தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 2024-ஆம் ஆண்டுக்கான பெரியார் விருது, கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. சனவரி 15-ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தையொட்டி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கழகப் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருதுடன், ரூ.5 இலட்சத்திற்கான காசோலை, ஒரு சவரன் மதிப்பிலான பதக்கம், விருதுக்கான தகுதியுரை வழங்கிக் கவுரவித்தார்.

ஏற்கெனவே கழகப் பணிகள் மற்றும் பொதுச்செயலாளரின் அரை நூற்றாண்டுக்கும் மேலான எழுத்துப் பணிகளுக்கான அங்கீகாரமாக, 2022-ஆம் ஆண்டில் கழகப் பொதுச்செயலாளரின் நூல்களை நாட்டுடைமையாக்கிப் பெருமை செய்தது திராவிட மாடல் அரசு. தற்போது பெரியார் குறித்த விவாதங்களும், உரையாடல்களும் தீவிரமாக நடந்துவரும் இந்த காலகட்டத்தில் பொதுச்செயலாளருக்கு பெரியார் விருது அளித்திருப்பது கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.mk stalin and viduthalai rajendran 700இராயப்பேட்டையில் உற்சாக வரவேற்பு

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பேராசிரியர் சரஸ்வதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், ஒருங்கிணைந்த சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி ஆகியோருடன் சென்று தலைமைச் செயலகத்தில் விருதைப் பெற்றுக்கொண்ட கழகப் பொதுச்செயலாளர், அங்கிருந்து புறப்பட்டு நேரடியாக இராயப்பேட்டை பத்ரிநாராயணன் நினைவு படிப்பகத்திற்கு வருகை வந்தார்.

அங்கு பொதுமக்கள், கழகத் தோழர்கள், திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தோழமை அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பகுதி மக்களும், கழகத்தின் இளம் தோழர்களும் பூங்கொத்துகளை அளித்து வரவேற்றனர். கழகத் தோழர்கள், நிர்வாகிகள், தோழமை இயக்கத்தினர் பலரும் பயனாடை அணிவித்தும் நூல்களை வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கழகத் தலைவர் வாழ்த்துரை

“பெரியார் அறிஞர்களை நோக்கி எழுதியவர் இல்லை, மாறாக பாமர மக்களிடம் போய் பேசியவர். அவருடைய உரைகளை முழுமையாகப் படிக்காமல் யாராலும் அவரை சரியாகப் புரிந்துகொள்ள முடியாது. பெரியாரைக் கோட்பாடாக்க முயற்சித்தவர்கள் மிக மிகக் குறைவுதான். அதில் எம்.எஸ்.எஸ். பாண்டியனைச் சொல்லலாம். அவருக்கு அடுத்து பெரியாரியலைக் கோட்பாட்டு வடிவத்தில், நிகழ்கால அரசியல், சமூக சூழலோடுப் பொருத்தி முன்வைக்கிற ஆற்றல் மிக்க எழுத்தாளராக தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் திகழ்கிறார். அன்றைக்கு பெரியார் பேசியதை, இன்றைக்கு சமகால சிக்கல்களுக்குள் பொருத்தி எப்படிப் புரிந்துகொள்வது என்பதற்கு நமக்கு வழிகாட்டியாக தோழர் விடுதலை இராசேந்திரன் உள்ளார்.

சமகால நிகழ்வுகளில் நாம் என்ன நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென்ற திசைவழியைக் காட்டுவதாகத்தான் அவருடைய தலையங்கங்களும், கட்டுரைகளும் உள்ளன. டிரெண்ட் செட்டர் என்ற வார்த்தை இப்போது சொல்லப்படுகிறது. பல விவகாரங்களில் நாம் டிரெண்ட் செட்டராக இருந்ததற்கு தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களின் சிந்தனையும், எழுத்துகளும், உரைகளும், அவரோடு நாம் ஆற்றிய உரையாடல்களும் தான் காரணம். அப்படிப்பட்ட பெருமைமிக்க தோழருக்கு தமிழ்நாடு அரசு அவருடைய செயல்பாடு, எழுத்து ஆகியவற்றுடன் சேர்ந்து இயக்கமாகவும் அவரைப் புரிந்துகொண்டு இந்த விருதை வழங்கியிருக்கிறது. நாம் தொடர்ந்து பெரியாரியலை முன்னெடுத்து அதன் வழியாக தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களுக்கு பெருமை சேர்ப்போம்.”

தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன், வி.சி.க. மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சாரநாத், மக்கள் அதிகாரம் அமைப்பின் சென்னை மாவட்ட நிர்வாகி காமராஜ், தமிழர் எழுச்சி இயக்க ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, வழக்கறிஞர் திருமூர்த்தி, கழக தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் எட்வின் பிரபாகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பொதுச்செயலாளர் ஏற்புரை:

“இதுபோல ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்கிற பண்பு நமது இயக்கத்தில் கிடையாது. இப்படிப் பாராட்டிப் பேசுவது ஒரு புதிய உணர்வாக இருக்கிறது. இந்த விருது அறிவிப்பு வந்தபோது அது ஒரு செய்தியாகத்தான் தெரிந்ததே தவிர, என்னுள் எந்த ஒரு சலசலப்பும் ஏற்படவில்லை. நம்முடைய இயக்கத் தோழர்கள் நம்முடைய ஆதரவாளர்கள் இதைக் கொண்டாடியபோதுதான் எனக்குள் ஓர் உணர்வாக மாறியது. இந்த பெரியார் விருது நம்முடைய தோழர்களுக்கும் இயக்கத்திற்கும் கொண்டாட்டத்தையும், அங்கீகாரத்தையும் தருகிறது என்ற உணர்வு அது.

நீண்டகாலமாக இந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறேன், இது மிகுந்த சிரமமான பணி என்று எல்லோரும் சொன்னார்கள். உண்மையில் பெரியாரியல் சார்ந்த எழுத்தும் செயல்பாடும்தான் எனக்கு மனநிறைவைத் தரும் பணி. மகிழ்ச்சியான வேலையாகத்தான் நான் கருதுகிறேன். எனக்கு வேறு எந்தப் பணியும் தெரியாது. மற்றபடி, இதை நான் தியாகமாகவோ, கடினமான வேலை என்றோ கருதவில்லை.”

இந்த நிகழ்ச்சியை சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் உமாபதி தொகுத்து வழங்கினார். இறுதியாக கழகத் தோழர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து, முழக்கமிட்டனர். தமிழ்நாடெங்கும் பல்வேறு மாவட்டங்களில் கழகத் தோழர்கள் சுவரொட்டிகளை ஒட்டியும், சமூக ஊடகங்களில் பதிவிட்டும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கொள்கைகளைப் பரப்ப உற்சாகம் அதிகரித்துவிட்டது!

பெரியார் பேசுபொருளாக மாறியிருக்கிற காலச்சூழலில் திராவிட மாடல் அரசு எனக்கு பெரியார் விருது வழங்கி கவுரவித்திருப்பதை ஒரு மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். பெரியார் கருத்துக்கள் நாட்டிற்கு மிக மிகத் தேவையான கருத்துக்களாக இருக்கிறது என்பதைச் சமகால சமூக - அரசியல் சூழல்கள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இந்தப் பிரச்சனைகள் எல்லாம் பெரியாரியலை மேலும் வலுவாகக் கொண்டு சேர்ப்பதற்கான வாய்ப்புகளாக உள்ளன. இந்த வாய்ப்புகளைப் பெரியாரியத்தின் எதிரிகளே உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பெரியார் காலத்தில் இருந்து அவருடைய கொள்கைகள் வேகமாகப் பரவியது அவருடைய எதிரிகளால் தான் என்று பெரியாரே திட்டவட்டமாகச் சொல்லியிருக்கிறார். எனவே இந்த ஒரு சூழ்நிலையில் பெரியார் விருதை வழங்கி கவுரவித்திருப்பது, பெரியாரியத் தொண்டை மேலும் உற்சாகமாகச் செய்ய வேண்டும் என்று ஊக்கப்படுத்துகிற விருதாகவே நாங்கள் கருதுகிறோம். அதற்காக முதலமைச்சருக்கு எங்களுடைய நன்றி. பெரியாரியலுக்கு எதிராக பரப்பப்படும் தவறான திசைதிருப்பும் பிரச்சாரங்களை முறியடிக்க வேண்டும் என்ற உந்துசக்தியும் அதிகரித்திருக்கிறது. பெரியாரியலை இன்னும் வேகமாக முன்னெடுக்க நாங்கள் உறுதி ஏற்கிறோம்.

(விருதுபெற்ற பின்னர் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு கழகப் பொதுச் செயலாளர் அளித்த பேட்டியில் இருந்து)

முதலமைச்சரின் தகுதியுரை

தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்பிவரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள், 1969ல் மயிலாடுதுறையில் திராவிடர் கழகத்தின் இளைஞரணியில் இணைந்து பெரியாரியம் தொடர்பாக பொதுக்கூட்டங்கள் மற்றும் பல பகுத்தறிவு நிகழ்ச்சிகளை நடத்தி பெரியாரின் கொள்கைகளைப் பேசவும் எழுதவும் தொடங்கியவர். தந்தை பெரியாரை அழைத்து மயிலாடுதுறையில் பொதுக்கூட்டம் மற்றும் கருத்தரங்கம் நடத்தியவர். பெரியாரின் இயக்க ஏடுகளில் 25 ஆண்டுகள் துணை ஆசிரியராகப் பணியாற்றியதோடு பெரியார் பேசிய கூட்டங்களில் அவரது உரையைக் குறிப்பெடுத்து பதிவு செய்தவர். இவர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளராக செயல்பட்டு வருகிறார்.

திரு.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தந்தை பெரியாரின் சமூகநீதி, ஜாதி ஒழிப்பு மற்றும் பெண்ணுரிமைத் தளங்களில் கடந்த 58 வருடங்களாகத் தொண்டாற்றி வருகிறார். பெரியார் கண்ட கனவான ஜாதி மற்றும் பாலின ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கவும், விளிம்புநிலை மக்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காகவும் மக்களை அணிதிரட்டிப் போராடி வருபவர். மக்களை விழிப்படையச் செய்யும் வகையில் பல்வேறு பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊடகங்களில் பேசிவருபவர். இவர் இதுவரை 58 நூல்களை எழுதியுள்ளார். இவரின் அனைத்து நூல்களும் 2022ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டது. 1982ஆம் ஆண்டு மதவாத அரசியலை எதிர்த்து இவர் எழுதிய நூலை முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் வெளியிட்டு சிறப்பித்துள்ளார்.

சமூகநீதிக்காக முழு நேரமாக தொண்டாற்றி வரும் திரு.விடுதலை இராசேந்திரன் அவர்களைப் பாராட்டும் வகையில் அன்னாருக்கு தமிழ்நாடு அரசு, 2024-ஆம் ஆண்டிற்கான ‘தந்தை பெரியார் விருது’ அளித்து, அய்ந்து இலட்சம் ரூபாய்க்கான காசோலையையும் தங்கப் பதக்கத்தையும் தகுதியுரையையும் வழங்கிச் சிறப்பிக்கின்றது.

- பெ.மு. செய்தியாளர்