கடந்த வாரம் ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஏட்டில் ஒரு பார்ப்பனர், அறிவியல் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். வீட்டில் காக்காய் (காகம்) கத்தினால் கட்டாயம் விருந்தினர் வருவார்கள் என்று. அந்தக் கட்டுரை ‘அறிவான’(!) விளக்கங்களை முன் வைத்தது. பூனை குறுக்கே வந்து விட்டால், சில வீரத் தமிழர்கள் உடனே வீடு திரும்பி விடுவார்கள். ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து, பரிகாரம் செய்துகொண்டு கிளம்புவார்கள். நரி முகத்தில் விழித்தால் நல்லது நடக்கு மாம். ஒரு திரைப்படத்தில் தூங்கிக் கொண்டிருக்கும் செந்திலை எழுப்பி, நரி போல கத்தச் சொல்லி, கடனை வசூலிக்கக் கிளம்புவார் கவுண்டமணி. சைக்கிளில் ஊர்போய்ச் சேர்ந்தபோது கடன் வாங்கிய ராமசாமி, செத்துப் போயிருப்பார். புலி முகத்தில் விழித் தால் புண்ணியம் கிடைக்கும் என்றால் எவராவது ‘புண்ணியத்தை’ வாங்க விரும்புவார்களா, என்ன? இப்படிப் பழந்தமிழன் கண்டுபிடித்த தகவல் தொடர்பு சாதனங்கள் காக்கை, பூனை, நரி, கூண்டுக்குள் அடைபட்டுக் கிடக்கும் கிளி - இவைகள்தான்.

பிரிட்டிஷ் ஆட்சியில் முதன்முதல் கரும்புகையை கக்கிக் கொண்டு தொடர்வண்டிகள் வந்தபோது, பல ஊர்களில் தொடர் வண்டிப் பாதைக்கு அருகே குடியிருந்த மக்கள் ஊரையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டார் களாம். ‘அய்யய்யோ, கரும்புகையை கக்கிக் கொண்டு பூதம் வருகிறது’ என்று அலறினார்களாம். அதே பிரிட்டிஷ்காரன் தான் முதன்முதலாக, கம்பியில்லா தந்தி முறையை கல்கத்தா வில் அறிமுப்படுத்தினான். அது நடந் தது 1851இல்! அதற்கு 31 ஆண்டு களுக்குப் பிறகுதான் தொலைபேசி வந்தது. தந்தி வந்திருக்கிறது என்று சொன்னாலே போதும், செத்தவர் யார் என்பதை அறிவதற்கு முன்பே நெஞ்சில் அடித்துக் கொண்டு, ஒப்பாரியைத் தொடங்கி விடுவார்கள் நமது தாய் மார்கள்! சாவுச் செய்திக்காகவே தந்தி என்ற நிலை மெல்ல மெல்ல மாறியது. ‘மங்களகரமான’ திருமணங்களுக்கு வாழ்த்துச் செய்திகள்; பதவி நியமன அறிவிப்புகள்; இவைகளும் தந்தி வழங்கிய சேவைகளாயின!

அந்தக்கால தமிழ்த் திரைப்படங் களில் கதைகளில் திருப்புமுனைகளை உருவாக்க நமது கதாசிரியர்களுக்கு தந்திகள்தான் கைகொடுத்தன. காதலர் களை பிரிப்பதற்கு, ‘கிளைமேக்ஸ்’ காட்சியில் பிரிந்த குடும்பங்களை சேர்த்து வைத்து ‘சுபம்’ போடுவதற்கு, தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா கதா பாத்திரங்கள் மாரடைப்பில் மரண மடையச் செய்வதற்கெல்லாம் தந்திகள் தான் காட்சிகளில் வந்து கொண் டிருக்கும்!

அடியேனுக்கு தந்தியின் மீது இவ்வளவு கரிசனம் வருவதற்கும் ஒரு சுயநலம் உண்டு. குடும்பத்தின் முதல் பட்டதாரியான அண்ணனுக்கு தந்தித் துறையில்தான் வேலை கிடைத்தது. அடிக்கடி அந்த அலுவலகம் போகும் போது ‘கட்கடட; கடகடகட்’ என்று அண்ணன் தட்டிக் கொண்டே இருப்பார்.

அடுத்த வீட்டுத் தோட்டக்காரர் அஞ்சலட்டையில் கடிதம் எழுதித் தருமாறு என்னிடம் அவ்வப்போது கேட்பார். கடிதத்தை எழுதி முடித்தப் பிறகு, கடைசி வரியாக, ‘இந்தக் கடிதத்தை தந்தி போல் பாவித்து பதில் போடவும்’ என்ற வரியை கட்டாயம் சேர்க்கச் சொல்வார். அதாவது கடிதங்களேகூட தந்தியாகக் கருதப் பட்டன.

இதெல்லாம் பூலோக சமாச்சாரம். சிவலோக பதவி - வைகுண்ட பதவிகளை அடைந்த நமது முன்னோருக்கு இந்த தந்தியால் செய்திகளை அனுப்ப முடி யுமா? மேலே பிதுர்களாக அலைந்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இறந்த நாளில் திதி கொடுத்து, அவர்களுக்கு ‘உணவுப் பாதுகாப்புச் சட்டம்’ வராத காலத்திலேயே சாப்பாடுகளை அனுப்பி வைக்கும் சக்தி மிக்க கருவி ஒன்றை நமது புரோகிதர்கள் கண்டுபிடித்து வைத் திருக்கிறார்கள். அதுதான் தர்ப்பைப் புல்.

“தந்தியாம், டெலிபோனாம், செல்லாம், ஈமெயிலாம், இதோ, இந்த தர்ப்பைப் புல்லுக்கு உரிய சக்தி - இந்த கருமங்களுக்கு எல்லாம் உண்டா?” என்று இப்போதும் பூணூலை இழுத்து விட்டு, சிண்டை வாரி முடிந்துக் கொண்டு சவால் விடுகிறார்கள். ‘பரலோக தபால்காரர்களான’ புரோகிதர்கள்.

எதற்கப்பா, இந்த தந்தி புராணங்கள் என்று நீங்கள் கேட்பது அடியேனுக்கும் புரிகிறது. ஆமாம்!

இம்மாதம் ஜூலை 15ஆம் தேதி யோடு மக்கள் உணர்வுகளோடு பிணைந் திருந்த தந்தி சேவையை நிறுத்திக் கொண்டு விட்டது ‘பி.எஸ்.என்.எல்.’ நிறுவனம். ஆமாம்! மரணச் செய்திகளைக் கொண்டு வந்த தந்தியே மரணத்தை சந்தித்து விட்டது!

உலகப் புகழ் பெற்ற நகைச்சுவை எழுத்தாளர் மார்கட்வெய்ன், உயிருடன் இருக்கும்போதே, ஒரு பத்திரிகை அவர் மரணமடைந்துவிட்டதாக அறிவித்து அவரைப் பற்றிய அருமை பெருமை களை எல்லாம் எழுதித் தள்ளியது. மார்க்ட்வெய்ன் அதற்காக ஆத்திரப்பட வில்லை. அந்தப் பத்திரிகைக்கு ஒரு தந்தி அனுப்பினார். ‘என்னைப் பற்றி உண்மைக்கு மாறாக மிகைப்படுத்தி புகழ்ந்துவிட்டீர்கள்’ என்று அந்தத் தந்தியில் குறிப்பிட்டிருந்தார். இது நடந்தது 1897இல்!

தமிழ்நாட்டுக்கு வருவோம்!

“வைக்கம் போராட்டத்தைத் தொடர்ந்து தலைமையேற்று நடத்த நீங்கள்தான் வரவேண்டும்” என்று தமிழ் நாட்டில் இருந்த பெரியாருக்கு கேரளாவில் போராட்டத்தைத் தொடங்கிய குரூர் நீலகண்ட நம்பூதிரி பாத் 1924ஆம் ஆண்டில் தந்தி அனுப்பினார். அடுத்தடுத்து 3 தந்திகள் வந்தன. ‘இன்றே புறப்படுகிறேன்’ என்று பதில் தந்தி கொடுத்துவிட்டு பெரியார் மூட்டை முடிச்சுகளோடு கிளம்பிவிட்டார்.

லண்டன் வட்டமேஜை மாநாட்டில் அம்பேத்கர் வாதாடிப் பெற்ற தாழ்த்தப்பட்டோருக்கான இரட்டை வாக்குரிமையை எதிர்த்து காந்தி சாகும் வரை பட்டினிப் போராட்டத்தைத் தொடங்கினார். வெளிநாடு சுற்றுப் பயணத்தில் இருந்த பெரியார், அம்பேத்கருக்கு ஒரு நீண்ட தந்தியை அடித்தார். காந்தியின் மிரட்டலுக்கு ஆதி திராவிடர்களுக்கான உரிமையை அடகு வைத்துவிடாதீர்கள் என்று, அதில் எச்சரித்திருந்தார்.

ராஜகோபாலாச்சாரியின் ‘வர்ணா ஸ்ரம’ திட்டங்களை ஒழித்துக்கட்டி சமூக நீதி ஆட்சியை வழங்கிய முதலமைச்சர் காமராசர் பதவி விலகி, அகில இந்திய அரசியலுக்குப் போகும் முடிவெடுத்தபோது பெரியார், காமரா சருக்கு ஒரு தந்தி அனுப்பினார். “நீங்கள் எடுத்துள்ள முடிவு தமிழர்களுக்கும் உங்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் தற்கொலைக்கு சமமானது” என்று அந்த தந்தியில் எச்சரித்தார்.

1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலத்தில் இராமன் உள்ளிட்ட இந்து புராணக் கடவுள்கள் கருஞ்சட்டைப் படையால் செருப்பால் அடிக்கப்பட்டன. சூத்திர இழிவைத் திணிக்கும் இந்துமதம், புராணங்களுக்கு எதிராக மானமுள்ளவர்கள் அரங்கேற்றிய சுயமரியாதைப் போராட்டம்! அப்போது, நடந்த பொதுத் தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிராக பார்ப்பன ஏடுகளும், காங்கிரசும் இதைப் பெரிதுபடுத்தின. ஆனால், தி.மு.க. அமோக வெற்றி பெற்றுவிட்டது. அப்போது முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு பெரியார் ஒரு தந்தி அனுப்பினார். “என் மீதான பழி நீங்கியது. நீங்கள் உலகப் புகழ் பெற்றுவிட்டீர்கள்” இதுவே அந்த தந்தியின் வார்த்தைகள். இப்படி பல வரலாறுகள் உண்டு.

அலைபேசி, இன்டர்நெட், இணையதளம் என்ற நவீன தகவல் தொடர்புகள் 160 ஆண்டுகால ‘ஆயுளோடு’ தந்திக்கு விடை கொடுத்துவிட்டன. விஞ்ஞானத் தின் அடுக்கடுக்கான வளர்ச்சி, பழமைக்கு விடை கொடுத்து வருவது உண்மை தான்.

ஆனால், மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் இந்த விஞ்ஞான சாதனைகள் 2000 ஆண்டுகளாக சமூகத்தை அரித்து-அழித்துக் கொண்டிருக்கும் இந்த ஜாதி-தீண்டாமையை மட்டும் நெருங்க முடியவில்லையே, ஏன், என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை.

‘தர்ப்பைப் புல்லும்’, ‘திதியும்’ அதற்கு ‘பிராமணோத்தமர்கள்’ பெற்றுள்ள ‘பேடன்ட்’ உரிமையும் ஆங்கில பத்திரிகைகள், ‘காக்காய் மகத்துவம்’ பற்றி இப்போதும் எழுதுகிற கட்டுரைகளும், ‘மாமல்லபுரம் மரக்காணம்’, ‘உசிலம்பட்டிகளும்’, கோயிலின் கர்ப்பகிரகங்களும், உச்சிக்குடுமி மன்றங்களும் விஞ்ஞானங்களின் சாதனைகளையும் விழுங்கி ஏப்பம் விட்டு ஜாதித் தீண்டாமைகளுக்கு உயிரூட்டவே மடைமாற்றம் செய்து வருகின்றன.

160 ஆண்டுகாலம் வாழ்ந்து விடை பெறும் பாசத்திற்குரிய தந்தியே! எத்தனையோ மரண செய்திகளைக் கொண்டுவந்த தந்தியே! ‘ஜாதி-தீண்டாமை மரணமடைந்து விட்டது’ என்ற அந்த மகிழ்ச்சியான சேதியைக் கொண்டு வராமலே மரணித்து விட்டாயே, என்பதுதான் அடியேனின் ஆழ்ந்த கவலை!

Pin It