ்சு பாஷையிலும், சிறுபாகம் இங்கிலீஷ் பாஷையிலும் நடைபெறுகின்றன.

நாம் ஹிந்தியைப் பொதுப்பாஷையாக்கத் தீர்மானிப்பதற்குள்ளாகவே, உலகம் இங்கிலீஷைப் பொதுப்பாஷையாக ஒப்புக்கொண்டுவிடும். உலகம் உள்ள இந்த நிலையில், ஹிந்தியைப் பொதுப் பாஷையாக ஆக்க வேண்டுமென்று கருதி, உலகத்தில் ஒப்பற்ற செல்வாக்குப்படைத்திருக்கும் இங்கிலீஷ் பாஷையைப் புறக்கணிப்பது, நமக்குச் சிறிதும் நன்மையுண்டாக்காது.

 ஹிந்தியைப் பொதுப்பாஷையாக்குவதால்

  1. நம் தாய்மொழிகளின் வளர்ச்சியும் ஆக்கமும் குறையும்.
  2. நாகரீக வளர்ச்சியும், முற்போக்குணர்ச்சியும் தடைப்படும்.
  3. நாகரீக உலகத்துடன் நேர்முகமாக நமக்குள்ள தொடர்பு நீங்கிவிடும்.
  4. பிற்போக்குணர்ச்சியும் பெளராணிக மனப் பான்மையும் ஊக்கம் பெறும்.
  5. விஞ்ஞான, கலைகளின் வளர்ச்சியும், நவீன சாதனங்களால் அடையக்கூடிய நன்மைகளும் குறையும்.
  6. பாமர மக்கள் மனத்தில் முளைத்துள்ள சமூக, சுதந்திர, சுய மரியாதையுணர்ச்சிகள் பரவி வளர்வது கஷ்டமாகிவிடும்.
  7. இங்கிலீஷ் பாஷையுடன் தோன்றி வளர்ந்துள்ள அரசியல் கொள்கைகளும், ஜனநாயக உணர்ச்சியும், ஸ்தாபனங்களும் ஒழிந்து பழமை விலங்குகளை மக்கள் பூட்டிக்கொள்ளச் சாதகமாகும்.

தீவிர தேசீயவாதிகள் கனவு காண்பதுபோல, இங்கிலீஷ் ஆட்சியும், இங்கிலீஷ் சம்பந்தமும் நாளையதினமே ஒழிந்துவிடப் போவதில்லை. அப்படி ஒழிந்த காலத்திலும் கூட, சுதந்திரம் பெற்ற இந்தியா, நாகரீக உலகத்தின் சம்பந்தத்தை அறுத்துவிட்டுத் தனித்து வாழமுடியாது. சுதந்தரம் பெற்ற பின்னும் இங்கிலீஷே, நமக்கு மிகுதியும் பயன் தரும் பொதுப்பாஷையாகும்.

எனவே இதுபோது ஒரு சிலர் செய்துவரும் ஹிந்திப் பிரசாரத்திற்குத் தமிழர் எவரும், செவி சாய்க்கலாகாது; எவ்வித உதவியும் செய்யக்கூடாது. அவ்வாறு செய்வது தமிழர் முன்னேற்றத்திற்குத் தடை செய்வதாகும்.

“இந்தியாவின் பல பாகங்களிலும், உயர்ந்த விஞ்ஞானக் கலையாராய்ச்சிக்குப் பொது மொழியாக ஆங்கில மொழி அமைதலும், ஒவ்வொரு மாகாணத்திலும் ஏழை மக்கள் எளிதிற் பயின்றுகொள்ள வேண்டிய கலைத்துறைகள் அனைத்தும் நாட்டு மொழிகளில் அமைந்து நிற்பதும் பொருத்தமாகும்”

பகுத்தறிவு ஏடு - 20.09.1936

Pin It