சென்னை மயிலாப்பூரிலுள்ள சாய்பாபா கோவில் விரிவாக்கத்திற்காக சாய் சமாஜ் அறக்கட்டளை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ளபோதே கடந்த 21ஆம் தேதி பள்ளியில் ஒரு பகுதியை இடித்துத் தள்ளிவிட்டது. இது குறித்து காவல்துறையிடம் பள்ளி நிர்வாகம் புகார் செய்தும் இதுவரை எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மே 30ஆம் தேதி சாய் வித்யாலாயா பள்ளிப் பாதுகாப்புக் குழு சார்பில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்ற செய்தி கடந்த இதழில் வெளியானது.

10.6.2013 அன்று காலை வழக்கம்போல் பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் பெற்றோர்களும் பள்ளிக்கு வந்தனர். கடந்த 21 ஆம் தேதி இடித்த பகுதி சீரமைக்கப்படாமல் இருந்ததைக் கண்டு பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எங்கள் குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லை. இடித்த அந்த இடத்தில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கைகளை கழுவுவதற்கும் வாகனங்களை நிறுத்துவதற்கும் பள்ளி நுழைவு வாயிலைப் பயன்படுத்துவதால் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று அஞ்சிய பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மக்களோடு இணைந்து போராடிய மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் இராவணன், ஜான், மனோகரன் ஆகியோரை மட்டும் மயிலைப் பகுதி காவல்துறையினர் மூர்க்கத்தனமாக தாக்கி, போலீஸ் வாகனத்தில் ஏற்றினர். தோழர்கள் ரத்தம் சொட்டச் சொட்ட வாகனத்தில் ஏறியதைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

மயிலை நு1 காவல்நிலையத்தில் ஆய்வாளர் மோகன்தாசு, போலீஸ் சிவகுமார் உள்ளிட்ட நான்குபேர் கழகத் தோழர்களை கொடூரமாக தாக்கியுள்ளனர். தோழர் மனோகரனுக்கு முகத்தில் மூன்று தையல் போடப்பட்டுள்ளது. கழக வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி உடனடியாக காவல்நிலையம் வந்தனர். தாக்கிய காவல்துறையினர் மீது வழக்கு தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையைக் கண்டித்து சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

Pin It