சென்னை மயிலாப்பூரிலுள்ள சாய்பாபா கோயில் நிர்வாகம், கோயில் விரிவாக்கத்திற்காக அங்கே நடந்து கொண்டிருக்கும் 1000 மாணவர்கள் படிக்கும் மெட்ரிக்குலேஷன் பள்ளியை இழுத்து மூட திட்டமிட்டுள்ளது. இந்த மெட்ரிகுலேஷன் பள்ளி, அப் பகுதி ஏழை மக்களுக்கு மிகக் குறைந்த கட்டணத்தில் கடந்த 21 ஆண்டுகளாக கல்வி வழங்கி வருகிறது. மயிலாப்பூர் பகுதியில் குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்கும் பள்ளி இது ஒன்றுதான். 1000 மாணவர்கள் படிக்கும் இந்தப் பள்ளியை கோயில் விரிவாக்கத்துக்காக காலி செய்யக் கோரி, சாய் சமாஜ் அறக்கட்டளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளபோதே கடந்த 21ஆம் தேதி பள்ளியில் ஒரு பகுதியை இடித்துத் தள்ளிவிட்டது. இது குறித்து காவல்துறையிடம் பள்ளி நிர்வாகிகள் புகார் செய்தும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ‘மக்கள் சேவையே தங்களின் பணி’ என்று கூறும் சாய்பாபா அறக்கட்டளை, ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் கல்வி கிடைப்பதைத் தடுப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் வருத்தமும் கோபமும் கொண்ட நிலையில், மயிலைப் பகுதி கழகத் தோழர்கள் நியாயத்தைத் தட்டிக் கேட்க களமிறங்கினர். ‘சாய் வித்யாலாயா பள்ளிப் பாதுகாப்புக் குழு’ ஒன்றை பல்வேறு அமைப்புகள், பொது மக்களை ஒருங்கிணைத்து உருவாக்கினர்.

திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார், இந்த ஒருங்கிணைப்பு முயற்சிகளை மேற்கொண்டார். முதல்கட்டமாக கடந்த மே 30ஆம் தேதி சாய்பாபா கோயிலை முற்றுகையிடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. முற்றுகைப் போராட்டத்துக்குச் சென்ற தோழர்கள் மற்றும் பொது மக்களை காவல்துறை கைது செய்தது. மயிலைப் பகுதி கழகத் தோழர்களோடு வேலுமணி (தமிழர் எழுச்சி இயக்கம்), அ. கார்த்திக் (விடுதலை சிறுத்தைகள்), செந்தில் (சேவ் தமிழ்), இரா. லெனின், சுரேஷ் (உயிர்த் துளிகள் அமைப்பு), அருண்சோரி (தமிழ்நாடு மக்கள் கட்சி), சசிகலா (மகளிர் சுய உதவிக் குழு) ஆகிய அமைப்புகளும், பள்ளி மாணவ மாணவியர், பெற்றோர்களும் பங்கேற்றனர். பொது மக்கள், மாணவர்களை கைதாக வேண்டாம் என்று அனுப்பிவிட்டு தோழர்கள் மட்டும் கைதானார்கள். மாலை விடுவிக்கப்பட்டனர். சாய்பாபா கோயில் நிர்வாகத்துக்கு ஆதரவாக காவல்துறை, அரசியல் புள்ளிகள் இருந்தும் அதை எதிர்த்து துணிவாக மக்களுக்காக இந்தப் போராட்டம் நடந்துள்ளது.

Pin It