கீற்றில் தேட...

தனது செலவிலே வழக்கு நடத்தி, பெரியார் தனக்கு மட்டும் சொந்தமல்ல என்று சட்டப்படியாக தீர்ப்பை வாங்கி வைத்துள்ள திருவாளர் வீரமணி - “பிரதான வழக்கு இனிமேல்தான் விசாரிக்கப்பட உள்ளது. இப்போது வந்துள்ள தீர்ப்பு நமக்கு தோல்வி அல்ல; தோல்வி போல தோற்றம்” என்கிறார். பெரியார் நூல்களுக்கு கி.வீரமணி ஏகபோகமாக தனக்கு மட்டும் உரிமை கோர முடியாது என்று நீதிமன்றம் தான் தீர்ப்பளித்துவிட்டதே. அது என்ன பிரதான வழக்கு என்று கேட்கிறீர்களா? ‘பெரியார் திராவிடர் கழகம் - தனக்குள்ள ஏகபோக உரிமையில் குறுக்கிட்டதால், ரூ.15 லட்சம் இழப்பீடு தர வேண்டும்’ என்பதே பிரதான வழக்கு. ஆக, இப்போது பிரதான வழக்கில் இருக்கும் ஒரே அம்சம் இந்த 15 லட்சம் தான்! வீரமணிக்குத்தான் பெரியார் எந்த பதிப்புரிமையும் தரவில்லையே, பிறகு 15 லட்சம் இழப்பீடு என்ற கேள்வி எங்கே வந்தது என்று விவரமறிந்தவர்கள் கேட்டுவிடக் கூடாது. அதற்கெல்லாம் வீரமணியிடமே உள்ள ஈரோட்டுக் கண்ணாடியைப் போட்டுப் பார்க்க வேண்டும்.... அப்போதுதான் தெளிவாகப் புரியும்.

இப்போது, ‘திருவாளர் 15 லட்சம்’ (அதாவது கி. வீரமணி) களத்திலே நிற்கிறார். அதாவது போர்க்களம். சாதாரண களம் அல்ல; விடுதலைப்புலிகள் நடத்திய ‘ஆனையிறவு’ களத்தையும்விட பெரும் போர்க்களம். அத்தகைய மாபெரும் போர்க்களத்தில் போருடை தரித்து நிற்கும் இந்த போர் மறவர், “சில களங்களில் நமக்கு நீதி கிட்டாமல் போகலாம். இறுதி களத்தில் நமக்கு நீதி வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கை உண்டு” என்று அவரே ‘விடுதலை’யில் போர்ச் சங்கு ஊதியிருக்கிறார். இந்த புறநானூற்று மறவர் - இப்போது இழந்திருக்கிற களம், என்னவென்று கேட்கிறீர்களா? “பெரியாருடைய நூல்கள் தமக்கு மட்டுமே உரிமையானது” என்ற போர்க்களத்தை மட்டுமே இழந்திருக்கிறார். ஆனால் - போர் முடிந்துவிடவில்லை என்கிறார். இன்னும் ஏராளமான களங்கள் உண்டாம். அப்படி மிச்சமிருக்கும் களங்கள் என்னவென்று கேட்டால், ‘திருவாளர் 15 லட்சம்’ களங்களின் பட்டியலை அடுக்கிக் காட்டிவிடுவார், போர் மறவர் அல்லவா?

இனி பெரியாரது கருத்துகளை எவரும் பேசக் கூடாது, அது எனக்கு மட்டுமே உரிமையானது. - இது ஒரு களம்.

பெரியார் நூல்களை எவனாவது படித்து விட்டால் - நாக்கை வெட்டுவோம். அது எங்கள் அறக்கட்டளை சொத்து. - இது மற்றொரு களம். பெரியார் பேச்சு எங்கேயாவது ஒலிநாடாவில் ஒலிக்கிறதா? பறி முதல் செய்வோம்; எவனாவது பெரியார் பேச்சைக் கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவோம் - இது மற்றொரு களம்.

“பெரியார் நூல்களை எவருமே பரப்பக் கூடாது என்ற களத்தில் நாங்கள் தோற்றிருக்கலாம்; ஆனால் பெரியார் கருத்துகளை எவருமே பேசக் கூடாது; கேட்கக் கூடாது; என்ற களத்தில் வெற்றி பெறப் போவது நாங்கள் தான்” - போர்! போர்!! என்று வீரமணி போர்ப்பறை கொட்டுகிறார்.

“தலைவா நீங்கள் இந்த பூமிக்கு மட்டும் தலைவரல்ல; பிரபஞ்சத்துக்கும் சேர்த்து ஒரே தமிழர் தலைவர் நீங்கள் தானய்யா!” என்று தொண்டரடிப் பொடிகள் விழா எடுத்தாலும் வியப்பில்லை. “சிலப்பதிகாரத்தில், பாண்டியன் நெடுஞ்செழியனே தவறான தீர்ப்பு வழங்கி, கோவலனைக் கொன்று விட்டானே; பாண்டியன் நீதியே சறுக்கி விட்டதே” என்று இலக்கிய காலத்துக்கே பயணப்பட்டு விட்டார், திருவாளர் 15 லட்சம்! அதாவது கோவலனுக்கு அநீதி இழைத்ததுபோல், உயர்நீதிமன்றம் அவருக்கு அநீதி இழைத்துவிட்டதாம். பெரியார் நூல்களை எல்லோரும் வெளியிடலாம் என்று அபாண்டமாக தீர்ப்பளித்து விட்டதாம்.

‘காற் சிலம்போடு ஒரு கண்ணகி வந்து, எங்கள் தலைவருக்கு ரூ.15 லட்சத்தைப் பெற்றுத் தராமலா போய் விடுவாள்? எங்கள் தலைவர் உச்சநீதிமன்றம் வரை போவாராக்கும்’ என்கிறார்கள், அவரது சீட கோடிகள்! இப்போது என்ன குடிமுழுகிப் போய்விட்டது. எமது அறக்கட்டளையிடம் அனுமதி பெற்று, எவரும் பெரியார் நூல்களை வெளியிடலாம், வாருங்கள் என்று அழைப்பு விடுத்திருக்கிறார், திருவாளர் 15 லட்சம். ‘உம்மிடம் என்னப்பா ஆவணம் இருக்கிறது?’ என்று நீதிமன்றம் கன்னத்தில் அறைந்து கேட்ட பிறகும், என்னிடம் தான் உரிமை; என்னிடம் தான் உரிமை என்று புலம்பத் தொடங்கிவிட்டார் ‘திருவாளர் 15 லட்சம்’. பாவம்; பாட்டி மஞ்சள் குளித்த கதைதான். -

- கோடங்குடி மாரிமுத்து