தமிழ்நாட்டில் ஜாதி வெறியை உசுப்பிவிடும் பா.ம.க.வினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

வாக்கு வங்கியை உறுதி செய்து கொள்வதற்கு தமிழ்நாட்டில் தலித் மக்களுக்கு எதிராக பா.ம.க. சாதிக் கலவரத்தை நடத்தத் தொடங்கியிருப்பது வன்மையான கண்டனத்துக்குரியதாகும். தர்ம புரியைத் தொடர்ந்து இப்போது ‘மரக்காணத்தில்’ தலித் மக்களுக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதலை பா.ம.க. நடத்தியுள்ளது. மரக்காணம், கடையன் தெரு, கழிக்குப்பம், சுனாமேடு கிராமங்கள் ஏற்கனவே பலமுறை பா.ம.க.வினரால் தாக்குதலுக்கு உள்ளான பகுதியாகும்.

கடந்த ஆண்டு ‘சித்ரா பவுர்ணமி’ விழாவில் காடுவெட்டி குரு, வன்னியப் பெண்களை காதல் திருமணம் செய்யும் தலித் இளைஞர்களை வெட் டுங்கள் என்று பேசி வன்முறையைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து தர்மபுரி மாவட்டத்தில் கொண்டம்பட்டி, நத்தம் காலனி, அண்ணா நகர் பகுதியில் வாழ்ந்த தலித் மக்களின் உடைமைகளை சூறையாடினர். மீண்டும் இந்த ஆண்டு மாமல்லபுரத்தில் ‘சித்ரா பவுர்ணமி’க்கு காவல்துறை அனுமதித்ததே தவறு. காவல்துறை விதித்த எந்த கட்டுப்பாட்டையும் மதிக்காமல் மீண்டும் ஜாதி வெறியைத் தூண்டிவிடும் பேச்சு களே அங்கே பேசப்பட்டுள்ளன. இந்த பேச்சுகளை மக்கள் தொலைக்காட்சி நேரடியாகவே ஒளிபரப்பி யது. அதைப் பார்த்தவர்கள் எல்லோருக்குமே ஜாதி வெறியைத் தூண்டியது யார் என்ற உண்மை புரியும். ‘சித்ரா பவுர்ணமி’க்கு போகும் போதே திட்டமிட்ட தாக்குதலை தொடங்கிவிட்டார்கள்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசு கடந்த பல மாதங்களாகவே மாவட்டந்தோறும் ஜாதி அமைப்புகளை தலித் மக்களுக்கு எதிராக ஒன்று திரட்டும் கூட்டங்களை நடத்தி வந்தார். அந்தக் கூட்டங்களுக்கு எல்லாம் காவல்துறை அனுமதி வழங்கியது. அதே நேரத்தில் ஜாதிக் கலவரத்துக்கு அணி திரட்டும் இந்த முயற்சிகளை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகம் தோழமை அமைப்பு களோடு இணைந்து நடத்திய போராட்டங்களை தடை செய்து கைது செய்தது. ‘இந்து’ நாளேடு கீழ்க்கண்ட செய்தியை வெளியிட்டுள்ளது.

காட்டைக் கடந்த வந்து தலித் குடியிருப்பு களைத் தாக்கி தீ வைத்ததோடு, ரேஷன் கார்டு, பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள், மாணவர் மதிப் பெண் சான்றிதழ்கள் போன்ற முக்கிய ஆவணங்கள் எரிந்த நிலையில் கிடந்தன. நகைகள் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன” என்று ‘இந்து’ நாளேடு விரிவாக செய்தி வெளியிட்டுள்ளது.

நேரில் பார்வையிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்றக் குழு, புதுச்சேரியிலிருந்து மரக்காணம் வரை பா.ம.க.வினர் வன்முறை நடத்தியுள்ளதை சுட்டிக் காட்டி கண்டித்துள்ளது. முதன்மைச் சாலையிலிருந்து 500 மீட்டருக்கு அப்பால் உள்ள சடையன் தெரு கிராமத்துக்குள் இடையே உள்ள காட்டையும் தாண்டி வந்து பா.ம.க.வினர் தாக்கியுள்தாகவும், 18 தலித்துக்கள் படுகாயமடைந்துள்ளனர் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. அரசுப் பேருந்துகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன. தலித் மக்களின் வீடுகளும் எரிக்கப்பட்டுள்ளன.

பா.ம.க.வினர் வந்த வாகனங்களில் ஏற்பட்ட விபத்தால் சிலர் காயமடைந்துள்ளதோடு, விவேக், செல்வராஜ் என்ற இருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை வடக்கு மண்டல அய்.ஜி. கூறியுள்ளார். ஆனால், மருத்துவர் ராமதாசு, இவர்கள் கலவரத் தில் கொல்லப்பட்டவர்கள் என்று கூறி, ஆர்ப் பாட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர், வீடு எரிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக வழங்கக் கூடிய உதவிகள் செய்யவில்லை என்றும், காவல்துறை வன்முறையாளர்கள் எவரையும் கைது செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது.

வன்னிய சமூக மக்களும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் மக்கள் தான். இவர்களை தேர்தல் அரசியல் அதிகாரத்துக்காக ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு பலிகடாவாக்குவது இந்த சமுதாயத்துக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

தமிழக அரசு இதில் உறுதியாக நடவடிக்கை எடுத்து, ஜாதி வெறி சக்திகளின் வெறியாட்டத்துக்கு கடிவாளம் போட வேண்டும் என்பதே நமது உறுதியான கருத்து.

மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களான வன்னியர் சமுதாயம், மத்திய அரசுப் பதவிகளில் தனியார் நிறுவனங்களில் மறுக்கப்படும் வேலை வாய்ப்பு உரிமைகளுக்கும், பொருளாதார சமூக மேம்பாட் டுக்கும் போராட வேண்டுமே தவிர, தலித் மக்களை எதிர்த்து அல்ல! ‘பார்ப்பன’ சங்கங்களை இணைத்துக் கொண்டு, ‘தலித்’ மக்களுக்கு எதிராக போராட்டக் களம் அமைக்கும் பா.ம.க., பார்ப்பன மேலாதிக்கத்துக்கும் ‘மனு சாஸ்திர’ கொடுங் கோன்மைக்கும் தளம் அமைத்துத் தர முயற்சிப்பது மாபெரும் சமூகத் துரோகம்; வரலாறு இதை மன்னிக்காது.

சாதி இருக்கிறது என்பானும் இருக்கின்றானே....

“இருட்டறையில் உள்ளதடா உலகம்! சாதி
இருக்கிற தென்பானும் இருக்கின் றானே!
வெருட்டுவது பகுத்தறிவே! இல்லை யாயின்
விடுதலையும் கெடுதலையும் ஒன்றே யாகும்”

......................

“சாதிமத பேதங்கள் மூடவழக்கங்கள்
தாங்கி நடை பெற்றுவரும்
சண்டைஉல கிதனை
ஊதையினில் துரும்புபோல்
அலைக்கழிப்போம் பின்னர்
ஒழித்திடுவோம் புதிய தோர்
உலகம் செய்வோம்”

...................

“அற்பத் தீண்டாதார் என்னும்
அவரும் பிறரும் ஓர்தாய்
கர்ப்பத்தில் வந்தோரன்றோ - சகியே
கர்ப்பத்தில் வந்தோரன்றோ.”
“பொற்புடை முல்லைக் கொத்தில்
புளியம்பூ பூத்ததென்றால்
சொற்படி யார் நம்புவார் - சகியே
சொற்படி யார்நம்புவார்.”

........................

“சாதிப் பிரிவு செய்தார்
தம்மை உயர்த்துதற்கே
நீதிகள் சொன்னாரடி - சகியே
நீதிகள் சொன்னாரடி.”

.....................

“எஞ்சாதிக் கிவர்சாதி
இழிவென்று சண்டையிட்டுப்
பஞ்சாகிப் போனாரடி - சகியே
பஞ்சாகிப் போனாரடி.”

.....................

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சாதி எதிர்ப்புப் பாடல் வரிகளின் தொகுப்பு)

(புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 123 ஆவது பிறந்த நாள் - ஏப். 29)

Pin It